search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Communist Party"

    பாராளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி இப்படி தொடர்ந்து ஆட்சி அமைப்பது இதுவே முதல் முறை என்கிற வகையில் இது சாதனை வெற்றியாக அமைந்துள்ளது.

    மற்றொரு புறம், காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 2-வது முறையாக பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழக்கிறது.

    அத்துடன், இந்திய அரசியலில் குறிப்பாக கேரளா, மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய 3 மாநிலங்களில் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகள், அதெல்லாம் பழங்கதை என்ற நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளன.

    2004 பாராளுமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 59 எம்.பி.க்கள் இவ்விரு கட்சிகள் சார்பில் தேர்வு பெற்றிருந்தனர். கடந்த 2014 தேர்தலில் இவ்விரு கட்சிகள் 12 இடங்களில் வெற்றி பெற்றன. இதுதான் இதுவரையில் அக்கட்சிகள் பெற்ற குறைவான எண்ணிக்கையாக இருந்து வந்தது.

    இந்த தேர்தலில்தான் சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் 5 தொகுதிகளில் மட்டுமே இக்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.

    கேரளாவில் ஆலப்புழையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஏ.எம். ஆரிப் வெற்றி பெற்றார்.

    மீதி 4 இடங்களையும் தமிழ்நாட்டில் இருந்து இக்கட்சிகளுக்கு பெற்றுத்தந்த புண்ணியம், தி.மு.க.வைச் சேரும். தி.மு.க. கூட்டணியில் இணை ந்து தலா 2 தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் போட்டியிட்டு, வெற்றி பெற்றிருக்கின்றன.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பி.ஆர். நடராஜன் கோவையிலும், சு.வெங்கடேசன் மதுரையிலும் வெற்றி பெற்றனர்.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் செல்வராசு நாகப்பட்டினத்திலும், கே.சுப்பராயன் திருப்பூரிலும் வென்றனர்.

    நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி போட்டியிட்ட இடங்கள் 45. இந்திய கம்யூனிஸ்டு போட்டியிட்ட இடங்கள் 55. ஆக இவ்விரு கட்சிகளும் கூட்டாக போட்டியிட்ட இடங்கள் 100. வெற்றி பெற்ற இடங்கள் 5. எனவே 5 சதவீத வெற்றியை மட்டுமே இந்த கட்சிகள் பெற்றுள்ளன.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இந்த தேர்தலில் வரலாற்று தோல்வியை சந்தித்துள்ளது. 2004-ல் 43 தொகுதிகளிலும், 2009-ல் 16 தொகுதிகளிலும், 2014-ல் 9 தொகுதிகளிலும் இந்த கட்சி வெற்றி பெற்றிருந்தது.

    இந்த முறையோ 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று திருப்திபட்டுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்து, கொடி கட்டிப்பறந்த மேற்கு வங்காளத்திலும், திரிபுராவிலும் ஒரு இடம் கூட இக்கட்சிக்கு கிடைக்கவில்லை.

    இதே நிலைதான் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கும் ஏற்பட்டுள்ளது.

    இந்த கட்சி சார்பில் பீகாரில் பெகுசாராய் தொகுதியில் களம் இறங்கி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த மாணவர் தலைவர் கன்னையா குமாரும் தோல்வியைத்தான் தழுவினார்.

    மேற்கு வங்காளத்தில் இவ்விரு கட்சிகள் சார்பில் களம் கண்டவர்களில் ஒருவர் தவிர்த்து அத்தனை பேரும் டெபாசிட் தொகையினை பறிகொடுத்துள்ள அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    கூடவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய 2 கட்சிகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஒரு கட்சி, தேசிய கட்சி அந்தஸ்தை பெறுவதற்கு 3 அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறுகிறது.

    1. பாராளுமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

    2. நான்கு மாநிலங்களில் இருந்து 4 இடங்களை கைப்பற்றுவதுடன், 6 சதவீத ஓட்டுகளை பெற வேண்டும்.

    3. நான்கு மாநிலங்களில் மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும். 8 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருக்க வேண்டும்.

    இந்த அடிப்படை அம்சங்களை பூர்த்தி செய்யாத நிலையில், 2 கம்யூனிஸ்டுகளும் தேசிய கட்சி அந்தஸ்தை பறிகொடுக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
    கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி பெரும் சரிவை சந்திக்கும் என்று பாரதீய ஜனதா கூட்டத்தில் தேசிய தலைவர் அமித்ஷா பேசியுள்ளார். #amitshah #bjp #communistparty

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காட்டில் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக முக்கிய தேர்தல் இந்த தேர்தலில் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். அதற்கு கேரள மக்கள் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவேண்டும்.


    சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் அய்யப்ப பக்தர்களுக்கு கம்யூனிஸ்டு அரசு துரோகம் செய்து விட்டது. கோவிலின் ஆச்சாரத்தை பாதுகாக்க போராடிய பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அய்யப்ப பக்தர்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்டு அரசு அதற்கான பலனை அனுபவித்தே தீரும். பக்தர்களுக்கு நீதியை மறுத்து அநீதி இழைத்த கம்யூனிஸ்டுகள் அழிவை சந்திக்கும் காலம் நெருங்கி விட்டது.

    உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி அகற்றப்பட்டு விட்டது. கேரளாவிலும் விரைவில் இந்த நிலை ஏற்படும். இங்கும் கம்யூனிஸ்டுகள் சரிவை சந்திக்கப்போவது உறுதி.

    கேரளாவை ஆளும் கம்யூனிஸ்டு அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே சபரிமலை பிரச்சினையில் நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறது.

    சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த இன்னொரு உத்தரவில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தது. அதன்படி, அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு விட்டதா? அனைத்து மசூதிகளிலும் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை இந்த அரசு அகற்றி இருக்கிறதா?

    கேரள மக்களுக்கு எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் இந்த அரசு, அரசியல் செய்கிறது. கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் கேரளாவில் வன்முறை நடக்கும். இதுவே காங்கிரஸ் ஆட்சி நடத்தினால் ஊழல் செய்வார்கள்.

    இந்த இரு கட்சியினரும் இதைதான் மாறி மாறி செய்து வருகிறார்கள். அவர்களுக்குத்தான் நீங்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி வருகிறீர்கள்.

    இந்த முறை கேரள மக்கள் மாற்றத்தை தரவேணடும். பாரதீய ஜனதா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கேரளாவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கேரளா மாறும். ஊழல்வாதிகள், வன்முறையில் ஈடுபட்டோர் ஜெயிலுக்கு செல்வார்கள்.

    எனவே கேரள மக்கள் பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த வேண்டும். எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளரே இல்லை. ஆனால் பாரதீய ஜனதா, மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு கேட்கிறது. இம்முறை கேரள மக்கள் அந்த வாய்ப்பை தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #amitshah #bjp #communistparty

    சபரிமலை விவகாரத்தில் இந்து கலாச்சாரத்தை அழிக்க கம்யூனிஸ்டுகள் முயற்சிக்கிறது என்று எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். #hraja #communistparty #pinarayivijayan #sabarimala

    திருச்சி:

    திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடதுசாரி சிந்தனையும், நாத்திக சிந்தனைகளும் இந்த நாட்டின் அறிவு களஞ்சியங்களை அழித்திருக்கின்றன. இந்த நாத்திக, கம்யூனிச, தீய சக்திகள் தான் கொஞ்சம், கொஞ்சமாக இந்து கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அழிக்க வேண்டும் என்று தீய நோக்கத்தோடு செயல்படுகின்றன.

    மதமாற்றம், தீய சக்திகளின் பிரதிநிதியாக இருக்கின்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மோசடியாக சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. நாத்திகர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள் அய்யப்பன் கோவிலை ஒரு ‘ரிசார்ட்’ போல் நடத்த வேண்டும் என நினைக்கின்றனர்.

    பிரவம் தேவாலயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேரள அரசு செயல்படுத்தவில்லை. பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பு உள்ளது. ஆனால் அதனை எடுக்கவில்லை. தீய நோக்கத்தோடு இந்து மதத்தை அழிப்பதற்காக மதமாற்ற தீய சக்திகளோடு சேர்ந்து செய்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்திலும் இந்து புனித தலங்கள், கோவில்கள் இருக்கிற இடத்தில் மாற்று மதத்தினர் தீயநோக்கத்தோடு அதனை ஆக்கிரமிக்கின்றனர். இதேபோல கேரளாவில் கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளிடம் சபரிமலையை ஒப்படைப்பதற்காக ஒரு தீய நோக்கத்தோடு செயல்படுகிற பினராயி விஜயனின் செயலை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. பா.ஜ.க. வின் இந்த போராட்டம் தொடரும்.


    பள்ளிவாசல்களில் பெண்கள் செல்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதுவும் சொல்லவில்லை. காரணம் மதம் சார்ந்ததில் மதங்கள் முடிவு செய்து கொள்ளும், நீதிமன்றம் அல்ல. இதனை மக்கள் தெளிவாக புரிந்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #hraja #communistparty #pinarayivijayan #sabarimala

    கீரமங்கலத்தில் 24-ந்தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பாக தென்னை மரத்துக்கு ரூ.20 ஆயிரம், வாழை ஏக்கருக்கு ரூ.1 லட்சம் மற்றும் மா, பலா மரங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், நெல் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் என இழப்பீடாக வழங்க வேண்டும். வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு அரசே வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். 

