search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delta Districts"

    • நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர்.
    • மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

    வேதாரண்யம்:

    வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 1-ந் தேதி முதல் 4-ந்தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் பலத்த மழை பெய்தது.

    பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான சுமார் 2.10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாரம் தாங்காமல் சாய்ந்தது. மேலும் வயல்களில் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர் அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதேபோல் உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களும் சேதமாகின.

    திடீர் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

    அதன்படி கடந்த 5-ந்தேதி வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் தலைமையில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து சென்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து 6-ந்தேதி பயிர் சேத விவரங்கள் குறித்த அறிக்கையினை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து சமர்ப்பித்தனர். இதையடுத்து 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம், சேதமடைந்த இளம்பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3 ஆயிரம், உளுந்து விவசாயம் செய்ய 50 சதவீதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

    அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீத ஈரப்பதம் உள்ள நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

    அதனை ஏற்று ஈரப்பத தளர்வு அறிவிப்பது தொடர்பாக ஆய்வு செய்ய மத்திய குழுவை தமிழகத்துக்கு மத்திய அரசு அனுப்பி வைத்தது. அதன்படி சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி யூனுஸ், பெங்களூருவில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரிகள் பிரபாகரன், போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழு இன்று டெல்டா மாவட்டங்களில் தங்களது ஆய்வை தொடங்கினர்.

    முதற்கட்டமாக இன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு பணியை ஆரம்பித்தனர். அங்கு கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்தனர்.

    மேலும் நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்காக சேகரித்து கொண்டனர். கொள்முதல் செய்யப்படும் விதம், நாள்தோறும் எவ்வளவு அளவு கொள்முதல் செய்யப்படுகிறது போன்ற பல்வேறு விவரங்களை பணியாளர்களிடம் கேட்டறிந்தனர்.

    அப்போது அங்கு திரண்ட விவசாயிகள், தங்கள் நிலங்களில் சேதமடைந்த அழுகிய நெற்பயிரை கையில் எடுத்து வந்து மத்திய குழுவினரிடம் காண்பித்தனர். அதனையும் புகைப்படம் எடுத்துக்கொண்ட அதிகாரிகள் மாதிரிக்காகவும் கொண்டு சென்றனர்.

    அப்போது மத்திய குழுவிடம், விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பருவம் தவறி பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சேதமாகியது. அதோடு நெல்லின் ஈரப்பதமும் அதிகரித்துள்ளது.

    தற்போது 19 சதவீதம் வரையிலான நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் மழையால் ஈரப்பதம் அதைவிட அதிகரித்துள்ளது. எனவே 22 சதவீதம் வரையிலான ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்.

    கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000 மூட்டை கொள்முதல் செய்யப்படுவதை அதிகரிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனுவை வாங்கி மத்திய அரசிடம் பேசி பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய குழுவினர் தெரிவித்தனர்.

    இதையடுத்து மத்திய குழுவினர் திருக்குவளை தாலுகா கச்சநகரம் கொள்முதல் நிலையத்தில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். தொடர்ந்து வலிவலம் உள்ளிட்ட பல்வேறு கொள்முதல் நிலையங்களில் ஆய்வு நடத்த உள்ளனர்.

    நாளை (9-ந்தேதி) திருவாரூர், தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வுகள் அனைத்தையும் முடித்து கொண்டு சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசுகின்றனர். அதன்பின்னர் வருகிற 13-ந்தேதி டெல்லியில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள். அதன்பின்னரே நெல்லின் ஈரப்பத தளர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.
    • தனியாரிடமிருந்து பெறப்படும் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையில் மானியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முதன்மையானதாக விளங்குகிறது.

    விவசாயிகள் நிறைந்த டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் 3.47 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 3.75 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கர் என மொத்தம் 10.69 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது 20 சதவீதம் அளவுக்கு அதாவது 2.20 லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது.

