search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "public suffer"

    • சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர்.
    • தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    செங்கல்பட்டு:

    விநாயகர் சதூர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தொடர் விடுமுறை வந்ததால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசித்த பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குசென்றனர்.

    இதேபோல் வடமாநில தொழிலாளர்களும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் பஸ், ரெயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. நேற்று இரவு வழக்கத்தை விட ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பஸ்நிலையத்தில் குவிந்தனர். இதனால் அனைத்து பஸ்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. முன்பதிவு செய்யாத பயணிகள் முண்டியடித்து ஏறினர். நேற்று மாலை முதல் பலத்த மழை கொட்டியதால் வெளியூர் செல்ல வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அனைத்து அரசு பஸ்கள், மற்றும் ஆம்னி பஸ்களில் முன்பதிவு முழுவதும் முடிந்ததால் பல பயணிகள் நின்றபடியும் படிக்கட்டில் தொங்கிய படியும் சென்றனர். மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வந்த ஏராளமான பயணிகள் பஸ் கிடைக்காமல் குடும்பத்துடன் தவித்தனர்.

    சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு வரை ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல காத்திருந்தனர். ஏற்கனவே சென்னையில் இருந்து வந்த பஸ்களில் இருக்கைகள் முழுவதும் நிரம்பியதால் அவர்கள் செல்ல முடியாத நிலையில் தவித்தனர். சிலர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்தனர். கூடு வாஞ்சேரி பகுதியிலும் நள்ளிரவு வரை பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் தவித்தனர்.

    இதைத்தொடர்ந்து சிலர் சரக்கு வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு சென்றனர். விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் வேறு வழியின்றி சென்னையில் இருந்து வந்த சரக்கு வாகனங்களில் சென்றனர். அதிலும் இடம் கிடைக்காமல் போட்டி போட்டு ஏறிச்சென்றனர்.

    இதுகுறித்து பயணிகள் கூறும்போது, தொடர்விடுமுறை வரும்போது பயணிகள் வசிதிக்காக கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • தும்மக்குண்டு வழியாக வாலிப்பாறை சாலை தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
    • சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வருசநாடு:

    வருசநாடு கிராமத்தில் இருந்து முருக்கோடை, தும்மக்குண்டு வழியாக வாலிப்பாறை வரை தார்சாலை சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலை அமைக்க அரசு அனுமதி வழங்கி அதற்கான நிதி ஒதுக்கீடு செய்தது.

    இதனையடுத்து புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. முதற்கட்டமாக பழைய தார்சாலை அகற்றப்பட்டு மெட்டல் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை அமைக்கும் பணிகளுக்கு வருசநாடு வனத்துறையினர் தடை விதித்தனர்.

    சாலை அமைக்கும் பகுதிகளில் குறிப்பிட்ட அளவு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் வனத்துறையினருடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து பிரச்சினைக்குரிய பகுதியை தவிர்த்து மற்ற பகுதிகளில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது.

    எனவே சாலை அமைக்கப்படாத பகுதிகள் தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் பைக், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்கி வருகிறது. மேலும் சேதம் அடைந்த சாலை காரணமாக வாலிப்பாறை பகுதிக்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்படுவதில்லை.

    எனவே அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களை ஆட்டோ மூலம் வருசநாடு வரை அழைத்து வந்து அதன் பின்பு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சாலை அதிக அளவில் சேதம் அடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்றதாக மாறும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும்.
    • திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்ட இடம்.

    வீரபாண்டி :

    திருப்பூர் நொச்சிபாளையம் பிரிவிலிருந்து அல்லாளபுரம் சாலை வழியாக பொங்கலூர் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக வாகன தணிக்கை செய்யும் இடத்திற்கு போகும் இடத்தில் குப்பை கொட்டியுள்ளார்கள்.இந்த இடம் திருப்பூர் மாநகராட்சி 53-வது வார்டுக்கு உட்பட்டது. குப்பையை எடுத்து 1மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் அந்த இடத்தை கடக்கும் பொழுது மூக்கை பொத்திக்கொண்டு செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் பலவகையான கழிவுகளை கொட்டுவதால் அதனை சாப்பிடுவதற்காக தெருநாய்கள் வருகின்றன.

