search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கல்விக் கடன் பெற தீர்மானித்திருக்கிறீர்களா?
    X

    கல்விக் கடன் பெற தீர்மானித்திருக்கிறீர்களா?

    பெற்றோராக (அ) மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் உள்ளன. கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
    என்ஜினீயரிங், மருத்துவ கவுன்சிலிங் நடக்க உள்ளது. விரைவில் கல்லூரிகளும் திறக்க உள்ளன. கல்விக்கான செலவுகள் நெஞ்சை அடைக்கும் அளவில் உயர்ந்து கொண்டே செல்வது பெற்றோருக்கு யோசனையைத் தருகிறது. கல்விக்காக கடனை எதிர்ப்பார்க்கும் மனநிலைக்கு நீங்கள் மாறிக் கொண்டிருக்கலாம்.

    பெற்றோராக அல்லது மாணவராக நீங்கள் கல்விக்கடனை பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தால் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. உதாரணமாக எதிர்பார்க்கும் இடத்தில் கடன் கிடைக்காமல் போகலாம், எளிதில் கடன் கிடைக்கும் இடத்தில் வட்டி உள்பட பல குறைபாடுகள் இருக்கலாம். இப்படி சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க கல்விக் கடன் பெறும் முன்பு கவனிக்க வேண்டிய சில விஷயங்களை பற்றி பார்க்கலாமா?..

    வட்டி : வட்டி விகிதத்தில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வங்கிக்கும் வட்டி விகிதம் வேறுபடும். தனியார் வங்கிகள் சற்று கூடுதல் வட்டியே வசூலிக்கும். 0.5 சதவீதம், 0.25 சதவீதம் வேறுபாடுதானே என்று யோசித்தால்கூட, படிப்பு முடியும் சமயத்தில் வட்டியின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

    வட்டியில் ’பிக்சட் வட்டி’ மற்றும் ‘புளோட்டிங் வட்டி’ என 2 வகை உண்டு. புளோட்டிங் வட்டியில் கடனை பெறுவதுதான் நல்லது. நீண்ட கால தவணையை வழங்குகிறார்களா, எளிய இ.எம்.ஐ. வசதி இருக்கிறதா? வட்டி எகிறுமா? என்பதையெல்லாம் யோசித்துக் கொள்ளுங்கள். பொதுத் துறை வங்கிகளில் கடன் பெறுபவர்கள், எப்படியும் தள்ளுபடி கிடைக்கும் என்ற ஆசையுடன் வட்டி கட்டாமல் காலம் கடத்துவதும் தவறாகும். இது வட்டிச்சுமையை அதிகரித்து தவறான விளைவுகளை உருவாக்கும். இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான கல்விக்கடன் என்றால் வட்டி விகிதத்தில் கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

    அரசு வங்கியா? : கடன் பெறுவது அரசு வங்கியாக இருந்தால் நல்லது. தனியார் வங்கிகளில் வட்டியும் அதிகமிருக்கும், திரும்ப வசூலிப்பதிலும் கறார் காட்டுவார்கள். பொதுத் துறை அல்லது அரசாங்க வங்கிகள் உங்களுக்கு சிறப்பான ஒப்பந்தத்தை அளிப்பார்கள். பொதுத்துறை வங்கியிலும் உங்களுக்கு அருகாமையில் இருக்கும், ஏற்கனவே கணக்கு வைத்து பணப்புழக்கம் இருக்கும் வங்கியில் கடன் பெறலாம். பிரபலமான முன்னணி வங்கியில் கடன் பெறுவதும் நல்லதே.

    அரசுத்துறை வங்கியில் கடன்பெற கொஞ்சம் அலைச்சல் இருந்தாலும் பின்னாளில் சிக்கல்கள் குறைவாக இருக்கும். மத்திய மாநில அரசுகள் வட்டியில் சலுகை அறிவிக்கும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் தனியார் வங்கியில் அதிக அலைச்சல் இன்றி கடன் பெற வாய்ப்பிருக்கிறது. இருந்தாலும் பின்னாளில் அதிகவட்டி உள்ளிட்ட மன உளைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.



    மாறும் தொகையும், தவணையும்...: கல்விக்கடனின் கேட்புத் தொகை மற்றும் வங்கித் திட்டத்தின் வகையை பொறுத்து தான் கடனின் சுமை அமையும். உதாரணத்திற்கு, குறைந்த தொகை கடனுக்கு எளிதான தவணைகள் இருக்கும். தொகை அதிகமாகும்போது அதனை திருப்பி செலுத்த வேண்டிய காலத்தை வங்கிகள் பலவிதமாக தீர்மானிக்கின்றன.

    கடனின்போது, செயலாக்க கட்டணம், முன்தொகை மற்றும் இதர கட்டணங்கள் வசூலிப்பது அல்லது பிடித்தம் செய்வது உண்டு. கடனின் காலத்திற்கு முன்பே அதனை அடைப்பதற்கான கட்டண விகிதமும் வங்கிதோறும் மாறலாம். எனவே இந்த வகையில் பல்வேறு கட்டணங்களை பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் வெளிநாட்டு படிப்புகளுக்குத்தான் செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்ற கட்டணம் மற்றும் காலக்கெடு, தவணை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் உங்களுக்கு எது தோதாக உள்ளது என்பதை கண்டறிந்து அந்த வங்கியை நாடுங்கள்.

    இலவசம் உண்டா? : இலவச டெபிட் கார்டு அல்லது காப்பீடு போன்ற சலுகைகளை சில வங்கிகள் அளிக்கும். அதனால் கல்விக்கடனை பெறும்போது, நன்மை தரும் இலவசங்களை கவனத்தில் கொள்ளுங்கள், இது கொஞ்சம் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் கடன் கொடுப்பதற்காக ஈர்ப்பு தரும் இலவசங்களுக்கு மயங்கிவிடாதீர்கள்.

    கடன் வாங்குவதில் நமது மக்களின் மனநிலை வித்தியாசமானது. எங்கு கடன் கிடைத்தாலும் வாங்கிக் கொள்ளும் மனோநிலை பலருக்கு உண்டு. சில நேரங்களில் எப்படியாவது கடன் வாங்க வேண்டும் என்று பல இடங்களிலும் கடன் கேட்டு விண்ணப்பிப்பார்கள். பல இடங்களிலும் கடன் கிடைப்பதுபோல தோன்றி இறுதியில் கைநழுவிப் போகும் வாய்ப்பும் உண்டு. சில நேரங்களில் வங்கியிலும், தனியார் நிதி நிறுவனங்களிலும் ஒன்றாக கடன் வாங்கிவிட்டு அவஸ்தைப் படுபவர்களும் உண்டு.

    தேவையான சான்றுகள் இருந்தால் எளிதில் அரசு வங்கிகளில் கடன் கிடைக்கும். அலைச்சல் போன்ற சிரமங்களைப் பார்க்காமல், கண்ட இடங்களிலும் கடன் புரட்டிக் கொண்டிருக்காமல், அரசு வங்கிகளில் கல்விக் கடன் பெற்று அதிக சுமையின்றி கல்வியின் பயனைப் பெறுங்கள்! 
    Next Story
    ×