search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Puzhal Lake"

    • புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
    • புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன.

    செங்குன்றம்:

    சென்னைக்கு குடிநீர்வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் 3,300 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இங்கு சேமித்து வைக்கப்படும் தண்ணீரை வைத்து சென்னையில் சுமார் 3 1/2 மாதங்களுக்கு தேவையான தண்ணீரை வழங்கமுடியும்.

    புழல் ஏரிநீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபகாலமாக ஆக்கிரமிப்புகள், கட்டுமான பணிகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஏரியை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், நீர்பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு சி.எம்.டி.ஏ.விடம் ஐ.ஐ.டி.,யின் நகர்ப்புற வளர்ச்சி, கட்டடங்கள், சுற்றுச்சூழல் மையமான 'கியூப்'அறிக்கை சமர்ப்பித்து உள்ளது.

    இதில் புழல் ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகள் 3 மடங்கு அதிகரித்து இருப்பது தெரியவந்து உள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு 7 சதவீதமாக இருந்த கட்டுமான பணி தற்போது 24 சதவிதமாக உயர்ந்து இருக்கிறது.

    புழல் ஏரியை ஒட்டியுள்ள 27 கிராமங்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வரையறுக்கப்பட்டு இருந்தன. இதில் கட்டுமான நடவடி க்கைகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எனினும் நகரம் விரிவாக்கத்தில் கட்டுமான பணிகள் அதிகரித்து இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    மேலும் 1991-ம் ஆண்டு மொத்த நில பரப்பில் 55 சதவீதமாக இருந்த விவசாய நிலங்கள், 2023-ல் 33 சதவீதமாக குறைந்துள்ளன.

    இதேபோல் புழல் ஏரியை சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மண்ணில் பேரியம், கோபால்ட், குரோமியம், தாமிரம் போன்ற கன உலோகங்கள் இருப்பதாகவும், அப்பகுதியைச் சுற்றியுள்ள மேற்பரப்பு மண் மாதிரிகளில் ஈயம் மற்றும் ப்ளூரைடு சற்று அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது. எனினும் ஏரியில் உள்ள தண்ணீர் குடிநீருக்கு பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த ஆய்வின் முடிவை வைத்து புழல் ஏரியில் நீர்பாதுகாப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

    • சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்படும் ஏரிகளில் புழல் ஏரியும் ஒன்று.
    • மிச்சாங் புயல் காரணமாக கரை உடைந்ததாக செய்திகள் வெளியாகின.

    புழல் ஏரியின் கரை உடையும் அபாயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது-

    புழல் ஏரியானது சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மிக முக்கியமான ஏரியாகும். இந்த ஏரியானது திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரியின் நீர் பரப்பு பகுதி 20.27 ச.கி.மீட்டர் ஆகும்.

    இந்த ஏரியின் முழு உயரம் 21.20 அடியாகும். இந்த ஏரியின் முழு கொள்ளளவு 3300 மி.க. அடியாகும். ஏரியின் கரையின் நீளம் 7090 மீட்டர் ஆகும். இன்றைய காலை 6.00 மணி நிலவரப்படி 20.00 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. மேலும் இன்று காலை 6.00 மணி நிலவரப்படி, புழல் ஏரியின் நீர்வரத்தானது 550 கனஅடியாக உள்ளது. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி விதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கடந்த சில நாட்களாக மிச்சாங் புயலினால் அதிக அளவு கனமழை பெய்ததினால் ஏரிக்கு நீர் வரத்து கூடுதலாக வந்து கொண்டிருந்ததால் ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வந்த நிலையில் ஏரியில் இருந்து ரெகுலேட்டர் வழியாக உபரி நீர் வினாடிக்கு 5500 கன அடி வெளியேற்றப்பட்டு வந்தது.