    இந்த தெரு நாய்கள் சாலையின் குறுக்கே செல்வதால் வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்கள் தினந்தோறும் ஏற்படுகிறது . இதுவரைக்கும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் குப்பையை உடனடியாக அகற்றியும் குப்பைத் தொட்டியை வேறு இடத்தில் வைக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2 கி.மீ. தூரத்துக்கு மேல் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் படு மோசமாக சாலைகள் உள்ளது.
    • ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சாமுண்டிபுரம் செல்லக்கூடிய சாலை போக்குவரத்து முக்கி–யத்துவம் வாய்ந்ததாகும். குமார் நகரில் தொடங்கி சாமுண்டிபுரம் வரை உள்ள குடியிருப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குமார் நகர் பள்ளிக்கூடம், செல்லம்மாள் காலனி பள்ளிக்கூடம் மற்றும் தனியார் மருத்துவம–னைகளும் இந்த பகுதியில் உள்ளன. பெரும்பாலும் பனியன் தொழிலாளர்கள் குடும்பங்களும், தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்களும் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

    திருப்பூர் வீரபாண்டியில் இருந்து 15 வேலம்பாளையம் வரை செல்லக்கூடிய 1 ஏ/பி என்ற வழித்தடப் பேருந்து இந்த வழியில் இயங்கி வந்தது. அத்துடன் காவிலிபாளையம் மற்றும் வஞ்சிபாளையம் செல்லக்கூடிய சில பேருந்துகளும் இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா பொது முடக்கத்தின்போது 2020-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த சாலையிலும் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை 27 மாதங்களுக்கு மேலாக பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த சாலையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட 4- குடிநீர் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக குழாய்கள் பதிக்கும் பணியை மேற்கொண்டதே ஆகும். இத்தகைய பணிகள் செய்தால் முடிந்தவுடன் சாலைகளைச் செப்பனிட வேண்டும். ஆனால் இந்த சாலையில் 2 கி.மீ. தூரத்துக்கு மேல் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில், படு மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. மக்கள் நடந்து செல்வ தற்குக்கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கடந்த மாமன்ற கூட்டத்தில், இப்பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், நாகராஜ், குணசேகரன், தங்கராஜ் உள்ளிட்டோர் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 2 ஆண்டு காலமாக போக்குவரத்து முடங்கியிருக்கும் நிலையில் இந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினர். மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கை கடைபிடிக்காமல், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்த பகுதியில் மீண்டும் பேருந்து போக்குவரத்து நடைபெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து அதே நிலை நீடிப்பது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி 57-வது வார்டு திருக்குமரன் நகர் 1-வது வீதியில் சாக்கடை வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது," எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் சாக்கடை வசதி இல்லை. இதனால் வீட்டின் கழிவுநீர் அனை–த்தும் வீதிகளில் தேங்கி, சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. நாள்தோறும் தேங்கிநிற்கும் நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொந்தரவு மற்றும் துர்நாற்றம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. ஆகவே எங்கள் பகுதியில் சாக்கடை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்" என்றனர்.

    • புது வேத கோவில் தெரு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டும் வாகன ஓட்டுனர்கள் சரியாக கடைபிடிக்கவில்லை.
    • சாத்தான்குளம் பேரூராட்சியில் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பஜாரில் மேலசாத்தான்குளம் ரோடு, இட்டமொழி ரோடு, நாசரேத் ரோடு, முதலூர் ரோடு மற்றும் வாசக சாலை பஜார் உள்ளிட்ட சாலைகளில் தினசரி சிறிய வாகனங்களும் கனரக வாகனங்களும் சென்று வந்து கொண்டிருக்கிறது.

