search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadi Festival"

    • மிகவும் சக்திவாய்ந்த இந்த தீபத்தை நீங்களும் ஏற்றி பலன் அடையுங்கள்.
    • மாவிளக்கு போடுவதால் நிறைய நன்மைகள் உண்டு.

    பொதுவாகவே மாவிளக்கு போடுவது என்பது மிகவும் விசேஷமான ஒரு நிகழ்வாகும். மாவிளக்கு போடுவதால் நிறைய நன்மைகள் உண்டு. அதுவும் ஆடி மாதம் மாவிளக்கு போடுவது சிறப்பான பலன்களைத் தரும் என்பார்கள். ஆடி மாதம் மாவிளக்கு போடுவதால் மழை பொழியும் என்பது நமது முன்னோர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

    ஆடி மாதத்தில் அம்மனுக்கு மிகவும் விசேஷமான விளக்காக மாவிளக்கு கருதப்படுகிறது. பக்தர்கள் ஏதாவது தவறு செய்யும் பொழுது அம்மனிடம் மன்னிப்பு கேட்பதற்கு மாவிளக்கு போட்டு மனதார மன்னிப்பு கேட்பார்கள். உடனே அம்மனும் மனமிறங்கி மன்னித்து அருள்வதாக புராண வரலாறுகள் உண்டு. ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மகாலட்சுமிக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். உங்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் சுகபோக வாழ்வு அமையும்.

    மாவிளக்கு செய்வதற்கு தேவையான பொருட்கள்: பச்சரிசி – கால் கிலோ, வெல்லம் 100 கிராம், ஏலக்காய் பொடி 1/2 டீஸ்பூன், சுக்குப்பொடி 1/2 டீஸ்பூன், பச்சை கற்பூரம் சிறிதளவு.

    மாவிளக்கு செய்யும் முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து வெயிலில் அல்லது மின்விசிறி காற்றில் உலர வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசி நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசி மாவுடன் வெல்லம் பாகு காய்ச்சி ஊற்றலாம் அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிவிட்டு சேர்க்கலாம். அதன் பின் ஏலக்காய் பொடி, சுக்குப்பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளலாம். இதை சேர்த்தால் தெய்வீக வாசமாக இருக்கும். எல்லாம் ஒன்றாக கலந்துவிட்டு தேவையான அளவிற்கு நெய் சேர்த்து உருண்டை பிடிக்க வேண்டும்.

    உருண்டையாக இல்லாமல் ஒரு உருளையாக தட்டி வைத்துக் கொண்டால் தீபம் செய்வதற்கு வசதியாக இருக்கும். உருளை வடிவத்தில் கொண்டு வந்து பின் இரண்டாக ஆக்கிக் கொள்ளுங்கள். எப்போதும் மாவிளக்கு ஒற்றையில் போடக்கூடாது. 2 தீபங்கள் அல்லது 4 தீபங்கள் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும் பொழுது நெய் ஊற்றி தான் ஏற்ற வேண்டும். ஏனென்றால் இதை நிவேதனமாக சாப்பிட இருப்பதால் வேறு எண்ணெய்களை உபயோகிக்கக்கூடாது.

    தனித்தனியாக இப்போது தீப வடிவில் மேலே குழியாக கைவிரல் வைத்து அழுத்திக் கொள்ளுங்கள். சந்தனம் குங்குமம் இட்டு, அதில் நெய் ஊற்றி 2 திரிகளை ஒன்றாக திரித்து தீபம் ஏற்ற வேண்டும். மாவிளக்கு ஏற்றுவதால் உங்களுக்கு இருக்கும் அனைத்து பிரச்சனைகளும் படிப்படியாக நீங்குவதை நீங்களே உணரலாம். மிகவும் சக்திவாய்ந்த இந்த தீபத்தை நீங்களும் ஏற்றி பலன் அடையுங்கள்.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    • கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.
    • எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்று பார்க்கலாம்.