    கல்விக்கடன், விவசாய கடன், மைக்ரோ பைனான்ஸ் கடன் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும். மேலும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியூர்களில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆழ்குழாய் கிணறுகளில் மீட்டர் கட்டணத்தை ரத்து செய்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி கீரமங்கலத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்,  ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்வார் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    கஜா புயலால் உருக்குலைந்த புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆலங்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    ஆலங்குடி:

    கஜா புயலால் உருக்குலைந்த புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆலங்குடி வட்டஞ்கச்சேரி திடலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி நகர செயலாளர் வரவேற்று பேசினார்.  

    திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உடையப்பன், முன்னாள் மாவட்ட செயலாளர் பெரி குமாரவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும். அனைத்து குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்கிட வேண்டும், விவசாய கடன்கள் அனைத்தையும் முற்றிலும் ரத்து செய்திட வேண்டும், பயிர் காப்பீடு காலக்கெடுவை நீடித்து அரசு பயிர் இன்சூரன்ஸ் செய்திட வேண்டும், தென்னை ஒன்றுக்கு ரூ.20,000 ஆயிரம் வழங்கவும், மா, பலா, வாழை, சவுக்கு ஆகியவற்றிற்கு உரிய நிவரணம் மற்றும் இதர மரத்திற்கும் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து வீடுகளுக்கும் 6 மாத காலத்திற்கு மின் கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

    ஆர்ப்பாட்டத்தில் சுசீலா, சிவகுமார், பாலசுப்பிர மணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் ரெகுநாதன், ஆறுமுகம், பழனி வேலு, மதியழகன், ஸ்டெல்லா மேரி, நாடி யம்மை, இளங்கோவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டெல்லாமேரி நன்றி கூறினார்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டியலில் திருச்சி மாவட்டத்தை சேர்க்கவும், மணப்பாறை, மருங்காபுரி ஆகிய தாலுகா பகுதிகளையும் பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மணப்பாறை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பட்டியலில் திருச்சி மாவட்டத்தை சேர்க்கவும், மணப்பாறை, மருங்காபுரி ஆகிய தாலுகா பகுதிகளையும் பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்க வலியுறுத்தி திருச்சி மாவட்டம்,  மணப்பாறையில் உள்ள பெரியார் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றியச் செயலாளர் தங்கராசு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது.  

    புறநகர் மாவட்டச் செயலாளர் இந்திரஜி, துணைச் செயலாளர் பழனிச்சாமி, மாவட்டக்குழு தட்சிணாமூர்த்தி, நகரச் செயலாளர் உசேன், ஒன்றியச் செயலாளர்கள் சண்முகானந்தம், வெள்ளக்கண்ணு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கோரிக்கை குறித்து பேசினர். 

    இதைத் தொடர்ந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை, புளியமரம், மாமரம், எலும்பிச்சை, தேக்கு, வேப்பமரம்,  பப்பாளி, வாழை மற்றும் பல்வேறு விலை உயர்ந்த மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும், முறையாக புள்ளி விபரக்கணக்கை எடுக்க வேண்டும், விவசாய பயிர்களாக நெல், காய்கனி, மலர், பாகற்காய், புடலங்காய் உள்ளிட்டவைகளும், அதற்காக அமைக்கப்பட்ட பந்தல்களுக்கும் கூடுதல் நிவாரணம் வழங்கிட வேண்டும், புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூபாய் 5 லட்சம்  மதிப்பீட்டில் கான்கீரிட் வீடுகள் கட்டித் தர வேண்டும், மணப்பாறை, மருங்காபுரி தாலுகா பகுதியை பேரிடர் பாதித்த பகுதியாக அவிறிக்க வேண்டும், தரமான மின்கம்பங்கள் நட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விளக்கி கண்டன கோசங்கள் எழுப்பினர்.
    மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது என்று ஜி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். #gramakrishnan #parliamentelection #bjp #communistparty

    நாகர்கோவில்:

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரும் முன்னாள் மாநில செயலாளருமான ஜி.ராமகிருஷ்ணன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு, குறு தொழில்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட்டேலுக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மத்திய அரசு சிலை அமைத்துள்ளது. இதனை விளம்பர படுத்த ரூ.5 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளனர்.

    பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு காரணமாக மக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தலை மனதில் கொண்டு மத்திய அரசு நிறைவேற்ற முடியாத திட்டங்களை அறிவித்து வருகிறது.

