search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode East By Polls"

    • எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று காலை ஈரோடுக்கு வந்தார்.
    • பவானி நசியனூரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்று எடப்பாடி பழனிசாமி வழிப்பாடு செய்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந்தேதி தொடங்குகிறது.

    மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதே போல் தே.மு.தி.க.வும் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்து உள்ளது.

    இதற்கிடையே நாம் தமிழர் கட்சியும் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து உள்ளது. சமத்துவ மக்கள் கட்சி, பா.ம.க. ஆகிய கட்சிகள் தேர்தலில் போட்டியில்லை என்றும், யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்து விட்டனர்.

    மேலும் டி.டி.வி. தினகரனும் வேட்பாளர் தேர்வில் ஈடுபட்டுள்ளார். இதே போல் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிசாமி அறிவித்தார். அதே போல் ஓ.பி.எஸ்.சும் தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவோம் என்று அறிவித்து உள்ளார்.

    இதையடுத்து முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று காலை ஈரோடுக்கு வந்தார். பவானி நசியனூரில் உள்ள அவரது குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிப்பாடு செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு வந்தார்.

    அங்கு ஈரோடு மாவட்ட முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயகுமார், பண்ணாரி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, பகுதி செயலாளர்கள் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் பூத் கமிட்டி, தேர்தல் வெற்றி வியூகங்கள், பிரசார யுக்தி குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

    இதற்கிடையே நாளை அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதுகுறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகளை தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
    • தற்போது 2-வது முறையாக நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

    பொதுமக்களுக்கு பரிசு பொருட்கள், பணம் கொடுக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் 3 நிலை கண்காணிப்பு குழு, 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு அவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் தீவிர வாகன சோதனை ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று இரவு நிலை கண்காணிப்பு குழுவினர் எல்லை மாரியம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார். மோட்டார் சைக்கிளை நிறுத்தி நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனை செய்தனர்.

    அப்போது ரூ.1 லட்சத்து 17 ஆயிரம் ரொக்க பணம் இருந்தது. நிலை கண்காணிப்பு குழுவினர் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் பகுதியை சேர்ந்த அணில் லகோதி (36) என்பதும், அதே பகுதியில் பிளாஸ்டிக் கடை நடத்தி வருவதும் தெரிய வந்தது. வியாபாரியான இவர் கடையில் வசூலான தொகையை கொண்டு வந்தபோது நிலை கண்காணிப்பு குழுவினரிடம் சிக்கியது தெரிய வந்தது.

    இந்த பணத்திற்குரிய ஆவணம் அவரிடம் இல்லாததால் நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை அவரிடம் இருந்து பறிமுதல் செய்து மாநகராட்சியில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு வந்து மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.

    இந்த பணத்திற்குரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு அதிகாரிகள் அணில் லக்கோதிடம் அறிவுறுத்தினர்.

    ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனியார் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது 2-வது முறையாக நிலை கண்காணிப்பு குழுவினர் பணத்தை பறிமுதல் செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நாம் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்.
    • வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பேன்.

    ஈரோடு :

    ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தல் பணிமனை ஈரோடு பெருந்துறைரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த இதன் திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்த சோனியாகாந்தி, ராகுல்காந்தி, அழகிரி ஆகியோருக்கும், என் மீதும், என் குடும்பத்தினர் மீதும் அதிக பாசத்தை பொழிந்து வரும், தமிழ் மக்களின் காவலர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் பெயர் அறிவிப்புக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்துக்கு எதையும் எதிர்பாராமல் பிரசாரத்தை தி.மு.க.வினர் ஆரம்பித்து இருக்கிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் என்ற வேறுபாடுகள் கிடையாது. எல்லோரும் மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர்கள்.

    இந்த தேர்தலில் மதச்சார்பற்ற அணியின் வேட்பாளராக போட்டியிடும் போது, தனிப்பட்ட முறையில் துக்கம் அதிகமாக இருந்தாலும் எனது மகன் விட்டுச்சென்ற பணிகளை தொடா்ந்து செய்ய வேண்டும் என்ற ஆவலில் தான் ஒப்புக்கொண்டேன்.

