என் மலர்
நீங்கள் தேடியது "MS Swaminathan"
- வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணி அவசியம்.
- போரூரில் ஈரநிலை பசுமை பூங்காவிற்கு எம்.ஸ்.சுவாமிநாதனின் பெயரை பரிந்துரைத்துள்ளோம்.
சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இந்தியா ஒருபோதும் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை மறக்க முடியாது.
* வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொண்டுசேர்க்கும் பணி அவசியம்.
* வேளாண் துறையில் நவீன கண்டுபிடிப்புகளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் நிதி அறிவித்து ரூ.1 கோடி ஒதுக்கி உள்ளேன்.
* மண்ணுயிர் காத்து பல்லுயிர் காக்கும் எங்களின் முயற்சிக்கு நீங்கள் துணை நிற்பீர்கள் என நம்புகிறேன்.
* மத்திய அரசு 2070-க்குள் கார்பன் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில் 2050-க்குள் குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* வேளாண் பல்கலை. மாணவர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் விருது வழங்குவதாக அறிவித்துள்ளோம்.
* போரூரில் ஈரநிலை பசுமை பூங்காவிற்கு எம்.ஸ்.சுவாமிநாதனின் பெயரை பரிந்துரைத்துள்ளோம்.
* வேளாண்மையையும் உழவர்களையும் எந்நாளும் பாதுகாப்போம் என உறுதி கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.
- 50 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம் குறித்து பேசியிருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* வரலாற்றில் ஒரு சிலர் தான் பலகோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வகையில் வாழ்ந்துள்ளனர், எம்.எஸ்.சுவாமிநாதன் அத்தகையவர்.
* மிக எளிமையான வாழ்வை வாழ்ந்தவர் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்.
* பலமுறை எம்.எஸ்.சுவாமிநாதனை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
* நாட்டில் பெரும்பாலான மக்கள் பட்டினியில் வாடியபோது மக்களின் வயிறு நிறைய மாபெரும் புரட்சி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
* உணவு பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றவர்களின் குரலாக இருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
* வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாக கொண்டு செயல்பட்டவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
* இந்திய பசுமை புரட்சியின் தந்தை என உலகமே அவரை அழைத்தாலும் நமக்கு அவர் உணவுத்துறையை பாதுகாத்தவர்.
* தான் பெற்ற அறிவை மக்களின் பசி போக்க பயன்படுத்தியவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
* 50 ஆண்டுகளுக்கு முன்பே காலநிலை மாற்றம் குறித்து பேசியிருந்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
* எம்.எஸ்.சுவாமிநாதனின் கடமைகளையும் கனவுகளையும் நிறைவேற்றும் வகையில் வேளாண் மாணவர்கள், விஞ்ஞானிகள் பாடுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று.
- தந்தையின் பணியையும்-புகழையும் போற்றும் சவுமியா சுவாமிநாதனின் பணி சிறக்கவும் வாழ்த்துகள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று. தமது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரிலான ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நிலம் வழங்கி, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனுடன் இணைந்து, அங்குள்ள ஜெ.ஆர்.டி. டாடா சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தைத் திறந்தும் வைத்தார் அன்றைய முதலமைச்சர் கலைஞர்.
அவரது வழியிலான நமது திராவிடமாடல் அரசும், போரூர் வெட்லேண்ட் பார்க், தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்குத் எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரைச் சூட்டியுள்ளதோடு, பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்து அவரது நினைவைப் போற்றி வருகிறோம்.
காலநிலை மாற்றம் உட்பட இன்று நாம் எதிர்கொண்டு வரும் பல சவால்களைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்காளரான எம்.எஸ்.சுவாமிநாதனை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன்!
தந்தையின் பணியையும்-புகழையும் போற்றும் சவுமியா சுவாமிநாதனின் பணி சிறக்கவும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வேளாண்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்காத காரணத்தினால் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
- நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை காக்க தனிப்பட்ட முறையில் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.
டெல்லி:
டெல்லியில் எம்.எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு சர்வதேச மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்று பிரதமர் மோடி பேசியதாவது:-
இன்று, பல்லுயிர் பெருக்கம் பற்றிய விவாதங்கள் உலகம் முழுவதும் நடந்து வருகின்றன. மேலும் அரசுகளும் அதைப் பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் டாக்டர். சுவாமிநாதன் ஒரு படி மேலே சென்று உயிரியல் மகிழ்ச்சி என்ற கருத்தை வழங்கினார். இன்று, இந்த யோசனையையே நாங்கள் இங்கே கொண்டாடுகிறோம். பல்லுயிர் பெருக்கத்தின் வலிமையுடன், உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று டாக்டர். சுவாமிநாதன் கூறுவார்.
