search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "attacked"

    புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது
    அபுதாபி:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓமன் வளைகுடா பகுதியில் புஜைரா துறைமுகம் அமைந்துள்ளது. அந்நாட்டின் மிகப்பெரிய துறைமுகமான இங்கு, பல்வேறு நாடுகளை சேர்ந்த சரக்கு கப்பல்கள் வந்து செல்கின்றன. இந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 4 வெளிநாட்டு கப்பல்கள் மீது நேற்று முன்தினம் காலையில் நாசவேலை தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்தது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட விதம், தாக்குதலுக்குள்ளான கப்பல்கள் எந்த நாடுகளை சேர்ந்தவை போன்ற கூடுதல் தகவல்களை வெளியிடவில்லை. அதே சமயம் இந்த தாக்குதலில் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், புஜைரா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த தங்கள் நாட்டின் 2 சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அதில் கப்பல்கள் சேதம் அடைந்ததாகவும் சவுதி அரேபியா நேற்று தெரிவித்தது.

    இதுகுறித்து அந்நாட்டின் எரிசக்தித்துறை மந்திரி காலித் அல் பாலிக் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரத்யேக பொருளாதார மண்டலமான புஜைரா துறைமுகத்தில் சவுதி அரேபியாவின் 2 எண்ணெய் கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று சவுதி அரேபியாவின் கச்சா எண்ணெயை அமெரிக்காவுக்கு எடுத்து செல்லும் வழியில் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது” என்றார்.

    ஈரானை எச்சரிக்கும் விதமாக அமெரிக்கா போர் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் தளவாடங்களை மத்திய கிழக்கு பகுதிக்கு அனுப்பி இருக்கும் சூழலில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துறைமுகத்தில் சவுதி அரேபியா உள்பட அயல்நாடுகளின் சரக்கு கப்பல்கள் சேதப்படுத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை துரைப்பாக்கத்தில் ரியல் எஸ்டேட் அதிபரை தாக்கி ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    சென்னை கொளத்தூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் முகமது தாகிரிடம், புறம்போக்கு நிலம் தொடர்பாக சென்னை துரைப்பாக்கத்தில் சிலர் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    பிரச்சினை முற்றிய நிலையில், கட்டப்பஞ்சாயத்து செய்தவர்கள் முகமது தாகிரை சரமாரியாக தாக்கி உள்ளனர். அவரிடம் இருந்த ஒரு கோடி ரூபாய் பணம் மற்றும் சொத்து ஆவணங்களையும் பறித்துள்ளனர். இது தொடர்பாக முகமது  தாகிர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கட்டப்பஞ்சாயத்து செய்தவர்களை தேடி வருகின்றனர். 
    சிதம்பரத்தில் பணம் கேட்டு மிரட்டி வியாபாரியை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிதம்பரம்:

    சிதம்பரம் பொன்னம்பலம் நகரை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 42). இவர் சிதம்பரம் பகுதியில் உள்ள கடைகளுக்கு குளிர்பானம் விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ராமநாதன் தனது வீட்டில் மினி லாரியில் இருந்து குளிர்பான பாட்டில்களை இறக்கி கொண்டிருந்தார்.

    அப்போது சிதம்பரம் சிவசக்தி நகரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன்கள் புருஷோத்தமன்(26), சுந்தர்ராஜன்(22), ஓமகுளம் பன்னீர் செல்வம் மகன் முரளி(30), சிதம்பரம் செங்கட்டான் தெருவை சேர்ந்த கணேசன் மகன் பரணிதரன்(28), மணி(53), சுப்புரமணி மகன் சூரியமுர்த்தி(26) ஆகியோர் அங்கு வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் ராமநாதனிடம் தங்களுக்கு பணம் வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவர் தன்னிடம் பணம் எதுவும் இல்லை, நான் எதற்கு உங்களுக்கு பணம் தர வேண்டும், தர முடியாது என்று கூறியுளளார்.