    தமிழகத்தில் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டதாகவும், இதனால் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளதாகவும் தமிழக சட்டசபையில் அமைச்சரே தெரிவித்து உள்ளார். அந்த அளவுக்கு மத்திய அரசின் செயல்பாடு உள்ளது. திருப்பூரில் ஏற்றுமதி குறைந்துவிட்டது. தொழிற்சாலைகள் செயல்பட வில்லை.

    எனவே தான் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே நோக்குடன் கம்யூனிஸ்டு கட்சி செயல்படுகிறது.

    அடிமைகள் ஒருபோதும், தங்களை அடிமைகள் என்று ஒப்புக்கொள்வதில்லை. மத்திய அரசு தமிழகத்தில் நிறைவேற்ற துடிக்கும் மக்கள் விரோத திட்டங்களை இப்போதைய அரசு எதிர்ப்பதில்லை.

    அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை பலரும் ஊழல் வழக்கில் சிக்கி இருப்பதுதான் இதற்கு காரணமாகும். இந்த நிலை மாற வேண்டும். இப்போது லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்தும் சோதனையில் அதிகாரிகள் சிக்கியிருப்பது இதற்கு எடுத்து காட்டாகும்.

    தமிழகத்தில் பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் கூடுதல் வரிவிதிப்பை அரசு அமல்படுத்தி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத போது வரி விதிப்பை அமல் படுத்தியிருப்பது மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலம் இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. வி.ஐ.பி.க்களை தப்ப வைக்க இந்த நடவடிக்கையா என்று எண்ண தோன்றுகிறது.


    எனவே இந்த வழக்கின் விசாரணையை வெளிப்படையாக நடத்த வேண்டும். அப்போது தான் உண்மை வெளிவரும்.

    கேரளாவில் நடந்து வரும் சபரிமலை விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சி அரசியல் லாபம் தேட முயற்சிக்கிறது. சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அமல் படுத்தும் கேரள அரசை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள்.

    அரசியலுக்காக போராடும் இவர்கள் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு மனு தாக்கல் செய்யாதது ஏன்? என்பதை விளக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியும் இதே நிலைப்பாட்டுடன்தான் போராடுகிறார்கள்.

    குமரியில் ஓகி புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்க இதுவரை நிவாரணம் வழங்கவில்லை. இங்கு கொண்டுவரப்பட்ட தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும்.

    இம்மாவட்ட மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இம்மாத இறுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கை மாநாடு நடக்கிறது. டிசம்பர் மாதம் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியும் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நூர்முகம்மது, லீமா ரோஸ் ஆகியோர் உடன் இருந்தனர். #gramakrishnan #parliamentelection #bjp #communistparty

    இந்துக்களின் கலாசாரத்தை அழிக்கும் கம்யூனிஸ்டுகளின் கனவு பலிக்காது என்று கேரளாவில் நடைபெற்ற ஊர்வலத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார். #BJP #TamilisaiSoundararajan #Sabarimala
    திருவனந்தபுரம்:

    சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.

    பாரதிய ஜனதா மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பந்தளம் அரண்மனை முன்பு இருந்து கலெக்டர் அலுவலகம் வரை கண்டன ஊர்வலம் நடைபெற்றது. இதில் தேசிய செயலாளர் ஷோ தலைமை தாங்கினார்.

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    சபரிமலை ஆச்சாரத்தை மீறி இந்து பெண்கள் யாரும் செல்ல முயற்சிக்க மாட்டார்கள். கேரளாவில் உள்ள கம்யூனிஸ்டு அரசு இந்து விரோத அரசாக மாறி இந்துக்களின் கலாச்சாரத்தை சீரழிக்க முயற்சி செய்கிறது. அது கனவில் கூட நடக்காது.

    சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதை என்ன விலை கொடுத்தும் தடுப்போம். கேரளாவில் இந்த அரசு தான் கடைசி கம்யூனிஸ்டு அரசாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவனந்தபுரம் அருகே உள்ள கழக்கூட்டத்தில் நடைபெற்ற ஒரு பள்ளிக்கூட விழாவில் கேரள தேவசம்போர்டு மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் பங்கேற்றார். விழா முடிந்து அவர் காரில் சென்ற போது அங்கு கையில் கருப்பு கொடிகளுடன் வந்த பாரதிய ஜனதா கட்சியினர் அவரது காரை முற்றுகையிட்டனர். அவரை கண்டித்து கோ‌ஷங்களையும் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பாரதிய ஜனதாவினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டு மந்திரியை பாதுகாப்பாக போலீசார் அழைத்துச் சென்றனர். #BJP #TamilisaiSoundararajan #Sabarimala
    பூதலூர் அருகே வீடு கட்டும் திட்டத்தில் ரூ.2 கோடி ஊழல் நடந்தது குறித்து கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள், பெண்கள் என 50 பேர் கலந்து கொண்டனர்.

