search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மியான்மர்"

    • மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர்.
    • தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    நேபிடோவ்:

    மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்த்துவிட்டு 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து ராணுவ தளபதி மின் ஆங் ஹலைங் தலைமையிலான ஆட்சி அங்கு நடந்து வருகிறது.

    இதற்கிடையே தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர். இதனால் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    அதேபோல் ராணுவ ஆட்சிக்கு எதிராக ஆங்காங்கே கிளர்ச்சியாளர்களும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மியான்மரின் புத்தாண்டு பண்டிகையான திங்யான் எனப்படும் நீர் திருவிழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன்படி மாண்டலே பிராந்தியத்தில் நடைபெற்ற திங்யான் திருவிழாவில் ராணுவ ஆட்சியின் தளபதி மின் ஆங் ஹலைங்கும் கலந்து கொண்டார்.

    இந்தநிலையில் மின் ஆங் கலந்து கொண்ட புத்த மடாலயம் அருகே மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசினர். இதில் அங்குள்ள புத்த மடாலயம் மற்றும் ஓட்டல் போன்றவை இடிந்து தரைமட்டமாகின.

    இதனையடுத்து அங்கிருந்தவர்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த தாக்குதலில் 2 புத்த மத துறவிகள் உள்பட 4 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனவே இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.
    • ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுக்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

    மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜனநாயக அரசை கவிழ்த்து விட்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராளி குழுக்கள் சண்டையிட்டு வருகிறார்கள். இதில் சில பகுதிகளை போராளி குழுக்கள் கைப்பற்றியது. மேலும் தாக்குதலில் வீரர்களும் உயிரிழந்தனர்.

    போராளி குழுக்களுடன் மோதலில் மியான்மர் ராணுவம் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் மியான்மரில் முதல் முறையாக ராணுவ சேவை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் இளைஞர்கள், பெண்கள் குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும்.

    முந்தைய ராணுவ அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட 2010 மக்கள் ராணுவ சேவைச் சட்டத்தின் கீழ், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட ஆண்களும், 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஆயுதப் படைகளில் சேர்க்கப்படலாம். தேசிய அவசர காலங்களில் ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம்.

    இதுகுறித்து ராணுவ அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஜாவ் மின் துன் கூறும்போது: "மியான்மரின் தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சட்டத்தை செயல்படுத்துவது எதிரிகளுக்கு வலிமையைக் காட்டுவதன் மூலம் போரைத் தடுக்க உதவும்.

    தேசப் பாதுகாப்பு என்பது சிப்பாயின் பொறுப்பு மட்டுமல்ல. இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து மக்களின் பொறுப்பாகும். தேசிய பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பு. அதனால் மக்கள் ராணுவ சேவை சட்டத்தின் கீழ் அனைவரும் பெருமையுடன் பணியாற்ற வேண்டும் என்று கூற விரும்புகிறேன்" என்றார்.

    2021-ம் ஆண்டு அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து மியான்மர் ராணுவத்தில் இருந்து 14 ஆயிரம் வீரர்கள் வெளியேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மிசோரமில் இனக்குழுக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது.
    • ராணுவ வீரர்கள் சரணடைந்து வருவதால், மிசோரமில் தஞ்சம் அடைகிறார்கள்.

    மியான்மரில் அந்நாட்டு ராணுவத்திற்கும், ஆயுதமேந்திய இனக்குழுவினருக்கும் இடையில் சண்டை நடைபெற்று வருகிறது. ஒரு சில நகரங்களில் இனக்குழுக்கள் ஒன்றாக இணைந்து ராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வருகின்றன.

    இதனால் ராணுவம் இனக்குழுக்களை எதிர்த்து போரிட முடியவில்லை. அவர்களிடம் சரணடைந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மியான்மர் ராணுவ வீரர்கள் உயிருக்கு பயந்து இந்தியாவிற்கு ஒடி வருகின்றனர். எல்லையில் உள்ள மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    அவர்களை அடிக்கடி வெளியேற்றும் முயற்சிகளை மிசோரம் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்த போதிலும் தற்போது அதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தியாவின் மிசோரம் மாநிலத்திற்குள் வந்துள்ளனர்.

    இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து மிசோரம் அரசு கவலை அடைந்துள்ளது. இதனால் அவர்களை உடனடியாக மாநிலத்தில் இருந்து மியான்மருக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

    வடகிழக்கு கவுன்சில் கூட்டம் ஷில்லாங்கில் நடைபெற்றது. அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மிசோரம் முதல்வர் லால்துஹொமா விவரமாக எடுத்துக் கூறியதாக தெரிகிறது.

    அப்போது, உடனடியாக மியான்மர் ராணுவ வீரர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அமித் ஷாவிடம் லால்துஹோமா வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து லால்துஹோமா கூறுகையில் "மியான்மரில் இருந்து மக்கள் தஞ்சம் கேட்டு எங்கள் மாநிலத்திற்கு வருகிறார்கள். அவர்களுக்கு நாங்கள் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்து வருகிறோம். முன்னதாக இங்கு வந்து அடைக்கலம் கேட்டு தங்கியிருந்த ராணுவ வீரர்களை நாங்கள் விமாங்கள் மூலம் அங்கு திருப்பி அனுப்பி வைத்தோம். சுமார் 450 வீரர்களை அனுப்பி வைத்துள்ளோம்" என்றார்.

    • கடந்த 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கனமழை
    • வீடுகளில் முதல் தளங்கள் வெள்ளத்தால் மூழ்கியதால் மக்கள் தத்தளிப்பு

    மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

    மியான்மரில் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது வழக்கமானதுதான். இருந்தாலும், தற்போதைய அதிதீவிர வானிலை நிகழ்வுகள் பருவநிலை மாற்றத்தால் மோசமடைந்து வருவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

    யங்கோனின் வடகிழக்கு பகுதியான பாகோவில் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் முன்னெச்சரிக்கை காரணமாக பலர் வெளியேறிய நிலையில், வெள்ளத்தில் அளவு அதிகரிக்க மீட்புப்படையினர் வீட்டில் இருந்த மக்களை பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.

    இரண்டு மாடி கொண்டு கட்டிடங்களில் முதல் தளம் வெள்ளத்தால் மூழ்கின. இதனால் மக்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்குள்ள மடங்களில் தஞ்சம் அடைந்தனர். அவர்களுக்கு துறவிகள் உணவு அளித்தனர்.

    கடந்த ஏழு எட்டு ஆண்டுகளில் பகோ பகுதியில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக கனமழை பெய்துள்ளதாக அங்கு வசிக்கும் 66 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.

    • காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
    • புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.

    வங்க கடலில் உருவான மோக்கா புயல் நேற்று முன்தினம் வங்காளதேசம், மியான்மர் இடையே கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. இந்த அதிதீவிர புயல் வங்காளதேச-மியான்மர் எல்லையில் உள்ள கடலோர பகுதிகளைப் பந்தாடியது. குறிப்பாக வங்காளதேசத்தின் காக்ஸ் பஜார் மற்றும் சட்டோகிராம் நகரங்கள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

    புயல் கரையைக் கடந்தபோது வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கடலோர பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. புயலின் தாக்கம் தணிந்ததையடுத்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் நடைபெறுகின்றன.

    மோக்கா புயல் மற்றும் வெள்ளப்பெருக்கினால் 60 பேர் உயிரிழந்திருப்பதாக அரசு ஆதரவு ஊடகத்தில் செய்தி வெளியாகி உள்ளது. ரக்கினே மாநிலத்தில் மட்டும் 41 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நூற்றுக்கணக்கான மக்களை காணவில்லை. அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. எனவே, பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. 

    • மியான்மரில் கடந்த 2021 முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது.
    • மியான்மர் ராணுவத்திற்கு சீனா ராணுவ உதவிகளை வழங்குவதாக தகவல்.

    இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள், ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளன. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தினர். அதை ராணுவம் ஒடுக்கியது.