    கோனியம்மனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. அதில் எத்தனை விளக்குகளை ஏற்றி வழிபட்டால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்:

    2 விளக்கு- குடும்பம் மேன்மைபெறும்.

    3 விளக்கு- எடுத்த காரியத்தில் வெற்றி கிட்டும்.

    4 விளக்கு- நற்கல்வி, உடல் ஆரோக்கியம் கிட்டும்.

    5 விளக்கு- விநாயகர் அருள் கிடைக்கும்.

    6 விளக்கு- நோய்கள் குணமாகும்.

    7 விளக்கு- திருமணத்தடை நீங்கும்.

    8 விளக்கு- மாங்கல்ய பலம் கூடும்.

    9 விளக்கு- நவக்கிரக பிணிகள் நொடியில் அகலும்.

    10 விளக்கு- தொழில் மேன்மை பெறும். கடன் தொல்லைகள் அகலும்.

    11 விளக்கு- செய்தொழிலில் லாபம் கிட்டும். போட்டியில் வெற்றி வசப்படும்.

    12 விளக்கு- ஜென்மராசியில் உள்ள தோஷங்கள் நீங்கும்.

    13 விளக்கு- பில்லிசூனியபாவம் விலகும்.

    14 விளக்கு- குலதெய்வபலம், சந்தான பலன் கிடைக்கும்.

    15 விளக்கு- வழக்கில் வெற்றி வசப்படும்.

    16 விளக்கு- வாழ்வில் 16 செல்வங்களும் கிட்டும்.

    17 விளக்கு- வாகனம், வண்டி யோகம் கிடைக்கும்.

    27 விளக்கு- நட்சத்திர தோஷம் நீங்கும்.

    48 விளக்கு- தொழில் வளரும், பயம் நீங்கும்.

    108 விளக்கு- நினைத்த காரியம் நடக்கும்.

    508 விளக்கு- தீராத திருமண தோஷங்கள் அகலும்.

    1008 விளக்கு- சகல சவுபாக்கியங்களும் கிட்டும்.

    • 1-ந்தேதி இரவு 12 மணிக்கு சாம கொடை விழா நடக்கிறது.
    • 2-ந்தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.

    கோவை சங்கனூர்-நல்லம்பாளையம் ரோட்டில் ஞானமூர்த்தீஸ் வரர் சமேத முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கொடை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி 20-ம் ஆண்டு கொடை விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முகூர்த்தகால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் பக்தர்கள் சூழ முகூர்த்த கால் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    வருகிற 30-ந் தேதி மாலை 6 மணிக்கு 501 திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பட்டி மன்றம் நடக்கிறது. 31-ந் தேதி இரவு வில்லிசை நிகழ்ச்சி, நள்ளிரவில் அம்மனுக்கு குடியழைப்பு பூஜை மற்றும் மாக்காப்பு தீபாராதனை நடக்கிறது.

    அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந் தேதி காலை 10 மணிக்கு வில்லிசை, மதிய கொடை விழா மற்றும் அம்மன் திருவீதி உலா, மாலை 6 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் அழைப்பு நடக்கும். அன்று இரவு 12 மணிக்கு சாம கொடை விழா மற்றும் வான வேடிக்கை நடக்கிறது. 2-ந் தேதி அம்மனுக்கு பொங்கல் வைத்து மறுபூஜை நடக்கிறது.

    • ஆண்டாள் கோவில் 108 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 14-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 22-ந் தேதி தேரோட்ட திருவிழா நடைபெற்றது, இதையொட்டி நிறைவு நிகழ்ச்சியாக புஷ்பயாகம் நேற்று நடைபெற்றது. இதை யொட்டி ஆண்டாள் கோவில் 108 வகையான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சேலத்தில் பல மாரியம்மன் கோவில்கள் உண்டு.
    • 15 நாட்கள் ஊரே குதூகலமாக இருக்கும்.