    தமிழ்நாட்டுக்கு, தமிழ் மக்களுக்கு, தமிழ் மொழிக்கு, தமிழ் கலாசாரத்துக்கு காவலனாக போர் வீரராக காத்து கொண்டு இருப்பவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். அவரது கரத்தை பலப்படுத்தும் வகையில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் தருவார்கள் என்ற நம்பிக்கை இருந்தாலும்கூட, நாம் மிக பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அதுதான் மு.க.ஸ்டாலினுக்கும், ராகுல்காந்திக்கும் சூட்டுகின்ற மகுடமாக இருக்கும்.

    எனது மகனைபோல், எனது தந்தையைபோல், எனது தாத்தா பெரியாரைபோல், வாய்ப்பு கொடுத்தால் கண்டிப்பாக மக்களுக்காக உழைப்பேன்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

    • நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வருகிற 29-ந்தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளார்.
    • தேர்தல் ஆணையத்தால் ஒரு மாநிலத்தில் ஒரே கட்டமாக கூட தேர்தல் நடத்த முடியவில்லை.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை பெருமாநாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக புதுக்கோட்டை, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஈரோடு இடைத்தேர்தல் களம் எனக்கானது, இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது உறுதி. தேர்தல் ஆணையம் உள்ளதா என்பதை யாராவது கூற வேண்டும். தி.மு.க.வின் எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது. இது எங்களுக்கு சாதகமாக இருக்கும்.

    எந்த தேர்தலிலும் நான் யாரிடமும் கூட்டணிக்காக நிற்கப் போவது கிடையாது, தனித்து தான் இருப்பேன். அதிகார பலம், பண பலத்தை ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. காட்ட தொடங்கிவிட்டது. இடைத்தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டியிடும் என்று கூறி வேட்பாளரை அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது, துணிச்சலான முடிவு வாழ்த்துக்கள்.

    தேர்தலில் வெற்றி பெறுவது அரவிந்த் கெஜ்ரிவாலால் முடியும், சீமானால் முடியாதா? கமல்ஹாசன் கட்சி தொடங்கும் போது தனித்து தான் போட்டி என்று கூறினார். தற்போது அவர் காங்கிரஸ் பக்கம் சாய்வதாக தெரிகிறது. அதுபோன்று வரும் காலத்தில் நாங்கள் கூட்டணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    பணத்தை பாதுகாப்பதற்கு அ.தி.மு.க.விற்கு பாரதிய ஜனதா தேவைப்படுகிறது. ஆனால் தேர்தலில் வாக்குகள் விழாது என்பதால் பா.ஜ.க.வை கழட்டி விட அ.தி.மு.க. நிற்கிறது

    ஈரோடு இடைத்தேர்தலில் எனக்கு யாரும் போட்டி கிடையாது. எத்தனை பேர் களமிறங்கினாலும் நாம் தமிழர் கட்சி வெற்றி பெறுவது உறுதி. நான் தனித்து போட்டியிடுவேன் என்று ஒவ்வொரு தேர்தலிலும் கூறி தனித்து போட்டிட்டு வருகிறேன். இது போன்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தனித்து போட்டியிடும் என்று கூற முடியுமா?

    நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வருகிற 29-ந்தேதி ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளார். தேர்தல் ஆணையத்தால் ஒரு மாநிலத்தில் ஒரே கட்டமாக கூட தேர்தல் நடத்த முடியவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியமாகும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பேச்சுக்காக மட்டுமே தொடர் அமைக்க அது செயல்படுத்த முடியாது.

    தி.மு.க. ஒரு நாடக கூட்டம். மத்திய அரசை, ஆளுநரை எதிர்ப்பது போல் எதிர்க்கும். ஆனால் தனியாக சென்று அவர்கள் காலில் விழும். அவரோடு சேர்ந்து உணவும் அருந்துவார்கள்.

    குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் குறித்து எழுதிய கடிதத்தில் கூட அவரை மாற்ற வேண்டும் என்று கூறாமல், மாநில அரசின் நலன் கருதி எங்களோடு ஒத்துழைப்பு கொடுக்கச் சொல்லுங்கள் என்று தான் முதல்வர் கடிதம் எழுதினார்.

    2024 ஆம் ஆண்டு நடக்கும் பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆட்டத்தை பாருங்கள். தற்போது தமிழகத்தில் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. இவர்கள் யாரும் தே.மு.தி.க. பக்கம் செல்லப்போவது கிடையாது. மாற்றம் தமிழகத்தில் ஏற்படும் என்று நான் நம்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரை அறிவித்துள்ளது.
    • ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கமல்ஹாசன் கூறினார்.

    மதுரை:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இறந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலில் ஆளும் கட்சியான தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ. வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    மேலும் இந்த தொகுதியில் அ.தி.மு.க. எடப்பாடி அணி, ஓ.பி.எஸ். அணி சார்பில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்துள்ளது.

    தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து ஆதரவு கோரி இருந்தார். இதற்கிடையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக கூறினார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தி நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த போஸ்டர்களில் "ஆதரவு ஈவோரை விலக்கு, இன்றைய இலக்கு, ஈரோடு கிழக்கு, இந்த மாதிரி நேரத்தில் நம்மவர் சொல்லுற வார்த்தை பார்த்துக்கலாம். தனியே களம் காண்போம், நம்பிக்கையே நம் பலம்" போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

    ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக கமல் அறிவித்துள்ள நிலையில், தனித்து போட்டியிட வேண்டும் என்று கமல் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டியிருப்பது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பொறுப்பாளராக அருணாச்சலம் நியமனம்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான முடிவை இப்போது சொல்ல முடியாது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. களம் இறங்குகிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்குமாறு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேட்டுக் கொண்டார்.

    அப்போது கமல்ஹாசன், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்துக்கு நேரில் சென்ற காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் நேரில் ஆதரவு கேட்டார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கமல்ஹாசன், காங்கிரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை கூட்டி முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்தார்.

    இதன்படி மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று கமல்ஹாசன் தலைமையில் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் செயற்குழு நிர்வாக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டது.

    கூட்டம் முடிந்த பிறகு கமல்ஹாசன், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரிப்பதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பெரியாரின் பேரனும், எனது நண்பருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக்கொள்கிறது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாக, செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சி செய்யும்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகி அருணாசலம் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

    இன்றைய அரசியல் சூழ்நிலையில் மதவாத சக்திகள் முழுபலத்தோடு எதிர்க்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு எள்முனையளவும் கருத்து வேறுபாடு இல்லை.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனைகள் அற்ற ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளோம்.

    இந்தியாவின் பன்முகத்துவத்துவமும் இறையாண்மையும் தொடர்ந்து நெருக்கடிக்கு உள்ளாகிறது. மொத்த தேசத்தையும் ஒற்றை பண்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட வேண்டுமென துடிக்கிறார்கள். மக்களின் உணவு, உடை, மொழி, கலாச்சாரம் என ஒவ்வொன்றிலும் ஊடுருவ முயற்சிக்கிறார்கள்.

    ஜனநாயக சக்திகளின் குரல்வளைகள், கருத்துரிமைகள் ஒடுக்கப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை சுதந்திரமாக செயல்படவிடாமல் கொல்லைப்புறம் வழியாக நுழைந்து மாநில உரிமைகளில் தலையிடுவதும், இடையூறு செய்வதும் தொடர்கிறது.

    இந்த ஏகாதிபத்திய சக்திகளிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றியாக வேண்டிய வரலாற்று கடமை ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது.

    நாம் அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை வெற்றி பெற செய்து, மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று இப்போது எதுவும் கூற முடியாது.

    இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

    • தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.
    • 1800 425 94890 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்து விட்டது.

    இதனையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் புகைப்படம், சிலைகள் பேனர்கள், சுவர் விளம்பரம் மறைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு பணம் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் நிலை கண்காணிப்பு குழுக்கள், பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    எனவே தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறல் குறித்த புகார்களை கீழ்கண்ட 6 குழுக்களிடமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம். கண்காணிப்பு குழுவினர் மற்றும் அவர்களது தொடர்பு எண்கள் வருமாறு:-

    * பறக்கும் படை குழு எண் 1: 7094488017

    * பறக்கும் படை குழு எண் 2: 7094488049

    * பறக்கும் படை குழு எண் 3: 7094488072

    * நிலையான கண்காணிப்பு குழு எண் 1: 7094488076

    * நிலையான கண்காணிப்பு குழு எண் 2: 7094488982

    * நிலையான கண்காணிப்பு குழு எண் 3: 7094488983.

    மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது. இதனை 1800 425 94890 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம்.

    இதேபோல மாவட்டத் தேர்தல் அலுவலகம் அமைந்துள்ள கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தை 1800 425 0424 எனும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், 0424 2256782, 0424 2267672 எனும் தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், அவரது திட்டங்களை முறியடிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
    • ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    சேலம்:

    ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் என இருதரப்பும் போட்டியிட தயாராகி வருகின்றனர்.

    நேற்று, சேலம் மாவட்டம் ஓமலூர் கோட்டை மேட்டுப்பட்டியில் உள்ள அ.தி.மு.க. சேலம் புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், எஸ்.பி.வேலுமணி, காமராஜ், கே.பி.அன்பழகன், பெஞ்சமின், செல்லூர் ராஜூ, உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி, கே.சி.வீரமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ராஜேந்திர பாலாஜி, கே.சி.சம்பத், இசக்கி சுப்பையா, நத்தம் விஸ்வநாதன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    இந்த கூட்டம் மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 8 மணி வரை 3 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. இதில் ஈரோடு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்தும், வேட்பாளராக யாரை நிறுத்துவது, தேர்தல் வெற்றிக்கு என்னென்ன செய்ய வேண்டும், அ.தி.மு.க.வுக்கு சாதகமான நிகழ்வுகள் குறித்தும், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவது குறித்தும், விரைவில் வரவுள்ள கட்சி தொடர்பான வழக்கின் தீர்ப்பு குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ள முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், அவரது திட்டங்களை முறியடிப்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் ஆலோசனை கூட்டத்தில் ஈரோடு இடைத்தேர்தல் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் பெயர் பரிசீலிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    அவர் மறுக்கும் பட்சத்தில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, பகுதி செயலாளர் மனோகரன் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

    சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிட தயங்க கூடாது, நாம் தான் உண்மையான அ.தி.மு.க என்பதை நிரூபித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அதை திறமையாக எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    மேலும் அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். எனவே தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள் எனவும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆலோசனைக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.

    இன்று (புதன்கிழமை) காலை எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் பலர் அ.தி.மு.க.வில் இணைந்தனர். அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் 2-வது நாளாக இன்றும் ஆலோசனை நடத்தினார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் அ.தி.மு.க.வில் தொடர்ந்து நிலவி வரும் சர்ச்சைகள் தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அதை சரிசெய்து தி.மு.க. கூட்டணிக்கு பலமான போட்டியை கொடுக்க எடப்பாடி பழனிசாமி திட்டம் வகுத்து வருகிறார்.

    இதனால் அரசியல் விமர்சகர்கள் மற்றும் மற்ற கட்சியினரின் பார்வை அ.தி.மு.க. 2 அணிகளை நோக்கி திரும்பியுள்ளது.

    குறிப்பாக எடப்பாடி பழனிசாமியின் முடிவு மற்றும் வியூகத்தை அறிந்து கொள்ள அனைத்து தரப்பினரிடமும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    • எங்கள் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி.
    • நாங்கள் தேவையில்லாமல் யாரிடமும் சவால் விட மாட்டோம்.

