search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருநாய்"

    • வெறிநாய் தடுப்பூசிகளை நாய்களுக்கு போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
    • பொதுமக்கள் நாய் கடியில் இருந்து தப்புவதற்கு நாய்களை பார்த்தால் உஷாராக ஒதுங்கி செல்வதே நல்லது.

    சென்னை:

    சென்னையில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளில் நடந்து செல்பவர்களை குறிைவத்து பல இடங்களில் தெருநாய்கள் விரட்டி விரட்டி கடிக்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    இந்த நிலையில் சென்னை ராயபுரம் ஜி.ஏ. சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பள்ளி குழந்தைகள் உள்பட 29 பேரை வெறிநாய் ஒன்று கடித்து குதறியது. இதில் காயம் அடைந்த அனைவரும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து 29 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ரோட்டில் சென்றவர்களை கடித்து குதறிய வெறிநாயை பொதுமக்களே அடித்து கொன்றனர்.


    இதையடுத்து சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் வெறிநாய்கள் மற்றும் தெருநாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் எம்.கே.பி.நகர் பகுதிகளிலும் பொதுமக்களை தெருநாய்கள் கடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தண்டையார்பேட்டை 4-வது மண்டலத்துக்குட்பட்ட கொடுங்கையூர் எம்.கே.பி.நகர் மற்றும் வியாசர்பாடி பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள், நடந்து சென்ற பெண்கள் என 8 பேரை தெருநாய்கள் கடித்துள்ளன. ஒரே வாரத்தில் அடுத்தடுத்த தெருநாய்கள் பொது மக்களை கடித்துள்ளதால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இதேபோன்று சென்னையில் பல இடங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாகவே பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதைத்தொடர்ந்து தெரு நாய்கள் தொல்லை மற்றும் நாய் கடியை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மற்றும் விலங்குகள் நலவாரியத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே தெருநாய்களை பிடித்து கருத்தடை ஆபரேஷன் செய்து வருகிறோம். அதிலும் சில சிக்கல்கள் உள்ளன. பாலூட்டும் நாய்களுக்கும், கர்ப்பமாக இருக்கும் நாய்களுக்கும், நோய்வாய்ப்பட்டிருக்கும் நாய்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்ய முடியாது. அதேநேரத்தில் கருத்தடை மற்றும் வெறிநாய் தடுப்பூசிகளை நாய்களுக்கு போடும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள சுமார் 1 லட்சம் நாய்களை பிடித்து தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. தினமும் சுமார் 900 நாய்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். நாய் கடித்ததும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். வெறிநாய்கள் இல்லாத மாநகராக சென்னை மாநகராட்சியை மாற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ள நாய்களின் உடல்களில் உள்ள நோய் கிருமிகளை ஒழிப்பதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


    இந்தியாவிலேயே சென்னை மாநகராட்சியில் தான் நாய்களை பிடித்து தடுப்பூசிகளை போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு இடத்தில் பிடிக்கும் தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் மற்றும் தடுப்பூசி போடும் பணிகள் முடிந்ததும் மீண்டும் அதே இடத்தில்தான் கொண்டு விடுகிறோம்.

    எனவே பொதுமக்கள் நாய் கடியில் இருந்து தப்புவதற்கு நாய்களை பார்த்தால் உஷாராக ஒதுங்கி செல்வதே நல்லது. சில நேரங்களில் ரோட்டில் நடந்து செல்பவர்கள் நாய்களை சீண்டுவது உண்டு. அதுபோன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.

    இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • குழந்தைகளையும் கடிக்க துரத்துவதனால் அவர்கள் பயத்தில் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்
    • பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கொல்லங்கோடு :

    கொல்லங்கோடு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளையும் கடிக்க துரத்துவதனால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் இரவு நேரத்தில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்வதினால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் இரவில் ஒருவித அச்சத்துடன் செல்கின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருநின்றவூர்:

    பட்டாபிராம், அம்பேத்கர் நகர், சுசில் பிரான்சிஸ் தெருவில் வசித்து வருபவர் மேரி குளோரி(வயது82). ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை. இவர் நேற்று காலை, பாபு நகர் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    வீட்டின் அருகே வந்த போது தெருவில் சுற்றிய நாய் ஒன்று திடீரென மூதாட்டி மேரி குளோரி மீது பாய்ந்து கடித்து குதறியது. இதில் நிலை தடுமாறிய மேரி குளோரி கீழே விழுந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டபடி திரண்டு வந்தனர். உடனே மேரி குளோரியை கடித்து குதறிய நாய் ஓடிவிட்டது. நாய் கடித்ததில் காலில் பலத்த காயமடைந்த மேரி குளோரியை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு நாய்கள் தெருக்களில் சுற்றி வருகின்றன. இதனால் விபத்துக்களும், நாய்கள் பொதுமக்களை துரத்தி கடிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகின்றன. இதனை தடுக்க தெரு நாய்களை பிடிக்க மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்று வட்டாரத்தில் தெருநாய் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையத்தில் கும்பலாக சுற்றித்திரிந்த தெருநாய்கள் அவ்வழியாக வருவோர், செல்வோரை எல்லாம் கடித்து குதறியது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நகராட்சி சுகாதார துறையினர் அங்கு சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்துச் சென்றனர்.

    இது குறித்து சுகாதார அலுவலர் ராமமூர்த்தி கூறுகையில், வெறிநாய் பொதுமக்களை கடித்தது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதற்குரிய வாகனம் மற்றும் ஆட்களை அனுப்பி வைத்து நாய்கள் பிடிக்கப்பட்டன. நகரில் உள்ள நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 பேரை தெருநாய்கள் கடித்தன.
    • தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கூத்தாலி ஊராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. ரோட்டில் செல்பவர்களை அது துரத்தி சென்று கடித்தபடி இருந்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 4 பேரை தெருநாய்கள் கடித்தன. இதனால் சாலைகளில் சிறுவர்-சிறுமிகள், மாணவ-மாணவிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. தெரு நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் தெருநாய்கள் தொல்லை தொடர்ந்த படி இருந்ததால் கூத்தாலி பகுதியில் 6 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    கடந்த மாதம் கண்ணூரில் 9 வயது சிறுவனை தெரு நாய்கள் கடித்து குதறியது. அதேபோல் வீட்டின் முன் விளையாடிய ஒரு குழந்தையை தெரு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து இழுத்துச் சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

    • தெருநாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 94, 95-வது வார்டு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. திருநகர் பகுதியில் பொதுமக்கள், நடைபயிற்சி செல்வோர், மாணவ-மாணவிகள், பெண்கள் அதிகளவில் சென்று வரும் சாலைகளில் நாய்கள் கூட்டமாக திரிகின்றன.இவைகள் வாகனங்களில் செல்ப வர்களையும் துரத்துகின்றன. இதனால் அவர்கள் பயந்து கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது.

    மேலும் வீட்டில் வளர்க்கப்படும் கோழி, ஆடு, வாத்து போன்ற வளர்ப்பு பிராணிகளை நாய்கள் தூக்கிச்செல்வதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பகுதியில் பொதுமக்கள் அச்சத்துட னேயே வெளியே சென்று வருகின்றனர்.

    நாய்களுக்கு கருத்தடை செய்யப் பட்டு அவற்றின் இனப்பெருக்கம் தடுக்கப்படுவதாக மாநக ராட்சி சார்பில் கூறப்பட்டா லும், தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே கூட்டமாக திரியும் தெரு நாய்களை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மதிவாணன் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பாறைக்குளத்தை சேர்ந்தவர் மதிவாணன்(65). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. இதனால் வேலைபார்க்கும் ஊதியத்தின் பெரும்பகுதியை குடித்து செலவழித்து வந்துள்ளார்.

