search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CM Edappadi palanisamy"

    ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூரில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் ரூ.10.73 கோடி மதிப்பீட்டில் 87 காவலர்களுக்கான குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் மற்றும் தா.பழூரில் தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் ரூ.10.73 கோடி மதிப்பீட்டில் 87 காவலர்களுக்கான குடியிருப்புகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி, மாவட்ட எஸ்.பி அபினவ் குமார் ஆகியோர் குத்து விளக்கேற்றி, பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான சாவிகளை வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கூறுகையில்,

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட காவலர்களுக்கான குடியிருப்புகள் பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரால், ஜெயங்கொண்டம் போலீஸ்நிலையத்திற்கு ரூ.9 கோடியே 91 லட்சம் மதிப்பீட்டில் 2 ஆய்வாளர்கள், 5 சார்பு ஆய்வளர்கள், 53 காவலர், தலைமைக் காவலர்களுக்கான குடியிருப்புகளையும், 6 அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்களுக்கான குடியிருப்புகளும் மற்றும் தா.பழூரில் ரூ.82 லட்சம் மதிப்பீட்டில் 1 சார்பு ஆய்வாளர், 20 காவலர், தலைமை காவலர்களுக்கான குடியிருப்புகளையும் என ரூ.10 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 87 காவலர்களுக்கான குடியிருப்புகளை திறந்து வைத்தார்கள்.

    இக்குடியிருப்புகளில் 1 வரவேற்பறை, 2 படுக்கறைகள், 1 சமையலறை, 1 கழிவறை மற்றும் தண்ணீர் வசதிகளுடன் மழைநீர் சேகரிக்கும் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் விஜயலெட்சுமி தெரிவித்தார்.

    அதன் பின்னர் குடியிருப்பு பகுதிக்கு முன்பாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இதனை தொடர்ந்து நான்கு ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து சிக்னலை தொடக்கி வைத்தார்.

    நிகழ்ச்சியின் போது ஏடிஎஸ்பி பெரியய்யா, ஆர்டிஓ. ஜோதி, டிஎஸ்பி கென்னடி, தாசில்தார் குமரய்யா மற்றும் காவலர்கள் மற்றும் மகளிர் காவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மகளிர் காவலர் கார்த்திகா நன்றி கூறினார்.
    சேலம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். #TNCM #EdappadiPalanisamy
    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் வந்தார்.

    பின்னர் ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் நங்கவள்ளியில் புதிய தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தை திறந்து வைத்தார். வனவாசியில் புதிய தொழில் நுட்ப கல்லூரி கொங்கணாபுரத்தில் புதிய போலீஸ் நிலையத்தையும் தொடங்கி வைத்தார்.

    இன்று (28-ந்தேதி) காலை சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சுற்றுலா மாளிகையில் சேலம் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார். ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்தும் விவரமாக கேட்டறிந்தார்.

    சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் இன்று மாலை 4 மணியளவில் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கழக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஆலோசனை வழங்குகிறார். இதையொட்டி அந்த பகுதியில் கொடி தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் முதல்வரை வரவேற்று ஏராளமான பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    ஆடிப்பண்டிகையையொட்டி சேலம் போஸ் மைதானத்தில் அரசு பொருட்காட்சி நடக்கிறது. நாளை மாலை நடைபெறும் அதன் தொடக்க விழாவில் பங்கேற்று எடப்பாடி பழனிசாமி அதனை தொடங்கி வைக்கிறார்.

    சேலம் மாநகரில் ரூ.4.16 கோடி செலவில் 9 இடங்களில் பசுமை வெளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதில் அம்மாபேட்டை அய்யாசாமி பூங்காவில் நடைபெறும் விழாவில் பங்கேற்று அனைத்து பூங்காக்களையும் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். இதையொட்டி சேலம் மாநகர் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #TNCM #EdappadiPalanisamy
    வனவாசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் வகுப்பறைகளை திறந்து வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலாமாண்டு பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார்.
    சேலம்:

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை சேலம் கமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தார்.

    பின்னர் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கழக வளர்ச்சி பணிகள் குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    தொடர்ந்து எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளியில் புதிதாக அமைக்கப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தை திறந்து வைத்தார்.

    வனவாசியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி மற்றும் வகுப்பறைகளை திறந்து வைத்த அவர் முதலாமாண்டு பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கையையும் தொடங்கி வைத்தார்.

    எடப்பாடி தொகுதிக்குட்ட பகுதிகளில் நடைபெற உள்ள அரசு விழாவில் ரூ.4.99 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், 1278 பயனாளிகளுக்கு 8.09 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

    கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் வெள்ளாளபுரம் தாய் திட்டம் 2-ன் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அம்மா பூங்கா, அம்மா உடற்பயிற்சி மையத்தையும் தொடங்கி வைக்கிறார்.

    கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் விழாவில் கொங்கணாபுரம் புதிய காவல் நிலையம் மற்றும் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகளில் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    முன்னதாக அவருக்கு சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ.தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பன்னீர் செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் செம்மலை, ஏ.பி.சக்திவேல், வெற்றிவேல், மனோண்மணி, சின்னதம்பி, மருதைமுத்து, சித்ரா, கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.கே.ராமச்சந்திரன், பொருளாளர் பங்க் வெங்கடாச்சலம், கூட்டுறவு வங்கி தலைவர் நேதாஜி, துரைராஜ், பெரியபுதூர் கண்ணன், முன்னாள் மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், தொழிற்சங்க செயலாளர் பாலகிருஷ்ணன், துணை தலைவர் ஜான்கென்னடி, முன்னாள் கவுன்சிலர் கிருபாகரன், புல்லட் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
    கருணாநிதி நலமுடன் இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் தெரிவித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNCM #EdappadiPalanisamy #DMK #Karunanidhi
    சேலம்:

    சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கமலாபுரம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகம் ஒவ்வொரு மாதத்திலும் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி முறைப்படுத்தும் குழு இரண்டும் அவ்வப்போது கூடி இதற்கு ஒரு முடிவு எடுப்பார்கள்.

    அந்த தீர்ப்பின் அடிப்படையில் நீர் நமக்கு மாதாந்திர அடிப்படையில் வழங்கப்படும்.

    கேள்வி:- உபரி நீர் கணக்கில் எடுக்கப்படுமா?

    பதில்:- உபரி நீரை அவர்கள் தேக்கி வைக்க முடியவில்லை. நாமும் தேக்கி வைக்க முடியவில்லை. அதை எப்படி கணக்கில் எடுக்க முடியும்.

    உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக தீர்ப்பு கொடுத்து இருக்கின்றது. ஒவ்வொரு மாதாந்திர அடிப்படையிலும் கொடுத்து இருக்கின்றது.

    இன்றைக்கு ஜூன் எவ்வளவு? ஜூலை எவ்வளவு? ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எவ்வளவு? என ஒவ்வொரு மாதத்திற்கும் எவ்வளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

    அதுமட்டுமல்ல, கர்நாடகப் பகுதியில் எந்தெந்த பகுதிகளில் மழை பொழிகின்றதோ அந்த மழையினுடைய அளவை கணக்கிட்டு நமக்கும், அவர்களுக்கும் விகித்தாச்சார முறைப்படி தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பிலே தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

    கே:-கல்வராயன்பேட்டையில் அணை உடைந்து 2 ஏக்கரில் தண்ணீர் புகுந்து இருக்கிறதே?

    ப:- அணை உடையவில்லை. ஏற்கனவே 6, 7 மாதமாக தண்ணீர் போகவில்லை. கால்வாயின் ஓரப்பகுதியில் துவாரம் இருந்தது. அந்த துவாரத்தின் வழியாக உடைப்பு ஏற்பட்டு இருக்கின்றது. உடைப்பை இப்போது சரி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று மாலைக்குள் உடைப்பு சரி செய்து முழுமையான தண்ணீர் அந்த கால்வாயில் வழங்கப்படும்.

    கே:- லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் உரம் கொண்டு போவதில் ஏதாவது தட்டுப்பாடு இருக்கிறதா?

    ப:- விவசாயிகளுக்கு தேவையான உரம் கொடுப்பதற்கு அரசிடம் கையிருப்பு இருக்கின்றது. ஆங்காங்கே விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு அனைத்து கிடங்கிலும் தேவையான உரம் வைக்கப்பட்டு இருக்கிறது.

