search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Corporation"

    • வடசென்னையில் 14 இடங்களும், தென்சென்னையில் 21 இடங்களும் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது.
    • தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையை புரட்டிப் போட்ட 'மிச்சாங்' புயல் மழையால் 5 நாட்கள் ஆகியும் வெள்ளம் ஒரு சில பகுதிகளில் வடியவில்லை. வடசென்னை மற்றும் தென் சென்னைக்கு உட்பட்ட பகுதிகளில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பாக மீட்கவும், தண்ணீரை வெளியேற்றவும் சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

    வெள்ளம் பாதித்த பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் வடிந்துவிட்டது. தாழ்வான பகுதிகள் தவிர மற்ற இடங்களில் வெள்ளம் வெளியேற்றப்பட்டது. மீத முள்ள பகுதிகளில் இரவு, பகலாக வெளியேற்றும் பணியில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

    நேற்று இரவு வரை 97 பகுதிகளில் வெள்ளம் நீர் வடியாமல் இருந்தது. இன்று காலையில் அது 56 ஆக குறைந்தது. சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. அதில் 300-க்கும் குறைவான தெருக்களில் மட்டுமே இன்னும் வெள்ளம் வடியவில்லை. வெள்ளம் வடியாத பகுதிகளில் கூடுதல் மோட்டார் பம்ப் செட்டுகள், அமைக்கப்பட்டு வெள்ளநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


    இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரை வெளியேற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலையில் 363 பகுதிகளில் வெள்ளம் வடியாமல் இருந்தது. விடிய, விடிய நடந்த நடவடிக்கையின் மூலம் 328 இடங்களில் தேங்கிய நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இன்னும் 35 பகுதிகளில் மட்டுமே வெள்ளம் வடியாமல் உள்ளது. அதனை இன்று இரவுக்குள் வெளியேற்றி விடுவோம். நிலைமை சீராகி விடும்.

    வடசென்னையில் 14 இடங்களும், தென்சென்னையில் 21 இடங்களும் மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. அனைத்து சுரங்கப்பாதையிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. 1178 மோட்டார் பம்புகள் தற்போது தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. போர்க் கால அடிப்படையில் பணிகள் மும்முரமாக நடக்கின்றன.

    தண்ணீர் வெளியேற்றப்பட்ட பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்கள் தவிர பிற பகுதிகள் அனைத்திற்கும் மீண்டும் மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது.

    டிவிசன்கள் 7, 19, 20, 23, 29, 30, 34, 53, 151, 156, 174, 177, 189, 181, 183, 193, 198 ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியில் இருந்து வெள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள், நிவாரண முகாம்களில் தினமும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.
    • நிவாரண முகாம்கள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்து வருகிறோம்.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழை பாதிப்பில் 4-வது நாளாக இன்னும் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவுகள் வினியோகிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் சில தாழ்வான பகுதிகளில் மண்டலம் வாரியாக 369 பாயிண்ட்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் அதை அகற்றி வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு 25 பாயிண்ட் அளவில் மழைநீர் வடிகிறது.

    எங்களுக்கு சவாலாக உள்ள பகுதியாக பள்ளிக்கரணை, பெருங்குடி, பெரும்பாக்கம் பகுதிகள் உள்ளன. சென்னைக்குள் ராயபுரம், பட்டாளம், புளியந்தோப்பு, மணலி, சடையங்குப்பம், கொரட்டூர், பெரம்பூர், ஜமாலியா பகுதிகள் உள்ளன.

    சென்னையில் தேங்கிய மழைநீரை அகற்ற சென்னை மாநகராட்சி எல்லையில் 955 மோட்டார்கள் இயங்கி கொண்டிருக்கிறது. வெளி மாவட்டங்கள் மற்றும் புதிதாக வாங்கப்பட்ட 90 மோட்டார்களும் நீரை அப்புறப்படுத்தி வருகின்றன. இதில் அதிக உந்துதிறன் கொண்ட 52 மோட்டார்கள், 100 எச்.பி. மோட்டார்கள், 50 எச்.பி. மோட்டார்களும் இயங்கி கொண்டிருக்கிறது.

    தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் ஒரு வேளைக்கு 4 லட்சம் பேர்களுக்கு உணவு தயாரித்து வழங்கி வருகிறோம். சமுதாய நலக்கூடங்கள், அம்மா உணவகங்கள், நிவாரண முகாம்களில் தினமும் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது. நிவாரண முகாம்கள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கும் உணவு வினியோகம் செய்து வருகிறோம்.

