search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thadikombu soundararaja perumal temple"

    • திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
    • இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் குடகனாற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. அதனை தொடர்ந்து மண்டூக முனிவருக்கு பாவ விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு அருளாசி வழங்கும் நிகழ்ச்சிக்காக பல்வேறு மண்டகப்படிகளில் பெருமாள் கள்ளழகராக எழுந்தருளினார்.

    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு வந்தடைந்த பெருமாள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இதனால் தங்க குதிரையில் பெருமாள் குடை பிடித்தபடி எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அவரை தரிசனம் செய்தனர்.

    • விழாவையொட்டி தினமும் சிறப்பு பூஜை, வழிபாடு நடக்கிறது.
    • 30-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருந்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவில் கொடிமரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது. அப்போது சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார்-ஆண்டாள் அம்மையாருடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவிழாவையொட்டி தினமும் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெறுகிறது. மேலும் அன்னம், சிம்மம், கருடன், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆடிப்பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதி மாலை நடைபெற உள்ளது. இதில் தமிழக அமைச்சர்கள், அமைச்சர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள். திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் மற்றும் உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் தலைமையில் கோவில்பட்டி பட்டாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.

    • சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்தில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதில் சாமிக்கு சந்தனம், மஞ்சள், திருமஞ்சனப்பொடி, பால், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து ராஜ அலங்காரத்தில் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் 'கோவிந்தா, கோவிந்தா' என சரண கோஷமிட்டனர். இதனைத்தொடர்ந்து அரளி பூக்களால் பூஜை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தாடிக்கொம்புவை அடுத்த அகரம் பேரூராட்சி சுக்காம்பட்டியில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் கால ைபரவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுக்காம்பட்டி துரைஆதித்தன் சித்தர் சுவாமிகள் தலைமையில் நடந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், மஞ்சள், பன்னீர், சந்தனம், தயிர், நெய் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சொர்ண ஆகர்ஷண பைரவரை திரளான பக்தர்கள் வழிபட்டனர். சாவடி பஜாரில் அமைந்துள்ள காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • யாகசாலை பூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலித்தார்.
    • இன்று 3-ம் கால வேள்வி, மகா தீபாராதனை நடைபெறுகிறது.

    திண்டுக்கல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், நாளை (புதன்கிழமை) காலை 9.35 மணி முதல் 10.35 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் முதல் கும்பாபிஷேக யாக சாலை பூஜைகள் தொடங்கியது.

    நேற்று காலை விஸ்வரூப சுப்ரபாதம், திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை, ரட்ஷா பந்தளம், முதற்கால வேள்வி நடந்தது. மாலையில் 2-ம் கால வேள்வி, திவ்யபிரபந்த சாற்றுமுறை நடைபெற்றது. யாகசாலை பூஜையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் அருள்பாலித்தார். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 3-ம் கால வேள்வி, மகா தீபாராதனை நடைபெறுகிறது. மதியம் சவுந்தரராஜ பெருமாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு திருமஞ்சனம், 4-ம் கால வேள்வி, மூலமந்திரம், காயத்ரி மந்திரம், சயனாதி வாசம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து நாளை காலை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை பட்டாச்சாரியார்கள் ரமேஷ், வெங்கட்ராம், ஜெகநாதன் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.

    ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கூட்டுறவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவி கவிதா சின்னத்தம்பி, அகரம் பேரூராட்சி தலைவர் மணி என்ற நந்தகோபால் மற்றும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் விழாவில் பங்கேற்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சுரேஷ், செயல் அலுவலர் முருகன், பட்டாச்சாரியார்கள் ரமேஷ். ராமமூர்த்தி ஆகியோர் செய்து வருகின்றனர்.

    • திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில்.
    • மாற்றுத் திறனாளிகளுக்கு தரிசனத்துக்கான சிறப்பு வழி ஏற்படுத்த வேண்டும்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில், வருகிற 28-ந் தேதி காலை 9.35 மணி அளவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதுதொடர்பாக முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை தாங்கி பேசிய போது கூறியதாவது:-

    கும்பாபிஷேகத்தன்று சாமி தரிசனத்துக்காக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் தவிர்க்க தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும். மேலும் பக்தர்களுக்கான குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக செய்து கொடுக்க வேண்டும்.

    கோவிலை சுற்றியுள்ள இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோவில் வளாகம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பக்தர்கள் பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு தரிசனத்துக்கான சிறப்பு வழி ஏற்படுத்த வேண்டும்.

    பக்தர்கள் அதிகமாக கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். கோவில் அமைந்துள்ள இடத்தில் புறநகர் காவல் நிலையம் அமைத்து பாதுகாப்பு பணிக்கு போலீசாரை நியமிக்க வேண்டும். பக்தர்கள் நடந்து வரும் நடைபாதைகளின் இருபுறமும் மின்விளக்கு வசதி செய்ய வேண்டும்.

    திருவிழா நடக்கும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய வேண்டும். கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பு அதற்கென அமைக்கப்படும் ஏணி, சாரங்கள் உறுதியாக இருக்கிறதா? என்று பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்து சான்று அளிக்க வேண்டும்.

    பக்தர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முக்கிய இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டும். மேலும் அவற்றில் போதுமான அளவு மருத்துவ அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். உயிர் காக்கும் மருந்துகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். போதுமான எண்ணிக்கையில் ஆம்புலன்ஸ் வாகனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    தீயணைப்பு துறையினர் தேவையான இடங்களில் தேவையான எண்ணிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி வாகனங்கள் நிறுத்தி வைக்க வேண்டும். கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில் சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். நகரில் அமைந்துள்ள அனைத்து ஓட்டல்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் இடங்களில் பாதுகாப்பான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    கூட்டத்தில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, கோவில் செயல் அலுவலர் முருகன் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    ×