search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Farmers Protest"

    • ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது
    • நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன.

    ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது. நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன. நம்மை நாம் காக்க இன்று விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தன்னுடைய X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "ஹரியானாவில் போராடும் விவசாயிகளை, ட்ரோன்களை பயன்படுத்தி பாஜக அரசு தாக்கியுள்ளது நாடு ஒரு இருண்ட பாதையை நோக்கி நகர்வதை குறிக்கிறது. நவீன விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்படும் ட்ரோன்கள் இப்போது விவசாயிகள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீச பயன்படுகின்றன. பாஜக அரசு விவசாயிகளை நாட்டின் எதிரிகள் போல கையாளுகிறது. விவசாயிகளிடம் நேரடியாக பேச தைரியம் இல்லாத தலைவர்கள் ட்ரோன்களை ஏவுகின்றனர்.

    இது போராடும் விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். ட்ரோன்களில் கேமிராக்களை பொருத்தி போராடுபவர்களை அடையாளம் கண்டு பழிவாங்குவது ஜனநாயக நாட்டிற்கு ஏற்புடையது அல்ல.

    அமைதியான போராட்டம் ஜனநாயகத்தின் உயிர்நாடி. ட்ரோன்கள் அதை அடக்கக்கூடாது இந்த அடிப்படை உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும்.

    இது விவசாயிகளைப் பற்றியது மட்டுமல்ல. இது நம் அனைவரையும் பற்றியது. நாளை ட்ரோன்கள் நம்மீதும் குண்டுகளை வீச தயாராக உள்ளன. நம்மை நாம் காக்க இன்று விவசாயிகளுக்காக குரல் எழுப்புவோம். இந்தியாவின் ஜனநாயகத்தை உயிர்த்தெழ செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்

    • விவசாயிகள் போராட்டம் நடத்தும் முறையில் எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது.
    • டிராக்டர் என்பது போக்குவரத்து முறை இல்லை. அவர்கள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் செல்ல முடியும்.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தப்போவதாக அறிவித்தனர். அதன்தொடர்ச்சியாக அரியானா, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நேற்று முன்தினம் (பிப்ரவரி 13-ந்தேதி) புறப்பட்டனர்.

    விவசாயிகள் 6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் மற்றும் டீசல் உடன் புறப்பட்டனர். இதனால் டெல்லி எல்லையில் கடந்த 2020-2021-ல் ஏற்படுத்தியது போன்று இடையூறுகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக கருதி அரியானா அரசு விவசாயிகள் டிராக்டரில் செல்லாத வண்ணம் சாலைகளில் தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    மேலும், முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் இன்று 2-வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

    இந்த நிலையில் போராட்டம் குறித்து அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் கூறியதாவது:-

    கோரிக்கைகளை எழுப்புவதற்கும், டெல்லி நோக்கி பேரணி செல்வதற்கும் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்களின் நோக்கத்தை பார்க்க வேண்டும். கடந்த வருடம் என்ன நடந்தது என்பதை நான் அனைவரும் பார்த்தோம். விவசாயிகள் பல்வேறு எல்லைகளை ஆக்கிரமித்து பிரச்சனையை ஏற்படுத்தினார்கள்.

    அவர்கள் போராட்டம் நடத்தும் முறையில் எங்களுக்கு ஆட்சேபனை உள்ளது. டிராக்டர் என்பது போக்குவரத்து முறை இல்லை. அவர்கள் பேருந்துகள் மற்றும் ரெயில்கள் மூலம் செல்ல முடியும். விவாதம் ஜனநாயக முறையில் நடைபெற்று தீர்வு காணப்பட வேண்டும்.

    இவ்வாறு மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

    • விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தை ஒட்டி டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டிகரில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய மந்திரிகள் குழு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது. இன்று மாலை பேச்சுவார்த்தை துவங்க உள்ள நிலையில் பஞ்சாப் விவசாய சங்கத்தின் பொது செயலாளர் சர்வான் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "இன்றைய பேச்சுவார்த்தையில் முழுக்க முழுக்க நேர்மறையான மனநிலையில் பங்கேற்க இருக்கிறோம். இந்த சந்திப்பின் மூலம் நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையை கொண்டிருக்கிறோம்," என்று தெரிவித்தார்.

