search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலிபான்களின் ஜெயிலில் இருந்து பொதுமக்கள் 10 பேரை விடுவித்தது ராணுவம்
    X

    தலிபான்களின் ஜெயிலில் இருந்து பொதுமக்கள் 10 பேரை விடுவித்தது ராணுவம்

    ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் 10 பேரை பாதுகாப்பு படையினர் விடுவித்தனர்.
    குந்தூஸ்:

    ஆப்கானிஸ்தானில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கரவாதிகள், அரசுப் படைகளுக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு படைகளுக்கு உளவு பார்ப்பதாக கூறி பொதுமக்களையும் சிறைப்பிடித்து துன்புறுத்துகின்றனர்.  தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை மீட்க ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்நிலையில், குந்தூஸ் மாகாணம், சகர் தாரா மாவட்டத்தில் தலிபான்கள் வசம் உள்ள பகுதிகளை ராணுவம் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியது. இதில் தலிபான்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. தங்கள் இடங்களை காலி செய்துவிட்டு தலிபான்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து மேலும் முன்னேறிய ராணுவம் அனைத்து பகுதிகளிலும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

    அவ்வகையில், அக் சரே கிராமத்தில் உள்ள தலிபான்கள் பாதுகாப்பு அரண்களை பாதுகாப்பு படையினர் தகர்த்தனர். தலிபான்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் அங்கு நேற்று தேடுதல் வேட்டை நடத்தியபோது, தலிபான்களின் சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 10 பொதுமக்களை விடுவித்தனர்.

    அவர்கள் பத்திரமாக ராணுவ முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்களின் குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. 
    Next Story
    ×