search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "defamation case"

    • வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என கூறினார்.
    • ராகுல் காந்தியின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டி உள்ளது என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

    பாட்னா:

    மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல்காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது.

    இதேபோல் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக பீகார் மாநிலம் பாட்னாவிலும் ராகுல் காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

    இந்த வழக்கின் விசாரணைக்காக ஏப்ரல் 12ம் தேதி (இன்று) ராகுல் காந்தி ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி ஆஜராகவில்லை. சூரத் நீதிமன்ற வழக்கில் ராகுல் காந்தியின் சட்டக்குழுவினர் பிசியாக இருப்பதால் மற்றொரு தேதிக்கு ஒத்திவைக்கும்படி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் ராகுல் காந்தி நேரில் ஆஜராவதை உறுதி செய்யும்படி வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

    இந்த வழக்கு குறித்து அரசு தரப்பு வழக்கறிஞர் பிரியா குப்தா செய்தியாளர்களிடம் கூறுகையில், 'மனுதாரர் தரப்பு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஆதாரங்களும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ராகுல் காந்தியின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யவேண்டி உள்ளது' என்றார்.

    • தகுதி நீக்கம் செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என ராகுல் வழக்கறிஞர் வாதம்
    • ஏப்ரல் 15ம் தேதி ராகுல் காந்தியின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தானே:

    குஜராத் நீதிமன்றத்தில் தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, அவர் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் ராகுல் காந்தி மீதான மற்றொரு அவதூறு வழக்கு மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்ட நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. 2014 மக்களவைத் தேர்தலின்போது மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் சுட்டுக் கொன்றுவிட்டு, இப்போது தேர்தல் பிரசாரத்துக்கு காந்தியின் பெயரை பயன்படுத்துகிறார்கள் என்றார்.

    இதற்கு ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குன்டே என்பவர், ராகுல் காந்தி மீது பிவாண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜரான ராகுல் காந்தி, தான் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்திருந்தார்.

    மேலும், கடந்த ஆண்டு இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருந்தார். பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால், தனது தொகுதிக்கு அடிக்கடி செல்ல வேண்டும், கட்சிப் பணிக்காக நிறைய பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    ஆனால், ராகுல் காந்தியின் மனுவுக்கு மனுதாரர் எதிர்ப்பு தெரிவித்தார். அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து, எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

    இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தியின் வழக்கறிஞர்  ஆஜராகி, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது சட்டப்பூர்வமானது அல்ல என்று கூறினார். தகுதி நீக்கம் செய்வதற்கு குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது எனக் கூறியதுடன், அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் கூறினார்.

    எழுத்துப்பூர்வ அறிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும், உத்தரவு பிறப்பிக்கும்போது அதற்கு ஏற்ப முடிவு எடுக்கவேணடும் எனவும் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து வழக்கு விசாரணை 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றைய தினம் ராகுல் காந்தியின் மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • எம்.பி.யாக இருந்தவர்களுக்கு கோட்டாவில் டெல்லியில் வீடு ஒதுக்கி உள்ளது
    • அவதூறு பரப்புவதின் மூலம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க நினைக்கின்றனர்.

    தூத்துக்குடி:

    பா.ஜ.க. மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் நிருபர் களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் வீடு

    எம்.பி.யாக இருந்தவர்களுக்கு கோட்டாவில் டெல்லியில் வீடு ஒதுக்கி உள்ளது. அதனை 3 மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்தல் செய்வது வழக்கம். அனைத்து எம்.பி.களுக்கும் இதுதான் நடைமுறை.

    அந்த அடிப்படையில் எனக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 மாதமாக கட்சிப் பணி அதிகமாக இருந்த காரணத்தால் நான் டெல்லி செல்லவில்லை.

    இந்நிலையில் வீட்டை காலி செய்ய டெல்லியின் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. டெல்லியில் எனக்கு சொந்த வீடும் உள்ளது. அரசு வீட்டை காலி செய்தால் அந்தப் பொருட்களை நான் அங்கு எடுத்துச் செல்வேன்.