    கே:- வட இந்தியாவில் இருந்து பருப்பு, புளி, பூண்டு வராததால் விலைவாசி உயர்ந்து கிட்டே இருக்கிறதே?

    ப:-லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதி உள்ளேன். லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் விவசாய பொருட்கள் தேங்கி உள்ளது.

    வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய முட்டைகள் கொண்டு செல்லப்படாமல் உள்ளது. வெளியூரில் இருந்து வரும் அத்தியாவசிய பொருட்கள் வர வேண்டி உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.


    கே:- துணை முதல்வரை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தது குறித்து...

    ப:- அது நடந்து முடிந்த பிரச்சனையை எழுப்ப வேண்டாம் என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    கே:- கருணாநிதி உடல் நலம் குறித்து...

    ப:- துணை முதல்- அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் மதிப்புக்குரிய மூத்த தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதை அறிந்து அவரை நேரடியாக சென்று உடல் நலம் விசாரித்தனர்.

    அவர் நன்றாக இருப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

    கே:- சொத்து வரி உயர்வுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகிறதே:-

    ப:-சொத்து வரி உயர்வு உயர் நீதிமன்ற தீர்ப்பு படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வாடகைதாரர்களுக்கு சொத்து வரி குறைக்கப்பட்டுள்ளது.

    கே:-துணை முதல்வருக்கும், உங்களுக்கும் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறேதே:-

    ப:- ஊடக துறையினர் ஏதாவது செய்தி கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறீர்கள். அது ஒரு போதும் நடக்காது, நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுகிறோம்.


    கே:-திருப்பூர் பகுதியில் கிருத்திகா என்ற பெண் சுக பிரசவத்திற்கு முயற்சித்த போது பரிதாபமாக இறந்தது குறித்து...

    ப:- தமிழகம் பரந்து விரிந்த மாநிலம், அங்கொன்று, இங்கொன்று என ஏதாவது சம்பவங்கள் நடந்து விடுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போலீசாரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கே:- டெங்குவை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

    ப:- இது கற்பனையான கேள்வி, நாம நல்லாதான் இருக்கோம். உடல் நல பாதிப்பு வந்தால் சிகிச்சை மேற்கொள்வோம். அது போல டெங்கு பரவினால் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பு உள்ளது.

    கே:- பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு உள்ளதே?

    ப:- எந்த சாலை திட்டத்திற்கும் எதிர்ப்பு உள்ளது. இது மிகப்பெரிய திட்டம், சிறந்த திட்டம், சேலத்திற்கு மட்டுமல்ல, நீங்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், திண்டுக்கல், மதுரை, கோவை ஈரோடு, திருப்பூர் வழியாக கேரளாவுக்கு செல்வதற்கும் இந்த சாலை உதவும். சாலை அமைப்பால் 60 கி.மீ.தூரம் குறையும் என்பதால் எரிபொருள் சேமிப்பு, சுற்றுச்சூழல், மாசுபாடு குறைகிறது.

    நில உரிமையாளர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கப்பட உள்ளது. அனைத்தும் தொழில் நுட்பம் நிறைந்த இந்த சாலை, எந்த வித விபத்தும் நடைபெறா வகையில் அமைக்கப்படுகிறது.

    அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். 95 சதவீதம் அளவீடு முடிந்துள்ளது. 5 சதவீதம் பாக்கி உள்ளது. இதற்கு 9 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    கே:- கடைமடை வரை புதிதாக தடுப்பு அணைகள் கட்டவில்லையே?

