search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதிஷ் குமார்"

    • பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.
    • பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.

    தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.

    இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.

    இதனால் இன்று காலை 10 மணிக்கு பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப்பேசினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

    நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். இதற்கிடையே பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. 78 எம்.எல்.ஏ.க்களும் அதில் கலந்து கொண்டனர்.

    அவர்களும் நிதிஷ்குமாரை முதல் மந்திரியாக்க ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிதிஷ்குமார் பெற்றார்.

    எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களைப் பெற்றதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரை ராஜேந்திர அர்லேகர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தற்போதைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.

    அதனைத்தொடர்ந்து, பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

    பாட்னாவில் நடைபெற்ற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர், முதல்-மந்திரியாக நிதிஷ்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுதிரி, விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.

    • 2005ல் முதல்முறையாக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார்
    • இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் என்பது குறிப்பிடத்தக்கது

    பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர், தனது ராஜினாமா கடிதத்தை அம்மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேகரிடம் சமர்ப்பித்தார். புது அரசு உருவாகும் வரை நிதிஷ் காபந்து முதல்வராக நீடிப்பார்.

    பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி அமைத்து மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    அரசியல் பயணத்தில் அதிக யு-டர்ன் அடித்த தலைவர்

    2000ல் முதல் முறையாக முதல்வரான நிதிஷ், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 7 நாட்களில் பதவியை துறந்தார்.

    2005ல் பா.ஜ.க.வுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார்.


    2013ல் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் நரேந்திர மோடியை முதல்வர் வேட்பாளராக முன்மொழிய கூட்டணியில் முடிவு எடுக்கப்பட்டது. இதை தீவிரமாக எதிர்த்த நிதிஷ், சுமார் 17-வருட கால கூட்டணியை முறித்தார்.


    தொடர்ந்து 2014 மக்களவை தேர்தலில் தனிக்கட்சியாக போட்டியிட்டார். ஆனால், நிதிஷ் குமாரால் 2 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதையடுத்து, கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து விலகினார். அக்கட்சியின் ஜிதேன் ராம் மஞ்சி முதல்வரானார்.

    2015 பீஹார் சட்டசபை தேர்தலில், தனது அரசியல் எதிரியான லல்லு பிரசாத் யாதவின் ஆதரவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

    ஆனாலும், 2016ல் பிரதமர் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையையும், ஜிஎஸ்டி செயலாக்கத்தையும் லல்லு உட்பட பலர் எதிர்த்தாலும், நிதிஷ் ஆதரித்தார்.


    2017ல் லல்லுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதல்வர் பதவியை மீண்டும் ராஜினாமா செய்தார். ஆனால், உடனடியாக தேசிய ஜனநாயக கூட்டணி உதவியுடன் மீண்டும் முதல்வரானார்.

    2020ல் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார்.

    2022 ஆகஸ்ட் மாதம், பா.ஜ.க.விற்கு மாநிலத்தில் செல்வாக்கு அதிகரிப்பதை உணர்ந்து கூட்டணியை மீண்டும் உடைத்தார்.

    ஆனால் அடுத்த நாள், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார்.

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வெல்வதையும், பிரதமர் மோடி தொடர்ந்து 3-வது முறையாக பிரதமர் ஆவதையும் தடுக்க மோடி எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு, கடந்த வருடம், காங்கிரஸ் தலைமையில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாநில கட்சிகளின் ஒத்துழைப்புடன் "இந்தியா கூட்டணி" எனும் பெரும் கூட்டணி உருவானது.

    அந்த கூட்டணியில் மம்தா, கெஜ்ரிவால் போன்ற தலைவர்களை போல் முக்கிய உறுப்பினராக இருந்தவர் நிதிஷ் குமார்.


    இந்நிலையில், தற்போது நிதிஷ் மீண்டும் முதல்வர் பதவியை துறந்து விட்டார்.

