search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem visit"

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை சேலம் வருகிறார். #MetturDam #EdappadiPalanisamy
    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந்தேதி வரை காவிரி டெல்டா விவசாய பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    ஆனால் நடப்பாண்டில் மேட்டூர் அணையின் நீர் இருப்பும், நீர்வரத்தும் திருப்திகரமாக இல்லாததால் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்திலும், கேரளா வயநாடு பகுதிகளிலும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் நீர் நிரம்பி உள்ளது. இதனால் உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதனால் மேட்டூர் அணைக்கு 1 லட்சத்து 7 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 96 அடியை எட்டியது.

    இதற்கிடையே முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து நாளை மறுநாள் (19-ந்தேதி) தண்ணீர் திறக்கப்படும் என நேற்று அறிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகிறார்கள்.

    மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (18-ந் தேதி) மாலை சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் வருகிறார்.

    பின்னர் அங்கிருந்து கார் மூலம் இரவு 7 மணி அளவில் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வருகிறார். அவருக்கு மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

    பின்னர் இரவில் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் தங்குகிறார். இதையடுத்து நாளை மறுநாள் (19-ந் தேதி) காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் சென்று டெல்டா விவசாய பாசனத்துக்காக அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடுகிறார்.

    இவ்விழாவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கலெக்டர், வருவாய் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி மேற்கு மண்டல ஐ.ஜி., சேலம் மாநகர் போலீஸ் கமி‌ஷனர், டி.ஐ.ஜி, துணை கமி‌ஷனர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோர் தலைமையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். #MetturDam #TNCM #EdappadiPalanisamy
    ×