search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "civilians"

    ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் 10 பேரை பாதுகாப்பு படையினர் விடுவித்தனர்.
    குந்தூஸ்:

    ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றனர்.  தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், குந்தூஸ் மாகாணம், சகர் தாரா மாவட்டத்தில் தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் தலிபான்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தங்கள் இடங்களை காலி செய்துவிட்டு தலிபான்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து மேலும் முன்னேறிய ராணுவம் அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

    அவ்வகையில், அக் சரே கிராமத்தில் உள்ள தலிபான்கள் பாதுகாப்பு அரண்களை பாதுகாப்பு படையினர் தகர்த்தனர். தலிபான்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் அங்கு நேற்று தேடுதல் வேட்டை நடத்தியபோது, தலிபான்களின் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 பொதுமக்களை விடுவித்தனர்.

    அவர்கள் பத்திரமாக ராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 
    அரசு பள்ளி மாணவர்களுக்கு, பொதுமக்கள் நிவாரண பொருட்களை வழங்கினர்.
    அன்னவாசல்:

    கஜா புயலினால் தஞ்சை, நாகை, திருவாரூர் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட கிராம நகர்புற பகுதிகளுக்கு தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் அமைப்புகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை ஆசிரியர்கள் மற்றும் கரூர் குளத்துப்பாளையம் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களால் சேரிக்கப்பட்ட 100 கிலோ அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, சீனி, சோப்பு, எண்ணெய், சேமியா, பிஸ்கட், பவுடர் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்டவைகளை நிவாரணமாக உருவம்பட்டி கிராம மக்களுக்கு வழங்கியுள்ளனர்.

    அதனை மகிழ்வோடு பெற்று கொண்ட கிராம மக்கள் இந்த நிவாரண பொருட்களை கிராமத்தில் உள்ள அத்தனை குடும்பத்துக்கும் வழங்க இயலாது என்பதால் அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கினர். பள்ளி மாணவர்களுக்கு தினமும் பிஸ்கட் வழங்கும் படியும், சமையல் பொருட்களை வைத்து பள்ளி நாட்களில் சமைத்து வழங்கும் படியும் கேட்டுக்கொண்டனர்.

    அதனை பெற்றுக்கொண்ட பள்ளி தலைமையாசிரியர் சாந்தி கூறியதாவது:-

    கஜாபுயலினால் உருவம்பட்டி கிராம மக்கள் பாதிக்கப்பட்டு இருந்தாலும் தங்களுக்கு வந்த நிவாரண பொருட் களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய செயலை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. வந்திருந்த பொருட்களில் சோப்பு, பிஸ்கட், ஷாம்பு, சீயக்காய், பற்பசை ஆகியவற்றை மாணவர்களுக்கு வழங்கியுள்ளோம். மீதி உள்ள மளிகை பொருட்களை வைத்து மாணவர்களுக்கு சமைத்து வழங்கு முடிவெடுத்துள்ளோம் என்றார். பொதுமக்களும் மாணவர்களுக்கு உணவு தயாரிக்க எங்களை அழையுங்கள். நாங்கள் வந்து குழந்தைகளுக்கு சமைத்து தருகிறோம் என மகிழ்வோடு கூறி சென்றனர். இதில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கருப்பையா மற்றும் கிராம நிர்வாகிகள் முத்தன், முருகேசன், பால்கண்ணு, பழனிவேலு மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் முனியசாமி செய்திருந்தார்.
    திருவோணம், திருத்துறைப்பூண்டியில் அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர். #GajaCyclone
    திருவோணம்:

    கஜா புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டகங்கள் அதிக சேதத்தை சந்தித்துள்ளது. மேலும் கஜா புயல் வந்து சென்று 4 நாட்கள் ஆன நிலையிலும் பெரும்பாலான பகுதிகளில் அடிப்படை வசதியே இல்லாமல் மக்கள் இருந்து வருகின்றனர்.

    சேதமான இடங்களில் அதிகாரிகள் வந்து பார்வையிடுவது இல்லை. சேதமான பகுதிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று டெல்டா பகுதி மக்களிடையே கடும் குற்றச்சாட்டுகள் உள்ளது.