    சேலம் மாநகரத்தின் மத்தியில் பழைய பேருந்து நிலையம் அருகே நடுநாயகமாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறாள் அன்னை கோட்டை மாரியம்மன். சேலத்தில் அமைந்துள்ள 8 மாரியம்மன்களுக்கு தலைமையாக விளங்குவதால் 8 பேட்டைகளைக் கட்டியாளும் அன்னை கோட்டை மாரி என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

    சந்திர கிரகணம், சூரிய கிரகணம் போன்ற காலங்களில் கூட கோவில் நடை சாத்தப்படுவதில்லை. நவகிரகங்களுக்கும் நாயகி என்பதால் இந்த கோவிலில் கிரகண காலங்களின் போது சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது என்பது கூடுதல் சிறப்பு. ஆடிப்பெருக்கு நிகழ்வுக்கு பிறகு வரும் 22 நாளும் இங்கு விழாக்கோலம் தான்.ஒவ்வொரு நாளும் ஒரு அலங்காரம், உற்சவம் என அம்மன் கண் கொள்ளா, காட்சியளிப்பாள்.

    ஆடி மாதத்தில் அம்மனுக்கு பூச்சாட்டலுடன் விழா தொடங்கி 22 நாட்கள் நடைபெறும். இங்கு அம்மனுக்கு பூச்சாட்டப்பட்ட பூ கொண்டே மற்ற அம்மன் கோவிலில் பூச்சாட்டல் நடைபெறுவது வழக்கம். பண்டிகையின் போது கோட்டை பெருமாள் கோவிலில் இருந்து தங்கையான கோட்டை மாரியம்மனுக்கு சீர்வரிசை வருகிறது.

    பெரிய மாரியம்மனின் கண்களும், பலி பீடத்திலுள்ள அம்மனின் கண்களும் ஒரே நேர்கோட்டில் அமைந்துள்ளது சிறப்பாகும். சேலத்திற்கு பல சிறப்புகள் உண்டு. சேலத்தில் ஆடி மாதத் திருவிழா மதுரை சித்திரைத் திருவிழாவிற்கு ஒப்பானது சேலம் கோட்டை மாரியம்மன். சுத்து பட்டு எட்டு ஊர்களுக்கு அவள்தான் கண்கண்ட தெய்வம், ஆடி பதினெட்டு முடிந்து வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி என 4 நாட்கள் திருவிழா.

    சேலத்தில் பல மாரியம்மன் கோவில்கள் உண்டு. அத்தனைக்கும் தலைமையிடம் கோட்டை பெரியமாரியம்மன். குகை மாரியம்மன், செவ்வாய்பேட்டை, அன்னதானப்பட்டி மாரியம்மன், சஞ்சீவராயன்பேட்டை மாரியம்மன் என எல்லாக் கோவில்களிலும் ஒரே நேரத்தில் திருவிழா நடைபெறும். ஊரே மிக பரபரப்பாய் இருக்கும் காலம் ஆடி மாதம்.

    15 நாட்கள் ஊரே குதூகலமாக இருக்கும். பட்டிமன்றங்கள், நாடகங்கள், சினிமா, ஆர்க்கெஸ்ட்ரா என தினம் எதாவது நிகழ்ச்சி இருக்கும். போஸ் மைதானத்தில் அரசு பொருகாட்சி இடம்பெறும். இதுவரை இவ்வளவு பெரிய கண்காட்சியை வேற எங்கும் பார்த்ததில்லை. கண்காட்சியிலும் தினம் ஒரு நாடகம், தினம் ஒரு சினிமாவும் உண்டு.

    மாரியம்மன் பண்டிகையில் செவ்வாய் கிழமை சக்தி அழைப்பு மற்றும் உருளு தண்டம், புதன் பூமிதித்தல், வியாழன் வண்டி வேடிக்கை, வெள்ளி வாணவேடிக்கை மற்றும் சத்தாபரண ஊர்வலம், சனிக்கிழமை கம்பம் விடுதல் என ஊரே கோலாகலமாக இருக்கும்.