    அதிகளவு மதுபோதையில் பாறைக்குளம் பகுதியில் கிடந்த மதிவாணன் இறந்துவிட்டார். அவரது உடலை தெருநாய்கள் கடித்து குதறியதில் சிதைந்து காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மதிவாணன் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் உணவு உண்ண முடியாமலும், சாப்பிடததால் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டது.
    • நாய் மிகவும் சிரமப்படுவதை பார்த்த பொதுமக்கள் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர்.

    கோவை:

    கோவை பீளமேடு அருகே சேரன் மாநகரில் குமுதம் நகர் உள்ளது.

    இந்த நகரில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தெருநாய் ஒன்று சுற்றி திரிந்தது.

    அப்போது அந்த தெருநாய் அந்த பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் உணவினை தேடி கொண்டிருந்தது. அங்கு கிடந்த பிளாஸ்டிக் டப்பாவை பார்த்ததும் நாய் அதனுள் தலையைவிட்டது. எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையைவிட்ட நாயால் அதன்பின்னர் வெளியே எடுக்க முடியவில்லை.

    இதனால் நாய் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவுடனேயே அந்த பகுதியில் சுற்றி திரிந்து வந்தது. தலையில் பிளாஸ்டிக் டப்பா மாட்டியதால் உணவு உண்ண முடியாமலும், சாப்பிடததால் மிகுந்த சோர்வுடன் ஒரு இடத்தில் படுத்தபடியே கிடந்தது.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்களுக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. எப்படியாவது நாயின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி நாயை மீட்க வேண்டும் என நினைத்து பல முறை அதனை அகற்ற முயன்றனர். ஆனால் அது முடியாமல் போனது.

    நாய் மிகவும் சிரமப்படுவதை பார்த்த பொதுமக்கள் தன்னார்வ விலங்குகள் நல அமைப்புக்கு தகவல் அளித்தனர்.

    இதையடுத்து அவர்கள் நேற்று குமுதம் நகர் பகுதிக்கு வந்து நாயை தேடினர். அப்போது நாய் அந்த பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அருகே சோர்வாக படுத்திருந்தது.

    தொடர்ந்து அவர்கள், குடியிருப்பு வாசிகளின் உதவியோடு, தாங்கள் கொண்டு வந்த வலையை விரித்து லாவகமாக நாயை பிடித்தனர். பின்னர் நாயின் தலையில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவை கழற்றி, நாயை விடுவித்தனர்.

    10 நாட்களாக உணவு உண்ணாமலும், தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவில் அவதிப்பட்டு வந்த நாய் துள்ளிகுதித்து ஓடியது. இதனை பார்த்து மக்களும், தன்னார்வ குழுவினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    நாயின் தலையில் மாட்டிய பிளாஸ்டிக் டப்பாவை அகற்ற உதவிய தன்னார்வ குழுவினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு அலட்சியமாக தூக்கி எறிவதன் விளைவு தான் இது என கூறிய தன்னார்வலர்கள், பிளாஸ்டிக் பொருட்களை முறையாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் குடியிருப்பு வாசிகளிடம் கேட்டுக் கொண்டனர்.

    • தெருநாய்கள் கடித்ததில் கலெக்டரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
    • தெலுங்கானாவில் தெருநாய்கள் பொதுமக்களை அடிக்கடி கடித்து குதறும் சம்பவம் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் நாய் தொல்லை அடிக்கடி அதிகரித்து வருகிறது. அப்பகுதியில் நாய்களைக் கண்டாலே பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கின்றனர்.

    சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் நாய்கள் அவழியாக நடந்து செல்வோரையும் பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோரையும் துரத்தி துரத்தி கடிப்பதால் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த மாதம் தந்தையுடன் பொருட்களை வாங்க ஷாப்பிங் மாலுக்கு சென்ற போது 6 வயது சிறுவனை சாலையில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து குதறியது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் நாடு முழுவதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் தெலுங்கானா கூடுதல் கலெக்டர் ஒருவரையும் தெரு நாய்கள் கடித்து குதறியுள்ளது. சித்திபேட்டை உதவி கலெக்டர் சீனிவாச ரெட்டி இவர் அலுவலகத்திற்கு காரில் சென்றார். காரில் இருந்து இறங்கி அலுவலகத்திற்கு நடந்து சென்ற போது அங்கிருந்த தெருநாய்கள் சீனிவாச ரெட்டியை துரத்தி துரத்தி காலில் கடித்தது.