    இதனால் பல்வேறு பகுதிகளில் மக்கள் முற்றுகையிட்டும், சாலைமறியலில் ஈடுபட்டும் வருகின்றனர். அரசு சார்பில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

    இந்த நிலையில் திருவோணம் பகுதியில் புயல் காரணமாக அதிக அளவில் வாழை, தென்னை, சவுக்கு, தேக்கு மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் என்று பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது 4 நாட்கள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கவில்லை என்று மக்கள் கூறிவருகின்றனர்.

    மின் இணைப்பு இல்லாமலும், குடிநீர் வசதி இல்லாமலும், உணவு கூட இல்லாமலும் இருந்து வருகிறோம் என்று பொதுமக்கள் வேதனையுடன் கூறிவருகின்றனர். திருவோணம் மற்றும் கரியா விடுதி, வெட்டுவாக்கோட்டை, ஊரணிபுரம், பணிகொண்டான் விடுதி, காடுவெட்டி விடுதி, காவாளிப்பட்டி, கட்டுவான்பிறை, நெய்வேலி உள்ளிட்ட சுற்று புறங்களில் ஏற்பட்ட சேதத்தை இதுவரை எந்த அதிகாரிகளும் வந்து பார்வையிடவில்லை என்ற கோபத்திலும் மக்கள் இருந்து வருகின்றனர்.

    ஒரத்தநாடு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் இங்கு வந்து பார்வையிட்டால் தான் நாங்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது தெரியவரும் ஆனால் இது வரை எந்த அதிகாரிகளும் வரவில்லை என்பதை கண்டித்து இன்று ஊரணிபுரம் கடை வீதியில் மக்கள் திடீரென திரண்டு வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் இது குறித்து அவர்கள் கூறும் போது, அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.

    இதே போன்று அருகே திருவோணம் அருகே உள்ள நம்பிவயல், மூனுமாங்கொல்லை ஆகிய பகுதிகளிலும் அதிகாரிகள் வந்து பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் இன்று மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதே போல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியிலும் நிவாரண உதவிகள் வழங்காததை கண்டித்தும் பொதுமக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.நிவாரண உதவிகள் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததின் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். #GajaCyclone
    சிரியாவில் ராட்சத சவ குழியில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. #Syria
    டமாஸ்கஸ்:

    சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் அதிபர் பஷார் அல் ஆசாத் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.

    இந்த உள்நாட்டுப்போரை பயன்படுத்தி அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் கால் பதித்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர்.  அவர்களின் தலைநகராக ராக்கா நகரம் விளங்கியது.



    அந்த நகரத்தை ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கு கடும்போர் நடந்தது. இந்தப் போரில் அதிபர் ஆதரவு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க கூட்டுப்படைகள் வான்தாக்குதல் நடத்தின. அவ்வாறு நடத்தப்பட்ட வான் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இது சர்வதேச அளவில் கண்டனங்களுக்கு வழிவகுத்தது.

    இந்த நிலையில் அந்த நகரத்தில் ராட்சத சவ குழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 1,500 அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    இவர்கள் அனைவரும் அமெரிக்க கூட்டுப்படையின் வான்தாக்குதலில் பலியானவர்கள் என தகவல்கள் கூறுகின்றன. இதுவரை அங்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், வான்தாக்குதல்கள் காரணமாக ராக்கா நகரின் 85 சதவீத பகுதி அழிக்கப்பட்டு விட்டதாகவும் மற்றொரு தகவல் கூறுகிறது. #Syria #DeadBody
    கந்திகுப்பத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர்.
    பர்கூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கந்திகுப்பத்தில் அம்பேத்கர்நகர் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் சுற்றி திரிகின்றன. இந்த நிலையில் நேற்று ஒரு குரங்கு அங்குள்ள மரத்தில் அங்கும், இங்குமாக தாவி விளையாடி கொண்டிருந்தது. அப்போது அருகில் சென்ற மின்சார கம்பி மீது குரங்கு தாவியது.

    அந்த நேரம் குரங்கை மின்சாரம் தாக்கியது. இதில் உடல் கருகிய அந்த குரங்கு பரிதாபமாக செத்தது. மேலும் அதன் உடல் மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்தது. இறந்த குரங்கை பார்த்து அங்கிருந்த மற்ற குரங்குகள் கத்தியது. இந்த சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு சென்று பார்த்தனர். பின்னர் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்தனர்.

    அதன்பின்னர் மின்கம்பியில் தொங்கி கொண்டிருந்த குரங்கு உடலை மீட்டு கீழே கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து அந்த குரங்குக்கு இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்ய பொதுமக்கள் முடிவு செய்தனர்.