    இதனால் ஆத்திரமடைந்த 6 பேரும் சேர்ந்து ராமநாதனை உருட்டு கட்டை, இரும்பு கம்பியால் தாக்கினர். மேலும் அவரது மினி லாரியையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். ராமநாதன் காயத்துடன் கிடப்பதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் புருஷோத்தமன் உள்பட 6 பேர் மீதும் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குபதிவு செய்து, அவர்கள் அனைவரையும் கைது செய்தார்.
    மியான்மரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது கிளர்ச்சிக் குழுவினர் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதைத் தொடர்ந்து தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. #MyanmarAttack #RakhineState
    யாங்கோன்:

    மியான்மரின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் அதிகளவில் வாழ்ந்து வருகின்றனர். வங்காளதேசம் நாட்டில் இருந்து குடிபெயர்ந்து மியான்மரில் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டவர்களாக இருக்கும் இவர்களில் சிலர், ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தாக்குதல் நடத்தும் ரோஹிங்கியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான ராணுவ வேட்டை தீவிரம் அடைந்தது. ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து லட்சக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்று தஞ்சம் புகுந்துள்ளனர்.



    அதன்பின்னரும் அரகான் ராணுவம் என்ற கிளர்ச்சிக் குழுவானது, ராணுவம் மற்றும் காவல்துறையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த வாரம் வியாழக்கிழமை மிராக் யு பகுதியிலும், வெள்ளிக்கிழமை கியாக்டாவ் பகுதியிலும் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல் நடத்தினர்.

    இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இரவு மிராக் யு நகருக்குள் ராணுவ வீரர்கள் வாகனங்களில் சென்றபோது, மீண்டும் தாக்குதல் நடத்தினர். அங்குள்ள வீடுகளுக்குள் பதுங்கியிருந்து கிளர்ச்சியாளர்கள் தாக்கினர்.  ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கி சண்டையில் 6 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. #MyanmarAttack #RakhineState
    கருங்கல் அருகே பள்ளிக்கூடத்திற்கு சென்ற ஆசிரியரை வழிமறித்து தாக்கிய முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள பாலூரை சேர்ந்தவர் ஜாண் எட்வின் (வயது 52). இவர் மத்திக்கோடு பகுதியில் உள்ள தனியார் பள்ளிக் கூடம் ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை வழக்கம் போல தனது மோட்டார் சைக்கிளில் ஜாண் எட்வின் பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

    மத்திக்கோடு பகுதியில் அவர் சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அவரை வழிமறித்தது. அவர்கள் அனைவரும் தங்களை மற்றவர்கள் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காக முகத்தை துணியால் மூடி மறைத்து இருந்தனர்.

    அந்த 3 பேரும் ஆசிரியர் ஜாண்எட்வினிடம் தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றியதில் அந்த முகமூடி கும்பல் தங்கள் கைகளில் இருந்த இரும்பு கம்பி, சுத்தியல் போன்ற ஆயுதங்களால் ஆசிரியரை சரமாரி யாக தாக்கினார்கள். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் ஜாண் எட்வின் கூச்சல் போட்டு அலறினார். அவரது சத்தம் கேட்டு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப் பார்த்ததும் அந்த முகமூடி கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுவிட்டது.

    முகமூடி கும்பல் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஆசரியர் ஜாண்எட்வின் சிகிச்சைக்காக மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த சம்பவம் பற்றி கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை தாக்கிய முகமூடி கும்பலை சேர்ந்தவர்கள் யார்? எதற்காக இந்த தாக்குதல் நடந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
    ஆம்பூர் அருகே மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன. கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் அருகே கிராமப் பகுதிகளில் வெள்ளாடுகள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து கால்நடை மற்றும் சுகாதாரத் துறையினர் அப்பகுதிகளில் முகாமிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆம்பூர் அருகே மிட்டாளம், பைரப்பள்ளி, பந்தேரப்பள்ளி, வன்னிய நாதபுரம், ரகுநாதபுரம், மேக்கனாம்பல்லி, ராள்ளக்கொத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளாடுகளை வளர்த்து வருகின்றனர்.