    இப்பஜார்களில் இருபுறமும் வியாபார கடைகள் உள்ளன. புது வேத கோவில் தெரு ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டும் வாகன ஓட்டுனர்கள் சரியாக கடைபிடிக்கவில்லை. அனைத்து பஜார்களிலும் வியாபார கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்க சென்றால் இரு பக்கமும் வாகனங்கள் சூழ்ந்து கொண்டு வெளியேவர முடியாத சூழ்நிலை உள்ளது. இருசக்கர வாகனங்களிலும் சைக்கிளில் செல்பவர்களும் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    இது குறித்து நகர ம.தி.மு.க. சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    வாசக சாலை பஜாரில் இருந்து முதலூர் ரோடு வரையிலும் கிறிஸ்தவ ஆலயம் முன்பு சந்தித்து இடது பக்கமும் வலது பக்கம் சாலைகளில் வாகன ஓட்டுநர்கள் அதிக பாரங்களை ஏற்றி செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உள்ளது. எனவே சாத்தான்குளம் பேரூராட்சியில் குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து போலீசார் நிறுத்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இது குறித்து முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சதாசிவன் கூறுகையில், சாத்தான்குளம் வாசசாலை பஜாரில் இருந்து குமரி மாவட்ட பஸ்களும் வாகனங்களும் மற்றும் முதலூர், உவரி,திசையன்விளை வரை உடன்குடி, பெரியதாழை போன்ற ஊர்களுக்கும் செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. முதலில் இந்த பஜார்களில் வாகனங்களை போலீசார் காலை, மாலை, இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு ஒழுங்குபடுத்த வேண்டும் என்றார்.

    • பெரியார் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
    • அடிக்கடி வடமாநில வாலிபர்கள் மற்றும் வாலிபர்கள் இரவு நேரத்தில் வருவதும், போதையில் நடு ரோட்டில் சண்டையிடுவதும் நடைபெற்று வருவதாக புகார்.

    பல்லடம் :

    பல்லடம்- மாணிக்காபு–ரம் ரோட்டில் அமைந்துள்ள பெரியார் நகர் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சில திருநங்கைகள் அங்கு உள்ள ஒரு வீட்டில் குடி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்தப் பகுதியில் அடிக்கடி வடமாநில வாலிபர்கள், மற்றும் வாலிபர்கள் இரவு நேரத்தில் வருவதும், போதையில் நடு ரோட்டில் சண்டையிடுவதும் நடைபெற்று வருவதாக இப்பகுதி பொதுமக்கள் பலமுறை போலீசில் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இந்தப் பிரச்சினையில் போலீசார் நடவடிக்கை எடுக்கக் கோரி பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் சாலை மறியல் செய்ய முயன்றனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தனியாருக்கு சொந்தமான முட்டை கோழிப் பண்ணை உள்ளது.
    • வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன.

    தாராபுரம்:

    தாராபுரம் புளியமரத்துபாளையம் கிராமத்தைச் சுற்றி சின்னப்புத்தூா், கெத்தல்ரேவ், கோவிந்தாபுரம், தும்பநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூா், நஞ்சுண்டாபுரம், காளிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

    இந்நிலையில், நஞ்சுண்டாபுரத்தில் இருந்து புளியமரத்துப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள தனியாா் கோழிப்பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாகப் புகாா் தெரிவித்துள்ளனா்.

    இது குறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கூறியதாவது:-

    சின்னபுத்தூா் கிராமத்துக்குட்பட்ட நஞ்சுண்டபுரத்தில் இருந்து புளியமரத்துபாளையம் செல்லும் சாலையில் தனியாருக்குச் சொந்தமான முட்டை கோழிப் பண்ணை உள்ளது.இந்த கோழிப் பண்ணையில் உற்பத்தியாகும் ஈக்கள் அருகில் உள்ள கிராமங்களில் பரவி வருகிறது. இது தொடா்பாக மாவட்ட கலெக்டர்மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.ஈ தொல்லையால் வீடுகளில் உணவு அருந்தவும், தூங்கவும் முடிவதில்லை.