    • மதுரா சுவாமிநாதன் காணொலி வாயிலாக கலந்து கொண்டார்.
    • பஞ்சாப் விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர்.

    வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ம் தேதி முதல் விவசாயிகள் முற்றுகை போட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்திற்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் மகளான மதுரா சுவாமிநாதன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    அண்மையில் மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதனுக்கு பாரத் ரத்னா விருதை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நேற்று (பிப்.14) கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் எம்.எஸ். சுவாமிநாதனின் மகளும் பொருளாதார நிபுணருமான மதுரா சுவாமிநாதன் காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

     


    அப்போது பேசிய அவர், "பஞ்சாப் விவசாயிகள் இன்று டெல்லியை நோக்கி பேரணி செல்கின்றனர். ஹரியானாவில் அவர்களுக்காக சிறைச்சாலை தயாராகி வருவதாகவும், அவர்களை தடுக்க தடுப்பு வேலிகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் செய்தித்தாள்களின் மூலம் தெரிந்து கொண்டேன்."

    "நமக்கு உணவு கொடுக்கும் விவசாயிகளிடம் நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் விவசாயிகள், குற்றவாளிகள் அல்ல. விவசாயிகளை குற்றவாளிகளை போல நடத்தக் கூடாது. இந்தியாவின் முன்னணி விஞ்ஞானிகளான உங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது இதைத்தான். இந்த பிரச்சினைக்கு நாம் தீர்வு காணவேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள்," என்று தெரிவித்தார்.

    • விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
    • டெல்லி புறநகரில் பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ந்தேதி முதல் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநில விவசாயிகள் அறிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 8-ந்தேதி விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.

    இதையடுத்து நேற்று அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் ஊர்வலமாக டெல்லியை நோக்கி புறப்பட்டனர். 6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை லாரிகள், டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அவர்கள் சென்றனர்.

    அவர்களை தடுத்து நிறுத்த அரியானா மாநில அரசு கடந்த 3 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. அரியானாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் சாலைகளை சீல் வைத்து போலீசாரை குவித்தது. மேலும் டெல்லி எல்லையில் 6 அடுக்கு தடுப்பு சுவர்களும் உருவாக்கப்பட்டன.

    இதையெல்லாம் கண்டு கொள்ளாத அரியானா விவசாயிகள் பல முனைகளிலும் ஆயிரக்கணக்கில் திரண்டு சென்றனர். தடைகளை தகர்த்து டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்தனர். இதனால் அவர்கள் மீது டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

    ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதே போல பஞ்சாப், உத்தரபிரதேச மாநில எல்லைகளிலும் விவசாயிகள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்று இரவு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார்கள்.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை விவசாயிகள் எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கினார்கள். இன்று (புதன்கிழமை) காலை 2-வது நாளாக டெல்லியை நோக்கிய போராட்டத்தை திட்டமிட்டபடி தொடங்கப் போவதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர்.

    இதன் காரணமாக டெல்லி புறநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளன. என்றாலும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லி புறநகர் பகுதிகளில் குவிந்து வருகிறார்கள்.

    2-வது நாளாக இன்று 10 மணிக்கு மீண்டும் விவசாயிகள் டெல்லிக்குள் பலமுனைகளிலும் நுழைய முயற்சி செய்தனர். அவர்களை குறிப்பிட்ட எல்லைக்குமேல் வராமல் இருப்பதற்காக 6 அடுக்கு தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். இன்று டெல்லி புறநகர் பகுதிக்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. டெல்லி புறநகரில் பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் டெல்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்படுத்த போலீசார் கடுமையாக திணற நேரிட்டது. விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    விவசாயிகள் 6 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள், டீசல் உடன் புறப்பட்டு வருவது உள் நோக்கம் கொண்டது என்றும் தேவையில்லாமல் அமைதியை சீர்குலைப்பதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

    • டெல்லி சலோ பேரணி சென்ற விவசாயிகள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசப்பட்டது.
    • இந்தச் சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற போராட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்தப் பேரணியில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் பங்கேற்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். இதனால் டெல்லி சாலைகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

    இன்று விவசாயிகள் டெல்லியை நோக்கி நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டு தடுக்கப்படுகிறது.

    எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா அறிவிக்கப்பட்டது. ஆனால் எம்.எஸ்.சுவாமிநாதன் சொன்னதைச் செயல்படுத்த அவர்கள் தயாராக இல்லை.

    விவசாயிகளுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் கூறி உள்ளதை பா.ஜ.க. அரசு செய்யவில்லை.

    இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம். எம்.எஸ். சுவாமிநாதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் நிறைவேற்றுவோம் என தெரிவித்தார்.

    இதேபோல், மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜியும் விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.

    தலைநகர் டெல்லி நோக்கி விவசாயிகள் அடிப்படை உரிமைகளுக்காக போராடியதற்காக கண்ணீர் புகைகுண்டுகளால் தாக்கப்படும் போது நம் நாடு எப்படி முன்னேறும்?

    விவசாயிகள் மீது நடத்திய கொடூரத் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவளிக்க மத்திய அரசு தவறிவிட்டது.

    விவசாயிகளின் மீதான அடக்குமுறை தேசத்திற்குத் தீங்கு விளைவிக்கும். ஈகோ, அதிகாரவெறி, இயலாமை ஆகியவற்றை பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும்.

    நினைவில் கொள்ளுங்கள், இந்த விவசாயிகள் தான் உயர்ந்தவர்கள். நம் அனைவரையும் அவர்கள் தான் காப்பாற்றுகிறார்கள். அரசின் அடாவடித்தன செயலுக்கு எதிராக விவசாயிகளுக்கு நாம் துணை நிற்போம் என்றார்.

    • போராட்டத்தின் ஒரு பகுதியாக பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
    • இதில் பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

    புதுடெல்லி:

    விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 'டெல்லி சலோ' என்ற போராட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

    பிரமாண்ட போராட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற பேரணியில் கலந்து கொள்ள பஞ்சாப், அரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி எல்லைப் பகுதிக்கு படையெடுத்தனர்.

    நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் மூலம் எல்லைப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் வரிசைகட்டி செல்கின்றனர்.

    விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகள் மீது இன்று போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர். அதையும் மீறி ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக முன்னேறி சென்றனர்.

    விவசாயிகள் போராட்டத்தால் இன்று டெல்லியில் உள்ள சாலைகளில் கடுமையான வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல மணி நேரமாக கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சாலைகளில் சிக்கித் தவித்தன. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்தனர்.

    • விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
    • போராட்ட களத்தில் இருந்த அய்யாக்கண்ணுவை போலீசார் அழைத்துச்சென்று செல்போன் டவரில் ஏறிய விவசாயிகளை இறங்க கூறினர்.

    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.8100 வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு போராட அனுமதி அளிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதன் மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.

    இதில் பங்கேற்ற விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் தங்களது கைகளில் மண்டை ஓடுகளை ஏந்தி நின்றனர். மேலும் சில விவசாயிகள் சாலைகளில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.

    இந்த நிலையில் ராமச்சந்திரன், பரமசிவம், நவீன் குமார் உள்ளிட்ட 5 விவசாயிகள் திடீரென அந்த பகுதியில் உள்ள செயின் பால் காம்ப்ளக்ஸில் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த டவர் காம்ப்ளக்ஸ் மொட்டை மாடியில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ளது. இதில் 5 விவசாயிகளும் ஏறி நின்று கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவர்களை கீழே இறங்க கூறினர்.

    ஆனால் அவர்கள் தொடர்ந்து இறங்க மறுத்து அடம்பிடித்தனர். அதைத்தொடர்ந்து போராட்ட களத்தில் இருந்த அய்யாக்கண்ணுவை போலீசார் அழைத்துச்சென்று செல்போன் டவரில் ஏறிய விவசாயிகளை இறங்க கூறினர்.

