search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Banner"

    • மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி சென்றனர்.
    • போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயில் நிலையம் முன்பு இன்று போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை கலெக்டர் தீபக்ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மாணவ -மாணவிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு போதைப் பொருள் தடுப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படி சென்றனர்.இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண் ராமநாதன், உதவி ஆணையர் (கலால் ) பழனிவேல், கோட்ட கலால் அலுவலர்கள் தங்க பிரபாகரன், அருணகிரி, தாசில்தார் சக்திவேல், ஏ.டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், நகர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • மூவர் ரோடு பகுதியில் சாலையில் அனுமதி இன்றி ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.
    • பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் மயிரிழையில் விபத்தின்றி சென்றது.

    திருவோணம்:

    ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம்- கறம்பக்குடி சாலை மற்றும் தஞ்சை- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் மூவர் ரோடு பகுதியில் சாலையில் அனுமதி இன்றி ஒரு பேனர் வைக்கப்பட்டு இருந்தது.

    நேற்று மாலை பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருந்தபோது திடீரென அந்த பேனர் சரிந்து கீழே சாலையில் விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர்தப்பினர். மேலும் பள்ளி குழந்தைகளை ஏற்றிச் சென்ற வாகனம் மயிரிழையில் விபத்தின்றி சென்றது.

    அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு வைத்துள்ள பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.
    • தற்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஆவடி:

    விதிமுறைகள் மீறி பேனர்கள் வைத்தால் 3 ஆண்டு சிறை, ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று கடந்த மாதம் அரசு எச்சரிக்கை விடுத்தது.

    இதைத்தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனுமதி இன்றி வைக்கப்பட்ட ஏராளமான பேனர்கள் அகற்றப்பட்டன.

    இந்நிலையில் ஆவடி, தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்னமும் சில இடங்களில் பேனர் கலாசாரம் தொடர்ந்து அதிகரித்து உள்ளது. விதிகளை மீறி வைக்கும் பேனர்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட புதிய ராணுவ சாலை, சென்னை-திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு வைத்துள்ள பேனர்கள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது.

    கடந்த 3 மாதங்களுக்கு மேலாக நகரமைப்பு பிரிவில் அதிகாரிகள் இல்லாததால் பேனர்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறி வந்தனர். ஆனால் தற்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இதேபோல் தாம்பரம் பகுதியில் பேனர் கலாச்சாரம் மெல்ல தலைதூக்கத் தொடங்கி உள்ளது. செம்பாக்கம், கிழக்கு தாம்பரம் பாரத மாதா சாலை, முடிச்சூர் சாலைகளில் விதிமுறை மீறி ஏராளமான பேனர்கள் முளைத்து உள்ளன. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்து உள்ளனர்.

    பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்றி பேனர் கலாச்சா ரத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • அனுமதியின்றி பேனர் வைத்ததாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • விளம்பரப் பேனரை போலீசார் உடனடியாக அகற்றினர்.

    மதுரை

    தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சுப, துக்க காரியங்கள் மற்றும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைத்து பிரபலப்படுத்துவது மிகப்பெரிய கலாசாரமாக மாறி வருகிறது.

    சிறிய அளவிலான பேனர் தொடங்கி பிரமாண்ட அளவில் பேனர் அமைப்பதும் பல தரப்பினர் மத்தியிலும் வழக்கமான கலா சாரமாக உரு வெடுத்துள்ளது.

    இதனால் பல்வேறு இடங்களில் பேனர்கள் விழுந்து அவ்வப்போது உயிர்பலிகளும் ஏற்படுகிறது. சமீபத்தில் கோவையில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் 3 தொழி லாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில் பேனர்கள் அமைக்க கடும் கட்டுப்பாடு களை தமிழக அரசு விதித்துள்ளது.

    அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெறாமல் பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என்றும், பேனர் வைப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதுடன் அதிகபட்ச அபராதமும் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை கணக்கெடுத்து அவற்றை உடனடியாக அகற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    மதுரை மாவட்டத்தில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளான உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வாடிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் குறித்து போலீ சார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அந்த வகையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மதுரை மாவட்டம் முழுவதும் 50-க்கும் மேற்பட்டோர் மீது போலீ சார் வழயக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    அனுமதி இன்றியும், கால அவகாசம் முடிந்தும் அகற்றப்படாமல் இருக்கும் பேனர்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.பேனர்களை அகற்றாமல் இருக்கும் நபர்களிடம் ரூ.25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை அபராதம் வசூலிப்ப துடன் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதையடுத்து மதுரை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமதியில்லாமல் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன. மேலும் உரிய அனுமதி பெறாமல் இனிமேல் பேனர் வைப்ப வர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை காளவாசல் பகுதியில் நேற்று மாலை அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பரப் பேனரை போலீசார் உடனடியாக அகற்றினர்.

