என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டவரில் ஏறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்த படம்.
விவசாயிகள் மண்டை ஓடுகளுடன் சாலை மறியல் போராட்டம்: செல்போன் டவரில் ஏறியதால் பரபரப்பு
- விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
- போராட்ட களத்தில் இருந்த அய்யாக்கண்ணுவை போலீசார் அழைத்துச்சென்று செல்போன் டவரில் ஏறிய விவசாயிகளை இறங்க கூறினர்.
திருச்சி:
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.8100 வழங்க வேண்டும். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு போராட அனுமதி அளிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அதன் மாநிலத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) திருச்சி தலைமை தபால் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற விவசாயிகள் கோவணம் கட்டிக்கொண்டு அரை நிர்வாணமாக போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் தங்களது கைகளில் மண்டை ஓடுகளை ஏந்தி நின்றனர். மேலும் சில விவசாயிகள் சாலைகளில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவசாயிகளின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
இந்த நிலையில் ராமச்சந்திரன், பரமசிவம், நவீன் குமார் உள்ளிட்ட 5 விவசாயிகள் திடீரென அந்த பகுதியில் உள்ள செயின் பால் காம்ப்ளக்ஸில் மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த டவர் காம்ப்ளக்ஸ் மொட்டை மாடியில் இருந்து 50 அடி தூரத்தில் உள்ளது. இதில் 5 விவசாயிகளும் ஏறி நின்று கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். உடனே போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அவர்களை கீழே இறங்க கூறினர்.
ஆனால் அவர்கள் தொடர்ந்து இறங்க மறுத்து அடம்பிடித்தனர். அதைத்தொடர்ந்து போராட்ட களத்தில் இருந்த அய்யாக்கண்ணுவை போலீசார் அழைத்துச்சென்று செல்போன் டவரில் ஏறிய விவசாயிகளை இறங்க கூறினர்.
பின்னர் தலைவர் வேண்டுகோளை ஏற்று அந்த விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு டவரில் இருந்து இறங்கினர். இதற்கிடையே தலைவரை கைது செய்தால் செல்போன் டவரில் இருந்து குதிப்பதாக அந்த விவசாயிகள் மிரட்டல் விடுத்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக அந்தப் பகுதியில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






