என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நாய் கடித்தால் அதை பெரிய விசயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது - நிவேதா பெத்துராஜ்
- தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு.
- நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.
அதற்கு பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில் தெருநாய்களுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய நிவேதா பெத்துராஜ், "நாய் கடித்தால் அதை பெரிய விசயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது. தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு. நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல. நாய்களை காப்பகங்களில் அடிப்பதை விட தடுப்பூசி போடுவது தான் சரியான தீர்வாக இருக்கும். கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறது; அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை. " என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