    அப்போது ஏற்பட்ட கடுமையான சூறாவளி காற்றினால் ஏரியில் மிக கடுமையான அளவில் அலைகள் ஏற்பட்டு கலங்களின் மேல் தண்ணீர் வெளியேறியது. இதனால் காவல் துறை பாதுகாப்பு அறை பின் பகுதியில் கரையில் உள்ள பக்கவாட்டு தாங்கு சுவர் (Parapet wall)-ன் பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த கருங்கல்லால் ஆன Apron சரிந்து மண் அரிப்பு ஏற்பட்டது.

    இது ஏரியின் FTL விட 2 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, இதன் வழியாக தண்ணீர் வெளியேறவில்லை, மேலும் கலங்கல் வழியாக அலைகளால் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. தற்போது மண் அரிப்பு ஏற்பட்ட சாலை பகுதிகளில் கிராவல் மண் கொட்டி மட்டப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு செயற்பொறியாளர்,நீவது., கொசஸ்தலையாறு வடிநில கோட்டம், திருவள்ளூர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

    • தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

    சென்னை:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழையால் குடியிருப்பு பகுதிகள் தீவுகள் போல மாறியுள்ளன.

    சென்னையில் மேற்கு மாம்பலம், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் கீழ்தளத் தில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

    இதனால் நேற்று இரவு அப்பகுதி மக்கள் தூக்கத்தை தொலைத்து விடிய, விடிய தவித்தனர். வீடுகளுக்குள் நாற்காலிகளை போட்டு அமர்ந்திருந்தனர்.

    இதே போன்று தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பகுதி களிலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிப்பட்டனர்.

    இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

    ஆவடி மின்வாரிய அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அங்கு வசித்து வரும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி யுள்ளனர். வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 500-க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளன. இங்கு கீழ்தளத்தில் வசிப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் அங்கு வசிக்கும் மக்கள் தவித்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் இந்த பகுதியில் மழை தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    அந்த பகுதியில் தேங்கிய மழைநீரை குழாய்கள் மூலமாக வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வரும் காலங்களில் இதுபோன்று மழை பாதிப்பு வரும் காலங்களில் ஏற்படாத வகையில் அதிகா ரிகள் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ள வேண் டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மழை வெள்ளத்தில் நாய், பூனை போன்ற விலங்குகளும் செத்து கிடப்பதால் துர்நாற்றம் வீசு கிறது. அந்த பகுதியில் மின் கம்பிகளும் பொது மக்களை அச்சுறுத்தம் வகையில் இருப்பதாகவும் அதையும் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அம்பத்தூர் ஆவின் பகுதியில் உள்ள பட்டரவாக்கம் காந்திநகர், ஞானமூர்த்தி நகர், மேனாம்பேடு மின் வாரிய காலனி உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் அதிக அளவில் வெள்ளம் போல தேங்கியது.

    இதனால் அந்த வழியாக ரெயில் நிலையத்துக்கு சென்றவர்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    இதனால் புழல் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பகுதி களிலும் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது.

    செங்குன்றம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    நேற்று புழல் பகுதியில் மட்டும் 8 சென்டிமீட்டர் மழை பதிவானது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலை உருவானது.

    இதனால் நேற்று வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. மேலும் இன்று காலை 2000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு கடலை சென்று அடைகிறது.

    இதனால் தண்ணீர் செல்லும் கால்வாயை ஒட்டியுள்ள சாமியார் மடம், வட பெரும் பாக்கம், வடகரை ஆகிய பகுதிகளில் மழைநீர் குடியி ருப்புகளில் புகுந்து பொது மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    மேலும் விளாங்காடுபாக்கத்தில் உள்ள மல்லிகாநகர் நியூ ஸ்டார் சிட்டி விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் மற்றும் தீர்த்தங்கரை பட்டு ஊராட்சியில் உள்ள சன் சிட்டி, விவேக் நகர் ஆகிய நகரங்களில் வெள்ள நீர்புகுந்து பொதுமக்கள் வெளியே வர முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.

    இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தண்ணீர் வெளியேற்ற வேண்டும் என நேற்று தீர்த்தங்கரையம் பட்டு பகுதியில் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர். எனவே சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    புழல் விளாங்காடுபாக்கம் ஊரை ஒட்டியுள்ள மல்லிகா கார்டன், தாய் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அதன் அருகில் உள்ள நியூஸ்டார் சிட்டி பகுதிகளிலும் தண்ணீர் அதிக அளவில் தேங்கியுள்ளது.

    குறிப்பாக நியூஸ்டார் சிட்டி குடியிருப்பு பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் இருந்து வெளியேறும் மழை வெள்ளம் அந்த பகுதி யில் காட்டாற்று வெள்ளம் போல் ஓடுகிறது. அந்த பகுதியில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

    வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பாம்புகளும் அப்பகுதி மக்களை அச்சு றுத்திக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மழைக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பை சந்தித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள் இந்த பாதிப்பில் இருந்து விடிவு காலம் பிறக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    அடுத்த ஆண்டு மழை காலத்திற்குள்ளாவது தங்களது பகுதியில் நீடிக்கும் வெள்ள பாதிப்புகளை மாதவரம் எம்.எல்.ஏ. சுதர் சனம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆகி யோர் தீர்த்து வைப்பார் களா? என்றும் அப்பகுதி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

    விளாங்காடுபாக்கம் ஊருக்குள்ளும் மழை வெள்ளம் தேங்கி இருப்பதால் அங்கு வசிக்கும் மக்களும் இதே கோரிக்கையை விடுத்துள்ளனர்.

    இப்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. மழைக்காலங்களில் நீடிக்கும் இதுபோன்ற வெள்ள பாதிப்பு களை அதிகாரிகள் சரி செய்துதர வேண்டும் என்பதே அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • மழை பாதிப்பு தொடர்பான புகாருக்கு 1913 என்ற கட்டணமில்லை தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.
    • மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    சென்னை:

    இலங்கையை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாகவும் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

    * மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ஆகியோர் யானைக்கவுனி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

    * சென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    * மழை பாதிப்பு தொடர்பான புகாருக்கு 1913 என்ற கட்டணமில்லை தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 044-25619204, 044-25619206, 044-25619207 என்ற எண்களிலும் புகார்களை தெரிவிக்கலாம்.

    * சென்னைப் பெருநகர பகுதிகளில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றம் தொடர்பான புகார்களுக்கு 044- 45674567 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1916 ஆகிய எண்களை கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    * சென்னையில் நேற்று கனமழை பெய்த நிலையில், மயிலாப்பூர் சாலையில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    * மழைநீர் தேங்கியுள்ளதால் சென்னை கோடம்பாக்கம் அருகே ரங்கராஜபுரம் இருசக்கர வாகன சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளது. கெங்குரெட்டி, மேட்லி சுரங்கப்பாதைகளில் நீர் தேங்கினாலும் போக்குவரத்து வழக்கும்போல் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    * கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புழல் ஏரியில் இருந்து 2000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

    • பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது.
    • சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 627 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விட்டு விட்டு பலத்த மழை கொட்டி வருகிறது.

    நேற்று இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. இதனால் குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 606 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி. இதில் இப்போது 2745 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. மொத்தம் உள்ள 21 அடியில் 18.67 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரியில் இருந்து 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி ஆகும். இதில் 3141 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரி 86 சதவீதம் நிரம்பி உள்ளது. மொத்த உயரமான 24 அடியில் 22.08 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 368 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் தண்ணீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    பூண்டி ஏரியில் அதன் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 1860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 80 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. 68 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. சோழவரம் ஏரியில் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் 627 மி.கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 26 கனஅடிதண்ணீர் வருகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 435 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. ஏரிக்கு 10 கனஅடி தண்ணீர் வருகிறது.

