search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் நாளை நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு
    X

    விருதுநகரில் நாளை நடைபெறும் காமராஜர் பிறந்தநாள் விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்பு

    விருதுநகர் மணி மண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
    விருதுநகர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்த நாள் விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) அரசு சார்பிலும், பல்வேறு அமைப்புகள் சார்பிலும் விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பிறந்த ஊரான விருதுநகர் விழாக்கோலம் பூண்டுள்ளது. அங்குள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபம், காமராஜர் நினைவு இல்லம் போன்றவை மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

    விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அரசு சார்பில் நடைபெறும் விழாவில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார்.

    இதற்காக நாளை (ஞாயிற்றுக்கிழமை) பகல் 11 மணிக்கு விருதுநகர் வரும் அவருக்கு மாவட்ட எல்லையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு கொடுக்கின்றனர்.

    மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    வரவேற்பு முடிந்ததும் காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்திற்கு செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு சார்பில் அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

    அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திரபாலாஜி, மா.பா.பாண்டியராஜன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், ராதாகிருஷ்ணன் எம்.பி. ஆகியோரும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கின்றனர்.

    அதன் பிறகு விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடைபெறும் கல்வித்திருவிழாவிலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கிறார். காமராஜர் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தும் அவர் 3 பள்ளிகளுக்கு கல்விச்சேவை விருதினையும், 4 மருத்துவ மாணவிகளுக்கு மருத்துவ சேவை விருதினையும் வழங்குகிறார்.

    முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், காந்தி பேரவை நிறுவனர் குமரி அனந்தன், தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்.

    விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் நிர்வாகி வசந்தகுமார் எம்.எல்.ஏ., நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் மற்றும் பலர் பங்கேற்கின்றனர்.

    மதியம் 2 மணிக்கு நடைபெறும் விழாவில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், பழனிவேல் தியாகராஜன், தங்கப்பாண்டியன், ஏ.ஆர்.சீனிவாசன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    விருதுநகர் காமராஜர் விழாவில் பங்கேற்க வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னதாக மதுரை காளவாசலில் ரூ.55 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள உயர்மட்ட மேம்பால பூமிபூஜை, அ.தி.மு.க. மாநகர் மாவட்ட அலுவலக கட்டுமான பூமி பூஜை ஆகியவற்றிலும் பங்கேற்கிறார். #EdappadiPalanisamy #Kamarajar #KamarajarBirthDay
    Next Story
    ×