    மதுரை நகர் பகுதிகளில் திருமண மண்டபங்கள், தியேட்டர்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைப்பதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    மேலும் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள், முக்கிய பிரமுகர்களின் நிகழ்ச்சிகள், மற்றும் அனைத்து விழாக்க ளுக்கும் உரிய அனுமதி பெற்று குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் விளம்பர பேனர்கள் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதனை மீறுபவர்கள் மீது உடனடியாக குற்றவியல் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தி உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எனவே விளம்பர பேனர்கள் விஷயத்தில் தமிழக அரசு தற்போது கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதால் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பேனர் கலாசாரம் குறைய வாய்ப்பு இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது.

    கோவை:

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக 60 அடி உயரத்திற்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் பேனர் பொருத்தும் பணி நடைபெற்றது.

    இந்த தூண்களின் மேல் ஏறி விளம்பர பேனர் பொருத்தும் பணியில் சேலத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது வீசிய பலத்த காற்று காரணமாக அந்த இரும்பு தூண்கள் வளைந்து, சிறிது நேரத்தில் உடைந்து தரையில் விழுந்தது. இதில் இரும்பு தூண்களில் ஏறி வேலை பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் சிக்கினர். இந்த விபத்தில் சேலத்தை சேர்ந்த குமார், சேகர், குணசேகரன் ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி பேனர் வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    கோவை மாவட்டத்தில் மாநில, தேசிய நெடுஞ்சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றுவது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி கடந்த ஒரு மாதத்தில் சுமார் 185 அனுமதியற்ற விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளது. ஊராட்சி பகுதிகளில் விளம்பர பேனர்கள் அமைப்பதற்கு மாவட்ட கலெக்டரிடம் விண்ணப்பித்து முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

    மேலும், விளம்பர பேனர்கள் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அமைப்பதற்கு வழிகாட்டல் நெறிமுறைகளின்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும், போலீசாரின் பரிந்துரையின்படியும் அனுமதி பெற வேண்டும்.

    கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்களை அகற்ற உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் போலீசார் இணைந்து தனி குழு அமைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி, கோவை மாவட்டம் தெக்கலூர் - நீலம்பூர் நெடுஞ்சாலையில் உள்ள அனுமதியற்ற விளம்பர பலகைகளை உடனடியாக அகற்ற போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் மூலம் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கருமத்தம்பட்டி பகுதியில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இன்றி விளம்பர பலகை அமைக்கும்போது, இரும்பு கம்பம் சரிந்து விழுந்து சேலத்தை சேர்ந்த 3 நபர்கள் உயிரிழந்தது தொடர்பாக, அனுமதியின்றி விளம்பர பலகை அமைக்க முயன்ற நிலத்தின் உரிமையாளர் மீதும், சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனம் மீதும் கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி விளம்பர பலகைகள் அமைக்கப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர் மற்றும் விளம்பர நிறுவனத்தின் மீது தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது.
    • விளம்பர பலகை அமைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    கருமத்தம்பட்டி:

    கோவையை அடுத்த கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அதில் இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டன. அதில் பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஒப்பந்த பணியை சேலத்தை சேர்ந்த பாலாஜி, பழனிசாமி ஆகியோர் எடுத்து செய்து வந்தனர்.

    அதில் பாலாஜியின் மேலாளர் அருண்குமார் மேற்பார்வையில் 7 தொழிலாளர்கள் இரும்பு தூண்களில் ஏறி விளம்பர பேனரை பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இரும்புத்தூண் 60 அடி உயரமாக இருந்தபோதிலும் அதில் பாதுகாப்பு ஏற்பாடு ஏதும் செய்யப்பட வில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திடீரென்று காற்று வீசியதால், இரும்பு கம்பிகள் உடைந்து விழுந்தன. இதனால் அந்த கம்பிகள் மீது நின்று வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்களும் அந்த இரும்பு தூண்களுடன் கீழே விழுந்தனர். இதில் அவர்கள் மீது இரும்பு தூண்கள் விழுந்து அமுக்கியது.இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி பலத்த காயம் அடைந்த சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த செந்தில்முருகன் (வயது 38), குமார் (52), குணசேகரன் (52) ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், விளம்பர பலகை அமைக்க எவ்வித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அனுமதி இன்றி பேனர் அமைத்தல், பாதுகாப்பு உபகரணங்கள் அமைக்காதது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாலாஜி, பழனிசாமி, அருண்குமார் மற்றும் நில உரிமையாளர் ராமசாமி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் ஒப்பந்ததாரர் பழனிசாமியை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒப்பந்ததாரரின் மேலாளர் அருண்குமாரை (27) போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாலாஜி, நில உரிமையாளர் ராமசாமி ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.மேலும் அந்த இடத்தில் விளம்பர பேனர் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டதால், அதை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரும்பு தூண்கள், விளம்பர பலகை அனைத்தும் அங்கிருந்து அகற்றப்பட்டது.

    • காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது.
    • பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன.

    கோவை:

    கோவை அடுத்துள்ள கருமத்தம்பட்டி வடுகபாளையம் பிரிவு அருகே சாலையோரம், இத்தாலியன் பர்னிச்சர் நிறுவனத்தின் சார்பில் விளம்பர பேனர் அமைக்கும் பணி நடைபெற்றது.

    இதற்காக 60 அடி உயரத்துக்கு இரும்புத்தூண்கள் அமைக்கப்பட்டு, அதில் இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டன. இந்த ராட்சத விளம்பர பலகையில், பர்னிச்சர் நிறுவனத்தின் விளம்பர பேனர் பொருத்தும் பணி நேற்று மாலை நடைபெற்றது.

    இந்த பணியை சேலத்தை சேர்ந்த பழனிசாமி என்பவர் ஒப்பந்தம் எடுத்து செய்து வந்ததாக கூறப்படுகிறது. இரும்புத் தூண்களின் மேல் ஏறி பேனர் பொருத்தும் பணியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 7 தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. பலத்த காற்று வீசியதால், அந்த இரும்புத்தூண்கள் லேசாக அசைந்தது.

    இதனால் இரும்புத்தூண்களின் மேல் நின்று பேனர் மாட்டிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் அதில் இருந்து கீழே இறங்க முயன்றதாக தெரிகிறது.

    காற்றின் வேகத்தாலும், தொழிலாளர்கள் ஒரே பகுதியில் இறங்கியதாலும், 60 அடி உயர இரும்புத்தூண்கள் மெல்ல வளைய தொடங்கியது. இதனால் அச்சத்தில் தொழிலாளர்கள் கூச்சல் போட்டனர்.

    இதற்கிடையே தரையில் இருந்து 10 அடி உயரத்தில் இரும்புத் தூண்களின் சில கம்பிகள் பயங்கர சத்தத்துடன் உடைந்தன.

    இதனால் பாரம் தாங்காமல் அந்த இரும்புத் தூண்கள் மொத்தமாக சாய்ந்து டமார் என்ற சத்தத்துடன் தரையில் விழுந்தன. அப்போது இறங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்களும் இரும்புத்தூண்களுடன் விழுந்தனர்.

    இதில் சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த குமார் (வயது 40), சேகர் (45), சேலத்தைச் சேர்ந்த குணசேகரன் (52) ஆகிய 3 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மேலும் இடிபாடுகளில் சிக்கி அருண்குமார் (40), சண்முகசுந்தரம் (35) ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனியார் ஒப்பந்த நிறுவன உரிமையாளர் மீது கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே விளம்பர பேனர் முறையான அனுமதி பெற்று வைக்கப்பட்டதா? என்று கருமத்தம்பட்டி நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிக உயரத்தில் பேனர் அமைக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாப்பிட்ட பிறகு தவறாமல் வாய் கொப்பளிக்க வேண்டும்.
    • விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு அண்ணா சாலை வழியாக பேரணியாக புறப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ரெயிலடியில் இன்று இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் உலக வாய் சுகாதார தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதற்கு தஞ்சாவூர் கிளை தலைவர் டாக்டர் ராமகிருஷ்ணன், செயலாளர் இலியாஸ் பாட்ஷா, பொருளாளர் ரவிக்குமார், சி.டி.எச்.கன்வீனர் பொன்மொழி ஆகியோர் தலைமை தாங்கினர்.

    தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பேரணியை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் பல் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தினமும் இரு முறை பல் துலக்க வேண்டும், 6 மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்ய வேண்டும், சாப்பிட்ட பிறகு தவறாமல் வாய் கொப்பளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு அண்ணா சாலை வழியாக பேரணியாக புறப்பட்டனர்.

    பழைய பஸ் நிலையம் அருகே பேரணி முடிவடைந்தது.

    இதில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பல் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • போக்குவதற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராத தொகை விதிக்க வேண்டும்.
    • பொன்னேரி நகராட்சியில் முக்கியமான வீதிகளில் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன.

    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து பல மணி நேரமாக பாதிக்கப்பட்ட நிலையில் 2 கிலோமீட்டர் தூரம் வாகனங்கள் வரிசையில் நின்றன.

    இதனால் விபத்து உயிர் இழப்பு, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் செல்ல வழி இல்லாமல் அவதிப்பட்டனர்.

