search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரியானா அரசு"

    • புதிய முதல்வராக கட்சியின் மாநில தலைவர் நயாப்சிங் சைனி பதவி ஏற்றார்.
    • நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    90 உறுப்பினர்களை கொண்ட அரியானா சட்டசபைக்கு கடந்த 2019-ம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது.

    யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியுடன் (ஜெ.ஜெ.பி.) தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைத்து பா.ஜனதா ஆட்சி பொறுப் பேற்றது.

    பா.ஜனதாவை சேர்ந்த மனோகர் லால் கட்டார் முதலமைச்சராகவும், ஜெ.ஜெ.பி.யை சேர்ந்த துஷ்யந்த் சவுதாலா துணை முதலமைச்சராகவும் இருந்தனர். பாராளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் நேற்று பதவி விலகினார்கள். இதையடுத்து புதிய முதல்வராக கட்சியின் மாநில தலைவர் நாயப்சிங் சைனி பதவி ஏற்றார்.

    அவருடன் பா.ஜனதாவை சேர்ந்த கன்வர் பால், மூலசந்த் சர்மா, ஜெய் பிரகாஷ் தலால், பன்வாரி லால், சுயேட்சை எம்.எல்.ஏ. ரஞ்ஜித்சிங் சவுதாலா ஆகிய 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

    இந்த 5 பேரும் கட்டார் அமைச்சரவையில் பதவி வகித்தவர்கள் ஆவார்கள். ஜனநாயக ஜனதா கட்சிக்கு மொத்தம 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில் 5 பேர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    இந்த நிலையில் அரியானா சட்டசபையில் இன்று நடந்த சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சர் நயாப் சிங் சைனி தனது அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன் மீது விவாதம் நடைபெற்றது.

    சட்டசைப கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று ஜனநாயக ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கட்சி கொறடா உத்தரவிட்டு இருந்தது. ஆனால் கொறடா வின் உத்தரவை மீறி 5 எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    90 உறுப்பினர்கள் கொண்ட அரியானா சட்டசபையில் தற்போது பா.ஜனதாவுக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா அரசுக்கு 6 சுயேட்சை மற்றும் அரியானா லோகித் கட்சி எம்.எல்.ஏ.வின் ஆதரவு உள்ளது.

    எனவே ஜெ.ஜெ.பி. ஆதரவு இல்லாவிட்டாலும் பெரும்பான்மக்கு தேவையான பலம் தங்களிடம் இருப்பதாக பா.ஜனதா தெரிவித்தது.

    இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக தலைமையிலான அரியானா அரசு வெற்றி பெற்றுள்ளது.

    அரியானா சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் நயாப் சிங் சைனி அரசு வெற்றி பெற்றது.

    இதன்மூலம், நயாப் சிங் சைனி தலைமையிலான அரசு ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது.

    புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த நயாப் சைனி நேற்று பதவி ஏற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
    • டெல்லி புறநகரில் பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் பிப்ரவரி 13-ந்தேதி முதல் முற்றுகை போராட்டம் நடத்தப் போவதாக அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநில விவசாயிகள் அறிவித்தனர்.

    இதையடுத்து கடந்த 8-ந்தேதி விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.

    இதையடுத்து நேற்று அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் பல்லாயிரக்கணக்கில் ஊர்வலமாக டெல்லியை நோக்கி புறப்பட்டனர். 6 மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை லாரிகள், டிராக்டர்கள் மற்றும் வாகனங்களில் ஏற்றிக் கொண்டு அவர்கள் சென்றனர்.

    அவர்களை தடுத்து நிறுத்த அரியானா மாநில அரசு கடந்த 3 நாட்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இருந்தது. அரியானாவில் இருந்து டெல்லிக்கு செல்லும் சாலைகளை சீல் வைத்து போலீசாரை குவித்தது. மேலும் டெல்லி எல்லையில் 6 அடுக்கு தடுப்பு சுவர்களும் உருவாக்கப்பட்டன.

    இதையெல்லாம் கண்டு கொள்ளாத அரியானா விவசாயிகள் பல முனைகளிலும் ஆயிரக்கணக்கில் திரண்டு சென்றனர். தடைகளை தகர்த்து டெல்லிக்குள் நுழைய முயற்சி செய்தனர். இதனால் அவர்கள் மீது டிரோன்கள் மூலம் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

    ஏராளமான விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். இதே போல பஞ்சாப், உத்தரபிரதேச மாநில எல்லைகளிலும் விவசாயிகள் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நேற்று இரவு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார்கள்.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை விவசாயிகள் எந்த போராட்டத்திலும் ஈடுபடவில்லை. ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து தங்கினார்கள். இன்று (புதன்கிழமை) காலை 2-வது நாளாக டெல்லியை நோக்கிய போராட்டத்தை திட்டமிட்டபடி தொடங்கப் போவதாக விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அறிவித்தனர்.