எம்.எஸ். சுவாமிநாதனை சந்திப்பது ஒரு மதிப்புமிக்க கற்றல் அனுபவமாக இருந்தது. அறிவியல் என்பது வெறும் புதிய விஷயங்களை கண்டுபிடிப்பது மட்டுமல்ல, அதை சமூகத்தில் பயன்படுத்துவது மற்றும் அதன் மூலம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது பற்றியது. இதை அவர் தனது பணி மூலம் நிரூபித்தார். இன்றும் கூட, அவரது கருத்துக்கள் இந்தியா விவசாயத் துறையில் காணப்படுகின்றன. அவர் உண்மையிலேயே அன்னை பாரதியின் ரத்தினம்.
பேராசிரியர் சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா வழங்கி கௌரவிக்கும் வாய்ப்பு நமது அரசுக்குக் கிடைத்ததில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
விவசாயிகள் நலனே இந்தியாவின் முதன்மையான முன்னுரிமையாகும். விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பண்ணையாளர்களின் நலன்களில் இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது. வேளாண்பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி அளிக்காத காரணத்தினால் கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.
விவசாயிகள் நலனை ஒருபோதும் விட்டு கொடுக்க முடியாது. நாட்டில் உள்ள விவசாயிகளின் நலனை காக்க தனிப்பட்ட முறையில் எந்த விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார்.
- வேளாண் துறையில் மிகப்பெரிய விஞ்ஞானியான எம்.எஸ். சுவாமிநாதன் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளார்.
- உலகம் முழுவதும் உள்ள 38 பல்கலைக்கழகங்கள் எம்.எஸ். சுவாமிநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
சென்னை:
இந்தியாவில் பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 98.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஒவ்வொரு துறைகளில் மேம்பாடு பெறுவதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. அந்த காலக்கட்டத்தில் இந்திய வேளாண் துறை மிகவும் பின்தங்கி இருந்தது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டங்கள் தீட்டப்பட்டன.
குறிப்பாக, 1960-ம் ஆண்டு முதல் 1980ம் கால கட்டங்களில் இந்தியாவின் உணவுத்தேவைக்கு அண்டை நாடுகளிடம் கையேந்தக் கூடிய நிலையை மாற்ற வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. உணவுத் தேவையில் தன்னிறைவை பெறுவதற்காக பசுமைப் புரட்சி திட்டம் அமல்படுத்தப்பட்டது. இது இந்திய வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
அப்போது மத்திய அரசு ஒவ்வொரு 5 ஆண்டுகால கட்டத்திலும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக திட்டங்கள் வகுத்து செயல்படுத்தியபோது உணவுத் தன்னிறைவை பெறுவதற்காக பசுமைப்புரட்சி என்ற இந்த திட்டம் வகுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் உணவு உற்பத்தியை பெருக்கும் நோக்கத்தில் பல்வேறு வழிமுறைகள் ஆராயப்பட் டது. அதனை முன்னெடுத்து சென்றவர் தமிழகத்தை சேர்ந்த பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அந்த பணிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலமும், அறக்கட்டளை மூலமாகவும், வேளாண்துறைக்கு பெரும் பங்காற்றினார்.
சர்வதேச நெல் ஆராய்ச்சி இயக்குனராக இருந்த எம்.எஸ்.சுவாமிநாதன் தரமணியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி பவுண்டேசன் மூலம் தொடர்ந்து தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வந்தார். அவரது சொந்த ஊர் கும்பகோணம். 1925-ம் ஆண்டு ஆகஸ்டு 7-ந்தேதி பிறந்தார்.
சென்னை பல்கலைக்கழகம் மற்றும் டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் முறையே விவசாயத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றவர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்தார்.
1960 மற்றும் 1970-களில் இந்தியாவில் நவீன விவசாய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வேளாண்மையை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
விவசாயம் மற்றும் உணவு உற்பத்தியில் எம்.எஸ்.சுவாமிநாதன் பங்களிப்புகள் பலராலும் பாராட்டப்பட்டது. நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் பணியாற்றி உள்ளார்.
அவரது பணியை மெச்சத்தக்க வகையில் இந்தியாவின் உயரிய விருதான பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன.
வளரும் நாடுகளில் உணவு உற்பத்தி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய பணிக்காக உலக உணவு விருதும் அவருக்கு வழங்கப்பட்டது. இதுதவிர உலகின் நுற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.