    நையாண்டி மேளம், கரகாட்டம் என கிராமியக் கலைகளும் உண்டு. வண்டி வேடிக்கைதான் ஹைலைட். மக்கள் புராண காட்சிகள் போல அலங்கரிக்கப்பட்ட மின்னொளி வண்டிகளில் குகை மாரியம்மன் கோவிலுக்கு வருவார்கள். மாடர்ன் தியேட்டர்ஸ், புலிக்குத்தித் தெரு நண்பர்கள், கார்கானா நண்பர் குழு, ஜிக்க பக்கா நண்பர் குழு என பல பெரிய பெரிய குழுக்கள் இதில் பங்கேற்க சிறந்த அலங்கார வண்டிகளுக்குப் பரிசளிக்கப்படும். இரவு 12 மணிவரை கூட லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்து இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பார்கள்.

    சேலத்தில் கொண்டாடப்படும் இன்னும் சில முக்கியப் பண்டிகைகள்

    ஆடி 1 - தேங்காய் உருட்டி நார்நீக்கி, ஒரு கண்ணை மட்டும் நோண்டி அதில் அரிசி, வெல்லம், பருப்பு இட்டு நெருப்பில் சுட்டு பிள்ளையாருக்குப் படைப்பது.

    ஆடி பதினெட்டு - மேட்டூர், பவானி, சித்தர்கோவில், கந்தாசிரமம் போன்ற நீருள்ள இடங்களுக்குச் சென்று நீராடுவது.

    ஆடி இருபத்தி எட்டு - மேட்டூர் முனியப்பன் கோவில் விழா.

    ஆவணி - ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி - விநாயகர் சதுர்த்தியும் இரண்டு நாட்கள் விழாவாக கொண்டாடப்படும். நாடகம் பட்டி மன்றம் ஆர்க்கெஸ்ட்ரா என அமர்க்களப்படும்.

    புரட்டாசி - ஐப்பசி ஆயுத பூஜை / தீபாவளி. தீபாவளி என்றாலே வெடி. இரவு முழுக்க வெடி. தீபாவளி அன்று சினிமா பார்க்காதவர்களுக்கு மோட்சம் கிடையாது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் வேப்பிலை தோரணத்தை காணலாம்.
    • ஆடியில் சூறைக்காற்று வீசுகிறது.

    ஆடி என்றவுடன் முதலில் நம் நினைவிற்கு வருவது அம்மன் கோவிலும், வேப்பிலையும்தான். சாகை வார்த்தல், கூழ் ஊற்றுதல் என அனைத்து அம்மன் ஆலயங்களிலும் கூட்டம் அலைமோதும். கிராமப்புறங்களில் உள்ள வீடுகளில் வேப்பிலை தோரணத்தையும் காணலாம்.

    ஆடி மாதம் என்றாலே அம்மன் தானா, மற்ற தெய்வங்கள் இல்லையா? எல்லா மாதங்களிலும்தான் வெள்ளிக்கிழமை வருகிறது; அதென்ன ஆடிவெள்ளிக்கு மாத்திரம் அத்தனை மகத்துவம் என்ற சந்தேகமும் நம் மனதில் தோன்றுகிறது. இந்த சந்தேகத்திற்கு ஜோதிடவியல் ரீதியான விளக்கத்தை காண்போம்.

    கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் என்பதால் ஆடி மாதத்திற்கு கடக மாதம் என்று பெயர். அதாவது, தகப்பனைக் குறிக்கும் சூரியன், தாயாரைக் குறிக்கும் சந்திரனின் சொந்த வீடான கடக ராசியில் இணையும் மாதம் இது. சூரியனின் பிரத்யதிதேவதை, பசுபதி எனப்படும் ஈஸ்வரன். சந்திரனின் பிரத்யதிதேவதை, கௌரி எனப்படும் அம்பிகை. இறைவன் அம்பிகையின் இல்லத்தை நாடிச் செல்லும் காலம். அதாவது, தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற சக்தியோடு சிவம் இணையும் காலமிது என்பதால் சக்தி மிகவும் மகத்துவம் பெறுகிறாள். புராணங்களிலும் பார்வதி தேவி தவமிருந்து இறைவனோடு இணைந்த காலமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    ஆடித் தபசு என்ற பெயரில் புகழ்பெற்ற சிவாலயங்களில் திருவிழா நடக்கக் காண்கிறோம். சக்தியோடு சிவம் இணைவதன் வெளிப்பாடாக ஆடியில் சூறைக்காற்று வீசுகிறது. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கிறது. இறைவன் அம்பிகையோடு இணைந்துவிட்டதால் அம்பிகையை வணங்கினாலே இறைவனையும் சேர்த்து வணங்கியதாகிறது. இதனாலேயே ஆடிமாதம் என்பது அம்பிகைக்கு உரிய மாதமாக நம்மால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.

    • ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள் என்கிறது புராணம்.
    • ஆடித் தபசு என்ற பெயரில் சிவாலயங்களில் விழாக்கள் நடப்பதே இதற்கு சான்று.

    ஆடி என்றவுடன் நம் நினைவிற்கு வருகின்ற வேடிக்கையான நிகழ்வு புதுமணத் தம்பதியரை பிரித்து வைக்க வேண்டும் என்பது. அதுவும் பெண் வீட்டார் சீர்வரிசைகளை வைத்து தங்கள் வீட்டிற்கு பெண்ணை அழைத்துச் செல்லவேண்டும் என்ற எழுதப்படாத விதியும் நடைமுறையில் உள்ளது. ஆடியில் கருத்தரித்தால் சித்திரையில் குழந்தை பிறக்கும், கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் உடல் நலம் கெடும், அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று விளக்கமும் சொல்லப்பட்டுள்ளது.

    ஆடி மாதத்தில்தான் அம்பிகை தவமிருந்து இறைவனோடு இணைந்தாள் என்கிறது புராணம். ஆடித் தபசு என்ற பெயரில் சிவாலயங்களில் விழாக்கள் நடப்பதே இதற்கு சான்று. ஏதேனும் அற்ப விஷயத்திற்காக தம்பதியருக்குள் பிரிவினை உண்டானாலும் மனைவியானவள் கணவனையே தெய்வமாக பாவிக்க வேண்டும், கணவனும் மனைவியின் மனநிலை புரிந்து கருத்து வேறுபாட்டினை மறந்து தன் இல்லாளை நாடிச் செல்ல வேண்டும் என்பதே புராணங்கள் நமக்குச் சொல்லும் கருத்து.

    புதிதாகத் திருமணமாகிச் சென்ற பெண்ணை அம்பிகைக்கு உகந்த இந்த ஆடி மாதத்தில் தம் இல்லத்திற்கு அழைத்து வந்து தாயானவள் அவளுக்கு விரதங்களையும், பூஜை முறைகளையும் சொல்லித் தரவேண்டும், மணப்பெண், இந்த ஒரு மாதம் முழுவதும் தாய்வீட்டினில் சாஸ்திர சம்பிரதாயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆடி மாதத்தில் புதுமணப் பெண்ணை பிறந்த வீட்டிற்கு சீர் வைத்து அழைத்துச் சென்றனர்.

    திருமணத்திற்கு முன்னரே இவற்றையெல்லாம் சொல்லித் தந்தால் விளையாட்டுப் பருவத்தில் இருக்கும் பெண்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களா? திருமணம் முடிந்து இல்லத்தரசியான பின்னர்தானே பொறுப்பு வரும்? இறைவனே அம்பிகையை நாடிச்சென்று இணையும் இந்த ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது என்பது அவர்கள் ஒன்று சேரக்கூடாது என்பதற்காக அல்ல;

    காலமெல்லாம் இணைபிரியாமல் வாழும் கலையைக் கற்றுத்தருவதற்காக! கணவன் நலனே தன் நலன் என மனைவியும், மனைவியின் துணையே தன் பலம் எனக் கணவனும் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக. இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் ஆடி மாதத்தில் பிறந்த வீட்டிற்குச் செல்லும் பெண்ணை வைத்து வேடிக்கையாக சித்தரிக்கும் கருத்துகளை ரசித்துக் கொண்டிருக்கிறோம்.

    • சாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜை நடைபெற்றது.
    • 29-ந்தேதி மறுவீட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மகா சிவராத்திரி திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. மிக முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதற்காக நேற்று அதிகாலை 3 மணி அளவில் தபசு மண்டகப்படியில் இருந்து பர்வதவர்த்தினி அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவிலுக்கு எழுந்தருளினார்.

    இரவு 7 மணிக்கு தெற்கு நந்தவன பகுதியில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் ராமநாதசாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். 7.50 மணியளவில் சாமி, அம்பாளின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து சாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜை நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ராணி லட்சுமி நாச்சியார், இளையராஜா நாகநாதசேதுபதி, தக்கார் பழனிகுமார், கோவில் இணை ஆணையர் மாரியப்பன், மேலாளர் மாரியப்பன், ஆய்வாளர் பிரபாகரன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், காசாளர் ராமநாதன், அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, பத்மநாபன், மலைச்சாமி, ரவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    திருக்கல்யாண திருவிழாவில் கடைசி நாளான வருகின்ற 29-ந் தேதி கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு மறுவீட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா முடிவடைகின்றது.

    • ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் தினமும் துளசியை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும்.
    • விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.

    அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில், மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளாக சுக்ல பட்ச துவாதசி முக்கியத்துவம் வாய்ந்ததாகச் சொல்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    தட்சிணாயினத்தின் முதல் ஏகாதசியாக வருவது 'தேவசயனி ஏகாதசி'. இந்த நாளில் மகாவிஷ்ணு அரிதுயில் பயிலத் தொடங்குவார் என்றும் நான்கு மாதங்களுக்குப் பின்வரும் பிரபோதினி ஏகாதசி அன்றுதான் கண்விழிப்பார் என்பது ஐதிகம். அப்படிப்பட்ட தேவசயனி ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்தால் வாழ்வில் இக்கட்டான தருணங்களிலிருந்து தப்பிக்க உதவும் வலிமை உண்டாகும் என்கின்றன ஞான நூல்கள்.

    ஆடி மாதம் துளசி வழிபாடு அரிதான பல பலன்களைத் தரும். ஆடி மாதம் வளர்பிறை நாட்களில் (துவாதசி வரையில்) தினமும் தவறாமல் துளசியை வழிபட்டு வந்தால் குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

    சுக்ல பட்ச துவாதசி திதியில், காலையில் வீட்டில் விளக்கேற்றி வீட்டில் உள்ள பெருமாள் படத்துக்கு சந்தனம் குங்குமமிட்டு, துளசி மாலை சாற்றி விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இயலாதவர்கள், விஷ்ணு சகஸ்ர நாமத்தை ஒலிக்க வைத்து கேட்டு பெருமாளை வழிபடலாம்.

    துளசியால் அர்ச்சனை செய்யுங்கள். புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்யுங்கள். முடியுமெனில், சுக்ல பட்ச ஏகாதசியிலும் மறுநாள் துவாதசியிலும் என இரண்டு நாட்களும் பெருமாளை வழிபடலாம். காலையிலேயே நீராடி, பெருமாளின் திவ்விய நாமங்களைச் சொல்லி துளசியால் அர்ச்சித்து வழிபடுங்கள்.

    ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசியில் ஆடி கோபத்ம விரதம் கடைப் பிடிக்கப்படுவது, இந்த தினத்தில் பெண்கள் பசுவை வழிபடுவதால், லட்சுமி கடாட்சம் கிட்டும். அதே போல், ஆடி வெள்ளிக் கிழமைகளில் புற்றுக்கு பால் தெளித்து, பூஜை செய்தால் பெண்களின் ஜாதகத்தில் காணப்படும் நாகதோஷம் நிவர்த்தி யாகும்.

    ஏகாதசி அன்று புளியோதரையும் துவாதசி அன்று தயிர்சாதமும் என பிரித்துக் கொண்டு நைவேத்தியம் செய்து மகாவிஷ்ணுவை வழிபாடு செய்யலாம். ஏகாதசி நாளில், அன்னதானம் செய்வது மகத்தான பலன்களை வழங்கும்.