    4 மாவட்டங்களிலும் சேர்த்து 1269 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தினமும் 40 கிலோ எடை கொண்ட 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 478 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் இன்று வரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 935 மெட்ரிக் டன் நெல்லும், நாகை மாவட்டத்தில் 97 ஆயிரத்து 979 மெட்ரிக் டன் நெல்லும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 396 மெட்ரிக் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் முப்போகம் சாகுபடியில் விவசாயிகளின் தேவை என்ன? அரசு அறுவடை எந்திரத்தை அதிகப்படுத்துவதின் பயன் குறித்தும், நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்தும் 4 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன்:

    நெற்பயிர் அறுவடை நேரத்தில் மழை பெய்தால் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். தினமும் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படி கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.

    பல கொள்முதல் நிலையங்களில் நெல்கள் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. தமிழ்நாடு அரசு அறிவித்தபடி செமி குடோன்களை உடனடியாக திறக்க வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

    தற்போது சம்பா நெற்பயிர் அறுவடை முடிந்த பிறகு மராமத்து பணிகள் உடனுக்குடன் தொடங்கி முடிக்க வேண்டும். வயல்களில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    உர தட்டுப்பாட்டை போக்கி மானிய விலையில் உரங்கள் வழங்க வேண்டும். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். அதாவது நெல் குவிண்டாலுக்கு ரூ.3200 வரையாவது வழங்க வேண்டும்.

    நெல் மணிகளை காய வைக்க போதிய இடம் இல்லாததால் பல விவசாயிகள் சாலையில் கொட்டி வைக்கும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க அந்தந்த வயல்களிலே உலர் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.

    கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ்:

    டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்து சென்ற 24 மணி நேரத்திற்குள் இழப்பீடு தொகை அறிவித்த முதல்-அமைச்சருக்கு முதலில் நன்றி. விவசாயிகளுக்கு குறுவை, சம்பா தொகுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்கிறோம். இதனால் நெல் குவிண்டாலுக்கு ரூ.4500 வரை வழங்க வேண்டும். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும்.

    இதற்கு முன்னர்போல் வயல்வெளிகளுக்கே சென்று விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

    மயிலாடுதுறை விவசாயி அன்பழகன்:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் எப்போதும் மழையின் அளவு அதிகமாகவே இருக்கும். கடந்த ஆண்டு சீர்காழியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இப்படி இயற்கை சீற்ற பாதிப்பு அதிகமாக உள்ளதால் அனைத்து வயல்வெளிகளிலும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்து இயக்கம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மேட்டூர் அணை முன்கூட்டியோ அல்லது குறிப்பிட்ட ஜூன் 12-ந் தேதியோ திறக்க வேண்டும். அதில் தாமதப்படுத்த கூடாது. விவசாயிகளின் நிலையை உணர்ந்து மானிய விலையில் உரங்கள் வழங்குவதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் துரைராஜ்:

    தற்போது மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர்கள் குழு ஆய்வு நடத்தி உடனுக்குடன் இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. இதேபோல் வரும் பருவத்திலும் ஒருவேளை மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் உடனுக்குடன் கணக்கீடு செய்து உடனே இழப்பீடு வழங்க வேண்டும்.

    அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். அதோடு நெற்மணிகள் நிறம் மாறி இருந்தாலும் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள், சாக்கு, சணல் போன்றவற்றை போதுமான அளவிற்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மையங்களுக்கும் போதுமான அளவிற்கு லாரிகளை அனுப்பி வைக்க வேண்டும்.

    திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலோனோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதை 1500 மூட்டைகள் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். கூடுதல் அறுவடை எந்திரங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதேப்போல் தனியாரிடமிருந்து பெறப்படும் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையில் மானியம் வழங்க வேண்டும். தற்போது உள்ள கொள்முதல் நிலையங்களிலும் சேர்த்து தேவைப்படும் இடத்திலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை கடற்கரை நிறைந்த பகுதியாகும். இருந்தாலும் மீன்பிடி தொழில் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு விவசாயமும் நிறைந்து காணப்படுகிறது. மாவட்டத்தில் மழை அளவு அதிகம் இருக்கும் என்பதால் ஈரமான நெல்லை உலர்த்த அந்தந்த வயல்களில் உலர்களம் அமைத்து கொடுக்க வேண்டும். தற்போது அரசு அறுவடை எந்திரத்துக்கு 50 சதவீத மானியத்தில் வாடகை கொடுக்கும் என அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்து வரும் அனைத்து பருவத்துக்கும் தொடர வேண்டும். விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என்று நாகை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
    • தென்காசி மாவட்டத்திலும் விட்டு விட்டு பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான காற்று வீசியது.

