search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்டா மாவட்டங்களில் மூடுபனி: பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதி
    X

    டெல்டா மாவட்டங்களில் மூடுபனி: பொதுமக்கள்-வாகன ஓட்டிகள் அவதி

    டெல்டா மாவட்டங்களில் வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். #DeltaDistricts #Fog
    திருச்சி:

    தமிழகம் முழுவதும் வறண்ட வானிலை நிலவி வருவதால் சில நாட்களுக்கு மழை இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை காலமான தற்போது மழை பொழியாததால் பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது.

    கார்த்திகை, மார்கழி, தை உள்ளிட்ட மாதங்களில் இந்த பனிப்பொழிவு ஏற்படும். அதிலும் மார்கழி மாதத்தில் தான் அதிக பனிப்பொழிவு, மூடுபனி காணப்படும். நேற்று டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவுகள் ஏதும் இல்லாமல் வானம் வறண்டு காட்சியளித்தது.

    இதற்கிடையே மாலை நேரம் ஆக ஆக பனிப்பொழிவு அதிகமானது. நள்ளிரவில் கடுமையாக பனி தாக்கியது. மேலும் இன்று அதிகாலை பெருமாள் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதால் பொதுமக்கள் நள்ளிரவு முதல் பெருமாள் கோவில்களை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

    வழக்கத்தை விட பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மூடுபனியால் சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்தபடியே செல்ல முடிந்தது. குறிப்பாக 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்களை கூட பார்க்க முடியவில்லை. இதனால் பல வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை மெதுவாக இயக்கியதோடு, முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

    பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களில் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை கண்ணாடிகள் மூடுபனியால் மறைந்தது. அவற்றினை துடைத்துவிட்டு டிரைவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.

    பெரும்பாலான விவசாய நிலங்களில் மண்ணில் கால்களை பதிக்க முடியாத அளவு குளிர் அதிகமாக இருந்தது. அதிகாலையிலே வயலுக்கு சென்று தங்களது அன்றாட பணிகளை செய்யும் விவசாயிகள் முடங்கினர். பின்னர் சூரிய உதயம் தொடங்கிய பின்னரே வயல்வெளிகளுக்கு சென்று தாமதமாக பணிகளை தொடங்கினர்.

    மேலும் அதிகாலையில் காய்கறி உள்ளிட்டவற்றை சந்தைகளுக்கு அனுப்பி வரும் விவசாயிகள் பயிர்களை பறிக்க முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். அதனையும் மீறி உரிய நேரத்தில் பொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என நினைத்த விவசாயிகள் வாகனங்களில் பொருட்களை எடுத்துச் செல்வதில் கடும் பிரச்சினைகளை சந்தித்தனர்.

    இந்த மூடு பனி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களிலும் அதிகம் காணப்பட்டது.  #DeltaDistricts #Fog

    Next Story
    ×