    மேலும், ஈ தொல்லையால் குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு உபாதைகள் ஏற்படுகின்றன. அனுமதியில்லாமல் செயல்பட்டு வரும் கோழிப் பண்ணையை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்று தண்ணீர் தான் பயணிகளுக்கு குடிநீராக பயன்படுகிறது.
    • குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறப்படுகிறது.

    உடுமலை,

    திருப்பூர் மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில்உடுமலையும் ஒன்றாகும். பொள்ளாச்சி திண்டுக்கல்லுக்கு இடையே இருந்த மீட்டர்கேஜ் ெரயில் பாதை கடந்த 2009ம் ஆண்டு அகற்றப்பட்டு அகல ெரயில் பாதையாக மாற்றும் பணிகள் நடந்தது.

    இந்த பணிகளால் 5ஆண்டுகளாக உடுமலை வழியாக ெரயில்கள் இயக்கப்படாமல் இருந்தது. அகல ெரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி முதல் உடுமலை வழியாக இந்த வழித்தடத்தில் ெரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    உடுமலை ரெயில் நிலையத்தில் நல்ல சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பயணிகளுக்கு கிடைப்பதில்லை .இந்த நிலையில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள ரெயில்நிலைய வளாகத்தின் அலுவலகத்தின் வெளிப் பகுதியில் குடிநீர் குழாய் உள்ளது. ரெயிலில் வரும் பயணிகள் அங்கு சென்று தண்ணீர் குடித்து வர முடியாது .அதனால் ரெயில் நிலைய அலுவலக வெளிப்புறம் உள்ள குடிநீர் குழாயை அலுவலகத்தின் உட்புறம் உள்ள ரெயில்வே வளாகம் வரை குடிநீர் குழாய் அமைத்து நீட்டித்து அங்கு தொட்டி வைத்தால் பயணிகளுக்கு குடிநீர் வசதி கிடைக்கும்.

    இந்த ரெயில் நிலையத்திற்கு அருகில் உள்ள கிணற்று தண்ணீர் தான் பயணிகளுக்கு குடிநீராக பயன்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் செலவில் 2018 -19 ம் நிதியாண்டில் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டது.அதில் 4குடிநீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்து வந்தது. ஆனால் இந்த எந்திரம் பழுதாகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இது பராமரிப்பில்லாமல் பயனின்றி காட்சி பொருளாகவே உள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்கள் உள்ளன .ஒவ்வொரு பிளாட்பாரத்தில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன .இந்த குடிநீர் குழாய் களுக்கு ரெயில் நிலையத்தின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

    இந்த குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று கூறப்படுகிறது. இந்த கிணற்றில் உள்ள பகுதியில் குடிமகன்கள் உட்கார்ந்து மது குடிக்கின்றனர். காலி பாட்டில்களை அந்த கிணற்றில் போட்டு விடுகின்றனர்.இரவு நேரத்தில் குடித்து விட்டு குடிநீர் குழாய்களை பிடித்து அசைக்கின்றனர் .இதில் இரண்டு இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து உள்ளதால் அவை பயன்படுத்த முடியாதபடி உள்ளது .அதனால் தண்ணீர் வருவதை தவிர்க்க இரண்டு குழாய்களையும் கட்டை வைத்து அடைத்து வைக்கப்பட்டுள்ளன.இதனால் இரண்டு இடங்களில் மட்டுமே குடிநீர் குழாய் உள்ளது. அந்த இரண்டு குழாய்களில் தண்ணீர் வருவதில்லைஇதனால் உடுமலை ெரயில் நிலையத்தில் குடிநீர் தட்டுப்பாடு உள்ளது .அதனால் ெரயில் பயணிகள் உடுமலை ெரயில் நிலையத்தில் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.உடுமலை ரெயில் நிலையத்தில் நகராட்சியின் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும். ரெயில் நிலையத்தில் காட்சிப்பொருளாக உள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரத்தை பழுது பார்த்து பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கம்பத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்தது. மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் இருளில் தவித்தனர்.
    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாகவே பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

    இந்த ஆண்டு கோடை மழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. சாரல் மழை பெய்தபோதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்த நிலையில் நேற்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மேலும் பலன் தரும் நிலையில் இருந்த ஏராளமான வாழைகள் காற்றுக்கு சேதம் அடைந்தது.