    மீண்டும் தான் எதிர்த்த பா.ஜ.க.வுடன் இணைந்து அக்கட்சி பிரமுகர்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி, நிதிஷ் முதல்வராக முயல்வதாக வெளியாகி உள்ள தகவல்களால் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

    அரசியல் வாழ்க்கையில் தான் எதிர்த்தவர்களிடமே ஆதரவு கோரி முதல்வர் பதவியில் தொடர்வது நிதிஷ் குமாருக்கு கை வந்த கலை என சமூக வலைதளங்களில் பயனர்கள் விமர்சிக்கின்றனர்.

    • இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் குமார்.
    • இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறது

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி பீகார் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், "இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் நிதிஷ் குமார். அவருடன் மல்லிகார்ஜூன கார்கே பலமுறை பேச முயன்றார். ஆனால் இருவரும் பிஸியாக இருப்பதால், பேசுவதற்கு சூழ்நிலை அமையவில்லை. மல்லிகார்ஜூன கார்கே நிதிஷ் குமாரை பேச அழைக்கும் போது அவர் பிஸியாக இருக்கிறார். நிதிஷ் குமார் பேச அழைக்கும் போது கார்கே பிஸியாக இருக்கிறார்" எனக் கூறினார்.

    மேலும், இந்தியா கூட்டணியின் முதல் இரண்டு கூட்டத்தையும் நிதிஷ் குமார் ஒருங்கிணைத்ததாக தெரிவித்த ஜெய்ராம் ரமேஷ், இந்தியா கூட்டணியை பலப்படுத்துவதில் ஒவ்வொரு கட்சியினருக்கும் பொறுப்பு இருக்கிறது என்றும், அதை நோக்கி உழைக்க காங்கிரஸ் உறுதியாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

    அதனைத்தொடர்ந்து, "அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது, அசோக் கெலாட் மற்றும் அகிலேஷ் யாதவ் இருவரும் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர், பேச்சுவார்த்தை முடிவடைந்ததும் தொகுதி பங்கீடு தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்படும்" என தெரிவித்தார்.

    • நிதிஷ் குமார் ஆட்சியமைக்க உரிமைக்கோரினால் தடுக்க லாலு திட்டம்.
    • நிதிஷ் குமார், லாலு கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

    நிதிஷ் குமார் எப்போது வேண்டுமென்றாலும் பா.ஜனதாவுடன் கைக்கோர்க்க வாய்ப்புள்ளது. இதனால் பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து 9-வது முறையாக மீண்டும் முதல்வராக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பா.ஜனதா கட்சியின் இருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாகவும் பேசப்படுகிறது.

    கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுங்கள் என நிதிஷ்குமாருக்கு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் இரண்டு கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒருவேளை லாலு கட்சி உடனான கூட்டணி முடிந்தது. பா.ஜனதா உடன் இணைந்து ஆட்சியமைக்க போகிறேன் என நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து லாலு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    ஒருவேளை நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றாலும், சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும். மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எண்ணிக்கை தேவை.

    பா.ஜனதா மற்றும் நிதிஷ் குமார் கட்சி உறுப்பினர்கள் முறையே 78 மற்றும் 45 உள்ளனர். மொத்தம் 123 எண்ணிக்கை உள்ளது. ஒரு எண்ணிக்கை அதிகமாகத்தான் உள்ளது. ஜித்தன் ராம் மஞ்ச் ஆதரித்தால் எண்ணிக்கை 127 ஆக அதிரிக்கும்.

    தற்போது சட்டசபையில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 79 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 இடங்கள் உள்ளன. காங்கிரஸ்க்கு 19 இடங்கள் உள்ளன. சிபிஐ-எம்எல்-12, சிபிஐ-2, சிபிஐ-எம்- 2, ஒரு சுயேட்சை என்ற அளவில் உறுப்பினர்கள் உள்ளனர். ஜித்தன் ராம் மஞ்சிக்கு 4 இடங்களும் உள்ளன.

    ஒருவேளை நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்தால், தனிப்பட்ட எண்ணிக்கையில் லாலு கட்சிதான் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்களைத்தான் முதலில் ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும்.