    15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மேற்பார்வையில் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் 85 சதவீத இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது. மற்ற பகுதிகளில் தண்ணீரை வடிய வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி 4 மாவட்டங்களில் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
    • புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை :

    வங்கக்கடலில் 'மிச்சாங்' புயல் சின்னம் உருவாகி உள்ளது. இந்த புயலானது வரும் 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை நெல்லூருக்கும், மசூலிபட்டனத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் நாளை, நாளை மறுநாள் (ஞாயிறு, திங்கள்) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புயல் கரையை கடக்கும் 5-ந்தேதி இந்த 4 மாவட்டங்களிலும் மிக மிக பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    புயல் காரணமாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையிலும் தரைக் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமான பணிகளையும் நிறுத்தி வைக்குமாறு மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

    மேலும் கட்டுமான பணிகளை நிறுத்துவதுடன் அதற்கான பொருட்களை தரை தளத்தில் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • சென்னையை புயல் மிரட்டும் சூழ்நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • நிவாரண முகாம்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பெய்த கனமழையில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    கடந்த மாதம் பெய்த மழையின்போது 37 இடங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. ஆனால் தற்போது பெய்த கனமழையால் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தேங்கிய மழைநீர் வெள்ளத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    ஆனாலும் இன்று வரை 38 இடங்களில் மழை வெள்ளம் வடியால் தேங்கி நிற்பதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை வெள்ளநீரை வெளியேற்ற அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் முகாமிட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    குறிப்பாக மேற்கு மேம்பாலம், கொளத்தூர், கொரட்டூர் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். நேற்று மாலை வரை 64 இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.

    தொடர் நடவடிக்கையின் மூலமாக 26 பகுதிகளில் தேங்கிய நீர் வடிந்தது. ஆனாலும் 38 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநகராட்சி சார்பில் நிவாரண முகாம்கள் தயார்படுத்தி வைக்கப்பட்டிருந்தன. நேற்று 306 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு நேற்று மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது.

    தண்ணீர் சூழ்ந்த பகுதியில் வசித்த மக்களுக்கு 10 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. இன்று காலை மற்றும் மதியமும் உணவு பொட்டலம் வினியோகிக்கப்பட்டது. இதுவரையில் 20 ஆயிரம் உணவு பாக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

    சென்னையை புயல் மிரட்டும் சூழ்நிலையில் தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் பாதிப்பு உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தப்டுகிறது. மீண்டும் அங்கு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நிவாரண முகாம்களில் கூடுதலாக உணவு தயாரிக்கவும், பொதுமக்களுக்கு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    • புயல் நேரத்தில் மழையோடு பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.
    • மழைக்கு இறந்தவர்கள் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

    புயல் சென்னை ஓரமாக ஆந்திரா செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. புயல் நேரத்தில் மழையோடு பலத்த காற்றும் வீசும் என்பதால் பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். மின்சார கம்பங்கள், வயர்கள் செல்லும் இடங்களில் கவனமாக செல்ல வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு வரலாம் என்று கருதுவதால் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளார்கள்.

    தமிழகத்தை பொறுத்தவரை மழைக்கு இதுவரை 5 பேர் இறந்துள்ளார்கள். கால்நடைகள் 98 பலியாகி உள்ளது. 420 குடிசைகள் சேதம் அடைந்துள்ளது. மழைக்கு இறந்தவர்கள் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

    கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 121 நிவாரண முகாம்களும் 4 ஆயிரம் பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 162 முகாம்கள் மொத்தம் 1 லட்சத்து 13 ஆயிரம் பேரை தங்கவைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களும் தயார் செய்யப்பட்டுள்ளது. மழையோடு காற்றும் வீசும் என்று எதிர்பார்ப்பதால் மரக்கிளைகள் முறிந்து விழலாம். எனவே, பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.
    • தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 296 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை, ரிப்பன் மாளிகை, பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திற்கு நேரில் சென்று, கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து, மழைநீர் வெள்ள பாதிப்பு தொடர்பாக கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்ட பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் உரையாடிய முதலமைச்சர், அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    மேலும், ரிப்பன் மாளிகையில் தயார் நிலையில் உள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுவினரை முதலமைச்சர் சந்தித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மீட்பு உபகரணங்களையும் அவர் பார்வையிட்டார். 

    அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்படும் பொதுமக்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்திட வேண்டும் என்றும், மின்தடை ஏற்படக்கூடிய இடங்களில் உடனடியாக மக்களுக்கு எந்தவித இடையூறிமின்றி மின்விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும், தற்போது பெய்துவரும் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை துரிதமாக அகற்றிவுடம், புதிதாக புயல் உருவாகவுள்ளதையொட்டி அதன்பொருட்டு பெய்யும் கனமழையால் அடுத்து வரும் சில நாட்களில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், சாலைகள், சுரங்கப் பாதைகள் இவற்றில் மழைநீர் தேங்காமல் உடனுக்குடன் அகற்றிட தேவையான மின் மோட்டார்கள் அமைத்திடவும், மழைநீர் கால்வாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கிடவும், அப்பகுதியின் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென்று உத்தரவிட்டார்.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரைகளின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கு நீர்த்தேக்கங்களில் நீர் மேலாண்மை செய்வது, 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எச்சரிக்கை தகவல்கள் வழங்குவது, பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளில் இருந்து பொதுமக்களை முன் கூட்டியே பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது, 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் மற்றும் இதர நிவாரண மையங்களை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திருப்பது ஆகிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் கரைக்கும் திரும்புமாறும், கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களுக்கு எச்சரிக்கையும், பொதுமக்களுக்கு புயல் குறித்த எச்சரிக்கையும் கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 437 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முப்படையினை தயார் நிலையில் வைத்திட முப்படையினைச் சார்ந்த அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    கண்காணிப்பு பணிகளுக்கென மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி அலுவலர்கள் தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைளை மேற்பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையின் 200 வீரர்கள் கொண்ட 8 குழுக்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 225 வீரர்கள் கொண்ட 9 குழுக்கள் மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள விரைந்துள்ளனர்.

    121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும், 4,967 நிவாரண முகாம்களும் அனைத்து மாவட்டங்களிலும் தயார் நிலையில் உள்ளன.

    மாநில அவசரகால செயல்பாட்டு மையம் மற்றும் மாவட்ட அளவிலான அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் கூடுதலான அலுவலர்களுடன் இயங்குகின்றன.

    புயல், கனமழை தொடர்பான முன்னெச்சரிக்கை தகவல்கள் TNSMART செயலி மூலமாகவும், Twitter, Facebook உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேற்று முதல் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து 1500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் 5.23 இலட்சம் நபர்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.

    இன்று காலை முதல் புழல் நீர்த்தேக்கத்திலிருந்து 2000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால், பொதுவான முன்னெச்சரிக்கை நடைமுறை மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டு வருகிறது.

    பெருநகர சென்னை மாநகராட்சி பகுதி மற்றும் மாவட்டங்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தொடர்புடைய பகுதிகளில் முகாமிட்டு முன்னெச்சரிக்கை, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில், தமிழ்நாடு கமாண்டோ படையினைச் சார்ந்த 50 வீரர்கள் கொண்ட 2 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினைச் சார்ந்த 25 வீரர்கள் கொண்ட ஒரு குழுவும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    சென்னையில் 162 நிவாரண மையங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் மழை நீரை வெளியேற்ற 296 நீர் இறைப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டபோதும் குடிசை பகுதி மக்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை.
    • எவ்வளவு கனமழை பெய்தாலும், அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்த பிறகு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு நிருபர்களை சந்தித்தனர். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதை வடிய வைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அடையாறில் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்த போதும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஒரே ஒரு பாதிப்பு, மாம்பலம் கால்வாய் அதை எதிர்கொள்ள திணறியதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்பரம்பாக்கம் தண்ணீரை 4 ஆயிரம் கனஅடியாக குறைக்க சொல்லி உள்ளார்.

    அதனால் 6 ஆயிரம் கன அடியில் இருந்து 4 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறப்பது குறைக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக மாம்பலம் பகுதியில் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் அதாவது தி.நகர் தொகுதிக்கு உட்பட்ட 20-க்கும் மேற்பட்ட தெருக்களின் தண்ணீர் படிப்படியாக குறைய தொடங்கும்.

    இது சம்பந்தமான விளக்கங்களை முதலமைச்சரிடம் அதிகாரிகள் எடுத்து கூறினார்கள்.

    இப்போது நாம் எவ்வளவு பெரிய கால்வாய் கட்டி இருந்தாலும், கடந்த 1 மாத காலமாக ஒவ்வொரு நாளும் 5, 6 செ.மீ. மழை பொழிந்தது. அப்போது மழைநீர் ஏதும் தேங்கவில்லை. 15 செ.மீ. மழை பெய்திருந்தாலும், பாதிப்பு என்பது ஒரு சில இடங்களில் தெரிய தொடங்கி உள்ளது.