    அதோடு மட்டுமல்லாமல் தமிழக அரசு இலவசமாக வழங்கிய வெள்ளாடுகளையும் வளர்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக மர்ம நோயால் பாதிக்கப்பட்டு 100க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் இறந்தன.

    இந்நிலையில் மிட்டாளம், பைரப்பள்ளி பகுதிகளுக்கு கால்நடைத்துறையினர் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். கால்நடைத்துறை நோய்கள் புலனாய்வு இணை இயக்குனர் டாக்டர் ஸ்ரீஹரி தலைமையில் கால்நடை டாக்டர்கள் ரமேஷ்குமார், பிரவீன்குமார் உள்ளிட்ட குழுவினரும், பொது சுகாதாரத்துறை வட்டார மருத்துவ அலுவலர் குமார் தலைமையில் மாவட்ட பூச்சியியல் நிபுணர் காமராஜ், வட்டார சுகாதார அலுவலர் ரஷீத், சுகாதார ஆய்வாளர் பிரேம் உள்ளிட்ட குழுவினரும் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து கால்நடை துறையின் நோய்கள் புலனாய்வு பிரிவு இணை இயக்குனர் ஸ்ரீஹரி கூறியதாவது:-

    வழக்கத்தை காட்டிலும் அதிக பனிப்பொழிவே வெள்ளாடுகள் இறப்புக்கு காரணம். திறந்த வெளியில் உள்ள பட்டிகளில் வெள்ளாடுகளை அடைக்கக்கூடாது. கூரை மேய்ந்த கொட்டகைகளில் மட்டுமே ஆடுகளை அடைத்து பாதுகாக்க வேண்டும்.

    ஆடுகளுக்கு நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். நோய் தாக்கி வெள்ளாடுகள் இறந்தால் அவற்றை குழி தோண்டி புதைக்க வேண்டும். உணவுக்காக சம்மந்தப்பட்ட வெள்ளாட்டின் இறைச்சியை பயன்படுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும், நோய் தாக்குதலுக்கு ஆளான வெள்ளாட்டு கொட்டகைகளை பார்வையிட்டனர். வெள்ளாடுகளின் சளி, சாணம் போன்றவற்றை பரிசோதனைக்காக எடுத்து சென்றனர்.

    போரூர் போலீஸ் நிலையம் அருகே வங்கி ஏ.டி.எம். மையத்தில் பணம் நிரப்ப வந்த ஊழியரை கத்தியால் வெட்டி, ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்து சென்றவர்களை, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். #ATM #MoneyRobbery
    பூந்தமல்லி:

    சென்னை போரூரை அடுத்த நூம்பல் மூவேந்தர் நகர் பகுதியில் கனரா வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று இரவு 8.30 மணியளவில் தனியார் ஏஜென்சி ஊழியர்களான தேவராஜ் (வயது 35), முரளி(30) ஆகியோர் இந்த ஏ.டி.எம்-மில் பணம் நிரப்ப காரில் வந்தனர்.

    மொத்தம் ரூ.14 லட்சம் வைத்து இருந்தனர். அதில் ரூ.4 லட்சத்தை ஏ.டி.எம். எந்திரத்தில் வைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர்கள், ஏ.டி.எம். மையத்தின் ஷட்டரை அடைக்காமல், திறந்து இருந்த நிலையிலேயே வைத்து இருந்தனர். அவர்களிடம் இருந்த பெட்டியில் மீதம் ரூ.10 லட்சம் இருந்தது.

    அப்போது 2 மர்மநபர்கள் மோட்டார்சைக்கிளில் அங்கு வந்தனர். இருவரும் தலையில் ஹெல்மெட்டும், கை உறையும் அணிந்து இருந்தனர். ஒருவர் மோட்டார்சைக்கிளில் இருக்க, மற்றொருவர் மட்டும் ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று, தேவராஜ் கையில் ரூ.10 லட்சம் இருந்த பெட்டியை தரும்படி கேட்டார்.

    காயம் அடைந்த தேவராஜ்.

    ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த மர்மநபர், கத்தியால் தேவராஜின் கையில் வெட்டினார். பின்னர் அவரிடம் இருந்து ரூ.10 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு, அங்கு தயாராக நின்ற தனது கூட்டாளியுடன் மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பிச்சென்று விட்டார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த தேவராஜ், முரளி இருவரும் வெளியே ஓடிவந்து கூச்சலிட்டனர். இதுபற்றி மதுரவாயல் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு துணை கமிஷனர் சுதாகர், உதவி கமிஷனர் ஜான்சுந்தர் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். கொள்ளையன் கத்தியால் வெட்டியதில் காயம் அடைந்த தேவராஜூக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர்.

    அதில், தேவராஜ், முரளி இருவரும் நேற்று மதியம் முதல் ரூ.35 லட்சம் பணத்துடன் வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், போரூர், காட்டுப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கனரா வங்கி ஏ.டி.எம்.களில் பணத்தை நிரப்பினர். பின்னர் கடைசியாக ரூ.14 லட்சம் பணத்துடன் இரவு 8.30 மணியளவில்தான் நூம்பல் பகுதியில் உள்ள இந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்து பணத்தை நிரப்பினர்.

    கொள்ளையர்கள் இவர்கள் இருவரையும் பின்தொடர்ந்து வந்து, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையர்கள் உருவம் மற்றும் அவர்கள் தப்பிச்சென்ற மோட்டார்சைக்கிள் எண் பதிவாகி இருந்தது. அதை வைத்து கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த கொள்ளை சம்பவத்தில் தேவராஜ், முரளி ஆகியோருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

    கொள்ளை நடந்த ஏ.டி.எம். மையம் அருகிலேயே போரூர் போலீஸ் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  #ATM #MoneyRobbery
     
    ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடித்தனர். பின்னர் வலைகளை அறுத்து எறிந்தனர். #SriLankannavy #Rameswaramfisherme

    ராமேசுவரம்:

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 19 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், இலங்கை கடற்படை அத்துமீறலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக ராமேசுவரம் மீனவர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று 400-க்கும் மேற்பட்ட படகுகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேலான மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர்.

    அவர்கள் மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்து, இங்கு மீன் பிடிக்கக்கூடாது என எச்சரித்தனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் அங்கிருந்து அவசர, அவசரமாக புறப்பட்டனர்.

    அப்போது சில கடற்படை வீரர்கள், மீனவர்களின் படகுகளுக்குள் நுழைந்து வலைகளை அறுத்து எறிந்தனர். தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த ரீகன் என்பவரது படகிற்குள் நுழைந்த கடற்படையினர், ரீகன் உள்பட 4 மீனவர்களை தாக்கினர்.

    மேலும் பல மீனவர்கள் படகுகளில் இருந்த மீன்பிடி உபகரணங்களும் சேதப்படுத்தப்பட்டன. கடற்படையினர் விரட்டியடித்ததால் மீனவர்கள் பாதியிலேயே மீன்பிடிப்பதை விட்டு விட்டு இரவிலேயே கரை திரும்பிவிட்டனர்.

    தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்படுவது மீன்பிடி தொழிலை நசுக்கும் செயல். இதனை மத்திய - மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #SriLankannavy #Rameswaramfisherme

    சபரிமலை சென்று சாமி தரிசம் செய்த கனகதுர்கா, அவரது மாமியார் தாக்கியதில் படுகாயடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Sabarimalatemple #Kanakadurga
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 2-ந்தேதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    காலம் காலமாக சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வந்த ஆச்சாரத்தை மீறி சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்த முதல் இளம்பெண்கள் என்ற சிறப்பை இவர்கள் பெற்றனர்.

    ஆனாலும் இவர்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தது ஐயப்ப பக்தர்களிடையே ஆத்திரத்தை எற்படுத்தியது. அவர்களுக்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த இளம்பெண்களுக்கு மிரட்டல்களும் வந்தன. இதனால் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.