    ஆனால் இதனை வைத்து என்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பரப்பி உள்ளனர். அதில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை உள்ளது. இதனை சமீபகாலமாக யார் பயன்படுத்தி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    வழக்கு

    எனவே தவறான தகவல் பரப்பியவர் மீது தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன். இப்படி அவதூறு பரப்புவதின் மூலம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க நினைக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் வாரியார், பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன், மண்டல தலைவர்கள் மாதவன், சிவகணேசன், மண்டல பார்வையாளர் சின்னத் தம்பி மற்றும் காளிராஜா, கலைச்செல்வன், செல்வி, சுமித்ரா, புனிதா, சிலம்பு உட்பட பலர் உடனிருந்தனர். 

    • திட்டப்பணியில் கையாடல் செய்து விட்டதாக, சேவூரைச் சேர்ந்த மனோன்மணி என்பவர் குற்றம் சாட்டினார்.
    • கார் தெரிவிக்கப்பட்ட திட்டப்பணி முழுவதும் இணையவழியில் கணக்கீடு செய்யப்படுவது.

    அனுப்பர்பாளையம் :

    அவிநாசி ஒன்றியம் சேவூர் ஊராட்சியில் ஊராட்சி மன்றத் தலைவராக சேவூர் ஜி.வேலுசாமியும், 12 வார்டு உறுப்பினர்களும் உள்ளனர். இந்நிலையில் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் கே.எம்.சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில் கடந்த (ஆக.15)கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி, திட்டப்பணியில் கையாடல் செய்து விட்டதாக, சேவூரைச் சேர்ந்த மனோன்மணி என்பவர் குற்றம் சாட்டினார். இதற்கு ஊராட்சி மன்றத்தலைவர் சேவூர் ஜி.வேலுசாமி கூறுகையில், புகாரை நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து ஊராட்சி மன்றத்தலைவர், நிர்வாகத்தின் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்.இந்த நிலை மீண்டும் தொடர்ந்தால், அவதூறு வழக்குத் தொடருவது என கூட்டத்தில் உறுப்பினர்கள் முடிவு செய்தனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமாரிடம் கேட்ட போது, புகார் தெரிவிக்கப்பட்ட திட்டப்பணி முழுவதும் இணையவழியில் கணக்கீடு செய்யப்படுவது. ஊராட்சி மன்றத்தலைவர் பதவி ஏற்பதற்கு முன்பாக தொடங்கப்பட்ட பணி. ஊராட்சி மன்றத்தலைவருக்கும், இப்பணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றார்.

    • அவதூறு வழக்கில் பிரேமலதா விஜயகாந்தை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
    • இதையடுத்து ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் கோர்ட் முன்பு திரண்டு இருந்தனர்.

    கோபி:

    கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட தினேஷ்குமார் என்பவரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டிபாளையம் பஸ் நிலையத்தில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அ.தி.மு.க.வில் சுற்றுசூழல் துறை அமைச்சராக இருந்த தோப்பு வெங்கடாசலத்தை அவதூறாக பேசியதாகவும், அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக பிரேமலதா விஜயகாந்த் பேசியதாக அப்போது அ.தி.மு.க. கோபி நகர செயலாளராக இருந்த சையதுபுடான்சா என்பவர் கோபிசெட்டிபாளையம் ஜே.எம்.1 கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் இன்று காலை ஆஜர் ஆனார்.

    இந்த வழக்கில் பிரேமலதா விஜயகாந்தை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து ஏராளமான தே.மு.தி.க. தொண்டர்கள் கோபிசெட்டிபாளையம் கோர்ட் முன்பு திரண்டு இருந்தனர்.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் இயக்குனர்களில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் ஒருவர் ஆவார்.

    இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது ரூ.745.59 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை இந்த வங்கி முறைகேடு செய்து சட்டப்பூர்வமானதாக மாற்றியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரண்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

    இதை மறுத்த மாவட்ட கூட்டுறவு வங்கி ராகுல்காந்தி பொய் குற்றச்சாட்டை முன் வைத்ததாக கூறி அவருக்கு எதிராக அகமதாபாத் கூடுதல் பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல்காந்தி இம்மாதம் 27-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் கடந்த திங்கட்கிழமை ராகுல்காந்தி தரப்பில் அவரது வக்கீல் ஆஜரானார்.

    அப்போது வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை குஜராத்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க மேலும் சில காலம் தேவைப்படுகிறது. மேலும் கடந்த திங்கட்கிழமை நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு தின நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். எனவே ராகுல்காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

    இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி ஜூலை 12-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

    அன்றைய தினமே ரண்தீப் சிங் சுர்ஜேவாலாவும் ஆஜராக வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

    திமுக எம்.பி. கனிமொழி மீது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    திண்டிவனத்தில் கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அரசு குறித்து அவதூறாக பேசியதாக கனிமொழி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



    இவ்வழக்கில் ஜூன்4ம் தேதி கனிமொழி ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.  இந்நிலையில் இந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. 
    பத்திரிகையாளர் பிரியா ரமணி அளித்த பாலியல் புகார் தொடர்பான அவதூறு வழக்கில் முன்னாள் மந்திரி எம்.ஜே. அக்பரிடம் டெல்லி நீதிமன்றம் இன்றும் குறுக்கு விசாரணை நடத்தியது.
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் கடந்த ஆண்டு டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்தனர். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
     
    அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளானார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி  பொறுப்பில் இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.



    இதைதொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.

    இவ்வழக்கு முன்னர் விசாரணைக்கு வந்தபோது எம்.ஜே.அக்பர் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். மாஜிஸ்திரேட் சமர் விஷாலிடம் தனது வாக்குமூலத்தை அவர் பதிவு செய்தார். தன்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரியா ரமணி சமூக வலைத்தளங்களின் மூலம் அவதூறான குற்றச்சாட்டுகளை பரவ விட்டதாக அவர் தெரிவித்தார்.

    இவ்வழக்கில் நேற்று நடைபெற்ற குறுக்கு விசாரணையில் எம்.ஜே.அக்பர் ஆஜரானார். தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் பிரியா ரமணியின் வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் அக்பரிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    அவர் கேட்ட பல கேள்விகளுக்கு நினைவில்லை. நீங்கள் சொல்வது சரியல்ல என்று அக்பர் பதிலளித்தார். பின்னர், இவ்வழக்கின் மறுவிசாரணையை ஜூலை 7-ம் தேதிக்கு  மாஜிஸ்திரேட் சமர் விஷால் ஒத்திவைத்தார்.
     
    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பீகார் மாநில துணை முதல்-மந்திரி சுஷில் குமார் மோடி கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். #RahulGandhi #SushilKumarModi
    பாட்னா:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக பா.ஜனதா மூத்த தலைவரும், பீகார் மாநில துணை முதல்-மந்திரியுமான சுஷில் குமார் மோடி, பாட்னாவில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

    அதில், அவர் கூறியிருப்பதாவது:-

    ராகுல் காந்தி கடந்த 13-ந் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் பேசுகையில், “மோடி என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் திருடர்கள்” என்றார். இதன்மூலம், சமூகத்தில் எனது நற்பெயரை களங்கப்படுத்தி விட்டார். இது ஒரு குற்றச்செயல். ஆகவே, அவருக்கு சம்மன் அனுப்ப வேண்டும். அதன்மூலம், வழக்கின் முடிவில் அவர் தண்டிக்கப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  #RahulGandhi #SushilKumarModi 
    பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அமித் ஷா இயக்குனராக பதவி வகிக்கும் கூட்டுறவு வங்கி 750 கோடி ரூபாயை மாற்றியதாக பேசிய ராகுல் காந்தியை நேரில் ஆஜராகுமாறு குஜராத் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. #Rahultoappear #defamationcase #ADCB
    அகமதாபாத்:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டில் கொண்டுவந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது பாஜக தலைவர் அமித் ஷா இயக்குனராக பதவி வகிக்கும் அகமதாபாத்  மாவட்ட கூட்டுறவு வங்கி முறைகேடாக சுமார் 750 கோடி ரூபாயை மாற்றியதாக ராகுல் காந்தி முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