இந்திய விஞ்ஞானிகளில் இந்த அளவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற ஒரே பிரபலம் எம்.எஸ்.சுவாமிநாதன் என்று குறிப்பிடத்தக்கது.
1972 முதல் 1979 வரை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குனராக இருந்தார். 1979 முதல் 1980 வரை இந்திய வேளாண்மை மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் முதன்மை செயலாளராகவும் இருந்தார். சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனராகவும் 1982 முதல் 1988 வரை பணியாற்றினார். உணவுப் பாதுகாப்பு, நிலையான விவசாயம், கிராமப்புற மேம்பாடு தொடர்பான பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.
வேளாண் ஆராய்ச்சிக்காக எம்.எஸ்.சுவாமிநாதன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு கடைசி வரை சேவையாற்றி வந்தார். அவரது உடல் தேனாம்பேட்டை வீனஸ் தெருவில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
- தலைவர் கலைஞர் உடனும், என்னுடனும் எம்.எஸ்.சுவாமிநாதன் எப்போதும் நல்ல நட்பைப் பேணி வந்தார்.
- எம்.எஸ்.சுவாமிநாதன் இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
சென்னை:
இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தையான எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நவீன பாரதத்தை கட்டமைத்த எம்.எஸ்.சுவாமிநாதன் நம் இதயங்களிலும் மனதிலும் வாழ்வார் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.
நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் சுவாமிநாதன் அவர்கள் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார். ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளராக இருந்த அவர் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல உயரிய விருதுகளை வென்ற சுவாமிநாதன் அவர்கள், இருபதாம் நூற்றாண்டில் மிகப் பெரும் தாக்கம் செலுத்திய ஆசிய ஆளுமைகள் என உலகப் புகழ் பெற்ற "டைம்" இதழ் வெளியிட்ட பட்டியலில் மகாத்மா காந்தி, இரவீந்திரநாத் தாகூர் ஆகியோருடன் இடம்பெற்ற இந்தியர் ஆவார்.
நாடு போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் - வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய சுவாமிநாதன் அவர்கள் 1989-91, 1996-2000 ஆகிய ஆண்டுகளில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது மாநிலத் திட்டக் குழுவிலும் இடம்பெற்று சீரிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
தலைவர் கலைஞர் உடனும், என்னுடனும் எப்போதும் நல்ல நட்பைப் பேணி வந்தார். 1989-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்களிடத்தில் சுவாமிநாதன் அவர்கள் கோரிக்கை வைத்ததும், தரமணியில் அவர் நிலம் வழங்கிய இடத்தில்தான் கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்நிறுவனத்தின் 32-ஆவது ஆண்டுவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றி, 96-ஆவது பிறந்தநாள் காணவிருக்கும் சுவாமிநாதன் அவர்கள் நூறாண்டு வாழ்க என வாழ்த்தியது தற்போது என் நெஞ்சில் நிழலாடுகிறது.
அவரது இழப்பு அறிவியல் துறைக்கும் தமிழ்நாட்டுக்கும் ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும். மிகப்பெரும் ஆளுமையை இழந்து தவிக்கும் அறிவியல் உலகினருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விவசாயத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் செய்த பணி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது.
- வேளாண் துறைக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது.
புதுடெல்லி:
இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தையான எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
விவசாயத்தில் எம்.எஸ்.சுவாமிநாதன் செய்த பணி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. நம் தேசத்திற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தது. லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்தவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
வேளாண் துறைக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது. எம்.எஸ்.சுவாமிநாதன் மிக நெருக்கடியான கால கட்டங்களில் விவசாயத்துறைக்கு பெரும் பங்காற்றியவர் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார்.
- எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல்.
- எம்.எஸ். சுவாமிநாதன் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி.
பசிப்பிணி ஒழிப்பு - உணவுப் பாதுகாப்பு என்ற இரு குறிக்கோள்களுக்காகக் கடந்த முக்கால் நூற்றாண்டு காலம் அரும்பணி ஆற்றி வந்த தலைசிறந்த வேளாண் அறிவியலாளர் திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டு இருந்தார்.
நீடித்து நிலைத்த உணவுப் பாதுகாப்புக்காக ஆற்றிய பங்களிப்புகளுக்காக பசுமைப் புரட்சியின் தந்தை எனப் பரவலாகப் போற்றப்படும் திரு. சுவாமிநாதன் அவர்கள் உலக அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI), இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ICAR) முதலிய பல்வேறு பன்னாட்டு மற்றும் அரசு ஆராய்ச்சி நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பணியாற்றிய சிறப்புக்குரியவர் ஆவார்.
