search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு
    X

    பள்ளி மாணவர்களுக்கான காலை உணவு வழங்கும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு

    • ஒப்பந்ததாரர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்க வேண்டும்.
    • புதிய நிபந்தனைகள், விதிமுறைகளின்படி குடும்ப கல்லறைகள் மற்றும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

    கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த கம்யூனிஸ்டு தலைவர் சங்ரய்யா, ஆன்மிக தலைவர் பங்காரு அடிகளார் மறைவிற்கு உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

    அதைத் தொடர்ந்து கேள்வி நேரத்தின் போது தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் பேசுகையில், எனது வார்டில் பரமேஸ்வரன் நகர் என்ற பகுதியில் 90 ஆண்டுகளாக மக்கள் வாழ்கின்றனர். ஆனால் அவர்களுக்கு கழிவுநீர் இணைப்பு வசதிகள் கொடுக்க முடியவில்லை. மின் வசதி, குடிநீர் வசதி பெற முடியவில்லை. மேலும் தற்காலிக வரி விதிப்பு படி அவர்கள் வீடுகளுக்கு வரி விதிப்பு வழங்க வேண்டும்.

    தற்போது வருவாய் துறை தடையில்லா சான்று வழங்கினால் தான் தற்காலிக வரி விதிக்க முடியும் என கூறப்படுகிறது. அதை நீக்க வேண்டும்" என்றார்.

    மேயர் பிரியா பேசுகையில், "அரசு நிலம் கிராம நத்தம் அனாதீன நிலம் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு தற்காலிக வரி விதிக்க வருவாய் துறை சான்றிதழ் இருந்தால் வரி விதிக்கப்படும்" என்றார்.


    இதற்கு தி.மு.க. சார்பில் மாமன்ற உறுப்பினர்களும் மண்டல குழு தலைவர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

    விஸ்வநாதன் (கல்வி குழு தலைவர்)-கடந்த ஆட்சியில் ரெட்பாம் என்ற முறை இருந்தது. மாநகராட்சி அதிகாரிகளே தற்காலிக வரி விதிப்பு முறையை வழங்கினர். இதனால் பொதுமக்கள் எளிதாக கழிவுநீர் இணைப்புகள் பெற முடிந்தது. மீண்டும் ரெட்பாம் நடைமுறை அமல்படுத்த வேண்டும்.

    தனசேகரன் (நிலைகுழு தலைவர்):-வருவாய்த் துறையிடம் சான்றிதழ் பெறுவது என்பது எளிதாக நடக்கும் காரியம் அல்ல. வருவாய் துறை சான்றிதழ் பெற வருடக்கணக்கில் நாளாகும். கடமைக்காக இதை செய்யக்கூடாது. மக்களுக்கு பயனுள்ள வகையில் நாம் ரெட்பாம் முறையை மீண்டும் அனுமதிக்க வேண்டும். அது தான் இந்த மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையாகும்.

    வி.வி.ராஜன் (மண்டல குழு தலைவர்):- மாநகராட்சி ஆணையர் பேரில் தான பத்திரம் கொடுக்கச் சொன்னாலே வருவாய்த்துறையினர் தான பத்திரத்தை மாற்றிக் கொடுப்பதில்லை. எனது வார்டில் 74 தான பத்திரங்கள் இதுவரை மாற்ற என்.ஓ.சி. கொடுக்கவில்லை. இதுவே உதாரணமாகும்.

    கூட்டத்தில் மாநகராட்சி, உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு தயாரித்து வழங்கும் பணியை தனியாருக்கு கொடுக்கவும், 358 பள்ளிகளில் படிக்கும் 65 ஆயிரம் மாணவர்களுக்கு முறையாக வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்காக கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கவும் ஒப்பந்ததாரர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு உணவு வழங்க வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிப்பது, தரம் குறைந்த உணவு வழங்கினால் 3 முறை அபராதமும், அதன் பிறகும் தொடர்ந்தால் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

    உணவு அளவு குறைதல், தரம் குறைந்த மூலப்பொருட்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துதல், சமையல் கூடம் சுத்தமாக பராமரிக்க தவறினால் அபராதம் விதிக்கவும் தொடர்ந்து தவறு செய்தால் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.

    கிறிஸ்தவர்கள் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட 14 வருடங்கள் கால இடைவெளி திருத்தம் செய்ய அனுமதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய நிபந்தனைகள், விதிமுறைகளின்படி குடும்ப கல்லறைகள் மற்றும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வது உள்ளிட்ட 44 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக மன்ற காங்கிரஸ் தலைவர் எம்.எஸ்.திரவியம் பேசும் போது, கிண்டி காந்தி மண்டபம் மின் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கிறது. அங்கு நவீன மின் விளக்கு அமைக்க வேண்டும். மீனவ தந்தை சிங்கார வேலருக்கு மயிலாப்பூர் நடுக்குப்பத்தில் மணிமண்டபம் நிறுவ வேண்டும். மெரினா கடற்கரையில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசிய குஷ்பு மீது கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.

    Next Story
    ×