    தொடர்ந்து மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் வரும் நாட்களில் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    • 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏரிகள் இப்போது முழுமையாக இல்லை.
    • புழல் ஏரிப்பகுதிகளில் பட்டப்பகலில காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் அதிகம் வருகை தருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    புழல் ஏரி திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ் பகுதியில் அமைந்து உள்ள மிகப்பெரிய ஏரி ஆகும்.

    இந்த ஏரி ஒரு சுற்றுலா தலமாகவும், சென்னைக்கு குடிதண்ணீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கமாகவும் அமைந்து உள்ளது. 3300 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. இது 7 கி. மீட்டர். நீளம் கொண்ட நீர் தேக்கமாகும்.

    15 அடி ஆழமிக்க இந்த ஏரி தண்ணீரை அளவிட ஜோன்ஸ் டவர் 1881-ல் கட்டப்பட்டது. கடல் போல் காணப்படும் இந்த தண்ணீரை குடிநீருக்கு எடுப்பதற்காக சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஜோன்ஸ் டவரை சுற்றி உள்ள கரையோர பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் நடைபயிற்சி செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிக்க காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் இங்கு தினமும் வருகிறார்கள்.

    சென்னை மாநகரில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல் ஏரி திகழ்ந்து வருகிறது. இந்த புழல் ஏரி தண்ணீரை சுத்திகரிப்பு செய்து சென்னை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற ஏராளமான சிறு கால்வாய்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த உபரி நீரை கொண்டு புழல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வந்தது. நெல், பயிறு வகைகள், பழங்கள் இந்த கால்வாயையொட்டி உள்ள பகுதிகளில் விளைவிக்கப்பட்டன. இந்த நிலையில் குடியிருப்புகள் அதிகரித்ததால் வேளாண் நிலம் முற்றிலுமாக அழிந்து போனது. அதேபோல இந்த சிறு ஓடைகளும் முற்றிலுமாக சாக்கடை செல்லும் கால்வாய்களாக மாறிவிட்டன.

    புழல் ஏரியில் தினமும் சுமார் 2 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுபொருட்கள் தண்ணீரில் மிதக்கின்றன. புழல் ஏரியில் அப்பகுதி மக்கள் துணி துவைத்து குளித்தும் வருகிறார்கள். மேலும் ஏரிக்கரைக்கு தினமும் வரும் பொதுமக்களால் ஏரிகரை பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து உள்ளன. புழல் ஏரி திருமுல்லைவாயல் பகுதியில் தொடங்கி புதூர் வரை 14 இடங்களில் கரைபகுதியை கொண்டிருக்கிறது. இந்த கரைகளை சுற்றி உள்ள குடியிருப்புகளில் இருந்து ஏரிக்கு கழிவுநீர் விடப்படுகிறது. திருமுல்லைவாயல் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளான விஜயலட்சுமிபுரம், தென்றல் நகர், வெங்கடாசலம் நகர் போன்ற குடியிருப்பு பகுதியில் இருந்து மழைநீர் கால்வாய்கள் இந்த ஏரியில் இணைந்து இருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் உள்பட ஏராளமான கழிவுகள் ஏரியில் கலக்கின்றன.