    தஞ்சாவூர்:

    வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள் உள்பட 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தஞ்சையில் நேற்று காலை 6 மணி முதல் தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. அவ்வப்போது மழை கொட்டி தீர்த்தது. மதியம் 3 மணி வரையிலும் இந்த மழை நீடித்தது.

    இதேபோல் தஞ்சை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. அவ்வப்போது பலத்த மழையும், லேசான தூறலுமாக மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களிலும் நேற்று காலை முதல் மாலை வரையில் மழை பெய்தது. இடையிடையே கனமழையும் பெய்தது.

    இந்த கனமழை காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்தன. சில இடங்களில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது.

    கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. விளைந்த நெல்லை அறுவடை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் பரிதவித்து வருகிறார்கள்.

    நேற்று பெய்த கனமழை காரணமாக நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 10.30 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை அவ்வப்போது விட்டு, விட்டு பெய்து கொண்டிருந்தது. இதனால் ரம்மியமான சூழல் நிலவியது.

    இதேபோல் தென்காசி மாவட்டத்திலும் விட்டு, விட்டு பெய்த சாரல் மழையால் குளிர்ச்சியான காற்று வீசியது. குளுகுளு சீசன் நிலவியது. மொத்தத்தில் வெயில் தலை காட்டவில்லை.

    இதேபோல தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. இதனால் இதமான சூழல் நிலவியது. வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை தொடர்ந்து, நேற்று 3-வது நாளாக விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அதேபோன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

    ராமேசுவரம் பகுதியில் விடிய விடிய மழை பெய்தது.

    • டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் சம்பா, தாளடி இளம் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
    • குறுவை அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை பெய்ய தொடங்கியது.

    தஞ்சை மாவட்டத்தில் இரவில் விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் அதிகாலை 4 மணியில் இருந்து இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. தஞ்சை, வல்லம், பாபநாசம், பேராவூரணி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக மழை கொட்டி வருகிறது.

    திருவாரூர் மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. திருவாரூரில் பெய்து வரும் கனமழையால் நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நகராட்சி, பேரூராட்சி ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கனமழையால் வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது தவிர டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால் சம்பா, தாளடி இளம் பயிர்கள் மூழ்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் குறுவை அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் ஏற்கனவே அறுவடை செய்யப்பட்ட நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    தொடர் மழையால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தஞ்சை, நாகை மாவட்டங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 6 ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுக்காட்டுத்துறை, புஷ்பவனம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. அவர்கள் இன்று 4-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேப்போல் மயிலாடுதுறை மாவட்டத்திலும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 3 மாவட்டங்களிலும் சேர்த்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.
    • நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கி உள்ளன.

    தஞ்சாவூர்:

    தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது 2 முதல் 4 மணி நேரம் தொடர் கனமழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை சுமார் 5 மணி நேரம் விடாது 177 மி.மீ கனமழை பெய்தது.

    இந்நிலையில் நேற்றும் மாலை 1 மணி நேரம் கனமழை பெய்தது. தற்போது குறுவை அறுவடை பணிகள் முடிந்து சம்பா, தாளடி நடவுப் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர்

    இந்நிலையில் இந்த கனமழையால் தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 1000 ஏக்கரில் சம்பா, தாளடி இளம் நாற்றுகள் முற்றிலும் மூழ்கி கிடக்கிறது. முறையாக தூர்வாரப்படாததால் வடிகால் வாய்க்கால்களில் தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    மாவட்டத்தில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்த நிலையில் மதியம் முதல் சுமார் 2 மணி நேரம் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் தியாகராஜர் கோவிலின் கிழக்கு கோபுர வாசல் வழியாக மழைநீர் கோவிலுக்குள் புகுந்து குளம் போல் தேங்கியது.

    இதைப்போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளான மன்னார்குடி, நன்னிலம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் தாழ்வான பகுதிகள் உள்ள குடியிருப்புகள் மற்றும் வயல்களில் மழைநீர் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சம்பா, தாளடி, இளம் நாற்றுகள் மூழ்கி கிடப்பதால் விவசாயிகள் தண்ணீரை வடிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. தாழ்வான பகுதிகளில் உள்ள வயல்களில் சம்பா, தாளடி பயிர்கள் மூழ்கி உள்ளன.