    இதனைக் கண்ட கலெக்டரின் உதவியாளர்கள் மற்றும் ஊழியர்கள் தெருநாய்களை விரட்டி அடித்தனர்.தெருநாய்கள் கடித்ததில் கலெக்டரின் காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.

    இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சித்திபேட்டையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் ஊழியர்கள் 2 பேரை கடித்தது.

    தெலுங்கானாவில் தெருநாய்கள் பொதுமக்களை அடிக்கடி கடித்து குதறும் சம்பவம் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    • குழந்தை தப்பிக்க முயல போராடும்போது, நாய்கள் சிறுவனின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகின.
    • சிறுவன் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெருநாய்கள் 5 வயது சிறுவனை சுற்றி வளைத்து கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அம்பர்பேட்டையில் உள்ள சிறுவனின் தந்தை காவலாளியாக பணிபுரிந்த வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் இந்த சம்பவத்தின் நடுங்க வைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

    தாக்குதலுக்கு உள்ளானபோது பிரதீப் என்ற குழந்தை தனது தந்தையுடன் வேலைக்கு சென்றுள்ளார். அந்த வீடியோவில், குழந்தை தனியாக நடந்து செல்வது போல் உள்ளது. சிறிது நேரத்தில், மூன்று நாய்கள் குழந்தையை நோக்கி வந்து சூழ்ந்து கடிக்க தொடங்கின. பயந்துபோன சிறுவன் ஓட முயற்சிக்கிறான். ஆனால் நாய்கள் சிறுவனை நெருங்கி தரையில் தள்ளுகின்றன.

    குழந்தை தப்பிக்க முயல போராடும்போது, நாய்கள் சிறுவனின் ஆடைகளை இழுக்கத் தொடங்குகின. ஒவ்வொரு முறையும் சிறுவன் எழுந்திருக்க முயலும்போதும் நாய்கள் தாக்கி கீழே தள்ளி விடுகின்றன.

    பின்னர், சிறுவனை நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறின. பெரிய நாய்கள் குழந்தையை கடித்து ஒரு புறம் இழுத்துச் செல்லும்போது மூன்று சிறிய நாய்கள் பின்தொடர்கின்றன. குழந்தை, சம்பவ இடத்திலேயே இறந்தது வீடியோவில் பதிவாகி உள்ளது.

    சிறுவன் இறந்ததை தொடர்ந்து குடும்பத்தினர் புகார் எதுவும் அளிக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • சிறுவனுக்கு வெறிநாய் கடிக்கான ஊசி போடப்பட்டது.

    பெங்களூரு

    சிக்பள்ளாப்பூர் மாவட்டம் கவுரிபிதனூர் தாலுகா கோடாலதின்னே கிராமத்தைச் சேர்ந்தவர் பைரோஜ். இவரது மனைவி பாமிதா. இவர்களது மகன் சமீர்(வயது 5). இந்த சிறுவன் கடந்த மாதம்(அக்டோபர்) 30-ந் தேதி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவன் சமீரை ஒரு தெருநாய் கடித்தது. இதையடுத்து பைரோஜ் தனது மகனை ஹொசூரு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு சிறுவனுக்கு வெறிநாய் கடிக்கான ஊசி போடப்பட்டது.

    ஆனால் நாய் கடித்து 5 நாட்கள் கழித்து சிறுவன் சமீர் தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். இதனால் பதறிப்போன பைரோஜ், தனது மகன் சமீரை சிகிச்சைக்காக கவுரிபிதனூர் டவுனில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சிறுவன் சமீர் பெங்களூருவில் உள்ள இந்திரா காந்தி அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறுவன் சமீர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தான்.