    இதில் பூதலூர் ஒன்றியம் வெண்டையம்பட்டி கிராமத்தில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறை கேடுகள் நடந்தது. இதே போல் தனிநபர் இல்ல கழிவறை, குடிநீர் உள்ளிட்ட திட்டங்களிலும் ஊழல் நடந்தது. சுமார் ரூ.2 கோடி வரை ஊழல் செய்துள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் கோ‌ஷமிட்டனர்.

    பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலை சந்தித்து புகார் மனு அளித்தனர். #tamilnews
    8 வழிச்சாலைக்கு எதிராக திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி 7 நாட்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நாளை நடைப்பயணத்தை தொடங்குகிறது.
    திருவண்ணாமலை:

    சென்னை-சேலத்திற்கு வெகு சீக்கிரமாக பயணிக்க ரூ.10 ஆயிரம் கோடியில் 8 வழி பசுமை விரைவு சாலை அமைக்கப்படுகிறது. இதற்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்டங்களில் விவசாய நிலங்கள், பாசன கிணறுகள், வனப்பகுதிகள், மலைகள் கையகப்படுத்தப்பட்டு அழிக்கப்படுகிறது.

    இத்திட்டத்திற்கு தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பசுமை சாலைக்காக தனது நிலத்தை பறிகொடுத்த விரக்தியில் செங்கத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் பூச்சி கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 8 வழிச்சாலைக்கு எதிராக ‘என் நிலம் என் உரிமை’ என்ற முழக்கத்துடன் நாளை திருவண்ணாமலையில் இருந்து சேலம் நோக்கி 7 நாட்கள் நடைப்பயணம் தொடங்குகிறது. திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் நாளை காலை 10 மணிக்கு நடைப்பயணம் தொடங்குகிறது.

    மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். அக்கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நடைப் பயணத்தை தொடங்கி வைக்கிறார். ஆயிரக்கணக்கான தொண்டர்கள், விவசாயிகள் கலந்துக் கொள்கின்றனர்.

    அண்ணாசிலையில் தொடங்கும் நடைப்பயணம் காமராஜர் சிலை வழியாக செங்கம் நோக்கி தொடங்குகிறது. செங்கம் சாலையில் உள்ள பாய்ச்சல், எறையூர் கிராமத்தில் விவசாயிகளை சந்திக்கின்றனர். முதல் நாள் பயணம் அங்கு முடிந்தவுடன் 2-வது நாளாக மண்மலை, செங்கத்தில் நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

    3-வது நாள் பள்ளிப்பட்டு, நீப்பந்துறையிலும், பின்னர் அங்கிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி சென்று சேலத்தில் 7-வது நாளில் நடைப்பயணம் நிறைவு பெறுகிறது. நடைப் பயணத்தின் போது, 8 வழி பசுமை சாலை திட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என 8 வழி சாலை எதிர்ப்பு கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளரான அழகேசன் கூறினார்.
    எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் மீதான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். அட்டவணை 9-ல் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

    அதன்படி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் மறியல் போராட்டத்துக்கு திரண்டு வந்தனர்.

    ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் இறங்கி இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பீம்ராவ் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவஅருள் பிரகாசம், தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து ஊர்வலமாக ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

    அவர்கள் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    திருத்தணியில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், தலித் மக்கள் முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. திருத்தணி ரெயில் நிலையம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 50 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர்.
    புகார் கொடுக்க வருபவர்களிடம் சுயபுராணம் பாடுவதாக போலீஸ் அதிகாரி மீது கம்யூனிஸ்டு கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் டவுன் போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக இருப்பவர், யார் புகார் கொடுக்க வந்தாலும் தனது சுய புராணத்தை பாடி வந்துள்ளார்.

    விசாரணைக்கு வருவோர், மனுதாரர்கள் என யார் வந்தாலும் தனது வருமானம், குழந்தைகளின் படிப்புச் செலவு போன்றவை பற்றி கூறி வந்தாராம்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு மனு கொடுக்கச் சென்றபோது அவர்களிடமும் இதே கதையை கூறியதோடு, ஆர்ப்பாட்டம், போராட்டம் என செல்லாமல் வாழும்படி தெரிவித்தாராம்.

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த வி‌ஷயத்தில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் தலையிட்டு புகார் கொடுக்க வருவோரிடம் போலீஸ் அதிகாரி சுயபுராணம் பாடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    ×