    பல இடங்களில் மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருந்தபோதும் காலைவரை மின் வினியோகம் இல்லை. இதனால் இரவு முழுவதும் இருளில் தவித்தனர்.

    சமீப காலமாக கோடை மழையில் காற்றின் வேகமே அதிகமாக உள்ளது. மழைப்பொழிவு போதிய அளவு இல்லை. சூறாவளி காற்று சுழன்று வீசுவதால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

    மேலும் செங்கல் காளவாசலில் வைக்கப்பட்டிருந்த செங்கலும் கரைந்து ஓடியதால் செங்கல் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.



    டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். #DeltaDistricts #Fog
    திருச்சி:

    தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருவதால் சில நாட்களுக்கு மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காலமான தற்போது மழை பொழியாததால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.

    கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட மாதங்களில் இந்த பனிப்பொழிவு ஏற்படும். அதிலும் மார்கழி மாதத்தில் தான் அதிக பனிப்பொழிவு, மூடுபனி காணப்படும். நேற்று டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவுகள் ஏதும் இல்லாமல் வானம் வறண்டு காட்சியளித்தது.

    இதற்கிடையே மாலை நேரம் ஆக ஆக பனிப்பொழிவு அதிகமானது. நள்ளிரவில் கடுமையாக பனி தாக்கியது. மேலும் இன்று அதிகாலை பெருமாள் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதால் பொதுமக்கள் நள்ளிரவு முதல் பெருமாள் கோவில்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

    வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மூடுபனியால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்ல முடிந்தது. குறிப்பாக 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்களை கூட பார்க்க முடியவில்லை. இதனால் பல வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்கியதோடு, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணாடிகள் மூடுபனியால் மறைந்தது. அவற்றினை துடைத்துவிட்டு டிரைவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

    பெரும்பாலான விவசாய நிலங்களில் மண்ணில் கால்களை பதிக்க முடியாத அளவு குளிர் அதிகமாக இருந்தது. அதிகாலையிலே வயலுக்கு சென்று தங்களது அன்றாட பணிகளை செய்யும் விவசாயிகள் முடங்கினர். பின்னர் சூரிய உதயம் தொடங்கிய பின்னரே வயல்வெளிகளுக்கு சென்று தாமதமாக பணிகளை தொடங்கினர்.

    மேலும் அதிகாலையில் காய்கறி உள்ளிட்டவற்றை சந்தைகளுக்கு அனுப்பி வரும் விவசாயிகள் பயிர்களை பறிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். அதனையும் மீறி உரிய நேரத்தில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என நினைத்த விவசாயிகள் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் செல்வதில் கடும் பிரச்சினைகளை சந்தித்தனர்.

    இந்த மூடு பனி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் அதிகம் காணப்பட்டது.  #DeltaDistricts #Fog

    தொண்டி பகுதியில் பி.எஸ்.என்.எல் இணைய தள தொடர்பு துண்டிப்பால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம்,தொண்டி பகுதியில் ஏராளமானோர் தொலைபேசி இணைப்பு மூலம் இணையதள வசதி பெற்றுள்ளனர்.

    கடந்த 3 நாட்களாக பிராண்ட்பேண்ட் கம்பி வழி இணையதள வசதி தொழில்நுட்ப காரணங்களால் துண்டிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வீடுகளில், அலுவலகங்களில் தொலைபேசியுடன் இணையதள வசதி பெற்றவர்கள் மற்றும் பொதுமக்கள், இணையதள இணைப்பு கிடைக்காமல் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

    தொலைத்தொடர்பில் பல தனியார் நிறுவ னங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிற நிலையில், தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் இந்த காலக்கட்டத்தில் முன்மாதிரியாக இருக்க வேண்டிய பி.எஸ்.என்.எல் நிறுவனமே மெத்தனமாக இருக்கிறது என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    உடனடியாக பழுதை சரி செய்து இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    ×