search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் இன்று 2-வது நாளாக முயற்சி: 6 அடுக்கு தடுப்பு அமைப்பு- கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் இன்று 2-வது நாளாக முயற்சி: 6 அடுக்கு தடுப்பு அமைப்பு- கடும் போக்குவரத்து நெரிசல்

    • விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
    • டெல்லி புறநகரில் பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ந்தேதி முதல் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநில விவசாயிகள் அறிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 8-ந்தேதி விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.

    இதையடுத்து நேற்று அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் ஊர்வலமாக டெல்லியை நோக்கி புறப்பட்டனர். 6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை லாரிகள், டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அவர்கள் சென்றனர்.

    அவர்களை தடுத்து நிறுத்த அரியானா மாநில அரசு கடந்த 3 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. அரியானாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் சாலைகளை சீல் வைத்து போலீசாரை குவித்தது. மேலும் டெல்லி எல்லையில் 6 அடுக்கு தடுப்பு சுவர்களும் உருவாக்கப்பட்டன.

    இதையெல்லாம் கண்டு கொள்ளாத அரியானா விவசாயிகள் பல முனைகளிலும் ஆயிரக்கணக்கில் திரண்டு சென்றனர். தடைகளை தகர்த்து டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்தனர். இதனால் அவர்கள் மீது டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

    ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதே போல பஞ்சாப், உத்தரபிரதேச மாநில எல்லைகளிலும் விவசாயிகள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்று இரவு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார்கள்.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை விவசாயிகள் எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கினார்கள். இன்று (புதன்கிழமை) காலை 2-வது நாளாக டெல்லியை நோக்கிய போராட்டத்தை திட்டமிட்டபடி தொடங்கப் போவதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர்.

    இதன் காரணமாக டெல்லி புறநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளன. என்றாலும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லி புறநகர் பகுதிகளில் குவிந்து வருகிறார்கள்.

    2-வது நாளாக இன்று 10 மணிக்கு மீண்டும் விவசாயிகள் டெல்லிக்குள் பலமுனைகளிலும் நுழைய முயற்சி செய்தனர். அவர்களை குறிப்பிட்ட எல்லைக்குமேல் வராமல் இருப்பதற்காக 6 அடுக்கு தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். இன்று டெல்லி புறநகர் பகுதிக்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. டெல்லி புறநகரில் பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் டெல்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்படுத்த போலீசார் கடுமையாக திணற நேரிட்டது. விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    விவசாயிகள் 6 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள், டீசல் உடன் புறப்பட்டு வருவது உள் நோக்கம் கொண்டது என்றும் தேவையில்லாமல் அமைதியை சீர்குலைப்பதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

    Next Story
    ×