search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "education loan"

    • 293 மாணவ மாணவிகளுக்கு 44 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்களை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார்.
    • தமிழகத்தில் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு அதிக கல்விக் கடன் வழங்கிய மாவட்டம் கோவை மாவட்டமாக இருக்க வேண்டும் என சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    கோவை:

    கோவை கொடிசியா தொழிற்கூட வளாகத்தில் முன்னோடி வங்கிகள் மூலம் மாணவ மாணவிகளுக்கு கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் 293 மாணவ மாணவிகளுக்கு 44 கோடி ரூபாய் மதிப்பிலான கல்விக் கடன்களை அமைச்சர் செந்தில்பாலாஜி வழங்கினார். இதில் கோவை எம்.பி., பி.ஆர். நடராஜன், கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் மற்றும் வங்கி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை மாவட்டத்தில் கல்விக்கடன் விண்ணப்பித்த அனைவருக்கும் கல்வி கடன் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி இன்று கோவை மாவட்டத்தில் 293 மாணவ மாணவிகளுக்கு 44 கோடி ரூபாயில் கல்விக் கடன்கள் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 350 கோடி ரூபாய் அளவிற்கு கல்விக்கடன் வழங்க இலக்கு செய்துள்ளது. வரும் 30 நாட்களில் 100 கோடி ரூபாய் முதற்கட்டமாக கல்விக்கடன் வழங்க உள்ளது.

    எனவே கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தமிழகத்தில் குறிப்பாக மாணவ மாணவிகளுக்கு அதிக கல்விக் கடன் வழங்கிய மாவட்டம் கோவை மாவட்டமாக இருக்க வேண்டும் என சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது

    வங்கி மேலாளர்கள் சிபில் ஸ்கோர் பிரச்சனையால் கல்விக் கடன்களை வழங்காமல் இருக்கக்கூடாது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னோடி வங்கிகள் விண்ணப்பிக்க கூடிய மாணவ, மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கல்விக் கடன் அக்கறைகொண்டு விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    மாணவச் செல்வங்களுக்கு கல்விக் கடன் கேட்டு தனிப்பட்ட முறையில் வங்கிகளை அணுகும் போது சிரமங்கள் ஏற்பட்டால் கல்வி நிறுவனங்கள் மூலமாக நீங்கள் அணுகலாம் இல்லை என்றால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான கல்விக்கடனை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து கடந்த ஓராண்டாக ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெறவில்லை என வானதி சீனிவாசன் மத்திய அமைச்சரிடம் மனு அளித்துள்ள கேள்விக்கு அவர் பதில் அளித்து பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பதவியேற்ற பின்பு கோவை மாவட்டத்தின் வளர்ச்சிகளில் தனி கவனம் எடுத்து வருகிறார். வ.உ.சி மைதானத்தில் 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற அமைச்சரும் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட குளறுபடிகள் விரைவாக முடிக்க உத்தரவை வழங்கியுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி பணிகள் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு மக்களுக்கு தேவையான கட்டமைப்பை உருவாக்க பணிகள் மேற்கொள்ள வேண்டும்.

    குளங்களை பொருத்தவரை பணிகள் செய்கின்ற போது குளத்தின் அளவை குறைத்து உள்ளார்கள் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனை முதல்-அமைச்சர் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி ஆணையாளர் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே கல்வி கடன் கட்ட முடியாததால் என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை அடுத்த குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் படிக்கும் போது குமாரபாளையத்தில் உள்ள ஒரு வங்கியில் கல்வி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. போதிய வருமானம் இல்லாததால் பிரசாத் கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி சார்பில் நடந்த சிறப்பு கடன் தீர்ப்பு முகாமில் வட்டியுடன் சேர்த்து ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 846-ஐ திருப்பி செலுத்த வேண்டும் என வங்கி நிர்வாகம் பிரசாத்துக்கு எச்சரிக்கை விடுத்தது.

    இதனால் மன வேதனை அடைந்த பிரசாத் நேற்று மாலை பல்லக்காபாளையம் பெரியகாப்ரா மலை பகுதியில் சேலையால் தூக்கில் தொங்கினார். அப்போது அங்கு ஆடு மேய்த்து கொண்டு இருந்த பெண் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் பிரசாத்தை காப்பாற்றினார்.

