search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kanakadurga"

    சபரிமலை சென்று சாமி தரிசம் செய்த கனகதுர்கா, அவரது மாமியார் தாக்கியதில் படுகாயடைந்தார். மேல் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Sabarimalatemple #Kanakadurga
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கடந்த 2-ந்தேதி கேரள மாநிலத்தைச் சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    காலம் காலமாக சபரிமலையில் கடைபிடிக்கப்பட்டு வந்த ஆச்சாரத்தை மீறி சபரிமலை சென்று சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்த முதல் இளம்பெண்கள் என்ற சிறப்பை இவர்கள் பெற்றனர்.

    ஆனாலும் இவர்கள் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்தது ஐயப்ப பக்தர்களிடையே ஆத்திரத்தை எற்படுத்தியது. அவர்களுக்கு எதிராக பக்தர்கள் போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு தரப்பில் இருந்தும் இந்த இளம்பெண்களுக்கு மிரட்டல்களும் வந்தன. இதனால் அவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்தினார்கள்.

    சபரிமலை சென்று திரும்பிய பிறகு கனகதுர்கா தனது உறவினர் மற்றும் தோழிகள் வீடுகளில் தங்கி இருந்து வந்தார். இந்த நிலையில் நிலைமை சற்று சகஜம் ஆனதை தொடர்ந்து கனகதுர்கா நேற்று அதிகாலையில் மலப்புரம் அங்காடிபுரத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீட்டில் அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணி, 2 குழந்தைகள் மாமியார் சுமதி ஆகியோர் இருந்தனர். கனகதுர்காவை பார்த்ததும் ஆவேசம் அடைந்த மாமியார் சுமதி, அவரை வீட்டிற்குள் வர வேண்டாம் என்று கூறி தடுத்தார். ஆச்சாரத்தை மீறி சபரிமலைக்கு சென்றது ஏன்? என்று கூறி அவரை கண்டித்தார்.

    அதற்கு தான் ஆச்சாரத்தை மீறவில்லை என்று கனகதுர்கா கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் ஆவேசம் அடங்காத சுமதி, வீட்டில் இருந்த கட்டையை எடுத்து சரமாரியாக கனகதுர்காவை தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கனகதுர்கா மயங்கி விழுந்தார்.

    மேலும் கனகதுர்கா அங்கு வந்த தகவல் அறிந்த ஐயப்ப பக்தர்களும் திரண்டதால் பரபரப்பான சூழ்நிலை உருவானது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் கனக துர்காவை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக மஞ்சேரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தன்னை மாமியார் தாக்கியது பற்றி கனகதுர்கா, போலீசில் புகார் செய்தார். போலீசார் 324-வது பிரிவின்படி மாமியார் சுமதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையில் சுமதியும், தன்னை கனகதுர்கா தாக்கியதாக புகார் செய்துள்ளார். அதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.  #Sabarimalatemple #Kanakadurga



    கடும் எதிர்ப்புக்கிடையில் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்தது தொடர்பாக பிந்து, கனகதுர்கா பேட்டி அளித்துள்ளனர். #SabarimalaTemple
    திருவனந்தபுரம்:

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் கேரளாவை சேர்ந்த 44 வயது கனகதுர்கா மற்றும் 42 வயது பிந்து ஆகியோர் சில நாட்களுக்கு முன்பு சாமி தரிசனம் செய்தனர்.

    இவர்கள் 2 பேரும் ஏற்கனவே சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது ஐயப்ப பக்தர்களால் விரட்டியடிக்கப்பட்டவர்கள். 2-வது முறையாக போலீஸ் பாதுகாப்புடன் அதிகாலை நேரத்தில் சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்து உள்ளனர்.

    இவர்கள் முதலில் சபரிமலை சென்றுவிட்டு சாமி தரிசனம் செய்ய முடியாமல் திரும்பியபோது தலைமறைவாகி விட்டனர். அப்போது அவர்கள் மாயமாகிவிட்டது பற்றி போலீசிலும் புகார் செய்யப்பட்டு விசாரணையும் நடந்தது. ஆனால் அந்த பெண்கள் 2 பேரும் எங்கே சென்றனர் என்ற மர்மம் தற்போது விலகி உள்ளது.

    பிந்துவும், கனகதுர்காவும் பெங்களூருவில் உள்ள ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்து உள்ளனர். அந்த லாட்ஜ் உரிமையாளருக்கு முதலில் அவர்கள் யார்? என்று தெரியவில்லை. அந்த பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்த பிறகு அவர்களது புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வந்த பிறகு தான் அதை பார்த்து லாட்ஜ் உரிமையாளர், பிந்துவும், கனகதுர்காவும் தங்கள் லாட்ஜில் தங்கியிருந்ததை தெரிந்து கொண்டுள்ளார்.

    அந்த லாட்ஜில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் பிந்து, கனகதுர்கா அறையை பதிவு செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

    தற்போது கனகதுர்காவும், பிந்துவும் கொச்சியில் உள்ள போலீஸ் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளனர். அவர்களில் பிந்து கூறியதாவது:-

    நாங்கள் ஆம்புலன்சில் சென்று சாமி தரிசனம் செய்ததாக கூறுவது தவறு. பக்தர்களோடு, பக்தர்களாக நடந்து சென்று தான் சாமி தரிசனம் செய்தோம். இடதுசாரி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று கூறுவதும் தவறு. எந்த அமைப்பையும் சார்ந்து இருக்கவில்லை.

    பா.ஜனதா நடத்திய மனித உரிமை தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசி உள்ளேன். அதனால் என்னை பா.ஜனதாவைச் சேர்ந்தவர் என்று கூற முடியுமா? அதேபோல சபரிமலைக்கு சென்றதால் நான் கம்யூனிஸ்டும் கிடையாது. கம்யூனிஸ்டு என்றாலும் அவர்கள் பக்தர்களாக இருக்கக்கூடாதா?. நான் முன்பு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் இயக்கத்தில் இருந்தேன். ஆனால் 8 ஆண்டுகளாக அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.

    கடந்த 24-ந் தேதி சபரிமலை சென்றபோது எங்களால் சுவாமி ஐயப்பனை தரிசிக்க முடியவில்லை. இதனால் சாமி தரிசனம் செய்த பிறகு தான் வீடு திரும்ப வேண்டும் என்ற உறுதியோடு உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் மாறி, மாறி வசித்தோம். போலீசார் வற்புறுத்தி எங்களை அழைத்து செல்லவில்லை. நாங்கள் தான் போலீசின் உதவியை நாடினோமே தவிர அவர்கள் எங்களை நாடவில்லை. பம்பை சென்று போலீஸ் பாதுகாப்பு கேட்டோம். போலீசார் பாதுகாப்பு வழங்கினார்கள். தற்போது ஊரில் போராட்டம் நடப்பதால் ஒதுங்கி உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நான் எனது சொந்த விருப்பத்தின் பேரில் தான் சபரிமலை சென்றேன். இதில் எந்த வற்புறுத்தலும் கிடையாது. பிந்துவுடன் எனக்கு ஏற்கனவே பழக்கம் உண்டு. இதனால் அவருடன் சேர்ந்து சென்று சாமி தரிசனம் செய்தேன். நான் கணவர், குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். ஆனாலும் எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு நான் சபரிமலை செல்வதில் விருப்பம் இல்லை. எனது விருப்பத்தை நிறைவேற்றவே நான் சபரிமலை சென்றேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SabarimalaTemple
    ×