    அப்படி அழைத்தால் பா.ஜனதாவுடன் இணைந்து நிதிஷ் குமார் கட்சி இணைந்து எதிர்த்து வாக்களிக்கும். இதனால் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 10 எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளவிடாமல் பார்த்துக் கொண்டால் லாலு கட்சியின் வாக்கெடுப்பில் தப்பித்துக் கொள்ளும்.

    மாறாக நிதிஷ் குமாரை ஆட்சியமைக்க அழைத்தால், அவர் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். அப்போது அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து லாலு கட்சி எதிர்த்து வாக்களிக்கும். அப்போது ஐக்கிய ஜனதா தளத்தின் 10 எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்திற்கு வராமல் இருந்தால் போதுமானது. இதற்கான வேலைகளை லாலு பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேவேளையில் நிதிஷ் குமார் கட்சியும், பா.ஜனதாவும் குதிரை பேரத்தில் ஈடுபடும். இதனால் பீகாரில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.

    • குடும்ப அரசியல் குறித்து நிதிஷ் குமார் பேசியதால் லாலு மகள் கடும் விமர்சனம் செய்திருந்தார்.
    • இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்காததால் அதிருப்தியில் இருந்ததாக தகவல்.

    பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் இணையப் போவதாக நேற்று முன்தினம் செய்தி பரவியது. அதில் இருந்து தற்போது வரை பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கருதப்படுகிறது.

    இந்தியா கூட்டணியின் மீதான அதிருப்தி, லாலு யாதவ் மகளின் காட்டமான சமூக வலைத்தள பதிவுகள், ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொள்ள மறுத்தது போன்ற காரணங்கள் அவர் பா.ஜனதா கூட்டணியில் இணைய முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 9-வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும், பா.ஜனதா சார்பில் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு முன்னோட்டமாகத்தான் அவர் 22 ஐ.ஏ.எஸ்., 79 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதேவேளையில் சட்டமன்றம் கலைக்கப்படாது. பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறாது எனவும் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருப்பதால் எந்த கட்சிகளும் பெரும்பாலும் அவசரம் காட்டாது எனத் தெரிகிறது.

    நேற்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை தேனீர் விருந்து நிகழ்ச்சியின்போது பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் சந்தித்து சலசலப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    அதேவேளையில், நிதிஷ் குமார் அவரின் நிலை என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும். அவர் இந்தியா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது வெளியேறுகிறாரா? என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என லாலு கட்சியை சேர்ந்த மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத் தலைவரான ஷிவானந்த் திவாரி, நிதிஷ் குமார் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து பின் வாங்க வேண்டும். நேற்று நிதிஷ் குமாரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அவர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதே தவறை மீண்டும் நிதிஷ் செய்வார் என்று நாங்கள் நம்பவில்லை" என்றார்.

    • பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை தொடங்கி இரண்டு நாள் நடைபெறும்
    • முதல்-மந்திரி நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பாஜக-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    பீகார் மாநில முதல்-மந்திரியும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலையும், 2020 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். அதன் பிறகு பா.ஜ.க-உடனான கூட்டணியில் இருந்து விலகினார். அதன் பிறகு பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க-வை வீழ்த்துவதற்காக 'இந்தியா' கூட்டணியை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார். இந்தியா கூட்டணி கட்சிகளுடன் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில், காணொலி காட்சி மூலம் நடந்த இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. அதனைத்தொடர்ந்து, அவர் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க-வுடன் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

    அதனைத்தொடர்ந்து, பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அழைத்த தேநீர் விருந்தினை துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவ் புறக்கணித்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தேநீர் விருந்தில் கலந்துகொண்டுள்ளார்.

    இந்நிலையில், பீகார் மாநில பாஜக செயற்குழு கூட்டம் நாளை தொடங்கி இரண்டு நாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநில பா.ஜ.க பொறுப்பாளர் வினோத் தாவ்டே நாளை பாட்னாவிற்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பீகார் அரசியலில் பரபரப்பான சூழல் நிழவி கொண்டிருக்கும் இந்த நிலையில் பாஜக செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி.
    • திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தனியாக போட்டியிடுவதாக அறிவிப்பு.