    சபரிமலை சென்று திரும்பிய பிறகு கனகதுர்கா தனது உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தங்கி இருந்து வந்தார். இந்த நிலையில் நிலைமை சற்று சகஜம் ஆனதை தொடர்ந்து கனகதுர்கா நேற்று அதிகாலையில் மலப்புரம் அங்காடிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டில் அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணி, 2 குழந்தைகள் மாமியார் சுமதி ஆகியோர் இருந்தனர். கனகதுர்காவை பார்த்ததும் ஆவேசம் அடைந்த மாமியார் சுமதி, அவரை வீட்டிற்குள் வர வேண்டாம் என்று கூறி தடுத்தார். ஆச்சாரத்தை மீறி சபரிமலைக்கு சென்றது ஏன்? என்று கூறி அவரை கண்டித்தார்.

    அதற்கு தான் ஆச்சாரத்தை மீறவில்லை என்று கனகதுர்கா கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் ஆவேசம் அடங்காத சுமதி, வீட்டில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக கனகதுர்காவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கனகதுர்கா மயங்கி விழுந்தார்.

    மேலும் கனகதுர்கா அங்கு வந்த தகவல் அறிந்த ஐயப்ப பக்தர்களும் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கனக துர்காவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தன்னை மாமியார் தாக்கியது பற்றி கனகதுர்கா, போலீசில் புகார் செய்தார். போலீசார் 324-வது பிரிவின்படி மாமியார் சுமதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சுமதியும், தன்னை கனகதுர்கா தாக்கியதாக புகார் செய்துள்ளார். அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Sabarimalatemple #Kanakadurga



    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள அரசுக்கு சொந்தமான அலுவலகத்தை இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியதற்கு முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். #mutharasan #keralagovernmentoffice

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள அரசுக்கு சொந்தமான சுற்றுலா அலுவலகத்தின் மீது நேற்று நள்ளிரவில் இந்துத்துவ அமைப்பினர் கல்வீசி தாக்கி உள்ளனர்.

    இத்தாக்குதல் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. ஆனால் தாக்குதல் சம்பவத்தில் சுமார் 15 பேர் கொண்ட கும்பல் ஈடுபட்டதாக தகவல்கள் உள்ளன.

    இத்தாக்குதல் சம்பவத்தை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #mutharasan #keralagovernmentoffice

    சென்னையில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #KeralaGuestHouse
    சென்னை:

    சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள கேரள விருந்தினர் இல்லத்தின் ஒரு பகுதியில் ஓட்டல் செயல்படுகிறது. இந்த ஓட்டலுக்கு நேற்று இரவு வந்த ஒரு கும்பல், திடீரென கற்களை வீசியும் உருட்டுக்கட்டையால் தாக்கியும் கண்ணாடியை உடைத்தனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த தாக்குதல் தொடர்பாக ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



    சபரிமலையில் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து கேரள சுற்றுலா அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கேரள விருந்தினர் இல்லம் கல்வீசி தாக்கப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் அவர் ஆயிரம் விளக்கு பகுதி இந்து முன்னணி தலைவர் பார்த்தசாரதி என்பது தெரிய வந்துள்ளது. #KeralaGuestHouse
    நைஜீரியா நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவ தளபதியாக பதவி வகித்த அலெக்ஸ் படேஹ் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். #Nigeriaformerdefencechief #AlexBadeh
    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவ தளபதியாக பதவி வகித்தவர் அலெக்ஸ் படேஹ். 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விமானப்படை தளபதியாக பதவியேற்ற இவர், பின்னர் முப்படைகளின் தளபதியாக 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். 13-7-2015 அன்றுவரை இந்த பதவியில்இருந்தார்.

    பணி ஓய்வு பெற்ற நிலையில் தனது பண்ணையில் இருந்து நேற்று மாலை காரில் சென்றபோது அபுஜா-கெஃபி நெடுஞ்சாலையில் அவரது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அலெக்ஸ் படேஹ்-வை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும், இந்த தாக்குதலில் மேலும் இருவர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #Nigeriaformerdefencechief #AlexBadeh
    ×