    ஆனால், போர் செட் மூலமும், மேட்டு பகுதிகளில் சம்பா, தாளடி சாகுபடி செய்த விவசாயிகளும் இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இந்நிலையில் கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம், கோடிக்கரை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 4 நாட்களுக்கும் மேலாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர்.

    விடிய விடிய மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சீர்காழி, கொள்ளிடம் பகுதிகளில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி நகரின் தாழ்வான பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்ந்தது

    சீர்காழி வ.உ.சி நகரில் ரவி என்பவரின் கூரை வீடு இடிந்து விழுந்தது. சில இடங்களில் சாலை மற்றும் தெருக்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    திருமுல்லைவாசல், தொடுவாய் உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க செல்லவில்லை.

    கொள்ளிடம் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக வடிகால் வாய்க்கால்களின் மூலம் மழைநீர் கடலில் சென்று கலப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது

    மாவட்டம் முழுவதும் 12 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி, இளம் நாற்றுகள் வயல்களில் மழைநீரில் மூழ்கி கிடப்பதாகவும் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யாமல் இருந்தால் இந்த பயிர்களை காப்பாற்ற இயலும் என்றும், ஆனால் தாழ்வான பகுதிகளில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் உள்ள வயல்களில் மூழ்கி உள்ள பயிர்களை காப்பாற்றுவது சற்று கடினம் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    டெல்டா மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் சுமார் 7 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி, இளம்நாற்றுகள் மூழ்கி உள்ளன.

    ஏற்கனவே குறுவை அறுவடை நேரத்தில் பெய்த மைழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூடுதல் ஈரப்பதம் காரணமாக நெல்லை விற்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்த சம்பா, தாளடி, இளம்நாற்றுகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தொடர் மழை காரணமாக நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தஞ்சை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

    • திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
    • தொடர்ந்து இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே பரவலாக மழை பெய்து வருகிறது.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வழக்கத்தை விட கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரமாகவே பகலில் வெயில் அடிப்பதும், மாலை, இரவு நேரங்களில் கனமழை பெய்வதுமாக உள்ளது. ஆனால் கடந்த 2 நாட்களாக காலையில் இருந்து நள்ளிரவு வரை விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் மழை பெய்தது. இன்று காலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. 8 மணியில் இருந்து மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இடைவிடாது மழை பெய்வதால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

    இதேப்போல் திருவையாறு, பூதலூர், வல்லம், குருங்குளம், பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவும் கனமழை பெய்யக்கூடிய அறிகுறி தென்படுகிறது.

    மேலும் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் பெருமளவு திறக்கப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதி கிராமங்களான வீரமாங்குடி, தேவங்குடி, பட்டுக்குபடி உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 3-வது முறையாக கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் பழைய மண்ணியாற்று பகுதியில் வயல்களை உபரி வெள்ளநீர் மற்றும் மழை நீர் சூழ்ந்ததால் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் மற்றும் வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன. தொடர்ந்து மழை பெய்தால் இந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேப்போல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல நூறு ஏக்கரில் குறுவை பயிர்கள், கரும்பு, வாழைகள் மூழ்கி உள்ளன.

    நாகை அருகே திருமருகல் ஒன்றியம் பகுதியில் உள்ள அரசலாறு, திருமலைராஜன் ஆறு, வளப்பனாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் கரைகள் உடையாமல் இருக்க மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறையினர் தயார் நிலையில் வைத்து ள்ளனர்.

    மழையால் நாகை மாவட்டம் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் அதனை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதேப்போல் 4 மாவட்ட ங்களிலும் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல் தயாரிப்பு பணியும் தற்காலிகமாக முடங்கியது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சீர்காழி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் திருவெண்காடு, கொள்ளிடம், எடமணல் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் மந்தமாக நடப்பதால் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் இப்பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றின் உபரிநீர் மற்றும் மழையால் முதலைமேடு, நாதன்படுகை, கோரைதிட்டு உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களை படகு மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

    மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூ. 300 கோடி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. 2 முறை ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் தமிழ்நாடு முழுவதும் வெள்ளக்காடானது. கனமழை காரணமாக திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் பயிர்கள் பாதிக்கப்பட்டன.