    பீகார் மாநில முதல்வராக நிதிஷ் குமார் இருந்து வருகிறார். இவர் ஏற்கனவே பா.ஜனதா கூட்டணியில் இருந்து வந்தார். பின்னர் 2022-ல் பா.ஜனதா கூட்டணியை விட்டு வெளியேறி லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வருகிறார்.

    பிரதமர் மோடியை கடுமையாக எதிர்த்து வந்த நிதிஷ் குமார், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். இதனால் அவர் அக்கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், மல்லிகார்ஜூன கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் நிதிஷ் குமார் அதிருப்தி அடைந்தார். மேலும், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடையாமல் இழுபறி நீடித்து வருகிறது.

    மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் காங்கிரஸ் உடன் தொகுதி உடன்பாடு கிடையாது என அறிவித்துள்ளது. இதுவும் நிதிஷ் குமார் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

    இதற்கிடையே பீகார் மாநில முன்னாள் முதல்வருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்த நிலையில், மத்திய அரசை பாராட்டியதுடன் வாரிசு அரசியலை கடுமையாக சாடினார் நிதிஷ் குமார். லாலுவின் இளைய மகன் துணை முதல்வராக உள்ளார். மற்றொருவர் மந்திரியாக உள்ளார். ஒரு மகள் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். இதனால் இவர்களை குறிவைத்துதான் நிதிஷ் குமார் பேசினார் என செய்தி வெளியானது.

    வெளிநாட்டில் வசித்து வரும் லாலுவின் மகள் இதனால் கோபம் அடைந்து நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்து கருத்துகளை பதிவிட்டார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. கடும் எதிர்ப்பு கிளம்ப அந்த கருத்துகளை நீக்கினார்.

    இது எல்லாம்தான் நிதிஷ் குமாரை கூட்டணி மாற வைக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்து விட்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.

    பா.ஜனதா மூத்த தலைவர்கள் நிதிஷ் குமாரை வரவேற்க தயாராக இருக்கிறார்கள். ஆனால், உள்ளூர் தலைவர்கள் அவரை வரவேற்க தயாராக இல்லை. கூட்டணியில் இணைத்தாலும் முதல்வர பதவி வழங்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றனர்.

    இதனால் கூட்டணியில் இணைத்து மத்திய மந்திரி பதவி வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஒருவேளை நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் சேர முடிவு செய்தால், வருகிற 4-ந்தேதி பிரதமர் மோடி பீகார் மாநிலத்தில் உள்ள பெட்டியாஹ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அப்போது பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் ஒரே மேடையில் தோன்றலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் நிதிஷ் குமார்.
    • நிதிஷ் குமார் பீகார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.

    புதுடெல்லி:

    ஐக்கிய ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவராக இருந்த ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரியாக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை இன்று ஏற்றுக் கொண்டார்.

    சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.

    • ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார்.
    • இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.

    பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    தற்போது ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக உள்ளார். வருகிற 29-ந்தேதி இந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

    அதேவேளையில் வேறு ஒருவர் தலைவராக நியமிக்கபடலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அது கட்சியில் உள்ள தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர்.

    லாலன் சிங்- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இடையிலான நட்பு தற்போது சிறப்பான முறையில் வளர்ந்து வருவது நிதிஷ் குமாரை அப்செட்டில் ஆழ்த்தியதாக தெரிகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இந்தியா கூட்டணி நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் அவர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து பாதிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மறுத்துள்ளார்.

    • இந்தியா கூட்டணி எனப் பெயர் வைக்கும்போது நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
    • மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முன்மொழிந்துள்ளனர்.

    பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா இரண்டு முறை தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் 3-வது முறையாக மோடி தலைமையில் ஆட்சியை பிடித்துவிட்டால் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என முக்கிய எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கணிப்பாக உள்ளது.

    காங்கிரஸ் தற்போது மிகப்பெரிய அளவில் பா.ஜனதாவை எதிர்க்கும் வல்லமையோடு இருப்பதாக தெரியவில்லை. இதனால் 2024 மக்களை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் அச்சாரம்போட்டார்.