    அந்த பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய அடுத்து 2, 3 நாட்களில் வர இருக்கிற கனமழை பாதிப்புகளை எதிர்கொள்ள ஏதுவாக இன்றைக்கே பாதிப்புக்கான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு மட்டுமல்லாது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கெங்கு பாதிப்பு உள்ளதோ, அங்கெல்லாம் மோட்டார்களை வைப்பது போன்ற பல்வேறு நிலைகளை மேற்கொள்ள முதலமைச்சர் கூறி உள்ளார்.

    அதனால் மீட்பு படையினரும் ஏராளமான வகையில் தயார் நிலையில் உள்ளனர். 

    குடியிருப்பு பகுதிகளில் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், பம்பிங் ஸ்டேஷன் முழு நேரமும் இயங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளார்.

    தற்போது பல பகுதிகளில் கால்வாய் தூர்வாரப்பட்டதன் காரணமாக மழைநீர் வேகமாக வடிந்து வருகிறது. மழைநீர் வடிகால் பணிகள் பலன் அளித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் விரைந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    வருகிற 1-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை பெய்யும் கனமழையை எதிர்கொள்ள அரசு நிர்வாகங்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மழை பாதிப்பு, மீட்பு பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
    • சீரமைப்பு பணிகள் குறித்து மாநகராட்சி மேயர் பிரியா முதலமைச்சரிடம் விளக்கம் அளித்தார்.

    சென்னை:

    அந்தமான் அருகே உருவான புயல் சின்னம் காரணமாக சென்னையில் நேற்று முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

    நேற்றிரவு பெய்த கனமழையால் தி.நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை, ஆவடி, அயப்பாக்கம், தாம்பரம், வரதராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் இருந்ததால் போக்குவரத்து தடைப்பட் டது.

    மழை நின்றதும் மாநகராட்சி ஊழியர்கள் விரைந்து சென்று மழைநீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆனாலும் இன்று காலையிலும் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி வருகிறது.

    இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணியளவில் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயர் அதிகாரிகள் அதில் பங்கேற்றனர்.

    மாநகராட்சியில் தயார் நிலையில் இருந்த மீட்பு படையினரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்தார். அதைத் தொடர்ந்து மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பார்வையிட்டார்.

    கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை வாங்கி அவர் பேசினார்.

    அப்போது போனில் பேசிய பொதுமக்களிடம் எங்கிருந்து பேசுகிறீர்கள்? என்ன பிரச்சினை? உங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்று கேட்டறிந்தார்.

    புரசைவாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து போனில் பேசியவர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.

    நான் ஸ்டாலின், சி.எம். பேசுகிறேன். இப்போது உங்கள் ஏரியா எப்படி இருக்கிறது? தண்ணீர் அடைப்பு இருக்கிறதா? உடனே பார்க்க சொல்கி றேன் என்று பதில் அளித்தார்.

    அப்போது மழையால் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் களப்பணி குறித்து அதிகாரிகள் அவரிடம் விளக்கி கூறினார்கள்.

    • ஒப்பந்ததாரர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்க வேண்டும்.
    • புதிய நிபந்தனைகள், விதிமுறைகளின்படி குடும்ப கல்லறைகள் மற்றும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த கம்யூனிஸ்டு தலைவர் சங்ரய்யா, ஆன்மிக தலைவர் பங்காரு அடிகளார் மறைவிற்கு உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் பேசுகையில், எனது வார்டில் பரமேஸ்வரன் நகர் என்ற பகுதியில் 90 ஆண்டுகளாக மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கழிவுநீர் இணைப்பு வசதிகள் கொடுக்க முடியவில்லை. மின் வசதி, குடிநீர் வசதி பெற முடியவில்லை. மேலும் தற்காலிக வரி விதிப்பு படி அவர்கள் வீடுகளுக்கு வரி விதிப்பு வழங்க வேண்டும்.

    தற்போது வருவாய் துறை தடையில்லா சான்று வழங்கினால் தான் தற்காலிக வரி விதிக்க முடியும் என கூறப்படுகிறது. அதை நீக்க வேண்டும்" என்றார்.

    மேயர் பிரியா பேசுகையில், "அரசு நிலம் கிராம நத்தம் அனாதீன நிலம் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு தற்காலிக வரி விதிக்க வருவாய் துறை சான்றிதழ் இருந்தால் வரி விதிக்கப்படும்" என்றார்.