    டெல்டா மாவட்டங்களிலும் பெய்த கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்ட விவசாய பயிர்கள் மழை நீரில் மூழ்கி உள்ளன.

    இது தொடர்பாக ஆய்வு செய்து பயிர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும், பயிர் சேத விவரங்களை  அறியவும் அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்தார்.

    கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையிலான இந்த குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் இடம் பெற்றனர்.

    இந்த 7 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவினர் கடந்த 12-ந்தேதி தஞ்சாவூர் சென்றனர். அங்கு கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்கள்.

    மாவட்டத்தில் நெற்பயிர்கள் உள்ளிட்ட பயிர்கள் எவ்வளவு ஹெக்டேரில் பயிரிடப்பட்டு இருந்தது? அதில் எவ்வளவு சேதம் அடைந்துள்ளது என்ற விவரங்கள் குறித்து துறை அதிகாரிகளுடன் விவாதித்தனர்.

    அதன் பிறகு விவசாய சங்க பிரதிநிதிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி சேத விவரங்களை கேட்டனர். பின்னர் அவர்கள் டெல்டா மாவட்டங்களுக்கு சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயிர் சேதங்களை பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    மேலும் அவர்கள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளையும் ஆய்வு செய்தனர்.

    நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் அமைச்சர்கள் குழு ஆய்வில் ஈடுபட்டது.

    இதே போல் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் வெள்ள சேதத்தை பார்வையிட்டார்.

    அமைச்சர்கள் குழு நடத்திய ஆய்வில் டெல்டா மாவட்டங்களில் 68 ஆயிரம் ஹெக்டேருக்கும் (1 லட்சத்து 68 ஆயிரம் ஏக்கர்) மேற்பட்ட விளை நிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    ஆய்வுக்கு பிறகு அமைச்சர்கள் குழுவினர் கடந்த 2 நாட்களாக அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட சேத மதிப்பு பற்றிய அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்தது.

    பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையினை அமைச்சர் பெருமக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர்.


    இதையடுத்து இன்று அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ்.ரகுபதி, சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் டெல்டா பகுதி பயிர் சேதம் குறித்த அறிக்கையை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தனர்.

    அப்போது வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடன் இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பயிர் சேதங்கள் குறித்த அறிக்கையினை அமைச்சர் பெருமக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர். இக்குழுவின் அறிக்கை மீதான ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

    விரிவான ஆலோசனைக்குப் பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்வரும் அறிவிப்பினை வெளியிட்டார்.

    அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவைகார்சொர்ணவாரிப் பயிர்கள், முழுமையாக சேதமடைந்த இடங்களில் விவசாயிகளுக்கு இழப்பீடாக, ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படும்.

    நடப்பு சம்பா பருவத்தில் நடவு செய்து, நீரில் மூழ்கி சேதமடைந்த பயிர்களை மறு சாகுபடி செய்திட ஏதுவாக, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 38 ரூபாய் மதிப்பீட்டில் இடு பொருள்கள் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    மழை வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் பாதிப்படைந்த சாலைகள், வடிகால்கள் மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதிகளை சரி செய்ய ரூ. 300 கோடி வழங்கவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    இந்தக் கூட்டத்தில், குழுவின் தலைவர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, குழுவின் உறுப்பினர்கள் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் இறையன்பு, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், வருவாய்  மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜயந்த், வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் அண்ணாதுரை, பேரிடர் மேலாண்மைத் துறை இயக்குநர் சுப்பையன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    இலங்கை கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #TNRains #IMDChennai
    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் மழை முன்னறிவிப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

    இலங்கை கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வடக்கு கடலோர மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் மன்னார் வளைகுடா, குமரி கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.



    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 23% குறைவாக பெய்துள்ளது. சென்னையில் இயல்பை விட 55% குறைவாக மழை பெய்துள்ளது.

    இவ்வாறு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. #TNRains #IMDChennai
    டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். #DeltaDistricts #Fog
    திருச்சி:

    தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருவதால் சில நாட்களுக்கு மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காலமான தற்போது மழை பொழியாததால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.

    கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட மாதங்களில் இந்த பனிப்பொழிவு ஏற்படும். அதிலும் மார்கழி மாதத்தில் தான் அதிக பனிப்பொழிவு, மூடுபனி காணப்படும். நேற்று டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவுகள் ஏதும் இல்லாமல் வானம் வறண்டு காட்சியளித்தது.

    இதற்கிடையே மாலை நேரம் ஆக ஆக பனிப்பொழிவு அதிகமானது. நள்ளிரவில் கடுமையாக பனி தாக்கியது. மேலும் இன்று அதிகாலை பெருமாள் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதால் பொதுமக்கள் நள்ளிரவு முதல் பெருமாள் கோவில்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

    வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மூடுபனியால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்ல முடிந்தது. குறிப்பாக 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்களை கூட பார்க்க முடியவில்லை. இதனால் பல வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்கியதோடு, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணாடிகள் மூடுபனியால் மறைந்தது. அவற்றினை துடைத்துவிட்டு டிரைவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

    பெரும்பாலான விவசாய நிலங்களில் மண்ணில் கால்களை பதிக்க முடியாத அளவு குளிர் அதிகமாக இருந்தது. அதிகாலையிலே வயலுக்கு சென்று தங்களது அன்றாட பணிகளை செய்யும் விவசாயிகள் முடங்கினர். பின்னர் சூரிய உதயம் தொடங்கிய பின்னரே வயல்வெளிகளுக்கு சென்று தாமதமாக பணிகளை தொடங்கினர்.

    மேலும் அதிகாலையில் காய்கறி உள்ளிட்டவற்றை சந்தைகளுக்கு அனுப்பி வரும் விவசாயிகள் பயிர்களை பறிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். அதனையும் மீறி உரிய நேரத்தில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என நினைத்த விவசாயிகள் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் செல்வதில் கடும் பிரச்சினைகளை சந்தித்தனர்.

    இந்த மூடு பனி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் அதிகம் காணப்பட்டது.  #DeltaDistricts #Fog

    டெல்டா மாவட்டங்களில் புயல் பாதிப்பில் வீடுகள் சேதமானதால் முகாம்களில் தஞ்சமடைந்து இருக்கும் கிராம மக்கள் 23 நாட்களுக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    நெற்களஞ்சியமாக விளங்கிய டெல்டா மாவட்டங்கள் கடந்த மாதம் 16-ந்தேதி வீசிய கஜா புயலில் உருகுலைந்து போய் விட்டன.

    லட்சக்கணக்கான மரங்களையும், மின் கம்பங்களையும் சாய்த்த கஜா புயல் விவசாயிகள் வாழ்வதாரமாக விளங்கிய பயிர்களையும விட்டு வைக்கவில்லை. தென்னையை பிள்ளையை போல் வளர்த்த விவசாயிகள் அவைகள் வீழ்ந்து கிடக்கும் காட்சியை கண்டு கண்ணீர் வடித்த வண்ணம் உள்ளனர்.

    தங்கள் முன்னோர் உழைப்பில் உருவான தென்னைகளும், தங்களால் வளர்க்கப்பட்ட தென்னைகளும் முறிந்தும் வீழ்ந்தும் கிடப்பது அவர்களுக்கு பேரிடியாக அமைந்து விட்டது.

    வாழைகள், கரும்புகள் அடியோடு வீழ்ந்து விட்டதால் உழவர் பண்டிகையாம் தைபொங்கலை வரவேற்க தயாராக இருந்த விவசாயிகளுக்கு பொங்கலுக்கு நெல்லை மட்டுமே நம்பி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புயலை தொடர்ந்து அடுத்தடுத்து பெய்த கனமழை நெற்பயிர்களையும் நீரில் மூழ்கடித்து விட்டது.

