search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamalapuram airport"

    கருணாநிதி நலமுடன் இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் தெரிவித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். #TNCM #EdappadiPalanisamy #DMK #Karunanidhi
    சேலம்:

    சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கமலாபுரம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகம் ஒவ்வொரு மாதத்திலும் எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி முறைப்படுத்தும் குழு இரண்டும் அவ்வப்போது கூடி இதற்கு ஒரு முடிவு எடுப்பார்கள்.

    அந்த தீர்ப்பின் அடிப்படையில் நீர் நமக்கு மாதாந்திர அடிப்படையில் வழங்கப்படும்.

    கேள்வி:- உபரி நீர் கணக்கில் எடுக்கப்படுமா?

    பதில்:- உபரி நீரை அவர்கள் தேக்கி வைக்க முடியவில்லை. நாமும் தேக்கி வைக்க முடியவில்லை. அதை எப்படி கணக்கில் எடுக்க முடியும்.

    உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவாக தீர்ப்பு கொடுத்து இருக்கின்றது. ஒவ்வொரு மாதாந்திர அடிப்படையிலும் கொடுத்து இருக்கின்றது.

    இன்றைக்கு ஜூன் எவ்வளவு? ஜூலை எவ்வளவு? ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எவ்வளவு? என ஒவ்வொரு மாதத்திற்கும் எவ்வளவு தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

    அதுமட்டுமல்ல, கர்நாடகப் பகுதியில் எந்தெந்த பகுதிகளில் மழை பொழிகின்றதோ அந்த மழையினுடைய அளவை கணக்கிட்டு நமக்கும், அவர்களுக்கும் விகித்தாச்சார முறைப்படி தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பிலே தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

    கே:-கல்வராயன்பேட்டையில் அணை உடைந்து 2 ஏக்கரில் தண்ணீர் புகுந்து இருக்கிறதே?

    ப:- அணை உடையவில்லை. ஏற்கனவே 6, 7 மாதமாக தண்ணீர் போகவில்லை. கால்வாயின் ஓரப்பகுதியில் துவாரம் இருந்தது. அந்த துவாரத்தின் வழியாக உடைப்பு ஏற்பட்டு இருக்கின்றது. உடைப்பை இப்போது சரி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று மாலைக்குள் உடைப்பு சரி செய்து முழுமையான தண்ணீர் அந்த கால்வாயில் வழங்கப்படும்.

    கே:- லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் உரம் கொண்டு போவதில் ஏதாவது தட்டுப்பாடு இருக்கிறதா?

    ப:- விவசாயிகளுக்கு தேவையான உரம் கொடுப்பதற்கு அரசிடம் கையிருப்பு இருக்கின்றது. ஆங்காங்கே விவசாயிகளுக்கு உரம் வழங்குவதற்கு அனைத்து கிடங்கிலும் தேவையான உரம் வைக்கப்பட்டு இருக்கிறது.

    கே:- வட இந்தியாவில் இருந்து பருப்பு, புளி, பூண்டு வராததால் விலைவாசி உயர்ந்து கிட்டே இருக்கிறதே?

    ப:-லாரி உரிமையாளர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கடிதம் எழுதி உள்ளேன். லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் விவசாய பொருட்கள் தேங்கி உள்ளது.

    வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய முட்டைகள் கொண்டு செல்லப்படாமல் உள்ளது. வெளியூரில் இருந்து வரும் அத்தியாவசிய பொருட்கள் வர வேண்டி உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் மத்திய மந்திரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.


    கே:- துணை முதல்வரை நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தது குறித்து...

    ப:- அது நடந்து முடிந்த பிரச்சனையை எழுப்ப வேண்டாம் என்பதை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

    கே:- கருணாநிதி உடல் நலம் குறித்து...

    ப:- துணை முதல்- அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் மதிப்புக்குரிய மூத்த தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருவதை அறிந்து அவரை நேரடியாக சென்று உடல் நலம் விசாரித்தனர்.