    இதற்கு தி.மு.க. சார்பில் மாமன்ற உறுப்பினர்களும் மண்டல குழு தலைவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

    விஸ்வநாதன் (கல்வி குழு தலைவர்)-கடந்த ஆட்சியில் ரெட்பாம் என்ற முறை இருந்தது. மாநகராட்சி அதிகாரிகளே தற்காலிக வரி விதிப்பு முறையை வழங்கினர். இதனால் பொதுமக்கள் எளிதாக கழிவுநீர் இணைப்புகள் பெற முடிந்தது. மீண்டும் ரெட்பாம் நடைமுறை அமல்படுத்த வேண்டும்.

    தனசேகரன் (நிலைகுழு தலைவர்):-வருவாய்த் துறையிடம் சான்றிதழ் பெறுவது என்பது எளிதாக நடக்கும் காரியம் அல்ல. வருவாய் துறை சான்றிதழ் பெற வருடக்கணக்கில் நாளாகும். கடமைக்காக இதை செய்யக்கூடாது. மக்களுக்கு பயனுள்ள வகையில் நாம் ரெட்பாம் முறையை மீண்டும் அனுமதிக்க வேண்டும். அது தான் இந்த மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையாகும்.

    வி.வி.ராஜன் (மண்டல குழு தலைவர்):- மாநகராட்சி ஆணையர் பேரில் தான பத்திரம் கொடுக்கச் சொன்னாலே வருவாய்த்துறையினர் தான பத்திரத்தை மாற்றிக் கொடுப்பதில்லை. எனது வார்டில் 74 தான பத்திரங்கள் இதுவரை மாற்ற என்.ஓ.சி. கொடுக்கவில்லை. இதுவே உதாரணமாகும்.

    கூட்டத்தில் மாநகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு தயாரித்து வழங்கும் பணியை தனியாருக்கு கொடுக்கவும், 358 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் மாணவர்களுக்கு முறையாக வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்காக கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கவும் ஒப்பந்ததாரர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிப்பது, தரம் குறைந்த உணவு வழங்கினால் 3 முறை அபராதமும், அதன் பிறகும் தொடர்ந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

    உணவு அளவு குறைதல், தரம் குறைந்த மூலப்பொருட்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துதல், சமையல் கூடம் சுத்தமாக பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கவும் தொடர்ந்து தவறு செய்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

    கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட 14 வருடங்கள் கால இடைவெளி திருத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிபந்தனைகள், விதிமுறைகளின்படி குடும்ப கல்லறைகள் மற்றும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக மன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் பேசும் போது, கிண்டி காந்தி மண்டபம் மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கிறது. அங்கு நவீன மின் விளக்கு அமைக்க வேண்டும். மீனவ தந்தை சிங்கார வேலருக்கு மயிலாப்பூர் நடுக்குப்பத்தில் மணிமண்டபம் நிறுவ வேண்டும். மெரினா கடற்கரையில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசிய குஷ்பு மீது கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    • வெறிநாய் தடுப்பூசிகளை நாய்களுக்கு போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்கள் நாய் கடியில் இருந்து தப்புவதற்கு நாய்களை பார்த்தால் உஷாராக ஒதுங்கி செல்வதே நல்லது.

    சென்னை:

    சென்னையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் நடந்து செல்பவர்களை குறிைவத்து பல இடங்களில் தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்த நிலையில் சென்னை ராயபுரம் ஜி.ஏ. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி குழந்தைகள் உள்பட 29 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த அனைவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து 29 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரோட்டில் சென்றவர்களை கடித்து குதறிய வெறிநாயை பொதுமக்களே அடித்து கொன்றனர்.