    30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏரிகள் இப்போது முழுமையாக இல்லை. சென்னையில் ஒரே இடத்தில் வேலை, தொழில், முதலீடுகள் குவிந்து உள்ளதால் சென்னையை நோக்கி மக்கள் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இதனால் ஏராளமான குடியிருப்புகள் பெருக ஆரம்பித்துவிட்டது. ஏரியில் கழிவுகள் கலக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீர் கலக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். நீர்நிலை பகுதியோரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. எனவே இந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் உடனடயாக அகற்றி மீட்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    புழல் ஏரிப்பகுதிகளில் பட்டப்பகலில காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் அதிகம் வருகை தருகிறார்கள். பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் மோட்டார் சைக்கிள்களில் ஜோடியாக வந்து புழல் ஏரிப்பகுதியை வலம் வருகிறார்கள். இதனால் புழல் ஏரிப்பகுதி காதல் ஜோடிகளின் புகழிடமாக அமைந்து வருகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமர்ந்து கொண்டு காதல் லீலைகளில் ஈடுபடுகிறார்கள். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    • சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது.
    • பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடிதண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. இதில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கடந்த 1-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 4-ந் தேதி பூண்டி ஏரி வந்த டைந்தது. ஆரம்பத்தில் வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் வந்து சேர்ந்தது. அதன் பின்னர் தண்ணீர் வரத்து அதிகபட்சமாக வினாடிக்கு 310 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது. இந்த நிலையில் ஆந்திர விவசாயிகள் சாகுபடிக்கு கிருஷ்ணா நீரை எடுத்து வருவதால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்தது. இன்று காலை வினாடிக்கு 85 கன அடி தண்ணீர் மட்டுமே வந்து கொண்டு இருந்தது.

    கிருஷ்ணா தண்ணீர் வரத்து குறைந்ததை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி நீர்மட்டம் 26. 55 அடியாக பதிவானது. 1.071 டி. எம். சி. தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 13 கன அடிதண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.
    • திருமுல்லைவாயில் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புழல் ஏரியில் கலப்பதை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும்.

    திருநின்றவூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

    புழல் ஏரி சுமார் 4500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து உள்ளது. இது அம்பத்தூர், திருமுல்லைவாயல், சூரப்பேடு, அம்பத்தூர் பானுநகர், பொத்தூர் உள்ளிட்ட 14 இடங்களின் கரைகளை ஒட்டி அமைந்து இருக்கிறது.

    இந்நிலையில் புழல் ஏரியில் அதிக அளவு கழிவு நீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. தினமும் சுமார் 2 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளனர்.

    இதில் முக்கியமாக திருமுல்லைவாயல் பகுதியை ஒட்டிய குடியிருப்புகளில் இருந்து அதிக அளவு கழிவுநீர் புழல் ஏரியில் கால்வாய் மற்றும் பைப்புகள் அமைத்துவிடப்படுவதாக கூறப்படுகிறது.

    திருமுல்லைவாயல், விஜயலட்சுமிபுரம், தென்றல் நகர், வெங்கடாசலம் நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதியில் இருந்து மழைநீர் கால்வாய் மூலம் கழிநீர் ஏரியில் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதியை ஒட்டி உள்ள ஏரிக்கரைகள் கழிவு நீராக காணப்படுகிறது.

    இதுகுறித்து புழல் ஏரி மற்றும் அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்க தலைவர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:-

    திருமுல்லைவாயில் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புழல் ஏரியில் கலப்பதை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும். திருமுல்லைவாயல் பகுதியில் விஜயலட்சுமிபுரம், வெங்கடபுரம், சரஸ்வதி நகரை ஒட்டிய தென்றல்நகர் கிழக்கு ஆகிய பகுதிகளில் உடனடியாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும்.

    அதே போல் 10-க்கும் மேற்பட்ட நீர்வரத்து கால்வாய்களை பொது மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதை உடனடியாக தடுக்க வேண்டும். இது குறித்து ஆவடி மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    ஆவடி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டமும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் புழல் ஏரிக்கு திருப்பி விடப்படுகிறது. எனவே இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, புழல் ஏரியில் இருந்து தினமும் 416 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்கொண்ட 8 பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரண்டு ஏரிகளில் இருந்தும் தலா 100 கன அடி உபரி நீரை வெளியேற்ற முடிவு.
    • செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஏரிகளை திறக்க பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது.

    அதன்படி, செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரு ஏரிகள் மதியம் 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    செம்பரம்பாக்கம், புழல் ஆகிய இரண்டு ஏரிகளில் இருந்தும் தலா 100 கன அடி உபரி நீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டத்தை 22 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    • செம்பரம்பாக்கம் ஏரியில் 3,075 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 3,080 மி.கன அடியும் தண்ணீர் உள்ளது.
    • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. தற்போது ஏரியில் 1,048 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன.

    இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். தற்போதைய நிலவரப்படி ஏரிகளில் 7 ஆயிரத்து 776 மில்லியன் கன அடி (77 டி.எம்.சி) தண்ணீர் உள்ளது.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி கடந்த மாதம் முதல் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    இதையடுத்து சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டும், பூண்டி ஏரியில் கூடுதல் கிருஷ்ணா தண்ணீரை சேமித்து வைக்கும் வகையிலும் பூண்டி ஏரியில் இருந்து தொடர்ந்து செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    இதனால் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி இந்த 2 ஏரிகளிலும் நீர் இருப்பு 3 டி.எம்.சி.யை தாண்டி உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் 3,075 மில்லியன் கன அடியும், புழல் ஏரியில் 3,080 மி.கன அடியும் தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா நீர் தொடர்ந்து திறக்கப்படும் என்பதால் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோடைகாலத்தில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் 3 டி.எம்.சி.யை தாண்டி தண்ணீர் இருப்பதால் இந்த ஆண்டு சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்றும், குடிநீர் தட்டுப்பாடு வராது எனவும், குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. தற்போது ஏரியில் 1,048 மி.கன அடி தண்ணீர் உள்ளது. 565 கன அடி நீர் ஏரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கனஅடி. இதில் 3,080 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 180 கன அடி தண்ணீர் வருகிறது.

    சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மி.கன அடி. இதில் 132 மி.கன அடி தண்ணீர் இருக்கிறது. ஏரிக்கு நீர் வரத்து இல்லை.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 3,075 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 460 கன அடி தண்ணீர் வருகிறது. 176 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கன அடியில் 441 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 801 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீர் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. இதனால் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஜனவரி மாதம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் பெறவில்லை.

    இந்த நிலையில் கோடை வெயில் காரணமாக பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்து வந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடும்படி தமிழக அரசு ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அதனை ஏற்று கடந்த 5ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இ ந்தத் தண்ணீர் 8-ந் தேதி காலை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டுக்கு வந்தடைந்தது. அன்றிரவே பூண்டி ஏரிக்கு சென்றடைந்தது.

    கண்டலேறு அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது வினாடிக்கு ஆயிரத்து 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    கடந்த 8-ந் தேதி முதல் இன்று காலை வரை 25 நாட்களில் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 26.60 அடி ஆக பதிவாகியது. 1.095 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 510 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்துக்கு வினாடிக்கு 801 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    மீண்டும் கனமழை தொடங்கினால் பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    திருவள்ளூர்:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. தொடர் மழை மற்றும் அம்மப்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வரத்து காரணமாக பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டி வருகிறது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 2 ஆயிரம் கனஅடியாக இருந்த தண்ணீர் திறப்பு 5 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

    இதற்கிடையே தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் அம்மப்பள்ளி அணையில் இருந்து தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்து உள்ளது. இதனால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

    இதையடுத்து ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு 5 ஆயிரத்து 558 கன அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 4,308 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. தற்போது ஏரியில் 33.28 அடி தண்ணீர் உள்ளது. 3,231 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் 2,603 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கனமழை காரணமாக புழல் ஏரியின் நீர் மட்டமும் வேகமாக உயர்ந்தது. ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி. தற்போது ஏரியில் 18.73 அடிக்கு தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. இதில் 2,756 மில்லியன் கன அடி தண்ணீர் நிரம்பி உள்ளது.

    மழை காரணமாக ஏரிக்கு 1,078 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியில் இருந்து தொடர்ந்து 2,189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஏரிகளில் உள்ள நீர் இருப்பை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். நேற்று பலத்த மழை இல்லை. இதனால் ஏரிகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. மீண்டும் கனமழை தொடங்கினால் பூண்டி, புழல் ஏரிகளில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×