search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Accidents"

    • இருசக்கர வாகன பயன்பாடு குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
    • இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் இருசக்கர வாகன பயன்பாடு, அதன் அபரிமிதமான விளைவுகளை வட்டார போக்குவரத்து அலுவலர் மூக்கன் விளக்கினார்.

    அவர் பேசுகையில், போக்குவரத்து விதிமுறைகள் தெரியாமல் சிறுவர்கள் வாகனத்தை வேகமாக ஓட்டுகின்றனர். வாகன நெரிசல் அதிகமாக உள்ள சாலையில் கூட வேகமாக செல்கின்றனர். இதனால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.

    இதை தடுக்க தமிழக போக்குவரத்துத்துறை 2019ல் திருத்தப்பட்ட மோட்டார் வாகன ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் சட்டப்பிரிவின்படி 18 வயதுக்கு கீழ் வாகனங்களை ஓட்டும் சிறுவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம், 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று எடுத்துரைத்தார்.

    இதில் தலைமை ஆசிரியர் சிவமணி, மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம், உதவி காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர்.
    • வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

    வீரபாண்டி:

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் நொச்சிபாளையம் செல்லும் சாலை ஏ.பி. நகர்., நொச்சிபாளையம், அவரப்பாளையம்,அல்லாளபுரம் ,உகாயனூர் வழியாக பொங்கலூர் செல்கிறது. இப்பகுதியில் பனியன் நிறுவனங்கள். தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளிட்டவை அதிக அளவில் உள்ளன. திருப்பூர் செல்வதற்கான மாற்று வழித்தடம் என்பதால் வாகன ஓட்டிகள் அதிக அளவில் இந்த வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். போக்குவரத்து நிறைந்த இந்த சாலையில் தினந்தோறும் விபத்துகள் அதிகரித்து வருவதால் ஏபி நகர்,தெற்கு வட்டாரப் போக்குவரத்து வாகன ஆய்வு செய்ய செல்லும் இடம், .நொச்சிப்பாளையம் ஆகிய மூன்று இடங்களிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வேகத்தடை அமைக்க முன் வந்தனர். இதற்காக 3 இடங்களிலும் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு நான்கு மாதங்களுக்கு மேல் ஆகின்றன. ஜல்லிக்கற்களும் இறுகி விட்டன. ஆனால் வேகத்தடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கவில்லை. இதனால் விபத்துக்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. எனவே இந்த 3 இடங்களிலும் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • மாவட்ட அறிவியல் மையத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல் குறித்த பயிலரங்கம் நடந்தது.
    • கங்கைகொண்டான் பகுதியில் ஆய்வு செய்து விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அறிவியல் மையத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல் குறித்த பயிலரங்கம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அறிமுக உரையை சி.ஏ.ஜி ஆராய்ச்சியாளர் வர்ஷா வாசுகி வழங்கினார். இதில் ஐஐடி பேராசிரியர்கள் வேதகிரி, மோசஸ் சாந்தகுமார், முதுநிலை திட்ட ஆலோசகர் சந்தீப் கெய்க்வாட், ராஜு, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அறிவியல் அதிகாரி எஸ்.எம்.குமார், அறிவியல் அதிகாரி மாரி லெனின், நிர்வாக இயக்குனர் சரோஜா, மூத்த ஆராய்ச்சியாளர் சுமனா நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் நான்கு வழிச்சாலையில் அதிக விபத்துக்கள் நடைபெற்று வந்தது.

    சராசரியாக ஆண்டு முழுவதும் இந்த பகுதியில் 12-க்கும் மேற்பட்ட விபத்து இறப்பு நிகழ்வு நடந்து வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆய்வு செய்து விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் அங்கே செயல்படுத்தப்பட்டது.