    வீடுகள் சேதமானதால் முகாம்களில் தஞ்சமடைந்து இருக்கும் கிராம மக்கள் 23 நாட்களுக்கும் மேலாக மின் இணைப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, மதுக்கூர் அருகில் அமைந்துள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, பேராவூரணி அருகில் அமைந்துள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் மின் வினியோகம் வழங்கபடவில்லை. இதேபோல நாகை மாவட்டம் வேதாரண்யம், கொள்ளிடம், தலைஞாயிறு, தரங்கம்பாடி அருகில் அமைந்துள்ள ஏராளமான கிராமங்களிலும் முறிந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு வழங்க மின் வாரியத்தினர் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் புதிய மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு கொடுக்கும் போது நல்ல நிலையில் நிற்கும் சில பழைய மின்கம்பங்கள் முறிந்து விடுகின்றன. இதனால் அப்பணியை மீண்டும் செய்யும் அவல நிலை ஏற்படுகிறது. புயலில் இருந்து மீளாத கிராமங்களுக்கு மின் இணைப்பு கிடைக்க இன்னும் 10 நாட்கள் வரை ஆகும் என்று தெரிகிறது.

    பள்ளிகளில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்கி இருக்கும் மக்கள் பகலில் தங்களது இடங்களுக்கு சென்று நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவில் முகாம்களில் தங்கி வருகின்றனர்.

    வேதாரண்யம், தரங்கம்பாடி, சேதுபாவா சத்திரம் மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம், பூம்புகார் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் படகுகள் சேதமாகி விட்டதால் மீண்டும் கடலுக்கு சென்று மீன் பிடிக்க முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். தற்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் முழு வீச்சில் வழங்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு அலுவலர்கள், புயல் பாதிப்பு பகுதிகளில் முகாமிட்டு நிவாரண பணிகளை முடுக்கி விட்டு வருகின்றனர் . இருந்தபோதிலும் கஜா புயலில் இழந்த வாழ்வை மீண்டும் பெற முடியுமா? என்ற அச்சம் அகலாமல் டெல்டா மாவட்ட மக்கள் பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்கு நம்பிக்கை அளிக்க தேவையான ஆலோசனைகளை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #Rain #SouthTN #DeltaDistricts
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தென் தமிழகத்தின் கடற்கரையையொட்டி உள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மாலத்தீவு பகுதி மற்றும் அதனையொட்டியுள்ள பூமத்திய ரேகை இந்திய பெருங்கடலில் வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தென் தமிழ்நாடு, டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை, கடலூர், காரைக்கால், புதுவை ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.



    தமிழகத்தின் வட கடலோர பகுதி, புதுச்சேரி, தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.

    சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை இருக்காது. கிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வடக்கு நோக்கி சற்று நகர்ந்தால்தான் வட தமிழக பகுதிகளில் மழை பெய்யும். இல்லையென்றால் தென் தமிழக பகுதிகளுக்கே மழை வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

    கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அதிகபட்சமாக 10 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    கொள்ளிடத்தில் 7 செ.மீட்டரும், சிதம்பரம், சீர்காழியில் 6 செ.மீட்டரும், பரங்கிபேட்டை, சேத்தியா தோப்பு, மயிலாடுதுறையில் 5 செ.மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.

    அக்டோபர் 1-ந் தேதி முதல் இன்று வரை வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் 31 செ.மீட்டர் பதிவாகி இருக்கிறது. இந்த கால கட்டத்தில் பெய்ய வேண்டிய மழை அளவு 35 செ.மீட்டராகும். இயல்பை விட 12 சதவீதம் குறைவாக இருக்கிறது.

    இன்னும் ஒரு மாதம் இருப்பதால் பொறுத்து இருந்து பார்ப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rain #SouthTN #DeltaDistricts
    மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதியளித்தது கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு மேலும் ஒரு பேரிடி என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #MekedatuDam #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    காவிரி தண்ணீர் தமிழகத்திற்குள் வரவிடாமல் தடுக்க கர்நாடக அரசு தொடர்ந்து தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கூடாதென்று தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் ஒருமித்த குரலுடன் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழ்நிலையில், கர்நாடக அரசுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவது ஏற்புடையதல்ல.

    மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டினால் தமிழகத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதோடு தமிழகத்திலிருக்கும் கொஞ்சநெஞ்ச விவசாயமும் முற்றிலும் அழிந்துவிடும். கஜா புயல் பாதிப்பில் செய்வதறியாமல் தவித்துக் கொண்டிருக்கும் தமிழக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கும் இந்த செய்தி பேரிடியாக அமைந்திருக்கிறது.

    எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ள வேண்டும். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு கொடுக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MekedatuDam #Eswaran
    ×