    இதன் காரணமாக டெல்லி புறநகர் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணைய சேவைகளும் முடக்கப்பட்டு உள்ளன. என்றாலும் பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச மாநில விவசாயிகள் டெல்லி புறநகர் பகுதிகளில் குவிந்து வருகிறார்கள்.

    2-வது நாளாக இன்று 10 மணிக்கு மீண்டும் விவசாயிகள் டெல்லிக்குள் பலமுனைகளிலும் நுழைய முயற்சி செய்தனர். அவர்களை குறிப்பிட்ட எல்லைக்குமேல் வராமல் இருப்பதற்காக 6 அடுக்கு தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். இன்று டெல்லி புறநகர் பகுதிக்கு கூடுதல் போலீஸ் படை அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. டெல்லி புறநகரில் பல இடங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

    இதனால் டெல்லியில் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்தை சீர்படுத்த போலீசார் கடுமையாக திணற நேரிட்டது. விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    விவசாயிகள் 6 மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள், டீசல் உடன் புறப்பட்டு வருவது உள் நோக்கம் கொண்டது என்றும் தேவையில்லாமல் அமைதியை சீர்குலைப்பதாகவும் மத்திய அரசு குற்றம் சாட்டி உள்ளது.

    • அரியானா முதல் மந்திரியாக மனோகர் லால் காட்டார் இருந்து வருகிறார்.
    • முதல்முறையாக திருமணம் ஆகாதவர்களுக்கு பென்ஷன் வழங்கும் திட்டம் அங்கு அறிமுகமாகிறது.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் முதியோர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது போல் திருமணமாகாதவர்களுக்கும் பென்ஷன் அளிக்க முடிவு செய்துள்ளது மாநில அரசு.

    விரைவில், அமலுக்கு வர உள்ள இந்த பென்ஷன் பெற தகுதிகளாக சில விதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

    அதன்படி, திருமணம் ஆகாதவர்கள் 45 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    அவர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அரியானாவில் திருமணமாகாதவர்கள் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் மாதந்தோறும் 2,750 ரூபாய் பென்ஷன் பெற உள்ளனர்.

    தற்போது திருமணமாகாதவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் பென்ஷன் வழங்க அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    ஏற்கனவே, பெண் குழந்தைகள் மட்டும் உள்ள ஒரு வீட்டில் தாய், தந்தையர் இருவரில் ஒருவர் உயிரிழந்தாலும் பென்ஷன் வழங்கும் திட்டம் அரியானாவில் கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • அரியானா அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது.
    • அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை.

    சண்டிகர்:

    அரியானா மாநிலத்தில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் இனி ஜீன்ஸ், டீ-சர்ட் அணிய முடியாது. அதிகமான ஒப்பனை, வினோதமான முடி அலங்காரத்துக்கும் அனுமதி இல்லை. இதற்கான தடையை அந்த மாநில அரசு விதிக்கிறது. இதுதொடர்பாக, சுகாதார மந்திரி அனில் விஜ் கூறியதாவது:

    அரசு மருத்துவமனை ஊழியர்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டு விதிமுறை தயாரிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

    பணியில் இருக்கும் ஊழியர்கள் 24 மணி நேரமும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். வார இறுதிகள், மாலை மற்றும் இரவுப் பணிக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது. தவறும் ஊழியர்கள் குறிப்பிட்ட தினம் பணிக்கு வராததாக பதிவு செய்யப்படும்.

    வினோதமான முடி அலங்காரம், அதிகமான நகை, அணிகலன்கள், ஒப்பனை அணிவதற்கும் தடை விதிக்கப்படுகிறது. நகங்களை ஒட்ட வெட்டி சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். காலணிகளும் தூய்மையாக இருக்கவேண்டும். பெண் ஊழியர்கள் குட்டை பாவாடை, கையில்லாத மேலாடை போன்றவற்றை அணியக்கூடாது. டெனிம், தோல் ஆடைகளுக்கு அனுமதியில்லை.

    ஊழியர்கள் நேர்த்தியான, சுத்தமான ஆடையில் தங்களின் பெயர், பணி குறித்த பட்டியை அணிந்திருக்க வேண்டும். அரசு மருத்துவமனை ஊழியர்கள் இடையே ஒழுங்கு, ஒரே தன்மை, சமத்துவம் போன்றவற்றை கொண்டு வருவதற்காகவும், அரசு மருத்துவமனைகள் குறித்து பொதுமக்களிடம் ஒரு நன்மதிப்பை உருவாக்கும் விதமாகவும் இந்த ஆடைக் கட்டுப்பாட்டு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

    பாதுகாவலர்கள், டிரைவர்கள், சமையலர்கள் உள்பட ஆஸ்பத்திரி அனைத்துப் பிரிவு ஊழியர்களும் முறையான சீருடையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

    அரியானா மாநில அரசின் இந்த முடிவை பெரும்பாலான அரசு டாக்டர்களும், ஊழியர்களும் வரவேற்றுள்ளனர்

    ×