    மியான்மர் ராணுவ ஆட்சிக்கு சீனா ஆதரவு அளித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. இந்த நிலையில் மியான்மர் ராணுவத்துக்கு சீனா மேலும் ராஜதந்திர ரீதியிலான மற்றும் ராணுவ உதவிகளை அளித்துள்ளதாக ஐரோப்பா ஆசியா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

    கடந்த மாதம் மியான்மரின் 75 ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி 7 ஆயிரத்து 12 கைதிகளை விடுவிக்க இருப்பதாக ராணுவம் தெரிவித்தத. மேலும் இந்த ஆண்டு இறுதியில் மியான்மரில் தேர்தல் நடைபெறும் என அந்நாட்டு ராணுவ தலைவர் மின் ஆங் தெரிவித்து இருந்தார். தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சாங் சூகி விடுதலை செய்யப்படும் கைதிகள் பட்டியலில் இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது.

    • சிறுபான்மையின அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்ற போது தாக்குதல் நடத்தப்பட்டது.
    • பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் கொல்லப்பட்டதாக தகவல்

    மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆங் சான் சூ கியின் தேசிய ஜனநாயக லீக் கட்சி ஆட்சியை பிடித்தது. என்றாலும் தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த ஆட்சியை கலைத்த அந்நாட்டு ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு மாகாணமான கச்சினில் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் விழா நடைபெற்ற பகுதியில் ராணுவனத்தினர் விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் பார்வையற்றோர், பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்தனர். நேற்று அந்நாட்டு ராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது. எனினும் உயிரிழந்தவர்களில் பாடகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இல்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.

    இதனிடையே, மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபை கண்டனம் தெரிவித்துள்ளது நிராயுதபாணியான பொது மக்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு ராணுவ அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழகர்கள் முதற்கட்டமாக இன்று 13 பேர் மீட்கப்படுகின்றனர்.
    • வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் இன்று இரவு 8 மணிக்கு தாயகம் திரும்பவுள்ளனர்.

    தாய்லாந்தில் தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக இணையதளத்தில் வெளியான தகவலின் அடிப்படையில் 60-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விண்ணப்பித்தனர்.

    வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி சென்ற இந்தியர்கள், தாய்லாந்து அழைத்து செல்வதாக கூறி சம்பந்தப்பட்ட வேலை வாய்ப்பு நிறுவனம் சட்ட விரோதமாக மியான்மருக்கு கடத்தி சென்று ஏமாற்றப்பட்டு இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தராமல் பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனர்.

    இதையடுத்து, மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தினார்.

    இந்நிலையில், மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழகர்கள் முதற்கட்டமாக இன்று 13 பேர் மீட்கப்பட்டு விமானம் மூலம் இன்று தாயகம் அழைத்து வரப்படுகிறார்கள். அதன்படி, வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்ட 13 தமிழர்கள் இன்று இரவு 8 மணிக்கு தாயகம் திரும்பவுள்ளனர்.

    • சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.
    • தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது.

    மியான்மர் நாட்டில் தவிக்கும் தமிழர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமல்ஹாசன், சீமான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தாய்லாந்து நாட்டிற்கு வேலை தேடிச் சென்ற தமிழக இளைஞர்கள் உள்ளிட்ட இந்தியர்களை மியான்மர் நாட்டுக்கு கடத்திச் சென்று, சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடுத்தி, கொடுமைப் படுத்துவதாக வரும் தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை உடனடியாக மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    மேலும் இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வெளிநாடு வேலை என்று கூறி அழைத்துச் செல்லப்பட்டு ஏமாற்றப்பட்ட தமிழர்கள் மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் காணொலி அதிர்ச்சியளிக்கிறது.