    அவர் நன்றாக இருப்பதாக அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.

    கே:- சொத்து வரி உயர்வுக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகிறதே:-

    ப:-சொத்து வரி உயர்வு உயர் நீதிமன்ற தீர்ப்பு படி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது வாடகைதாரர்களுக்கு சொத்து வரி குறைக்கப்பட்டுள்ளது.

    கே:-துணை முதல்வருக்கும், உங்களுக்கும் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறேதே:-

    ப:- ஊடக துறையினர் ஏதாவது செய்தி கிடைக்குமா? என்று எதிர்பார்க்கிறீர்கள். அது ஒரு போதும் நடக்காது, நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இணைந்து செயல்படுகிறோம்.


    கே:-திருப்பூர் பகுதியில் கிருத்திகா என்ற பெண் சுக பிரசவத்திற்கு முயற்சித்த போது பரிதாபமாக இறந்தது குறித்து...

    ப:- தமிழகம் பரந்து விரிந்த மாநிலம், அங்கொன்று, இங்கொன்று என ஏதாவது சம்பவங்கள் நடந்து விடுகிறது. இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. போலீசாரையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    கே:- டெங்குவை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

    ப:- இது கற்பனையான கேள்வி, நாம நல்லாதான் இருக்கோம். உடல் நல பாதிப்பு வந்தால் சிகிச்சை மேற்கொள்வோம். அது போல டெங்கு பரவினால் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கு தேவையான அனைத்து மருந்துகளும் இருப்பு உள்ளது.

    கே:- பசுமை வழி சாலைக்கு எதிர்ப்பு உள்ளதே?

    ப:- எந்த சாலை திட்டத்திற்கும் எதிர்ப்பு உள்ளது. இது மிகப்பெரிய திட்டம், சிறந்த திட்டம், சேலத்திற்கு மட்டுமல்ல, நீங்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், திண்டுக்கல், மதுரை, கோவை ஈரோடு, திருப்பூர் வழியாக கேரளாவுக்கு செல்வதற்கும் இந்த சாலை உதவும். சாலை அமைப்பால் 60 கி.மீ.தூரம் குறையும் என்பதால் எரிபொருள் சேமிப்பு, சுற்றுச்சூழல், மாசுபாடு குறைகிறது.

    நில உரிமையாளர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்கப்பட உள்ளது. அனைத்தும் தொழில் நுட்பம் நிறைந்த இந்த சாலை, எந்த வித விபத்தும் நடைபெறா வகையில் அமைக்கப்படுகிறது.

    அனைவரும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். 95 சதவீதம் அளவீடு முடிந்துள்ளது. 5 சதவீதம் பாக்கி உள்ளது. இதற்கு 9 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

    கே:- கடைமடை வரை புதிதாக தடுப்பு அணைகள் கட்டவில்லையே?

    ப:- மேட்டூரில் இருந்து காவிரியில் கடைமடை வரை செல்லும் நீர் வழிப் பாதை சமவெளி பகுதி. அணை கட்டினால் ஊருக்குள் வெள்ளம் புகுந்து விடும். குறிப்பாக குமாரபாளைம், பள்ளிபாளையம, பவானி, ஈரோடு பகுதிகளில் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது.

    ஆனாலும் எங்கெல்லாம் அணை கட்டி தண்ணீரை சேமிக்க முடியுமோ? அங்கெல்லாம் அணை கட்ட ஆய்வு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழை காலங்களில் நதிகள், ஓடைகளில் வீணாகும் தண்ணீரை சேமிக்க ஆய்வு செய்யும் குழுவினர் 6 மாதத்தில் அறிக்கை தர உள்ளனர். அந்த அறிக்கையின்படி எந்த இடத்தில் அணை கட்ட வாய்ப்பு உள்ளதோ ? அந்த இடங்களில் அணை கட்டப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNCM #EdappadiPalanisamy #DMK #Karunanidhi
    ×