search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    4 மாவட்டங்களில் தொடர் கனமழையால் நெற்பயிர்கள், கரும்பு, வாழை மூழ்கின-  வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி
    X

    4 மாவட்டங்களில் தொடர் கனமழையால் நெற்பயிர்கள், கரும்பு, வாழை மூழ்கின- வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி

    • திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது.
    • தொடர்ந்து இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னரே பரவலாக மழை பெய்து வருகிறது.

    தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் வழக்கத்தை விட கனமழை பெய்து வருகிறது. கடந்த 2 வாரமாகவே பகலில் வெயில் அடிப்பதும், மாலை, இரவு நேரங்களில் கனமழை பெய்வதுமாக உள்ளது. ஆனால் கடந்த 2 நாட்களாக காலையில் இருந்து நள்ளிரவு வரை விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    தஞ்சையில் நேற்று பகல் முழுவதும் மழை பெய்தது. இன்று காலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. 8 மணியில் இருந்து மிதமான அளவில் மழை பெய்து வருகிறது. இடைவிடாது மழை பெய்வதால் சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்தது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கினர்.

    இதேப்போல் திருவையாறு, பூதலூர், வல்லம், குருங்குளம், பாபநாசம், கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவும் கனமழை பெய்யக்கூடிய அறிகுறி தென்படுகிறது.

    மேலும் கல்லணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் உபரிநீர் பெருமளவு திறக்கப்படுகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதி கிராமங்களான வீரமாங்குடி, தேவங்குடி, பட்டுக்குபடி உள்ளிட்ட 6-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 3-வது முறையாக கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் பழைய மண்ணியாற்று பகுதியில் வயல்களை உபரி வெள்ளநீர் மற்றும் மழை நீர் சூழ்ந்ததால் தற்போது நடவு செய்யப்பட்டுள்ள குறுவை நெற்பயிர்கள் மற்றும் வளர்ச்சி பருவத்தில் உள்ள கரும்பு, வாழை பயிர்கள் மூழ்கி கிடக்கின்றன. தொடர்ந்து மழை பெய்தால் இந்த பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    இதேப்போல் திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல நூறு ஏக்கரில் குறுவை பயிர்கள், கரும்பு, வாழைகள் மூழ்கி உள்ளன.

    நாகை அருகே திருமருகல் ஒன்றியம் பகுதியில் உள்ள அரசலாறு, திருமலைராஜன் ஆறு, வளப்பனாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் கரைகள் உடையாமல் இருக்க மணல் மூட்டைகளை பொதுப்பணித்துறையினர் தயார் நிலையில் வைத்து ள்ளனர்.

    மழையால் நாகை மாவட்டம் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளியில் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உப்பளங்களில் தண்ணீர் தேங்கியதால் அதனை வெளியேற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதேப்போல் 4 மாவட்ட ங்களிலும் கட்டுமான பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. செங்கல் தயாரிப்பு பணியும் தற்காலிகமாக முடங்கியது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் பொதுமக்கள் வீட்டுக்குள்ளே முடங்கி உள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    சீர்காழி பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் திருவெண்காடு, கொள்ளிடம், எடமணல் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை நெற்பயிர்கள் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் மந்தமாக நடப்பதால் நெல்மணிகள் மழையில் நனைந்து சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும் இப்பகுதிகளில் கொள்ளிடம் ஆற்றின் உபரிநீர் மற்றும் மழையால் முதலைமேடு, நாதன்படுகை, கோரைதிட்டு உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்களை படகு மூலம் மீட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களிலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

    Next Story
    ×