    இதற்கு லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆதரவு அளித்தார். உத்தர பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஆதரவு தெரிவிக்க பீகாரில் முதல் கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் 2-வது கூட்டம் கர்நாடகாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமை ஏற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி (INDIA Bloc) எனப் பெயர் வைக்கப்பட்டது. அப்போதுதான் இந்தியா கூட்டணியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.


    இந்த கூட்டணிக்கு வித்திட்ட நிதிஷ் குமார், இந்தியா எனப் பெயர் வைக்க தனது எதிர்ப்பை தெரிவித்தார். பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு இந்தியா கூட்டணியின் வேகம் அதிகமாக இருந்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடையில் தொகுதிகளை பிரிப்பது மட்டும்தான் மீதமுள்ளது போன்று தோன்றின.

    அப்போதுதான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா கூட்டணி வேலைகளை அப்படியே விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி ஐந்து மாநில தேர்தலில் கவனம் செலுத்தியது.

    ஐந்து மாநிலங்களில் தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என காங்கிரஸ் நினைத்தது. இதனால் அகிலேஷ் யாதவ், நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்களிடம் ஆலோசிக்காமலும், கூட்டணி தேவையில்லை எனவும் தனியாக களம் இறங்கியது.

    இந்த ஐந்து மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி இந்தியா கூட்டணியில் நாங்கள்தான முதன்மையான கட்சி என்பதை காண்பிக்க திட்டமிட்டிருந்தது. தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது நிதிஷ் குமார், ஆகிலேஷ் யாதவ் ஆகியோர் வெளிப்படையாக காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சுமத்தினர்.

    ஏற்கனவே வெவ்வேறு கருத்துகளை கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், இந்த கூட்டணி நீடிக்காது என பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தன.

    இந்த நிலையில்தான் தற்போது 4-வது கூட்டணி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் முன்மொழிந்துள்ளனர்.

    இது நிதிஷ் குமாருக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. மேலும், அவரது கட்சியினர் தேர்தலுக்கு பிறகு நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளர் போட்டியில் முன்னணி வகிப்பார் என நினைத்திருந்தனர்.


    இந்த கூட்டத்தின்போது நிதிஷ் குமார் இந்தியில் பேசியதை திமுக தலைவருக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் மனோஜ் ஷா மொழிமாற்றம் செய்து விளக்கியுள்ளார். திமுக தலைவரிடம் இருந்து ஆதாயம் பெற இவ்வாறு செய்வதாக மனோஜ் ஷா மீது கோபம் அடைந்துள்ளார்.

    மேலும், கூட்டத்தின் பாதியிலேயே நிதிஷ் குமார் வெளியேறியதாக கூறப்படுகிறது. நான்கு மாநில தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு ஆதாயத்தை கொடுத்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் மாறுப்பட்ட கருத்து நிலவி வருவதால் கூட்டணி முழுமையடைந்து தேர்தலை சந்திக்காது என வெளிப்படையாக எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கியுள்ளனர்.

    நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் வெளியேறினால் அது இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால் அதிருப்தியில் உள்ள நிதிஷ் குமார் சமாதானம் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதன் முயற்சியாக ராகுல் காந்தி நிதிஷ் குமாரிடம் போன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ஆனால், ராகுல் காந்தி இணைந்து செயல்படுவோம் என்பது குறித்து பேசி அவரை சமாதானப்படுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நிதிஷ் ஆவேசமாக தெரிவித்ததாக தகவல் பரவியது.
    • அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை.

    டெல்லியில் கடந்த செவ்வாயன்று நடைபெற்ற இந்தியா கூட்டணியின் 4-வது கூட்டத்தில், இந்தியில் வழங்கப்பட்ட நிதிஷ் குமாரின் பேச்சை மொழிபெயர்க்க கோரினார் டி.ஆர்.பாலு. அதற்கு, "இந்தி நம் தேசிய மொழி; அனைவரும் அதை தெரிந்து கொள்ள வேண்டும்" என்று நிதிஷ் ஆவேசமாக தெரிவித்ததாக தகவல் வெளியானது.