    இதுபற்றி பைரோஜிடம் இந்திரா காந்தி ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறுகையில், 'வெறிநாய் கடிக்கு சரியான முறையில் சிறுவனுக்கு ஊசி போடப்படவில்லை. அதனால் சிறுவனின் உடலில் விஷம் அதிகரித்து ரத்தத்தில் கலந்துவிட்டது. அதனால்தான் சிறுவன் சமீர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்துவிட்டான்' என்று தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த பைரோஜ்-பாமிதா தம்பதியும், அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

    அதையடுத்து அவர்கள் ஹொசூரு கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று தங்களது மகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது குறித்தும், அவனுக்கு சிகிச்சை அளித்த விவரங்கள் அடங்கிய மருத்துவ ஆவணங்கள் குறித்தும் கேட்டனர். ஆனால் அவை யாவும் ஆஸ்பத்திரியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி அறிந்த மாவட்ட சுகாதார துறை அதிகாரி ரத்னம்மா, உயிரிழந்த சிறுவன் சமீரின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்கள் தங்கள் மகனின் சாவுக்கு காரணமான மருத்துவ ஊழியர்கள் மற்றும் டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அதுதொடர்பாக மனு ஒன்றையும் கொடுத்தனர்.

    அதை பெற்றுக்கொண்ட அதிகாரி ரத்னம்மா சம்பந்தப்பட்ட மருத்துவ ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தெருநாய்களை கட்டுப்படுத்த அனைத்து மண்டலங்களிலும் கருத்தடை மையம் அமைக்க முடிவு
    • தொண்டு நிறுவனத்தை அனுப்பி அந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    கோவை

    கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் பிடிப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் தொண்டு நிறுவனம் மூலம் எங்கெல்லாம் நாய்கள் தொந்தரவு அதிகமாக உள்ளது என்பதை கண்டறிந்து, தொண்டு நிறுவனத்தை அனுப்பி அந்த நாய்களை பிடித்து கருத்தடை செய்யும் பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த தொண்டு நிறுவனம் மூலம் தெருநாய்கள் பிடிக்கப்படும் பகுதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நேற்று கரும்புக்கடை, ஆசாத்நகர், சாரமேடு, திப்பு நகர், மதினாநகர், குழந்தை கவுண்டர் வீதி, கோவில்மேடு, வேலாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் பிடிக்கப்பட்டன.

    நாளை அல்அமீன் காலனி, ரோஜா கார்டன், புல்லுக்காடு, ஹவுசிங் யூனிட் மெயின்ரோடு, பொன்விழா நகர், மணியகாரம் பாளையம், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் பிடிக்கப்படும்.

    ஆகஸ்டு 1-ந் தேதி அன்புநகர், அற்புதம் நகர், சவுகார் நகர், சேரன் நகர் பகுதிகளிலும் 2-ந் தேதி அண்ணா காலனி, கரும்புக்கடை, பள்ளிவாசல் வீதியிலும், 3-ந் தேதி நஞ்சுண்டாபுரம், பெருமாள் கோவில் வீதி, மாரியம்மன் கோவில், பாடசாலை வீதி, ஸ்ரீபதி நகர், நேதாஜி நகர் கார்டன் பகுதிகளிலும் பிடிக்கப்படும்.

    4-ந் தேதி சாரமேடு, காந்திநகர், கீரீன் பார்க், நாணியா நகர், ஜே.ஜே. கார்டன், சபா கார்டன், மெட்ரோ சிட்டி, போயஸ் கார்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் நாய்கள் பிடிக்கப்பட உள்ளன.

    மேற்கு மண்டலத்தில் சீரநாயக்கன்பாளையம் மற்றும் கிழக்கு மண்டலத்தில் ஒண்டிப்புதூர் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் கருத்தடை மையமானது செயல்பட்டு வருகிறது. அதேபோல் மற்ற 3 மண்டலத்திலும் தெருநாய்கள் கருத்தடை மையமானது புதிதாக ஏற்படுத்திட மாநகராட்சி நிர்வாக விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×