    அதன்படி குரங்கின் உடலுக்கு மஞ்சள், குங்குமம் தடவி, மாலை அணிவித்து, கற்பூரம் காண்பித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாடையில் குரங்கு உடலை வைத்து தாரை, தப்பட்டையுடன் ஊர்வலமாக சென்று அப்பகுதியில் உள்ள ஆற்றங்கரையோரத்தில் பொதுமக்கள் அடக்கம் செய்தனர். 
    அதியமான்கோட்டை-ஓசூர் இடையே 4 வழி சாலை அமைக்கும் பணிக்கு நிலங்களை கொடுக்க மாட்டோம் என்று கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள், பொதுமக்கள் மனு அளித்தனர்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் இருந்து ஓசூர்வரை 4 வழி சாலை அமைப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இந்த சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த பணிக்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் குறித்த உத்தேச விவரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் சாலை அமைக்கும் பணிக்காக கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    இந்த நிலையில் அகில இந்திய விவசாயிகள் மகாசபையின் தர்மபுரி மாவட்ட தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் விவசாயிகள், பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அதியமான்கோட்டை முதல் ஓசூர் வரை 4 வழி சாலை அமைக்கும் பணிக்காக 220 அடிக்கும் கூடுதலாக விவசாய நிலங்களில் அறிவிப்பு வருவதற்கு முன்பே முட்டுக்கற்களை நட்டுவிட்டனர். 8 வழி சாலையை விட கூடுதலாக நிலம் கையகப்படுத்த கற்களை நட்டுள்ளனர். ஓசூர்-தர்மபுரி இடையே உள்ள பகுதியில் ஜக்கசமுத்திரம் ஏரி, ஜெர்தலாவ் ஏரி, பி.கொல்லஅள்ளி ஏரி, செம்மணஅள்ளி ஏரி, பி.செட்டிஅள்ளி ஏரி, ஜெர்தலாவ் ஏரி, பாப்பிநாயக்கனஅள்ளி ஏரி உள்பட 9 ஏரிகள் வழியாக இந்த 4 வழி சாலையை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புக்குள்ளாகின்றன.

    இதுதவிர வனப்பகுதிகளும் லட்சக்கணக்கான மரங்களும் வெட்டப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த சாலை அமைக்கும் பணிக்கு பாலக்கோடு, கர்த்தாரப்பட்டி, குண்டுக்கல், சோமனஅள்ளி, புலிகரை, இருதயபுரம், செல்லியம்பட்டி, கொல்லப்பட்டி, கடகத்தூர், பூசாரிப்பட்டி, சோகத்தூர், வெண்ணாம்பட்டி மேட்டுத்தெரு உள்ளிட்ட 13 பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பொதுமக்கள் 4 வழி சாலை அமைக்கும் பணிக்கு நிலம் கொடுக்கமாட்டோம். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்து உள்ளனர்.
    ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவர் தொடங்கி வைத்த அம்மா உணவகங்கள் மிகவும் துடிப்போடு செயல்பட்டது. ஆனால் இன்றோ ஆதரவற்ற நிலையில் இருக்கிறது. அரசு நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #AmmaHotel
    சென்னை:

    அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந்தேதி அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, மலிவு விலை உணவகம் என்ற அம்மா உணவகத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னையில் சாந்தோம் நெடுஞ்சாலையில் முதல் அம்மா உணவகத்தை முதல்- அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து சென்னையில் 200 வார்டுகளிலும் தலா ஒரு அம்மா உணவகங்கள் திறந்து வைக்கப்பட்டன. காலையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லியும், ரூ.3-க்கு பொங்கலும் விற்பனை செய்யப்படுகின்றது.

    அதேபோல், மதியம் சாம்பார் சாதம் ரூ.5, கலவை சாதம் ரூ.5, தயிர் சாதம் ரூ.3-க்கும், மாலையில் 2 சப்பாத்தி ரூ.3-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

    மலிவு விலையில் ஏழை- எளிய மக்களின் பசியை போக்கியது மட்டுமில்லாமல், பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பினையும் அம்மா உணவகம் பெற்றது. சென்னையில் மட்டும் 407 அம்மா உணவகங்களும், இதர பகுதிகளில் 247 என மொத்தம் 654 அம்மா உணவகங்கள் தமிழகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றன.

    ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் குறித்த செய்தியை அறிந்து, எகிப்து நாட்டை சேர்ந்த பிரதிநிதிகளும், குஜராத், டெல்லி, ராஜஸ்தான், கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதி நிதிகளும் வந்து பார்த்து விட்டு வியந்து சென்றனர். அ.தி.மு.க.வின் மகத்தான சாதனைகளில் ஒன்றாக அம்மா உணவகம் பேசப்பட்டது.

    அந்த அளவுக்கு நேர்த்தியாக, மலிவு விலையில் தரமான-சுவையான உணவு வழங்கி துடிப்போடு செயல்பட்டு வந்த இந்த அம்மா உணவகங்கள், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆதரவற்ற நிலையை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. அவர் உயிரோடு இருக்கும்போது, அந்தந்த துறையை சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் தீவிரமாக கவனம் செலுத்தி வந்தனர்.

    ஆனால் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அம்மா உணவகங்களை கண்டுகொள்ள ஆட்கள் இல்லாதது போல் போய்விட்டது. தரமான, சுவையான உணவுகள் என்று இருந்த நிலை மாறி, சுவை குறைவு, தரமில்லாமை என்ற குற்றச்சாட்டுக்கு தற்போது ஆளாகி, விற்பனை சரிந்து பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. முறையாக நிர்வகிக் கும் திறன் இல்லாததே, அம்மா உணவகம் பொலிவு இழந்ததற்கான காரணம் என்று அந்த துறையை சேர்ந்த அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.

    இது ஒரு புறம் இருக்க அங்கு பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் சிலர் பல்வேறு ஊழல்களில் ஈடுபடுவதாக புகார்களும் வருகின்றன. மேலும், அம்மா உணவகங்களில் தயாராகும் இட்லியை அங்குள்ள அதிகாரிகளும், ஊழியர்களும் ஓட்டல்களுக்கு விற்பனை செய்வதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

    இதுதொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தாலும் உரிய நடவடிக்கை இல்லை என்றும், அவ்வப்போது நடவடிக்கை எடுத்தாலும், அது வெறும் கண்துடைப்பாகவே இருப்பதாகவும் அம்மா உணவக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அம்மா உணவகம் முதலில் இருந்த பெருமையை இழந்துவிட்டது. மீண்டும் பழைய பெருமையை தக்க வைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். கூடுதலாக அம்மா உணவகங்களில் எந்த மாதிரியான உணவு வகைகளை சேர்க்கலாம்?, அம்மா உணவகங்களுக்கு பொதுமக்கள் வருகையை எப்படி அதிகப்படுத்துவது? போன்ற பல்வேறு கருத்துகளை அதிகாரிகள், ஊழியர்கள் தரப்பில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தெரிவித்து இருக்கிறார்கள்.

    அதை நாங்கள் பரிசீலித்து அரசுக்கு அனுப்பி இருக்கிறோம். இதுவரை அம்மா உணவகம் தட்டு தடுமாறி செயல்பட்டு வருகிறது. எப்போது நிற்கும்? என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு நிலைமை இருக்கிறது. எங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பாலான நிதி அம்மா உணவகத்துக்கே ஒதுக்கப்படுவதால் மற்ற பணிகளில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஜெயலலிதா வழியில் இந்த ஆட்சி நடக்கிறது என்று அமைச்சர்கள் கூறினாலும், ஜெயலலிதா தொடங்கி, தமிழ்நாடு மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த அம்மா உணவகம் தற்போது ஆதரவற்ற நிலையில் இருப்பதை அவர்கள் பார்த்துக்கொண்டு இருப்பது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் பலரும் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

    மொத்தத்தில் அம்மா உணவகத்தை மாநகராட்சி நிர்வகித்து வந்தாலும், அரசு இதில் முழுகவனம் செலுத்தி, அவர்களுடன் கைகோர்த்து நடவடிக்கை எடுத்து, அம்மா உணவகத்தின் தனித்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. #AmmaHotel 
    ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் பயங்கரவாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #Baghdadblast
    பாக்தாத்:

    ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாத்தின் சதர் நகரில் நேற்று மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயங்கரவாதிகள் இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், இந்த வெடி குண்டு தாக்குதல் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே சதர் நகரில் உள்ள வெடி மருந்து கிடங்கு இன்று வெடித்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. #Baghdadblast
    ×