    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 'அரசியலமைப்பை பாதுகாப்போம்', 'கையோடு கை கோர்ப்போம்' என்ற பரப்புரை இயக்க மண்டல ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். நான் மிகுந்த தைரியத்தோடு அண்ணாமலைக்கு நேரடியாக ஒரு சவால் விடுகின்றேன். அவர் அ.தி.மு.க.வை விட நாங்கள் தான் பெரிய கட்சி என்று சொன்னார்.

    அவர் பாராளுமன்ற தேர்தலில் தனியாக நிற்பதற்கு முன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் நிற்க முடியுமா. தனியாக கூட நிற்க வேண்டாம். அ.திமு.க. கூட்டணியோடு அண்ணாமலை நிற்பதற்கு தைரியம் இருக்கிறதா. தைரியம் இருந்தால் அண்ணாமலை நின்று காட்டட்டும். யார் வெற்றி பெறுகிறார் என்று பார்ப்போம். நாங்கள் தேவையில்லாமல் யாரிடமும் சவால் விட மாட்டோம்.

    எங்கள் கூட்டணி கொள்கை உள்ள கூட்டணி. அ.தி.மு.க. கூட்டணியில் இந்த தேர்தலில் நிற்பதற்கு தயங்குகின்றனர். அவர்களின் கூட்டணியில் தேர்தலை சந்திக்க கூடிய ஆற்றல் இல்லை. இவ்வளவு தான் அவர்களின் பலம். நாம் தேர்தல் களத்தில் நமது வேட்பாளரை இறக்கி விட்டு உள்ளோம். ஆனால் அவர்கள் யார் நிற்க வேண்டும் என்ற பந்தை அவர்களுக்கு உள்ளேயே உதைத்து கொள்கின்றனர். எங்களோடு பந்தை உதைப்பதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதுவரை அவர்கள் அந்த களத்திற்கு வரவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாங்கள் எங்கள் அலுவலக புதிய முகவரியை ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து இருந்தோம்.
    • தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்துக்கட்சிகளின் முகவரிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தேர்தல் விதிமுறைகளை கடைபிடிப்பது பற்றி ஆலோசிக்க அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அழைப்பு விடுத்து இருந்தார்.

    இந்த ஆலோசனை கூட்டத்துக்கு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது. எடப்பாடி பழனிசாமி தரப்பில் துரைசாமி என்பவர் கலந்து கொண்டார்.

    இந்த கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அழைப்பு கிடைக்காததால் யாரும் கலந்து கொள்ளவில்லை. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மாவட்ட செயலாளர் முருகானந்தம் கூறும்போது, கலெக்டரிடம் இருந்து முறையான அழைப்பு கடிதம் வராததால் கலந்து கொள்ளவில்லை.

    நாங்கள் எங்கள் அலுவலக புதிய முகவரியை ஏற்கனவே தேர்தல் அதிகாரியிடம் கொடுத்து இருந்தோம். இந்த கூட்டத்தில் பங்கேற்க முடியாததால் எங்கள் வெற்றி வாய்ப்பு பாதிக்காது. விரைவில் தேர்தல் பணிகளை தொடங்குவோம் என்றார்.

    அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, தேர்தல் ஆணையம் வழங்கிய அனைத்துக்கட்சிகளின் முகவரிக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது என்று கூறினார்கள்.

    கட்சி அலுவலகம் தற்போது எடப்பாடி பழனிசாமி அணியினரின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது.
    • இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக நிர்வாகிகள் கூறினர்.

    சேலம்:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் அ.தி.மு.க.வுக்கு பாரத இந்து பரிவார் ஆதரவு தெரிவித்து உள்ளது. இந்தஅமைப்பின் தேசிய தலைவர் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் வந்து சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இந்துக்கள் மற்றும் இந்துக்கள் உடமைகளும், கோவில்களும் பாதுகாக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுதால், அ.தி.மு.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளோம் என்றனர். அப்போது திருவண்ணாமலை கலசபாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம் உடன் இருந்தார்.