    இதன் காரணமாக இப்போது விபத்து இல்லாத ஒரு பகுதியாக மாறி வருகின்றது. இன்று தமிழகத்தில் அரசு விபத்து நடந்தவுடன் 24 மணி நேரத்திலே இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தின் மூலமாக பல்வேறு உயிர்கள் காக்கப்பட்டு வருகிறது. விபத்தில்லா நெல்லையாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    • மதுரை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாயினர்.
    • கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பெட்ரோல் பங்க் அருகே நேற்று நள்ளிரவு 4 வழிச்சாலையை கடக்க முயன்ற 55 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னாரெட்டியபட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). கூலித்தொழிலாளி. நேற்று இவர் திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூர் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டி.புதுப்பட்டி அருகே சென்றபோது எதிரே கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு மீன்லோடு ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    • நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
    • எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பாலத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனத்தில் இருந்து சாலையில் சிறிது தூரம் ஆயில் சிந்தியது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பில் உள்ள ஈரடுக்கு மேம்பாலத்தில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பாலத்தில் இன்று காலை அடையாளம் தெரியாத வாகனத்தில் இருந்து சாலையில் சிறிது தூரம் ஆயில் சிந்தியது.

    இதனால் அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாலையில் வழுக்கி விழுந்தனர். அதிர்ஷ்டவசமாக பெரிய வாகனங்கள் அந்நேரத்தில் வராததால் சாலையில் விழுந்தவர்கள் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    பொதுமக்கள் தகவலின்பேரில் நெல்லை சந்திப்பு போக்குவரத்து பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி தலைமையில் காவலர்கள் ராஜதுரை மற்றும் கோபால் ஆகியோர் ஈரடுக்கு மேம்பாலத்திற்கு விரைந்து சென்று அருகிலிருந்த மணலை கொண்டு சாலையில் சிந்திய ஆயில் மீது கொட்டி சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் வாகனங்கள் வழக்கம் போல சென்றது.

    • விதி மீறும் வாகனங்களால் விபத்து அதிகரித்துள்ளது.
    • ஆனால் பெரும்பாலான டிரைவர்கள் இதனை பின்பற்றுவதில்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. குறுகிய சாலை வசதிகளால் அடிக்கடி விபத்துகளும் தேவையில்லாத உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

    சாலை விபத்துகளை தடுக்க சாலை பாதுகாப்பு வாரம் உள்ளிட்ட பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியும் எவ்வித பயனில்லை. அதிவேகம், சாலை விதிமீறல், வாகனங்களை கண்காணிப்பதில் மெத்தனம் உள்ளிட்ட காரணங்களால் விபத்துகள் அடிக்கடி நடந்து வருகிறது.

    கருப்பு ஸ்டிக்கர்

    வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டாமல் வருவதால் இரவு நேரத்தில் எதிரே வரும் வாகனங்களின் டிரைவர்கள் நிலை தடுமாறுகின்றனர். எதிரே வாகனங்கள் வரும்போது முகப்பு வெளிச்சத்தை குறைக்கவேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் பெரும்பாலான டிரைவர்கள் இதனை பின்பற்றுவதில்லை.

    இதனால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதிக அளவில் விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அதிக விபத்து ஏற்படுகிறது. விபத்தை ஏற்படுத்தும் டிரைவர்கள் தப்பிச் சென்று விடுகின்றனர்.

    ராமநாதபுரம் பகுதியில் வாகன முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாலையை அதிகமாக கடக்கின்றனர்
    • கதித்தமலை கோவில் ஆர்ச் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

    ஊத்துக்குளி :

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி திருப்பூர் செல்லும் முக்கிய சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சார் பதிவாளர் அலுவலகம் ஆகியவை உள்ளன. காலை நேரத்தில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் இந்த சாலையை அதிகமாக கடக்கின்றனர்.

    இதில் கதித்தமலை கோவில் ஆர்ச் அருகே அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இன்று காலை காரும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இது கடந்த 3 மாதத்தில் நடக்கும் 4-வது விபத்தாகும். இந்த சந்திப்பில் வேகத்தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே அரசு அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த மாதம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது.
    • இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள்.

    தென்காசி:

    குற்றாலம் அருவிகளில் ஏற்படும் வெள்ளத்தால் விபத்து மற்றும் உயிரிழப்பு களை தவிர்க்க குற்றாலம் மலை ப்பகுதியில் வனமுகாம்கள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் வெங்காடம்பட்டி திருமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த மாதம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கினால் அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது.