    இதையடுத்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெறிநாய்கள் மற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் எம்.கே.பி.நகர் பகுதிகளிலும் பொதுமக்களை தெருநாய்கள் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்குட்பட்ட கொடுங்கையூர் எம்.கே.பி.நகர் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், நடந்து சென்ற பெண்கள் என 8 பேரை தெருநாய்கள் கடித்துள்ளன. ஒரே வாரத்தில் அடுத்தடுத்த தெருநாய்கள் பொது மக்களை கடித்துள்ளதால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதேபோன்று சென்னையில் பல இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாகவே பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தெரு நாய்கள் தொல்லை மற்றும் நாய் கடியை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் விலங்குகள் நலவாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து வருகிறோம். அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. பாலூட்டும் நாய்களுக்கும், கர்ப்பமாக இருக்கும் நாய்களுக்கும், நோய்வாய்ப்பட்டிருக்கும் நாய்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்ய முடியாது. அதேநேரத்தில் கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசிகளை நாய்களுக்கு போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள சுமார் 1 லட்சம் நாய்களை பிடித்து தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் சுமார் 900 நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நாய் கடித்ததும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். வெறிநாய்கள் இல்லாத மாநகராக சென்னை மாநகராட்சியை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ள நாய்களின் உடல்களில் உள்ள நோய் கிருமிகளை ஒழிப்பதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில் தான் நாய்களை பிடித்து தடுப்பூசிகளை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு இடத்தில் பிடிக்கும் தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில்தான் கொண்டு விடுகிறோம்.

    எனவே பொதுமக்கள் நாய் கடியில் இருந்து தப்புவதற்கு நாய்களை பார்த்தால் உஷாராக ஒதுங்கி செல்வதே நல்லது. சில நேரங்களில் ரோட்டில் நடந்து செல்பவர்கள் நாய்களை சீண்டுவது உண்டு. அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • 21 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு உதவும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
    • வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மாநகராட்சி பகுதி முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. மொத்தம் 38.68 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

    இந்த வாக்காளர் பட்டியலில் 41,067 இளம் வாக்காளர்கள் புதிதாக தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தனர். 21 வயது நிரம்பிய முதல் முறையாக வாக்களிக்கும் தகுதியை பெற்று உள்ள 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 1.13 லட்சம் பேர் இருப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தெரிவித்து இருக்கிறது.

    ஆனால் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களோ குறைவாக உள்ளனர். முதல்முறையாக வாக்களிக்கக்கூடிய இளைஞர்கள் பலர் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கவில்லை என தெரிய வருகிறது. முதல் முறை வாக்காளர்கள் பெயரை பதிவு செய்ய ஆர்வம் காட்டாமல் இருப்பதால் அவர்களை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

    21 வயது நிரம்பிய இளைஞர்களுக்கு உதவும் வகையில் அனைத்து கல்லூரிகளிலும் விழிப்புணர்வு மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 16 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள தகுதி உள்ளவர்கள் கட்டாயம் பெயர்களை வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    வாக்களிப்பது ஜனநாயக கடமை. கடமையை செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் என ஆண்கள் மற்றும் பெண்கள் கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

    2021 மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் முதன்முறை வாக்காளர்களின் எண்ணிக்கையில் சரிவுக்கான காரணங்களை அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். இந்த விடுபட்ட வாக்காளர்களை கண்டுபிடிப்பது சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சவாலாக உள்ளது.

    வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க மாநகராட்சி பகுதி முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது.

    நவம்பர் 4, 5 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க படிவம் 6, படிவம் 6ஏ, படிவம் 7 அல்லது படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

    இன்று முதல் டிசம்பர் 9-ந் தேதி வரை எந்த நேரத்திலும் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலகங்களில் படிவங்கள் கிடைக்கும் என்று மாநகராட்சி கூடுதல் ஆணையர் லலிதா தெரிவித்தார்.

    • 15 மண்டலங்களிலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அனைத்து விளம்பர பலகைகளும் விரைவில் அகற்றி முடிக்கப்படும்.
    • உரிமம் இல்லாத விளம்பர பலகை அமைக்க அனுமதித்தால் கட்டிடத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் சென்னை ஐகோர்டின் உத்தரவுப்படி அகற்றப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 21-ந்தேதி முதல் அக்டோபர் 25-ந்தேதி வரை பொது இடங்கள் மற்றும் தனியார் கட்டிடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்ட 203 விளம்பர பலகைகள் மற்றும் கடைகளில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட 44 விளம்பர பலகைகள் என மொத்தம் 247 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளது.

    15 மண்டலங்களிலும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட அனைத்து விளம்பர பலகைகளும் விரைவில் அகற்றி முடிக்கப்படும். கட்டிட உரிமையாளர்கள் மாநகராட்சியிடம் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே விளம்பர பலகை வைக்க அனுமதிக்க வேண்டும். உரிமம் இல்லாத விளம்பர பலகை அமைக்க அனுமதித்தால் கட்டிடத்தின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி அனுமதி பெறாத விளம்பர பலகைகளை கட்டிடத்தின் உரிமையாளர்களே தாமாக முன்வந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் அகற்றிட அறிவுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×