சமூகத் தலைமைக்கான ராமன் மகசேசே விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூசன், பத்ம விபூசன் உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை திரு. சுவாமிநாதன் அவர்கள் பெற்றுள்ளார். உலகம் போற்றும் விஞ்ஞானியாக சுற்றுச்சூழல் - வேளாண்மைத்துறையில் அளப்பரிய பங்காற்றிய திரு. சுவாமிநாதன் அவர்களை கௌரவிக்கும் விதமாக, அவருக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என்று முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
- அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ததை பெருந்தலைவர் மக்கள் கட்சி வரவேற்கிறது.
- அரசு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்டி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.
பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வயது முதிர்வு காரணமாக உயிரிழந்த தமிழக வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தியாவில் பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர், உணவு பஞ்சம் ஏற்பட்ட போது அதற்கான தீர்வை கண்டு உணவு பாதுகாப்புக்கான பங்களிப்பை தந்தவர். வேளாண் தொழில் பற்றிய முற்போக்கான சிந்தனை கொண்ட எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவிற்கு தமிழக அரசு சார்பில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ததை பெருந்தலைவர் மக்கள் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் உள்ள அரசு வேளாண் பல்கலைக்கழகத்துக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரை சூட்டி அவரின் புகழுக்கு பெருமை சேர்க்கவேண்டும்.
அதேபோன்று இந்தியாவின் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதினை மறைந்த தலைவருக்கு வழங்கி அவருக்கும் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்ட வேளாண் பற்றிய ஆராய்ச்சிக்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.
- தஞ்சை வேளாண்மை கல்லூரி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்படும் என்றார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட்டார். அப்போது அவர் பேசியதாவது:
தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்படும்.

வேளாண் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண்மை மற்றும் மரபியல் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலைபெறும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.
- பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் 28-9-2023 அன்று மறைவெய்தியபோது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினேன்.
- உயரிய விருதுகளைப் பெற்றுள்ள எம்.எஸ்.சுவாமிநாதனின் நினைவைப் போற்றுகிற வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பை வெளியிடுகிறேன்.
சென்னை:
தமிழக சட்டசபையில் விதி எண்.110-ன்கீழ் சில அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-
வேளாண் அறிவியலை இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டி உலகளவில் புகழ் பெற்றவர் எம்.எஸ்.சுவாமிநாதன்.
தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சியில் வேளாண் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு, வேளாண் ஆராய்ச்சி மையங்கள் அதிகளவில் உருவாக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் புரட்சியும், அதனை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கான செயல்முறைத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டது. இன்றளவிலும் இந்தியாவின் வெற்றிகரமான மாடலாக இருப்பது கலைஞர் ஆட்சிக் காலத்து மாடல்தான். இந்தப் பங்களிப்பில் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனின் ஆலோசனைகளும் இணைந்திருக்கின்றன.
2021-ல் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்த போது, அவருடைய பணிகளைப் பாராட்டிப் பேசினேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், இந்த அரசை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள முதலமைச்சராகிய என்னையும் அவர் பாராட்டி, வளர்ச்சிக்கான ஆலோசனைகளை வழங்கினார்.
பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் எம்.எஸ். சுவாமிநாதன் 28-9-2023 அன்று மறைவெய்தியபோது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினேன்.
பத்மவிபூஷன், ரமோன் மகசசே உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்றுள்ள அவரது நினைவைப் போற்றுகிற வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிப்பை வெளியிடுகிறேன்.
தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும். அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இளம் வேளாண் அறிவியலில் பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- முன்னாள் பிரதமர்களான நரசிம்ம ராவ், சவுத்ரி சரண் சிங் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர்கள் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:
முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் சிறந்த அறிஞராகவும், அரசியல்வாதியாகவும் பல்வேறு பதவிகளை வகித்திருந்தார். அவரது தொலைநோக்கு திறமையால் இந்தியாவின் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அவர் அமைத்தார். அவர் பிரதமராக இருந்தபோது பொருளாதார வளர்ச்சி புதிய சகாப்தத்தை எட்டியது.
முன்னாள் பிரதமர் சரண்சிங்குக்கு பாரத ரத்னா விருது வழங்குவது அரசின் அதிர்ஷ்டம். நாட்டிற்கு அவர் ஆற்றிய ஒப்பற்ற பங்களிப்பிற்காக இந்த மரியாதை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் தனது வாழ்நாள் முழுவதையும் விவசாயிகளின் நலன்களுக்காக அர்ப்பணித்தவர்.
மேலும், பசுமை புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