    இதேபோல் மனித உரிமைகள் கழகமும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன் நிறுவனத் தலைவர் சுரேஷ் கண்ணன் மற்றும் பொருளாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

    தொடர்ந்து சுரேஷ் கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில், பொய்யான வாக்குறுதியை கூறி தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனால் எடப்பாடியார் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நாங்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றிக்கு பிரசாரத்திலும் ஈடுபடுவோம் என்றார். 

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களை தொடர்பு கொண்டு அனைவரும் 27-ந்தேதி ஈரோடு சென்று பிரசாரத்தை தொடங்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.
    • 11 அமைச்சர்களும் ஈரோட்டில் 27-ந்தேதியில் இருந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    ஆளும் தி.மு.க. தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கே இந்த தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது.

    காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அது மட்டுமின்றி கூட்டணி கட்சி தலைவர்களான ம.திமு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்பட கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளிடமும் ஆதரவு கேட்டார்.

    இதை தொடர்ந்து இன்று முதல் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஈரோடு தொகுதியில் தனது பிரசாரத்தை தொடங்கி உள்ளார்.

    ஈரோடு தொகுதியில் நடைபெறும் தேர்தல் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இந்த தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தி.மு.க. தேர்தல் வியூகம் வகுத்து வருகிறது.

    இதற்காக 11 அமைச்சர்களை உள்ளடக்கிய 31 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளது.

    இந்த குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எஸ்.முத்துசாமி, எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், அர.சக்கரபாணி மு.பெ.சாமிநாதன், வி.செந்தில் பாலாஜி, ஆவடி சா.மு.நாசர், கயல்விழி செல்வராஜ் ஆகிய 11 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அந்தியூர் செல்வராஜ், கோவை நா.கார்த்திக், தளபதி முருகேசன், தொ.அ. ரவி, தா.உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், சேலம் ஆர்.ராஜேந்திரன், டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், நல்லசிவம், பத்மநாபன், பா.மு.முபாரக், மதியழகன், ராஜேஸ்குமார், மதுரா செந்தில், பெ.பழனியப்பன், பிரகாஷ், திருப்பூர் செல்வராஜ், ஐ.பி.செந்தில்குமார், தடங்கம் சுப்ரமணி ஆகிய 20 பேர்களும் இடம்பெற்றுள்ளனர்.

    அமைச்சர்களில் கே.என்.நேரு, முத்துசாமி மட்டுமே ஈரோட்டில் முகாமிட்டு உள்ளனர். மற்ற அமைச்சர்கள் இன்னும் ஈரோடு செல்லவில்லை.

    மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாளை நடைபெறுவதால் அந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்கூட்டம் முடிந்ததும் அமைச்சர்கள் ஈரோடு செல்ல உள்ளனர்.

    இதற்கிடையே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களை தொடர்பு கொண்டு அனைவரும் 27-ந்தேதி ஈரோடு சென்று பிரசாரத்தை தொடங்குமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனால் 11 அமைச்சர்களும் ஈரோட்டில் 27-ந்தேதியில் இருந்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் 280 பூத் (வாக்குச்சாவடி) உள்ளது. அதை 11 அமைச்சர்களுக்கும் பிரித்து கொடுத்து அதற்கேற்ப பணியாற்றுமாறும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசார பணிகளை சென்னையில் இருந்தபடி கவனித்து வரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிப்ரவரி 2-வது வாரம் அங்கு சென்று பொதுக்கூட்டத்தில் பேசுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த தேதியில் பிரசாரத்திற்கு செல்வார் என்ற விவரம் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட்டாலும் அவர்களை விட தி.மு.க.வினர்தான் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பே தி.மு.க. அமைச்சர்கள் கே.என்.நேரு, முத்துசாமி ஆகியோர் ஈரோட்டில் 'கை' சின்னத்துக்கு வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தது குறிப்பிடத்தக்கது.

    ×