    இதில் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள்.

    இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அருவிக்கு மேல் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் வன முகாம்கள் அமைத்து வனத்துறையினரை தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்.

    அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் நேரங்களில் வன முகாம்களில் உள்ள வனத்துறையினர் உடனடியாக அருவிப்பகு தியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இதன்மூலம் காவல்துறை யினர் துரிதமாக செயல்பட்டு அருவிப்பகுதிகளில் குளித்துக் கொண்டிருக்கும் சுற்றுலா பயணிகளை அப்புறப்படுத்தி விபத்துக் கள் நடைபெறாமல் தவிர்க்க லாம்.

    மேலும் அருவிப் பகுதியில் கடந்த காலங்களில் செயல்பட்டு வந்த அபாய சங்கு முறையையும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • திண்டுக்கல்லில் இருந்து நத்தம், காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
    • அஞ்சுகுழிபட்டி அருகே விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிக்கார்டு அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்லில் இருந்து நத்தம், காரைக்குடி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.

    இந்த நிலையில் திண்டுக்கல் நத்தம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று முடியும் தருவாயில் உள்ளது. இந்த பணியின் போது மேட்டுக்கடை அஞ்சுகுழிட்டி பிரிவு அருகே ரோடு சீரமைக்கப்பட்டது.இதனால் அஞ்சுகுழிபட்டி ரோடு மேடாக உள்ளது.

    இந்த நிலையில் அஞ்சுகுழிபட்டி, எல்லப்பட்டி சோழகுளத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து வரக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு மெயின் ரோட்டில் வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை.

    இதனால் அஞ்சுகுழிபட்டி பிரிவு அருகே அடிக்கடி வாகன விபத்து மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. நேற்று அஞ்சுகுழிட்டியை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கார் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    அஞ்சுகுழிபட்டி அருகே விபத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேரிக்கார்டு போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிராமப்புற சாலைகளில் இருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு சொல்கிறார்.
    • தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் கிராமப்புற சாலைகளிலிருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் விபத்துகள் மூலம் தினமும் 410 உயிரிழப்புகளும், தமிழகத்தில் 41 உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளை இணைக்கும் கிராமப்புற சாலைகளிலிருந்து வருவோர் தான் அதிக விபத்துகளை ஏற்படுத்துகின்றனர்.

    இதைக் கட்டுப்படுத்த வேகத்தடைகள் அமைக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருசக்கர வாகன பயன்பாடு 42 சதவீதமும், 4 சக்கர வாகன பயன்பாடு 17 சதவீதமும், கனரக வாகன பயன்பாடும் 14 சதவீதமும் உள்ளது. இதில் இருசக்கர வாகன விபத்துக்களே அதிகம் நடக்கின்றன.

    'நம்மை காக்கும் 48 மணி நேரம்' திட்டத்தில் விபத்து சிகிச்சை அளிக்க 659 தனியார் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் இதுவரை 83512 விபத்துகளில் தமிழக அரசு ரூ.75.81 கோடி செலவழித்து 83512 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

    விபத்தை அதிகளவில் குறைத்து முதலிடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.25 லட்சமும், 2-ம் இடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.13 லட்சமும், 3-ம் இடம் பெறும் மாவட்டத்திற்கு ரூ.10 லட்சமும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரைச் சாலை 4 வழிச்சாலைக்காக மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டு

    முதல்கட்டமாக சென்னை முதல் பாண்டிச்சேரி வரை பணி நடந்து வருகிறது. 2-ம் கட்டமாக நாகப்பட்டினம் வரை, 3-ம் கட்டமாக ராமநாதபுரம் வரை, 4-ம் கட்டமாக தூத்துக்குடி வரை, 5-ம் கட்டமாக கன்னியாகுமரி வரை சாலை அமைக்கப்பட உள்ளது. தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கார் நிறுத்தம் மற்றும் கழிப்பறை அமைப்பதற்கு இடத்தை ஆய்வு செய்துள்ளேன்.