    ப:- மேட்டூரில் இருந்து காவிரியில் கடைமடை வரை செல்லும் நீர் வழிப் பாதை சமவெளி பகுதி. அணை கட்டினால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து விடும். குறிப்பாக குமாரபாளைம், பள்ளிபாளையம, பவானி, ஈரோடு பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

    ஆனாலும் எங்கெல்லாம் அணை கட்டி தண்ணீரை சேமிக்க முடியுமோ? அங்கெல்லாம் அணை கட்ட ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை காலங்களில் நதிகள், ஓடைகளில் வீணாகும் தண்ணீரை சேமிக்க ஆய்வு செய்யும் குழுவினர் 6 மாதத்தில் அறிக்கை தர உள்ளனர். அந்த அறிக்கையின்படி எந்த இடத்தில் அணை கட்ட வாய்ப்பு உள்ளதோ ? அந்த இடங்களில் அணை கட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNCM #EdappadiPalanisamy #DMK #Karunanidhi
    அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகையை 1.04.2018 முதல் உயர்த்தி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி கூறிப்பில் கூறி இருப்பதாவது:-

    அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகையை 1.04.2018 முதல் உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

    * உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்கள் தற்போது வழங்கப்படும் மாதாந்திர தொகையான ரூ.13 ஆயிரம் ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * முதுநிலைபட்ட மருத்துவம் படிக்கும் மாணவர்களில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.26 ஆயிரத்தில் இருந்து ரூ.37,500 ஆகவும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.27 ஆயிரத்தில் இருந்து ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    * முதுநிலை பட்டய படிப்பை படிக்கும் மருத்துவ மாணவர்களில் முதல் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.26 ஆயிரத்தில் இருந்து ரூ.37,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    * உயர் சிறப்பு மருத்துவ படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு முதல் ஆண்டில் இருந்து 6-ம் ஆண்டு வரையில் மாதம் தோறும் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இது முதல் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.40 ஆயிரமாகவும், 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு ரூ.43,500 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 3, 4, 5, 6-ம் ஆண்டு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.45 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும் மேற்படி ஊக்கத் தொகையுடன், உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 600 ரூபாய் உயர்த்தி வழங்கவும் மற்றும் அரசு மருத்துவரல்லாத முதுநிலை பட்டம்-பட்டயம் மற்றும் உயர் சிறப்பு மருத்துவம் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் 1000 ரூபாய் உயர்த்தி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனால் அரசுக்கு ஆண்டு தோறும் 44 கோடியே17 லட்சம் ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNCM #EdappadiPalanisamy
    பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 15 போலீசாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருவண்ணமலை கலசபாக்கம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த கிருஷ்ண மூர்த்தி, சந்தவாசலில் பணிபுரிந்த கணபதி, சாத்தனூர் அணையில் பணிபுரிந்த சந்திரன், திருக்காட்டுப் பள்ளியில் பணிபுரிந்த மதிவாணன், வேலாயுதம்பாளையத்தில் தலைமைக் காவலர் சிவசுப்பிரமணியன், வத்தராயிருப்பில் சிறப்பு உதவி ஆய்வாளர் காளிமுத்து, திருச்சியில் போக்குவரத்துபிரிவு, சிறப்பு உதவிஆய்வாளர் சீராளன், கீழச்சீவல்பட்டியில் தலைமைக் காவலர் அண்ணாதுரை, சென்னை பட்டினப்பாக்கத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு, ஆற்காட்டில் பெண் தலைமைக் காவலர் அருள்மொழி, மற்றும் வேட்டைக்காரனிருப்பில் உதவிஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள்.

    ஈரோடு மாவட்டம் சிறுவலூரில் தலைமை காவலராகப் பணிபுரிந்த மகேந்திரன், தூத்துக்குடி மாவட்டம், குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வு துறையில் அவில்தாராகப் பணிபுரிந்த முருகேஷ் ஸ்ரீகாந்த், ஆழ்வார்திருநகரில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த பால்ஐசக், சந்தவாசலில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்த தசரா ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 15 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #EdappadiPalanisamy
    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகிறார். #MetturDam #EdappadiPalanisamy
    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை காவிரி டெல்டா விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    ஆனால் நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பும், நீர்வரத்தும் திருப்திகரமாக இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலும், கேரளா வயநாடு பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் நீர் நிரம்பி உள்ளது. இதனால் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடியை எட்டியது.

    இதற்கிடையே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நாளை மறுநாள் (19-ந்தேதி) தண்ணீர் திறக்கப்படும் என நேற்று அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (18-ந் தேதி) மாலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் இரவு 7 மணி அளவில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வருகிறார். அவருக்கு மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் இரவில் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்குகிறார். இதையடுத்து நாளை மறுநாள் (19-ந் தேதி) காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் சென்று டெல்டா விவசாய பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார்.