    தற்போது மியான்மர் நாட்டுச் சிறையில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மீட்க தூதரகம் மூலம் இந்திய ஒன்றிய அரசு விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தமிழர்கள் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணித்து உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ராணுவத்தால் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக தகவல்.
    • துப்பாக்கிச் சூட்டில் சில குழந்தைகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

    மியான்மரில் உள்ள பள்ளி ஒன்றின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் மத்திய சகாயிங் பிராந்தியத்தில் உள்ள லெட் யெட் கோன் என்கிற கிராமத்தில் நடந்துள்ளது. இங்குள்ள புத்த மடாலயத்தில் உள்ள பள்ளியின் மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    டிஆர்டி வேர்ல்ட் என்கிற செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, துப்பாக்கிச் சூட்டில் சில குழந்தைகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். மற்றவர்கள் ராணுவத்தினர் கிராமத்திற்குள் நுழைந்து நடத்திய தாக்குதலில் இறந்தனர்.

    மேலும் இறந்தவர்களின் சடலங்கள் பின்னர் இராணுவத்தால் 11 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்பட்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    2020 பிப்ரவரி 1-ம் தேதி இடம்பெற்ற சதிப்புரட்சியைத் தொடர்ந்து மியான்மர் இராணுவ ஆட்சிக்குழு நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா-மியான்மர் நாட்டு எல்லை உள்ளது. இங்கிருந்து மியான்மர் நாட்டின் எல்லை வழியாக சென்று சிலர் வேலை பார்த்து வருகிறார்கள்.
    • எல்லை பகுதிக்குள் ஏன் நுழைந்தார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறோம் என்றனர்.

    யாங்கூன்:

    மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரெக் பகுதியில் வசித்து வந்தவர்கள் தமிழ் வம்சாவளியை சேர்ந்த மோகன் (28), அய்யனார் (35).

    இவர்கள் வசித்த பகுதியில் இந்தியா-மியான்மர் நாட்டு எல்லை உள்ளது. இங்கிருந்து மியான்மர் நாட்டின் எல்லை வழியாக சென்று சிலர் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அதேபோல் தற்போது ராணுவ ஆட்சி நடைபெறும் மியான்மரில் மோகன், அய்யனார் இருவரும் குடியேறினர். அங்கு மோகன் ஆட்டோ டிரைவராகவும், அய்யனார் கடை வைத்தும் வேலை பார்த்தனர்.

    இந்த நிலையில் இந்தியா-மியான்மர் எல்லையில் மோகன், அய்யனார் இருவரும் பிணமாக கிடந்தனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இருவரின் நெற்றியிலும் குண்டு பாய்ந்து இருந்தது. அவர்களது உடல்கள் இந்தியா-மியான்மர் எல்லையில் இருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் தமு என்ற பகுதியில் கிடந்தது.

    2 தமிழ் இளைஞர்களை மியான்மரை சேர்ந்த பயங்கரவாத குழு சுட்டுக் கொன்றதாக மணிப்பூர் மாநில போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து அவர்கள் கூறும்போது, மியான்மர் நாட்டில் செயல்படும் 'பியூ ஷா தீ' என்ற பயங்கரவாத குழுவை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து மோகன், அய்யனார் ஆகிய 2 பேரையும் சுட்டுக் கொன்று உள்ளனர். அவர்கள் உடல்கள் மியான்மரில் உள்ள ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் எல்லை பகுதிக்குள் ஏன் நுழைந்தார்கள் என்பது பற்றி விசாரித்து வருகிறோம் என்றனர்.

    சுட்டுக் கொல்லப்பட்ட மோகனுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மணிப்பூர் மாநில முதல்-மந்திரி நோங்தோம்பம் பிரென் கூறும்போது, மியான்மர் ராணுவத்தின் பின்னணியில் உள்ள பயங்கரவாத குழு சுட்டுக் கொன்று இருக்கலாம் என்று தெரிவித்தார்.

    2 தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மோரெக்சில் செயல்படும் தமிழ் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக தமிழ் சங்கத்தினர் கூறியதாவது:-

    மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்டதையடுத்து மத்திய அரசு வழிகாட்டு தல்படி சர்வதேச எல்லை மூடப்பட்டது. ஆனால் இரு நாட்டு மக்களும் தங்களது வர்த்தக வாழ்வாதாரம் உள்ளிட்ட காரணங்களுக்காக எல்லையை கடந்து செல்கிறார்கள். 2 தமிழ் இளைஞர்களை உளவு பார்த்ததாக மியான்மர் ராணுவம் சந்தேகித்து இருக்கலாம்.

    சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் மோரொக் பகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள். அவர்கள் அப்பாவிகள். இவர்களின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என்றனர்.

    இந்த படுகொலையை கண்டித்து மோரெக் பகுதியில் கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மோரொக் பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் வம்சாவளியினர் வசித்து வருகிறார்கள்.

    1960-ம் ஆண்டு மியான்மரில் நடந்த வன்முறையின்போது யாங்கூனில் இருந்து மோரெக்குக்கு ஏராளமான தமிழர்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    மியான்மர் நாட்டில் தேச துரோக குற்றம் சுமத்தப்பட்டு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட இரு நிருபர்களுக்கு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். #MikePence
    வாஷிங்டன் :

    மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியான ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை ரோஹிங்கியா இன முஸ்லிம்கள் மீது கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவத்தினரின் உச்சகட்ட தாக்குதலில் சுமார் 20 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின.

    உயிருக்கு பயந்து சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்றனர். மியான்மரில் இருந்தபோது ரோஹிங்கியா இனப் பெண்களை ராணுவத்தினர் கொடூரமான முறையில் கற்பழித்ததாகவும் தகவல்கள் வெளியானது.

    இதற்கிடையில், மியான்மர் நாட்டின் பாதுகாப்புக்குரிய ரகசியத்தை திருடியதாக ரய்ட்டர்ஸ் என்னும் பிரபல செய்தி நிறுவனத்தை சேர்ந்த இரு நிருபர்களை கடந்த டிசம்பர் மாதம் போலீசார் கைது செய்தனர்.

    ரக்கினே மாநிலத்துக்குட்பட்ட இன்டின் என்னும் கிராமத்தில் சட்டமீறலாக பத்து பேரை சுட்டுக் கொன்றது தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றபோது, தங்களை ஓட்டலுக்கு சாப்பிட வருமாறு அழைத்த போலீசார் சில ஆவணங்களை தங்களிடம் தந்ததாகவும், ஓட்டலை விட்டு வெளியே வந்ததும் நாட்டின் ரகசியத்தை திருடியதாக கைது செய்து சிறையில் அடைத்ததாகவும் கைதான நிருபர்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், கைதான நிருபர்கள் மீதான தேசத்துரோக வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி யாங்கூன் நகர நீதிபதி யே ல்வின், குற்றம்சாட்டப்பட்டிள்ள வா லோனே(32), கியாவ் சொய் ஊ(28) ஆகியோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார்.

    இந்த தண்டனைக்கு எதிராக உலகம் முழுவதும் கண்டனக்குரல் வலுத்துவரும் நிலையில் அவர்களை விடுதலை செய்யக்கோரி மியான்மர் நாட்டின் பல பகுதிகளில் மனித உரிமை ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், ஐக்கிய நாடுகள் சபையும் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியுள்ளது.



    இந்நிலையில், அமெரிக்கா துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், மியான்மர் அரசு கைது செய்யப்பட்ட நிருபர்கள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.  

    இது குறித்து ட்விட்டரில் மைக் பென்ஸ் பதிவிட்டுள்ளதாவது :-

    ரோகிங்கியா முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளை வெளிக்கொண்டு வந்த வா லோனே, கியாவ் சொய் ஊ ஆகிய இருவரையும் பாராட்ட வேண்டும். இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மைகளை வெளியிடுவது அவர்களின் வேலை, இதற்காக அவர்களை சிறையில் அடைத்திருக்க கூடாது.

    ஜனநாயகத்தை வலிமைப்படுத்த மதம் மற்றும் ஊடக சுதந்திரம் அவசியமாகும். எனவே, மியான்மர் அரசு அவர்களுக்கு எதிராக பிறப்பித்த கைது உத்தரவை திரும்பப்பெற்று அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். #MikePence
    ×