    பிரசாத் தற்கொலைக்கு முயன்ற இடத்தில் உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் அவர் என் மரணத்துக்கு பிறகாவது என்னை போல் கல்வி கடன் வாங்கி வங்கி நிர்வாகத்தால் மிரட்டப்படும் நிலை மாறி நல்ல தீர்வு கிடைக்கட்டும் என்று எழுதி இருந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    நீலகிரியில் மாரடைப்பால் இறந்த என்ஜினீயரிங் மாணவர் வங்கியில் வாங்கியிருந்த கல்வி கடனை அதிகாரிகள் செலுத்திய சம்பவம் கோர்ட்டில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    காந்தல்:

    நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகன் மகன் பாலமுரளி. இவர் ஊட்டியில் உள்ள ஓரியண்டல் வங்கியில் ரூ.1.3 லட்சம் கல்விக் கடன் பெற்று என்ஜினீயரிங் படித்தார். கணவர் இறந்த பின்னர் தாய் மட்டுமே மகனை படிக்க வைத்தார்.

    பாலமுரளி ரூ.30 ஆயிரம் மட்டுமே வங்கியில் செலுத்தியிருந்தார். இந்நிலையில் மீதி கடனை உடனடியாக செலுத்த வேண்டும் என்று பாலமுரளிக்கு வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பாலமுரளி திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். இதனால் பாக்கி வங்கிக் கடனை திருப்பிச்செலுத்தாத நிலை ஏற்பட்டது.

    இந்நிலையில், நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான வடமலையின் பரிந்துரையின் பேரில் வாராக்கடன் தொடர்பான மத்தியஸ்த கூட்டம் சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார் தலைமையில் ஊட்டியில் நேற்று நடைபெற்றது.

    இதில், வங்கியின் மேலாளர் பிரேம், பாலமுரளியின் வக்கீல் நீலகிரி மாவட்ட வக்கீல்கள் சங்கத்தலைவருமான ஸ்ரீஹரி ஆகியோர் பங்கேற்றனர்.

    இதில், பாலமுரளியின் குடும்பச் சூழலைக் கருத்தில் கொண்டு, வங்கிக்கு அவர் செலுத்த வேண்டிய ரூ. 1 லட்சத்தில் 90 ஆயிரத்தை தள்ளுபடி செய்துவிடுவதாக வங்கி மேலாளர் பிரேம் அறிவித்தார்.

    இருப்பினும், மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை கண்டிப்பாக கட்ட வேண்டும் என தெரிவித்ததார். இதனையடுத்து நீலகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலர் சுரேஷ்குமார், வக்கீல் ஸ்ரீஹரி, வங்கி மேலாளர் பிரேம் ஆகிய மூவரும் சேர்ந்து பாக்கி தொகையான ரூ.10 ஆயிரத்தை செலுத்தி மாணவரையும், அவரது தாயாரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தனர்.

    இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
    கல்வி கடன் பிரச்சனை தொடர்பாக ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்த்து நாகப்பட்டினத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார்.
    சென்னை:

    நாகப்பட்டினத்தை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவி தீபிகா. இவர், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் கேட்டு விண்ணப்பித்தார். இவரது விண்ணப்பத்தை வங்கி நிர்வாகம் நிராகரித்தது.

    இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் வழக்கு தொடர்ந்தார். அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல், ‘மாணவியின் தந்தை கடன் வாங்கி திருப்பித்தரவில்லை. பல தவணைகளை செலுத்தாமல் உள்ளார். மேலும், நர்சிங் படிப்பு கல்விக்கடன் பெறும் படிப்புகளுக்கான பட்டியலில் இல்லை. அதனால், இவருக்கு கடன் வழங்க முடியாது’ என வாதிட்டார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வைத்தியநாதன், கடன் கொடுத்து விட்டு, கடனாளி பின்னால் வங்கி அதிகாரிகள் ஓடுவதை விட, கடன் கொடுக்காமல் இருப்பதே மேலானது என்று தீர்ப்பு அளித்தார். மாணவிக்கு கடன் வழங்க மறுத்து வங்கி நிர்வாகம் எடுத்த முடிவு சரிதான் என்று தீர்ப்பு அளித்தார்.

    இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் அந்த மாணவி வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், என் தந்தை எந்த வங்கியிலும் கடன் வாங்கவில்லை. எனவே, தனி நீதிபதி வைத்தியநாதன் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.#tamilnews
    தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான் என சென்னை ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது.
    சென்னை:

    நாகை மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் மாணவி ஏ.தீபிகா. இவர், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கியில், கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் எஸ்.ஆர்.சுமதி, ‘தீபிகாவின் தந்தை வாங்கிய கடனுக்கு தவணையை முறையாக செலுத்தவில்லை. வழக்குதாரர் கல்லூரி நிர்வாக இடஒதுக்கீட்டின் கீழ் நர்சிங் படிப்பில் சேர்ந்துள்ளார். இந்த நர்சிங் படிப்பு, கல்விக்கடன் வாங்கும் திட்டத்தில் இடம் பெறவில்லை. அதனால் அவருக்கு கல்விக் கடன் வழங்க முடியாது’ என்று வாதிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவி தரப்பில் ஆஜரான வக்கீல் விஜேந்திரன், ‘வழக்குதாரர் தந்தை தவணை செலுத்தவில்லை என்ற காரணத்துக்கு கல்விக்கடனை வழங்க மறுப்பது சரியானது இல்லை. வாங்கிய கடனுக்கு தவணையை வழக்குதாரர் தான் செலுத்த போகிறாரே தவிர, அவரது தந்தை இல்லை’ என்று வாதிட்டார்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் வழங்கிய தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-

    அரசியல் நிர்ப்பந்தத்தின் அடிப்படையில், பல பெரும் புள்ளிகளுக்கு பெரும் தொகையை வங்கிகள் கடன் வழங்குகின்றன. அவ்வாறு கடன் வாங்குபவர்கள், கடனை திருப்பிச் செலுத்தாமல், வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிவிடுகின்றனர். இதனால், கடன் வழங்க கையெழுத்திட்ட வங்கி ஊழியர்கள் தான் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல, இவ்வாறு கடன் வழங்குவதால், பொதுமக்களின் பணம் முறைகேடு செய்யப்படுகிறது.

    கடன் தொகை சிறியதோ, பெரியதோ பிரச்சினை இல்லை. கடன் வாங்கியவர்களிடம் பணத்தை திரும்ப வசூலிக்க வேண்டும். இதற்காக கடன் கொடுத்து விட்டு அதை வசூலிக்க, கடன் வாங்கியவர்களின் பின்னால் வங்கி அதிகாரிகள் ஓடுவதைவிட, கடன் வழங்காமல் இருப்பதே நல்லது.

    எனவே, வழக்குதாரரின் தந்தை தவணை தொகையை திருப்பிச் செலுத்தாததால், இவருக்கு கடன் வழங்க முடியாது என்று வங்கி நிர்வாகம் சரியாக முடிவு எடுத்துள்ளது. நர்சிங் படிப்பு, கல்விக்கடன் திட்டத்தில் இடம்பெறாததால், வழக்குதாரர் கல்விக்கடன் பெறமுடியாது. இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

    இவ்வாறு தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார். 
    பெற்றோராக (அ) மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
    என்ஜினீயரிங், மருத்துவ கவுன்சிலிங் நடக்க உள்ளது. விரைவில் கல்லூரிகளும் திறக்க உள்ளன. கல்விக்கான செலவுகள் நெஞ்சை அடைக்கும் அளவில் உயர்ந்து கொண்டே செல்வது பெற்றோருக்கு யோசனையைத் தருகிறது. கல்விக்காக கடனை எதிர்ப்பார்க்கும் மனநிலைக்கு நீங்கள் மாறிக் கொண்டிருக்கலாம்.

    பெற்றோராக அல்லது மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உதாரணமாக எதிர்பார்க்கும் இடத்தில் கடன் கிடைக்காமல் போகலாம், எளிதில் கடன் கிடைக்கும் இடத்தில் வட்டி உள்பட பல குறைபாடுகள் இருக்கலாம். இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா?..

    வட்டி : வட்டி விகிதத்தில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் வேறுபடும். தனியார் வங்கிகள் சற்று கூடுதல் வட்டியே வசூலிக்கும். 0.5 சதவீதம், 0.25 சதவீதம் வேறுபாடுதானே என்று யோசித்தால்கூட, படிப்பு முடியும் சமயத்தில் வட்டியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    வட்டியில் ’பிக்சட் வட்டி’ மற்றும் ‘புளோட்டிங் வட்டி’ என 2 வகை உண்டு. புளோட்டிங் வட்டியில் கடனை பெறுவதுதான் நல்லது. நீண்ட கால தவணையை வழங்குகிறார்களா, எளிய இ.எம்.ஐ. வசதி இருக்கிறதா? வட்டி எகிறுமா? என்பதையெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறுபவர்கள், எப்படியும் தள்ளுபடி கிடைக்கும் என்ற ஆசையுடன் வட்டி கட்டாமல் காலம் கடத்துவதும் தவறாகும். இது வட்டிச்சுமையை அதிகரித்து தவறான விளைவுகளை உருவாக்கும். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    அரசு வங்கியா? : கடன் பெறுவது அரசு வங்கியாக இருந்தால் நல்லது. தனியார் வங்கிகளில் வட்டியும் அதிகமிருக்கும், திரும்ப வசூலிப்பதிலும் கறார் காட்டுவார்கள். பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். பொதுத்துறை வங்கியிலும் உங்களுக்கு அருகாமையில் இருக்கும், ஏற்கனவே கணக்கு வைத்து பணப்புழக்கம் இருக்கும் வங்கியில் கடன் பெறலாம். பிரபலமான முன்னணி வங்கியில் கடன் பெறுவதும் நல்லதே.

