search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர் சாகுபடி"

    • அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.
    • தனியாரிடமிருந்து பெறப்படும் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையில் மானியம் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாட்டின் உணவு தேவையை பூர்த்தி செய்வதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முதன்மையானதாக விளங்குகிறது.

    விவசாயிகள் நிறைந்த டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் விளைவிக்கப்படுகிறது. பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும். தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் 3.47 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 3.75 லட்சம் ஏக்கரிலும், நாகை மாவட்டத்தில் 1.67 லட்சம் ஏக்கரிலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கர் என மொத்தம் 10.69 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது 20 சதவீதம் அளவுக்கு அதாவது 2.20 லட்சம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளது.

    4 மாவட்டங்களிலும் சேர்த்து 1269 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் தினமும் 40 கிலோ எடை கொண்ட 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    இன்று காலை நிலவரப்படி தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சத்து 95 ஆயிரத்து 478 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது.

    திருவாரூர் மாவட்டத்தில் இன்று வரை 2 லட்சத்து 96 ஆயிரத்து 935 மெட்ரிக் டன் நெல்லும், நாகை மாவட்டத்தில் 97 ஆயிரத்து 979 மெட்ரிக் டன் நெல்லும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 396 மெட்ரிக் டன் நெல்லும் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் முப்போகம் சாகுபடியில் விவசாயிகளின் தேவை என்ன? அரசு அறுவடை எந்திரத்தை அதிகப்படுத்துவதின் பயன் குறித்தும், நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதலாக செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்தும் 4 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் கருத்துக்கள் விவரம் வருமாறு:-

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்ட செயலாளர் என்.வி.கண்ணன்:

    நெற்பயிர் அறுவடை நேரத்தில் மழை பெய்தால் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். தினமும் ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. அப்படி கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும்.

    பல கொள்முதல் நிலையங்களில் நெல்கள் திறந்தவெளியில் கொட்டி வைக்கப்படுகிறது. இதனால் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. தமிழ்நாடு அரசு அறிவித்தபடி செமி குடோன்களை உடனடியாக திறக்க வேண்டும். விவசாயிகளின் தேவைக்கேற்ப கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.

    தற்போது சம்பா நெற்பயிர் அறுவடை முடிந்த பிறகு மராமத்து பணிகள் உடனுக்குடன் தொடங்கி முடிக்க வேண்டும். வயல்களில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    உர தட்டுப்பாட்டை போக்கி மானிய விலையில் உரங்கள் வழங்க வேண்டும். நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும். அதாவது நெல் குவிண்டாலுக்கு ரூ.3200 வரையாவது வழங்க வேண்டும்.

    நெல் மணிகளை காய வைக்க போதிய இடம் இல்லாததால் பல விவசாயிகள் சாலையில் கொட்டி வைக்கும் நிலை உள்ளது. இதனை தவிர்க்க அந்தந்த வயல்களிலே உலர் களம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றார்.

    கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கோவிந்தராஜ்:

    டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அமைச்சர்கள் குழுவினர் ஆய்வு செய்து சென்ற 24 மணி நேரத்திற்குள் இழப்பீடு தொகை அறிவித்த முதல்-அமைச்சருக்கு முதலில் நன்றி. விவசாயிகளுக்கு குறுவை, சம்பா தொகுப்பு திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.

    நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்து சாகுபடி செய்கிறோம். இதனால் நெல் குவிண்டாலுக்கு ரூ.4500 வரை வழங்க வேண்டும். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும்.

    இதற்கு முன்னர்போல் வயல்வெளிகளுக்கே சென்று விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் மீண்டும் அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றினால் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றார்.

    மயிலாடுதுறை விவசாயி அன்பழகன்:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் எப்போதும் மழையின் அளவு அதிகமாகவே இருக்கும். கடந்த ஆண்டு சீர்காழியில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இப்படி இயற்கை சீற்ற பாதிப்பு அதிகமாக உள்ளதால் அனைத்து வயல்வெளிகளிலும் மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொள்முதல் நிலையங்களில் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்து இயக்கம் செய்ய வேண்டும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மேட்டூர் அணை முன்கூட்டியோ அல்லது குறிப்பிட்ட ஜூன் 12-ந் தேதியோ திறக்க வேண்டும். அதில் தாமதப்படுத்த கூடாது. விவசாயிகளின் நிலையை உணர்ந்து மானிய விலையில் உரங்கள் வழங்குவதை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் துரைராஜ்:

    தற்போது மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை அமைச்சர்கள் குழு ஆய்வு நடத்தி உடனுக்குடன் இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. இதேபோல் வரும் பருவத்திலும் ஒருவேளை மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் உடனுக்குடன் கணக்கீடு செய்து உடனே இழப்பீடு வழங்க வேண்டும்.

    அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தி கொள்முதல் செய்ய வேண்டும். அதோடு நெற்மணிகள் நிறம் மாறி இருந்தாலும் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க தார்பாய்கள், சாக்கு, சணல் போன்றவற்றை போதுமான அளவிற்கு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மையங்களுக்கும் போதுமான அளவிற்கு லாரிகளை அனுப்பி வைக்க வேண்டும்.

    திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலோனோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொள்முதல் நிலையங்களில் தினமும் 1000 மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுவதை 1500 மூட்டைகள் கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். கூடுதல் அறுவடை எந்திரங்களுக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். இதேப்போல் தனியாரிடமிருந்து பெறப்படும் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையில் மானியம் வழங்க வேண்டும். தற்போது உள்ள கொள்முதல் நிலையங்களிலும் சேர்த்து தேவைப்படும் இடத்திலும் கொள்முதல் நிலையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    நாகை மாவட்டத்தை பொறுத்தவரை கடற்கரை நிறைந்த பகுதியாகும். இருந்தாலும் மீன்பிடி தொழில் எவ்வளவு அதிகமாக உள்ளதோ அந்த அளவுக்கு விவசாயமும் நிறைந்து காணப்படுகிறது. மாவட்டத்தில் மழை அளவு அதிகம் இருக்கும் என்பதால் ஈரமான நெல்லை உலர்த்த அந்தந்த வயல்களில் உலர்களம் அமைத்து கொடுக்க வேண்டும். தற்போது அரசு அறுவடை எந்திரத்துக்கு 50 சதவீத மானியத்தில் வாடகை கொடுக்கும் என அறிவித்துள்ளது. இந்த நடைமுறை அடுத்து வரும் அனைத்து பருவத்துக்கும் தொடர வேண்டும். விவசாயிகளுக்கு தடையின்றி பயிர் கடன் வழங்க வேண்டும் என்று நாகை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    ×