    இவ்விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர், வருவாய் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி மேற்கு மண்டல ஐ.ஜி., சேலம் மாநகர் போலீஸ் கமி‌ஷனர், டி.ஐ.ஜி, துணை கமி‌ஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். #MetturDam #TNCM #EdappadiPalanisamy
    சாலை விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 19 போலீசார் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்சிராப்பள்ளி மாவட்டம், காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜான்சன் அலெக்ஸ்.

    நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மணிகண்டன்.

    புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த பார்த்திபன்.

    திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த செல்லபாண்டி.

    ஈரோடு மாவட்டம், வரப்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சாலமன் ஆகியோர் சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

    தேனி மாவட்டம், காவல் தொலைத் தொடர்பு பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த தர்மர்.

    சேலம் மாநகரம், வீராணம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த காமராஜ்.

    திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சந்திரகாந்த் ஆகியோர் மாரடைப்பால் காலமானார்கள்.

    திருநெல்வேலி மாவட்டம், களக்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜெய் சங்கர்.

    ஆலங்குளம் காவல் நிலைய நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த வனராஜ்.

    கிருஷ்ணகிரி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த தனபால்.

    நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முருகன்.

    மதுரை மாநகரம், கூடல் புதூர் காவல் நிலையத்தில் முதல்நிலை பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த பாண்டிமாதேவி.

    ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சேகர்.

    விருதுநகர் மாவட்டம், விருதுநகர் கிழக்கு காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணி புரிந்து வந்த முருகேச பாண்டி.

    காஞ்சிபுரம் மாவட்டம், நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கஜேந்திரன்.

    நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுந்தரம்.

    விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த சதீஷ்வரன்.

    சென்னை பெருநகரக் காவல், ஆயுதப்படை1, ‘ஈ’ நிறுமம், 23ம் அணியில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆனந்த் ஆகியோர் உடல்நலக் குறைவால் காலமானார்கள்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 19 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதல்- அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #TNCM #Edappadipalanisamy
    விருதுநகர் மணி மண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
    விருதுநகர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்த நாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான விருதுநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்குள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபம், காமராஜர் நினைவு இல்லம் போன்றவை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அரசு சார்பில் நடைபெறும் விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

    இதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 11 மணிக்கு விருதுநகர் வரும் அவருக்கு மாவட்ட எல்லையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.

    மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வரவேற்பு முடிந்ததும் காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்திற்கு செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு சார்பில் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, மா.பா.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், ராதாகிருஷ்ணன் எம்.பி. ஆகியோரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர்.

    அதன் பிறகு விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெறும் கல்வித்திருவிழாவிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். காமராஜர் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் அவர் 3 பள்ளிகளுக்கு கல்விச்சேவை விருதினையும், 4 மருத்துவ மாணவிகளுக்கு மருத்துவ சேவை விருதினையும் வழங்குகிறார்.

    முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், காந்தி பேரவை நிறுவனர் குமரி அனந்தன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

    விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் நிர்வாகி வசந்தகுமார் எம்.எல்.ஏ., நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

    மதியம் 2 மணிக்கு நடைபெறும் விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், பழனிவேல் தியாகராஜன், தங்கப்பாண்டியன், ஏ.ஆர்.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    விருதுநகர் காமராஜர் விழாவில் பங்கேற்க வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக மதுரை காளவாசலில் ரூ.55 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பால பூமிபூஜை, அ.தி.மு.க. மாநகர் மாவட்ட அலுவலக கட்டுமான பூமி பூஜை ஆகியவற்றிலும் பங்கேற்கிறார். #EdappadiPalanisamy #Kamarajar #KamarajarBirthDay
    கோவையில் பேரிடர் பயிற்சியின்போது உயிரிழந்த மாணவி லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டம், வெள்ளிமலைப்பட்டிணம் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் கல்லூரியில் பி.பி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்த, ஆலாந்துறை கிராமத்தைச் சேர்ந்த நல்லாக்கவுண்டர் என்பவரின் மகள் செல்வி லோகேஸ்வரி என்பவர் 12.7.2018 அன்று கல்லூரியில், பயிற்சியின் போது, ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்து, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த யோகேஸ்வரியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உரிய அனுமதி பெறாமல், கல்லூரி மாணாக்கர்களுக்கு முறையற்ற பயிற்சி அளித்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறை மற்றும் கல்லூரி கல்வி துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.