    • 2-ந்தேதி புஷ்ப சப்பரம் நடக்கிறது.
    • 3-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ தலங்களில் ஒன்று. இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

    அதன்படி இந்த ஆண்டு திருவிழா நேற்று காலையில் மேளதாளம் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் அலங்கரிக்கப்பட்ட தங்க கொடிமரத்தை சுற்றிலும் நாணல் புல், மாவிலைகள், வண்ணபூ மாலைகள் இணைக்கப்பட்டு கருடன் உருவம் பொறித்த கொடி காலை 10.25 மணிக்கு ஏற்றப்பட்டது. இதைதொடர்ந்து நூபுர கங்கை தீர்த்தத்தால் விசேஷ பூஜைகளும் தீபாராதனைகளும் பட்டர்களின் வேத மந்திரங்களுடன் நடந்தது.

    இதில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கள்ளழகர் சுந்தரராஜ பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் தீபாராதனை நடந்தது. அப்போது கொடிக்கம்பம் அருகில் நின்ற சுந்தரவல்லி கோவில் யானை துதிக்கையை தூக்கி ஆசிர்வதித்தது. முன்னதாக மூலவர் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து நேற்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதையடுத்து இன்று(செவ்வாய்கிழமை) காலையில் தங்க பல்லக்கு உற்சவமும், இரவில் சகல பரிவாரங்களுடன் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும்.

    26-ந்தேதி இரவு அனுமார் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், 27-ந்தேதி இரவு கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். 28-ந் தேதி காலையில் 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் கள்ளழகர் பெருமாள் கோவிலில் இருந்து பல்லக்கில் புறப்பட்டு மதுரை சாலையில் உள்ள மறவர் மண்டபத்திற்கு சென்று எழுந்தருளுகிறார். அன்று இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.

    29-ந்தேதி இரவு யானை வாகனத்திலும், 30-ந்தேதி இரவு புஷ்ப சப்பரத்திலும், 31-ந்தேதி இரவு தங்ககுதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1-ந்தேதி காலையில் 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் திருத்தேரில் சுவாமி, தேவியர்களுடன் எழுந்தருளுகிறார். தொடர்ந்து காலை 8 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் விழா நடைபெறும். அன்று இரவு பூப்பல்லக்கும், 2-ந் தேதி மாலையில் புஷ்ப சப்பரமும், 3-ந்தேதி உற்சவ சாந்தியுடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது.

    • 29-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 2-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    மானாமதுரையில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பிரசித்தி பெற்ற வீரஅழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமிக்கு 11 வகையான திரவிய பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகே உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். தொடர்ந்து அர்ச்சகர் கோபி தலைமையிலான அர்ச்சகர்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.

    தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூலவர் சுந்தரராஜ பெருமாள் மற்றும் சவுந்தரவல்லி தாயாருக்கு காப்பு கட்டப்பட்டது. செட்டிகுளம் பகுதியில் கவுன்சிலர் லதாமணி, ராஜேந்திரன், முருகன் ஆகியோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் சுவாமிகள் எழுந்தருளினர்.

    இதில் செட்டிகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. விழா நடைபெறும் 10 நாட்களும் சுவாமி பல்வேறு அலங்காரத்தில் மண்டகப்படிகளுக்கு எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். விழாவின் சிகர நிகழ்வாக 29-ந் தேதி இரவு திருக்கல்யாணம், ஆகஸ்டு 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    2-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 4-ந் தேதி உற்சவ சாந்தியுடன் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிமதுராந்தகி நாச்சியார் உத்தரவின் பேரில் கோவில் தேவஸ்தான அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜை, வழிபாடு நடக்கிறது.
    • 30-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார்-ஆண்டாள் அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறுகிறது. மேலும் அன்னம், சிம்மம், கருடன், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆடிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி மாலை நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள், அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் தலைமையில் கோவில்பட்டி பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.

    ×