    பின்னர் தலைவர் வேண்டுகோளை ஏற்று அந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு டவரில் இருந்து இறங்கினர். இதற்கிடையே தலைவரை கைது செய்தால் செல்போன் டவரில் இருந்து குதிப்பதாக அந்த விவசாயிகள் மிரட்டல் விடுத்தனர்.

    இந்தப் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    • "டெல்லி சலோ" எனும் முழக்கத்துடன் விவசாயிகள் தலைநகருக்குள் செல்ல உள்ளனர்
    • மத்திய அமைச்சர்களுடன் விவசாய பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்

    புது டெல்லியை நோக்கி "டெல்லி சலோ" (Delhi Chalo) எனும் முழக்கத்துடன் குறைந்த ஆதார விலை (Minimum Support Price) உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி  பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வந்த விவசாயிகள் பேரணியை நடத்தி, பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கி சென்றனர்.

    நேற்று மத்திய அமைச்சர்கள் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

    இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இந்நிலையில், அவர்கள் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் டெல்லியின் அனைத்து எல்லைப்பகுதிகளிலும்  காவல்துறை பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    டெல்லியின் சம்பு எல்லையில் விவசாயிகளின் போராட்டத்தை கலைக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் பல போராட்டக்காரர்கள் அங்குமிங்கும் ஓடினர்.

    ஆனால், இதனை பொருட்படுத்தாமல் பேரணியாக உள்ளே நுழைய விவசாயிகள் முயன்று வருகின்றனர்.

    போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளால் டெல்லியை சுற்றி தற்போதைய நிலைமை பதட்டமாக இருந்து வருகிறது.

    • விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு பாதுகாப்பு சங்க தலைவர் தலைமையில் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 3-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி தமிழக அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் உபரி நீரைத் திறந்துவிடக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விவசாயிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு அழைத்துப் பேச முன்வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் 100-க்கும் மேற்பட்டோர் உப்பாறு பாதுகாப்பு சங்க தலைவர் அர்ஜுனன் தலைமையில் உப்பாறு அணையின் உட்பகுதியில் இறங்கி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் 3-வது நாளாக வாயில் கருப்பு துணி கட்டி தமிழக அரசுக்கு கவனம் ஈர்க்கும் வகையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உப்பாறு அணைக்கு தண்ணீர் திறந்து விட கோரியும் அதற்கு சட்டப்படி உத்தரவு இருந்தும் திறந்து விடாமல் மெத்தன போக்கில் உள்ள பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட கலெக்டர் ஆகியோரை கண்டித்து வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    • மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் பெரியார் கால்வாயில் இருந்து பாசனத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த பெரியாறு கால்வாய் மூலம் மேலூர் பகுதியில் 85,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஆனால் இந்த ஆண்டு குடிநீருக்காக 10 நாட்கள் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் தங்கள் பகுதிக்கு விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாத காலமாக மேலூர் பகுதி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். முதலில் கடையடைப்பு, ஊர்வலம், பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை ஆகிய போராட்டங்கள் இதுவரை நடத்தி முடித்து விட்டனர்.

    ஆனால் இவர்களது கோரிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் ஏற்கவில்லை. இதனால் இன்று மேலூர் பஸ் நிலையம் அருகே ஒருபோக பாசன விவசாய சங்க தலைவர் முருகன் தலைமையில் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் மேலூர் அனைத்து வர்த்தக சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டுள்ளனர்.

    இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை தாண்டிவிட்டது. மேலும் அதன் எதிரொலியாக இடுக்கி மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

    எனவே இந்த சூழ்நிலையாவது மேலூர் பகுதிக்கு பெரியார் கால்வாயில் இருந்து தாமதிக்காமல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர்.

    • குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்
    • 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரே நேற்று மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாவட்ட செயலாளர் வஜ்ஜிரவேலு தலைமை தாங்கினார். மேல்மா சிப்காட் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைதியாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்துள்ள அனைத்து பொய் வழக்குகளையும், போராட்ட ஒருங்கிணைப்பாளர் அருள் மீது உள்ள குண்டர் சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோஷங்களை எழுப்பினர்.

    இதில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் பரமேஸ்வரன், புருஷோத்தமன், ஞானவேல் உட்பட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    ×