search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புழல் ஏரி பகுதியை மாசுபடுத்தும் காலி மதுபாட்டில்கள், குப்பைகள்- விரைவில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுமா?
    X

    புழல் ஏரி பகுதியை மாசுபடுத்தும் காலி மதுபாட்டில்கள், குப்பைகள்- விரைவில் பராமரிப்பு பணிகள் செய்யப்படுமா?

    • 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏரிகள் இப்போது முழுமையாக இல்லை.
    • புழல் ஏரிப்பகுதிகளில் பட்டப்பகலில காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் அதிகம் வருகை தருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    புழல் ஏரி திருவள்ளூர் மாவட்டம் ரெட் ஹில்ஸ் பகுதியில் அமைந்து உள்ள மிகப்பெரிய ஏரி ஆகும்.

    இந்த ஏரி ஒரு சுற்றுலா தலமாகவும், சென்னைக்கு குடிதண்ணீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கமாகவும் அமைந்து உள்ளது. 3300 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவு கொண்டது. இது 7 கி. மீட்டர். நீளம் கொண்ட நீர் தேக்கமாகும்.

    15 அடி ஆழமிக்க இந்த ஏரி தண்ணீரை அளவிட ஜோன்ஸ் டவர் 1881-ல் கட்டப்பட்டது. கடல் போல் காணப்படும் இந்த தண்ணீரை குடிநீருக்கு எடுப்பதற்காக சக்தி வாய்ந்த மின் மோட்டார்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த ஜோன்ஸ் டவரை சுற்றி உள்ள கரையோர பகுதியில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் நடைபயிற்சி செய்து வருகிறார்கள். இந்த ஏரியில் சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை பார்த்து ரசிக்க காலை, மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் இங்கு தினமும் வருகிறார்கள்.

    சென்னை மாநகரில் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக புழல் ஏரி திகழ்ந்து வருகிறது. இந்த புழல் ஏரி தண்ணீரை சுத்திகரிப்பு செய்து சென்னை மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற ஏராளமான சிறு கால்வாய்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த உபரி நீரை கொண்டு புழல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வந்தது. நெல், பயிறு வகைகள், பழங்கள் இந்த கால்வாயையொட்டி உள்ள பகுதிகளில் விளைவிக்கப்பட்டன. இந்த நிலையில் குடியிருப்புகள் அதிகரித்ததால் வேளாண் நிலம் முற்றிலுமாக அழிந்து போனது. அதேபோல இந்த சிறு ஓடைகளும் முற்றிலுமாக சாக்கடை செல்லும் கால்வாய்களாக மாறிவிட்டன.

    புழல் ஏரியில் தினமும் சுமார் 2 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலக்கப்படுகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுபொருட்கள் தண்ணீரில் மிதக்கின்றன. புழல் ஏரியில் அப்பகுதி மக்கள் துணி துவைத்து குளித்தும் வருகிறார்கள். மேலும் ஏரிக்கரைக்கு தினமும் வரும் பொதுமக்களால் ஏரிகரை பகுதி முழுவதும் குப்பைகள் நிறைந்து உள்ளன. புழல் ஏரி திருமுல்லைவாயல் பகுதியில் தொடங்கி புதூர் வரை 14 இடங்களில் கரைபகுதியை கொண்டிருக்கிறது. இந்த கரைகளை சுற்றி உள்ள குடியிருப்புகளில் இருந்து ஏரிக்கு கழிவுநீர் விடப்படுகிறது. திருமுல்லைவாயல் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளான விஜயலட்சுமிபுரம், தென்றல் நகர், வெங்கடாசலம் நகர் போன்ற குடியிருப்பு பகுதியில் இருந்து மழைநீர் கால்வாய்கள் இந்த ஏரியில் இணைந்து இருக்கிறது. இதனால் பிளாஸ்டிக் உள்பட ஏராளமான கழிவுகள் ஏரியில் கலக்கின்றன.

    30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஏரிகள் இப்போது முழுமையாக இல்லை. சென்னையில் ஒரே இடத்தில் வேலை, தொழில், முதலீடுகள் குவிந்து உள்ளதால் சென்னையை நோக்கி மக்கள் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். இதனால் ஏராளமான குடியிருப்புகள் பெருக ஆரம்பித்துவிட்டது. ஏரியில் கழிவுகள் கலக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவு நீர் கலக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். நீர்நிலை பகுதியோரங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளன. எனவே இந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகளையும் அதிகாரிகள் உடனடயாக அகற்றி மீட்டெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    புழல் ஏரிப்பகுதிகளில் பட்டப்பகலில காதல் ஜோடிகள், கள்ளக்காதல் ஜோடிகள் அதிகம் வருகை தருகிறார்கள். பகல் நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் மோட்டார் சைக்கிள்களில் ஜோடியாக வந்து புழல் ஏரிப்பகுதியை வலம் வருகிறார்கள். இதனால் புழல் ஏரிப்பகுதி காதல் ஜோடிகளின் புகழிடமாக அமைந்து வருகிறது. மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் அமர்ந்து கொண்டு காதல் லீலைகளில் ஈடுபடுகிறார்கள். இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×