    "இந்தியாவை இந்துஸ்தான் என்று அழைக்கிறோம். ஆங்கிலம் பிரிட்டிஷாரால் திணிக்கப்பட்ட மொழி. இந்தி மொழி நமக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்"என்று கூறியுள்ளார் நிதிஷ்குமார். இதனையடுத்து சில தலைவர்கள் அவரை அமைதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ் குமார் பேசி அமர்ந்தபிறகு யாரும் அவருடைய பேச்சை மொழிபெயர்க்க முன்வரவில்லை என்றும் கூறப்படுகிறது.

     


    இந்திய நாட்டை இந்துஸ்தான் என்று அழைப்பதற்கு காரணமுண்டு. இந்துஸ்தான் என்பது இமயமலைக்கும் இந்து சகாராவுக்கும் இடையில் உள்ள நிலம். அதேநேரம், இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கபட்டுள்ளன. பேசும் மக்கள் தொகையில் பெரிய வேறுபாடுகள் இருந்தாலும், நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒரே அந்தஸ்து இருக்கின்றன.

    இந்திய அரசியலமைப்பின் 8-வது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 22 மொழிகள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகள். இந்தி இந்தியாவின் "தேசிய" மொழி அல்ல, ஆனால் ஒரு "அதிகாரப்பூர்வ" மொழி. இந்தியாவில் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்து வழங்கப்படவில்லை.

     


    இதேபோன்று, மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் குற்றம்சாட்டுவதையும் நாம் பார்க்க முடிகிறது. ஆகவே, ஒரு மொழியை கற்றுக்கொள்வது என்பது தனிப்பட்ட நபரின் விருப்பத்தை பொறுத்தே இருக்க வேண்டும். மொழியை கற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று திணிப்பது இருக்க கூடாது.

    எனவே, இந்தி தேசிய மொழி, அதனை தெரிந்து வைத்துக்கொள்ளத்தான் வேண்டும் என்ற தொனியில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் கூறியிருந்தால் அது ஏற்புடையதல்ல. காரணம், இந்தி தேசிய மொழி அல்ல. அதேநேரம், ஒரு மொழியை கற்பது, தெரிந்துவைத்துக்கொள்வது என்பது அவரவர் விருப்பம்.

    அந்த வகையில், இந்தியை திணிப்பதுதான் தவறு... விருப்பப்பட்டு கற்பது என்பது ஏற்புடையதே...

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தி தேசியமொழி. டி.ஆர்.பாலு எத்தனை வருடம் அரசியலில் இருக்கிறார்.
    • தெளிவாக புரிய வேண்டும் என்றால் இந்தி படிக்க சொல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

    சென்னை:

    காங்கிரஸ், தி.மு.க. திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள 'இந்தியா' கூட்டணி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் கூடியது.

    இந்த கூட்டத்தில் சோனியா காந்தி அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் டி.ஆர்.பாலு எம்.பி.யும் அமர்ந்திருந்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் இந்தியில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது டி.ஆர்.பாலு எம்.பி. தனது அருகே அமர்ந்திருந்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் மேல் சபை எம்.பி.யான மனோஜ் கேஷாவிடம் நிதிஷ்குமார் இந்தியில் பேசுவதை தமிழில் மொழி பெயர்க்க சொல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.


    இந்த விஷயத்தை அந்த எம்.பி. நிதிஷ்குமாரிடம் சென்று சொன்னதும் அவர் எரிச்சல் அடைந்துவிட்டார்.

    இந்தி தேசியமொழி. டி.ஆர்.பாலு எத்தனை வருடம் அரசியலில் இருக்கிறார். எம்.பி.யாக பலமுறை இருந்துள்ளார். அவருக்கு இந்தி தெரியத்தானே செய்யும். தெளிவாக புரிய வேண்டும் என்றால் இந்தி படிக்க சொல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

    இந்த கூட்டத்தில் தமிழில் மொழிபெயர்க்க தேவையில்லை என்றும் நிதிஷ் குமார் கூறியதாக இணைய தளங்களில் செய்திகள் பகிரப்பட்டு வருகிறது.

    ×