    இது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்த நிலையில் நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, வியாபாரிகள் சங்கம் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சாலை ஓர நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சாலையில் குறிக்கப்பட்ட அளவிற்கு கயிறுகள் கட்டி அளவீடு செய்யவும், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், போக்குவதற்கு இடையூறாக நிறுத்தும் வாகனங்களுக்கு அபராத தொகை விதிக்க வேண்டும் எனவும், பள்ளி கல்லூரி நேரங்களில் போலீசார் வாகன நெரிசலை சரிபடுத்த வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.

    பொன்னேரி நகராட்சியில் முக்கியமான வீதிகளில் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளன எனவும் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ளதாகவும் இனிவரும் காலங்களில் அனுமதி பெற்று ஒரு நாள் மட்டும் வைத்துக் கொள்ளவும் மீறினால் நகராட்சி ஊழியர்களைக் கொண்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டது.

    பொன்னேரி தேரடி தெருவில் கடைகளில் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை ஆய்வு செய்து போக்குவரத்திற்கு இடையூறாக இருந்தால் அபராததொகை மற்றும் கடைகள் அகற்றப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டு மீறினால் நகராட்சி நிர்வாகம் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
    • மன்னார்குடி வட்ட கிளை இணை செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி, மற்றும் மன்னார்குடி ரெட் கிராஸ் சொசைட்டி வட்டக் கிளை, பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் இணைந்து பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மன்னார்குடியில் நடத்தியது.

    மாவட்ட ரெட் கிராஸ் செயலாளர் வரதராஜன் தலைமை வகித்தார். மன்னார்குடி வட்ட கிளை இணை செயலாளர் கண்ணன் வரவேற்றார்.

    வட்டாரப் போக்கு–வரத்து அலுவலக கண்காணிப்–பாளர் ராஜ்குமார், மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஓருங்கிணைப்பாளர் வெற்றிவேல், மாவட்ட அமைப்பாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆன்டோ கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

    100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    நிகழ்ச்சியில் மன்னார்குடி வட்ட கிளைச் செயலாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஜே. ஆர். சி. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நுகர்வோர் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் ரமேஷ், பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, சுகுணா, செங்கமலத் தயார் மகளிர் கல்லூரி கவியரசி, பவித்ரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை.
    • பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் பேனர்களை வைக்கிறார்கள்.

    மாமல்லபுரம்:

    சென்னை-மாமல்லபுரம் இடையே கரைகடந்த "மாண்டஸ்" புயலால் கிழக்கு கடற்கரை சாலை மற்றும் மாமல்லபுரம், கல்பாக்கம், திருக்கழுகுன்றம் உள்ளிட்ட பகுதியில், அரசு அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த கல்லூரி, ரியல் எஸ்டேட், கட்சிகளின் விளம்பர பேனர்கள் என 100 க்கும் மேற்பட்டவை சூறாவளி காற்றில் முறிந்து விழுந்தது.

    சாலையோரம் முறிந்து விழுந்த பேனர்களை கட்சியினரும், தனியார் நிறுவனங்களும் இன்னும் அகற்றவில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அச்சத்துடன் அப்பகுதியை கடந்து செல்கின்றனர்.

    இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, முதல் கட்டமாக போக்குவரத்து இடையூறு இல்லாமல் சாலையோரம் சரிந்த மின் கம்பங்கள், சுவர் உள்ளிட்டவைகளை அகற்றி வருகிறோம்.

    பேனர்கள் வைக்க நீதிமன்றம் கட்டுப்பாடு இருந்தும் அரசு அனுமதி பெறாமல் அவர்கள் பெரியவகை பேனர்களை வைக்கிறார்கள். இதுபோன்ற பேரிடர் நேரங்களில் அது சரிந்து விழுந்தால் அதன் இரும்பு பைப்புகளால் விபத்து, உயிர் சேதம் ஏற்படும். இதை அப்பகுதி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் தான் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.

    • மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு.
    • பேரணியின் போது மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகூர் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வு பேரணி நாகூரில் நடத்தப்பட்டது.

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்வில் தலைமை ஆசிரியர் சாந்தி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். பயிற்றுநர்கள் சிவா சுகந்தி மற்றும் விஜயலட்சுமி முன்னிலை வகித்தனர்.

    பள்ளி மேலாண்மை குழு தலைவர் கற்பகம் துணைத் தலைவர் மேதின ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக தேசிய பசுமைப்படை ஆசிரியை பிரியா வரவேற்புரை நிகழ்த்தினார்.

    ஆசிரியர் மாதவன் நன்றியுரை ஆற்றினார். பின்னர் விழிப்புணர்வு பேரணியை தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்க்காவல் படை போக்குவரத்து கமாண்டர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மணி வழிநடத்த பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியின் போது பதாகைகளை ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    ×