    எனது உத்தரவின் பேரில், காவல் துறையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டதில், முறையற்ற பயிற்சி வழங்கிய திரு. ஆறுமுகம் என்பவர் நேற்றிரவே கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் உயிரிழந்த செல்வி யோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூபாய் ஐந்து லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.  #CoimbatoreStudent #Logeshwari 
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீராமனுஜ மடத்தின் 50-வது ஜீயர் ஸ்ரீரங்க நாராயணன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50-வது ஜீயராக இருந்த ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் நேற்று (11-ந்தேதி) உடல்நலக் குறைவால் ஆசார்யன் திருவடியை அடைந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.

    ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள், கோயம்புத்தூர் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் அர்ச்சகராக தனது ஆன்மிகப் பணியை தொடங்கி, 60-வது வயதில் ஸ்ரீரங்கம் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் 50-வது ஜீயராக பொறுப்பேற்று, அரங்கனின் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கைங்கர்யங்களை செய்தவர்.

    ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் சுவாமிகளை இழந்து வாடும் ஸ்ரீ ராமானுஜ மடத்தின் சிஷ்ய கோடிகளுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஸ்ரீமத் ஸ்ரீரங்க நாராயண ஜீயரின் ஆன்மா ஆசார்யன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    ஊழல் அதிகம் புரளும் மாநிலம் தமிழ்நாடு என்ற அமித்ஷாவின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும் என்று திவாகரன் கூறியுள்ளார்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார்.

    தமிழகம், ஊழல் அதிகம் உள்ள மாநிலம் என்ற பா.ஜனதா தலைவர் அமித்ஷாவின் குற்றச்சாட்டு, பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுகிற கதையாக உள்ளது. ஊழலை கட்டுப்படுத்த வேண்டியது மத்திய அரசாகும்.

    அமித்ஷா மேடையில் பேசுவதைப்போல ஊழலை கட்டுப்படுத்தவும் முன்வர வேண்டும். கர்நாடக சட்டசபை தேர்தலின்போது, இந்தியாவிலேயே கர்நாடகத்தில் தான் ஊழல் அதிகம் என்றனர். தற்போது தேர்தலுக்காக தமிழகத்தில் தான் ஊழல் அதிகம் என்கின்றனர்.


    நாட்டை ஆளும் தேசிய கட்சியின் தலைவர் தமிழகத்துக்கு வந்து இப்படி ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் பதிலளிக்க வேண்டும்.

    ஒரு நாடு ஒரே தேர்தலை அண்ணா திராவிடர் கழகம் எதிர்க்கிறது. 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்க காரணம், ஏற்கனவே கொடுத்த நிலங்களுக்கான தொகை அப்பகுதி மக்களிடம் சென்றடையவில்லை.

    மீன்களில் ரசாயனம் கலந்தது எப்படி? என்பது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களிலும் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் இதற்கு முன்னுரிமை வழங்கி, தனது நேரடி கண்காணிப்பில் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பெரும்பாலான அமைச்சர்கள் தொண்டர்கள் மத்தியில் அம்மா என்றும், தங்களுக்குள் பேசும்போது ஜெயலலிதா என்றும் பேசி ஜெயலலிதாவை அவமரியாதை செய்து வருகின்றனர்.

    முட்டையில் ஊழல் செய்துள்ள வளர்மதி பற்றி பேசும் தினகரன் தான், வளர்மதிக்கு அந்த பதவியை பெற்று தந்தார். பாடநூல் கழக தலைவராக வளர்மதியை கொண்டு வந்தவர் தினகரன் தான்.

    அண்ணா திராவிடர் கழகத்தில், புதிய முகங்களுக்கும், இளைஞர்களுக்கும், அரசியல் கட்சிகளால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #AmitShah #EdappadiPalanisamy #Divakaran
    ×