    சாகர் மாலா திட்டத்தின் பாம்பன் பாலத்தின் கீழ் பாம்பன் கால்வாய் 10 மீட்டர் ஆழத்தில் தூர்வார மத்திய அரசிடம் நிதி கோரப்படும்.

    தனுஷ்கோடி-தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்துள்ளேன். இதற்காக முதல்வருடன் டெல்லி சென்று மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும். தமிழகத்தில் அதிகமாக உள்ள சுங்கச்சாவடிகளை குறைக்க மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், நவாஸ்கனி எம், பி, , எம்.எல்.ஏ, க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், நெடுஞ்சாலைகள் துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஏரிச்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நுழையாதபடி தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.
    • கண்துடைப்பாக நடந்த ஏரிச்சாலை ஆக்கிரமிப்பு பல சுற்றுலா பயணிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில மாதங்களுக்கு முன் கோடைசீசன் தொடங்கிய போது நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிச்சாலையின் இருபுறமும் கனரக வாகனங்கள் நுழையாதபடி தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டன.

    ஆனால் வாகனம் இடித்தது போல் எரிச்சாலை யின் இருபுறமும் அந்த தடுப்பு கம்பி வேலிகள் உடைந்து கிடந்தன. தற்போது ஏரிச்சாலை ப்பகுதி யில் பஸ், தண்ணீர் லாரி, அதிக நீளமும் அதிக உயரமும் கொண்ட டெம்போக்கள், வேன் ஆகிய கனரக வாகனங்கள் இரு புறங்களில் இருந்தும் வருவதால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    ஏற்கனவே இருபுறமும் அகற்றப்பட்ட சாலையோர கடைகள் மீண்டும் அமைக்கப்பட்டு இடையூறு ஏற்பட்டுள்ள நிலையில் கனரக வாகனங்களும் ஏரிச்சாலை பகுதியில் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிர்பலி நிகழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சில நேரங்களில் கனரக வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்து வருகின்றனர்.

    கண்துடைப்பாக நடந்த ஏரிச்சாலை ஆக்கிரமிப்பு பல சுற்றுலா பயணிகளின் உயிர்களை காவு வாங்க காத்திருக்கிறது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சுற்றுலாப் பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடந்த மாதம் கோடை சீசன் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது.
    • நடுவட்டம் தொடங்கி கூடலூர் வரை பள்ளதாக்கான சாலை என்பதால் பெரும்பாலான வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

    ஊட்டி:

    கேரளா-கர்நாடகா மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். கடந்த மாதம் கோடை சீசன் என்பதால் தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா வாகனங்கள் இயக்கப்பட்டது.

    அப்போது மலைப்பிரதேசத்தில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை பல டிரைவர்கள் பின்பற்றாததால் விபத்துகள் அதிகரித்தது. ஊட்டியில் இருந்து வரும் போது நடுவட்டம் தொடங்கி கூடலூர் வரை பள்ளதாக்கான சாலை என்பதால் பெரும்பாலான வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியது.

    இதனால் மலைப்பாதையில் 2-வது கியரை பயன்படுத்தி வாகனங்களை ஓட்ட வேண்டும் என போக்குவரத்து போலீசார் சாலையோரம் நின்று வெளிமாநில டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கி வந்தனர். இதனால் விபத்துகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கூடலூர்-கேரள சாலைகள், ஊட்டி செல்லும் சாலை ஆகிய இடங்களில் கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருகிறது. சமீபத்தில் ஸ்ரீமதுரையில் இருந்து கூடலூர் நோக்கி வந்த ஒரு வேன் நம்பாலக்கோட்டை என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

    அதிர்ஷ்டவசமாக வேனை ஓட்டி வந்த டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அதிகாலை ஊட்டியில் இருந்து கூடலூர் வழியாக கேரள மாநிலம் சுல்தான்பத்தேரி சென்று கொண்டிருந்த ஒரு கார் 2-ம் மைல் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    அப்பகுதியில் மின்கம்பம் இருந்ததால் அதில் கார் தடுத்து நின்றது. இதனால் கார் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கடும் நடவடிக்கை இதேபோல் பல இடங்களில் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் கூறும்போது, மலைப்பாதையில் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கக்கூடாது. மேலும் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    ×