மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ் குமார்

பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். பாஜகவை சேர்ந்த இருவர் துணை முதல்வர்களாக பதவியேற்றனர்.
மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றார் நிதிஷ் குமார்
Published on

பாராளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காக பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டி இந்தியா கூட்டணி என்ற 27 கட்சிகள் அடங்கிய கூட்டணியை உருவாக்கினார்.

தொடக்கத்தில் இருந்தே அந்தக் கூட்டணியில் ஒருமித்த உணர்வுடன் சுமூகமான சூழ்நிலை காணப்படவில்லை.

இதற்கிடையே, பீகாரில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகளிலும் திருப்தி ஏற்படவில்லை. அதே சமயத்தில் தோழமைக் கட்சியான லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதாதளம் கட்சியுடனும் நிதிஷ்குமாருக்கு மோதல் ஏற்பட்டது.

இதனால் இன்று காலை 10 மணிக்கு பாட்னாவில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடந்தது. அதில் நிதிஷ்குமார் கலந்துகொண்டு அரசியல் நிலவரங்கள் குறித்து விளக்கிப்பேசினார். அப்போது முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

நிதிஷ்குமாரை ஆதரிப்பதாக ஐக்கிய ஜனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தனித்தனியாக கையெழுத்திட்டு கடிதமும் வழங்கினர். இதற்கிடையே பாட்னாவில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் நடந்தது. 78 எம்.எல்.ஏ.க்களும் அதில் கலந்து கொண்டனர்.

அவர்களும் நிதிஷ்குமாரை முதல் மந்திரியாக்க ஆதரிப்பதாக எழுத்துப்பூர்வமாக தனித்தனி கடிதங்களில் எழுதி கையெழுத்திட்டு கொடுத்தனர். இதன்மூலம் ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்.எல்.ஏ.க்கள் பலத்தை நிதிஷ்குமார் பெற்றார்.

எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதங்களைப் பெற்றதைத் தொடர்ந்து நிதிஷ்குமார் ஐக்கிய ஜனதாதளம் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றார். ஆளுநரை ராஜேந்திர அர்லேகர் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தற்போதைய முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்தார்.

அதனைத்தொடர்ந்து, பாஜக ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் இன்று பீகாரின் முதல்-மந்திரியாக மீண்டும் பதவியேற்றுக்கொண்டார். அவர் 9வது முறையாக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ளார்.

பாட்னாவில் நடைபெற்ற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லோகர், முதல்-மந்திரியாக நிதிஷ்குமாருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுதிரி, விஜய் சின்ஹா ஆகிய 2 பேரும் துணை முதல்-மந்திரிகளாக பதவியேற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com