    இவ்விவகாரம் தொடர்பாக ராகுல் காந்தி, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் மீது கிரிமினல் சட்டப்பிரிவின்கீழ் அகமதாபாத்  மாவட்ட கூட்டுறவு வங்கியின் சார்பிலும் அதன் தலைவர் சார்பிலும் கடந்த ஆண்டு அகமதாபாத் நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுதாரர்களின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

    எனவே, இந்த வழக்கு தொடர்பாக மே 27-ம் தேதி நடைபெறும் விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு ராகுல் காந்தி மற்றும் ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோருக்கு அகமதாபாத் நகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் எஸ்.கே. காத்வி இன்று சம்மன் அனுப்பியுள்ளார். #Rahultoappear #defamationcase #ADCB
    ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' பட பிரச்சனையில், அவதூறு பரப்பியதாக நடிகர் விஷால் மீது சிம்பு வழக்கு பதிவு செய்த நிலையில், விஷால் பதிலளிக்க ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #AAA #STR #Vishal
    மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் நடிகர் சிம்பு நடித்து வெளியான படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்'. இந்த படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிம்புக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டது. ரூ.1 கோடியே 51 லட்சம் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த திரைப்படம் தோல்வி அடைந்தது. இதையடுத்து சிம்புவுக்கு பாக்கித் தொகை வழங்கப்படவில்லை.

    இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு புகார் செய்தார். அதேபோல, தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் புகார் செய்தார்.

    இந்த புகாரை விசாரித்த தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், சிம்புவுக்கு எதிராகவும், மைக்கேல் ராயப்பனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சிம்பு குறித்து, அவதூறு செய்தியை விஷால் பரப்பியதாகவும் கூறப்பட்டது.



    இதனால், நடிகர் விஷாலிடம், ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சிம்பு, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில், விஷாலுக்கு எதிராக நான் செயல்பட்டேன். இந்த பகையை மனதில் வைத்து, இந்த விவகாரத்தில்எனக்கு எதிராக விஷால் செயல்படுகிறார். அவர் உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக அவதூறு பரபரப்பி உள்ளார். எனவே, எனக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வழக்கு நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளிவைத்தார். அதற்குள் நடிகர் விஷால் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டார். #AAA #STR #Vishal

    வெஸ்ட்இண்டீஸ் வீரர் கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. #ChrisGayle #DefamationCase
    2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்தது. இந்த போட்டியில் பங்கேற்ற வெஸ்ட்இண்டீஸ் அணியின் உதவி மசாஜ்தெரபிஸ்டாக பணியாற்றிய பெண், சிட்னியில் அந்த அணியினர் தங்கி இருந்த அறைக்குள் சென்ற போது கிறிஸ் கெய்ல் தான் உடுத்தி இருந்த துண்டை கழற்றி விட்டு இங்கு எதை பார்க்க வந்தாய்? என்று ஆபாசமாக பேசியதாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேர்பேக்ஸ் மீடியா குழுமம் செய்தி வெளியிட்டது.

    இதனை அடுத்து கெய்ல், ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றத்தில் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மெக்கல்லம் பேர்பேக்ஸ் மீடியா குழுமம் கெய்ல் மீது குற்றம்சாட்டி வெளியிட்ட செய்தியை உண்மை என்று நிரூபிக்கவில்லை என்று கடந்த அக்டோபர் மாதம் தனது தீர்ப்பில் தெரிவித்து இருந்தார். ஆனால் இழப்பீடு தொகை விவரம் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் இழப்பீடு தொகை நேற்று அறிவிக்கப்பட்டது. கெய்லுக்கு பேர்பேக்ஸ் நிறுவனம் ரூ.1.52 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அப்பீல் செய்யப்போவதாக பேர்பேக்ஸ் மீடியா குழுமம் தெரிவித்துள்ளது. 
    ×