    அரசுத்துறை வங்கியில் கடன்பெற கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் பின்னாளில் சிக்கல்கள் குறைவாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் வட்டியில் சலுகை அறிவிக்கும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் தனியார் வங்கியில் அதிக அலைச்சல் இன்றி கடன் பெற வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் பின்னாளில் அதிகவட்டி உள்ளிட்ட மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.



    மாறும் தொகையும், தவணையும்...: கல்விக்கடனின் கேட்புத் தொகை மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் சுமை அமையும். உதாரணத்திற்கு, குறைந்த தொகை கடனுக்கு எளிதான தவணைகள் இருக்கும். தொகை அதிகமாகும்போது அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை வங்கிகள் பலவிதமாக தீர்மானிக்கின்றன.

    கடனின்போது, செயலாக்க கட்டணம், முன்தொகை மற்றும் இதர கட்டணங்கள் வசூலிப்பது அல்லது பிடித்தம் செய்வது உண்டு. கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டண விகிதமும் வங்கிதோறும் மாறலாம். எனவே இந்த வகையில் பல்வேறு கட்டணங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெளிநாட்டு படிப்புகளுக்குத்தான் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற கட்டணம் மற்றும் காலக்கெடு, தவணை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடுங்கள்.

    இலவசம் உண்டா? : இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெறும்போது, நன்மை தரும் இலவசங்களை கவனத்தில் கொள்ளுங்கள், இது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கடன் கொடுப்பதற்காக ஈர்ப்பு தரும் இலவசங்களுக்கு மயங்கிவிடாதீர்கள்.

    கடன் வாங்குவதில் நமது மக்களின் மனநிலை வித்தியாசமானது. எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளும் மனோநிலை பலருக்கு உண்டு. சில நேரங்களில் எப்படியாவது கடன் வாங்க வேண்டும் என்று பல இடங்களிலும் கடன் கேட்டு விண்ணப்பிப்பார்கள். பல இடங்களிலும் கடன் கிடைப்பதுபோல தோன்றி இறுதியில் கைநழுவிப் போகும் வாய்ப்பும் உண்டு. சில நேரங்களில் வங்கியிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் ஒன்றாக கடன் வாங்கிவிட்டு அவஸ்தைப் படுபவர்களும் உண்டு.

    தேவையான சான்றுகள் இருந்தால் எளிதில் அரசு வங்கிகளில் கடன் கிடைக்கும். அலைச்சல் போன்ற சிரமங்களைப் பார்க்காமல், கண்ட இடங்களிலும் கடன் புரட்டிக் கொண்டிருக்காமல், அரசு வங்கிகளில் கல்விக் கடன் பெற்று அதிக சுமையின்றி கல்வியின் பயனைப் பெறுங்கள்! 
    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கல்விகடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கவியரசன், மாவட்ட  துணைச் செயலாளர், எழிலரசன்,  தங்கதமிழ்ச் செல்வன், தலைமை செயற்குழு  உறுப்பினர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் கலிய மூர்த்தி, ராஜா, மாவட்ட தொண்டரணி ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்பு, நாய், போன்ற விஷகடிகளுக்கு போதிய மருந்துகள் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படுகின்றது. போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்  என கேட்டுக் கொள்கின்றோம். அரியலூர் மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும் . விவசாய கடன்களையும், கல்வி கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய மாநில அரசை கேட்டுகொள்கின்றோம். 

    அரியலூரில் புதிய பேருந்து நிலையம், அமைத்து தர வேண்டும் , அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழுர் ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் மணல் திருட்டு, மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயனிகளின் நலன் கருதி கேன்டீன் வசதியை உடனே துவங்க வேண்டும். அரியலூர் மாவட்ட  கொள்ளிடம் ஆற்றில் கல்லனையிலிருந்து அனைக்கரை வரை மணல் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது  உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

    கூட்டமுடிவில் பொதுக்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.
    ×