என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, ​​பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
    • 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

    தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்திலுள்ள மிர்யாளகுடா பகுதியை சேர்ந்த தலித் சமூக இளைஞர் பெருமாள பிரனாய் குமார் (24 வயது).

    மிர்யாளகுடாவில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஆதிக்க சாதியை சேர்ந்தவருமான மாருதி ராவின் மகளான அம்ருதாவை பிரனாய் குமார் காதலித்து வந்தார்.

    10ம் வகுப்பில் படித்து கொண்டிருந்தபோதே, அறிமுகமாகியிருந்த இவர்கள் இருவரும், சில ஆண்டுகளுக்குப் பின்னர் காதலித்து, திருமணம் செய்து கொள்ள குடும்பத்தாரிடம் அனுமதி கேட்டனர்.

    ஆனால் பிரனாய் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதல் திருணமத்திற்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    எனவே அவரின் எதிர்ப்பை ஜனவரி 30, 2018 அன்று ஐதராபாத்தில் உள்ள ஆர்ய சமாஜ் மந்திரில் பிரனாய் - அம்ருதா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதனால் கோபமடைந்த மாருதி ராவ், பிரனாயை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. பல முறை பிரானாய் மீது தாக்குதல் முயற்சிகளும் நடந்துள்ளன.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர் 14, 2018 அன்று மிரியாலகுடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து தனது கர்ப்பிணி மனைவி அம்ருதா மற்றும் தாயாருடன் வெளியே வந்து கொண்டிருந்தபோது, பிரனாய் குமார் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

    இந்த பரபரப்பான கொலை சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பேசப்பட்டது. விசாரணையில் அம்ருதாவின் தந்தை மாருதி ராவும், அவரது தம்பி ஷ்ரவன் ராவும் இணைந்து திட்டமிட்டு, கூலிப்படையை ஏவி இந்த கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது.

    மற்றொரு குற்றவாளி மூலம் தொழில்முறை கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு ரூ.1 கோடி கொடுத்து கொலை சதித்திட்டம் தீட்டியதாக மாருதி ராவ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    பிரனாயின் தந்தை பி. பாலசாமி அளித்த புகாரின் அடிப்படையில், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் மாருதி ராவ், அவரின் தம்பி ஷ்ரவன் ராவ், அவரின் கார் ஓட்டுநர் சிவா, கொலையாளி சுபாஷ் குமார் சர்மா உள்ளிட்ட எட்டு குற்றவாளிகளை போலீசார் கைது செய்தனர்.

    கடந்த 6 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இதற்கிடையே கொலைக்கு மூளையாக செயல்பட்ட அம்ருதாவின் தந்தை, மாருதி ராவ், 2020 இல் ஜாமினில் இருந்தபோது ஐதராபாத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

     

     இந்நிலையில் 6 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு தெலுங்கானாவின் நல்கொண்டா நகர எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) இந்த ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி கொலையாளி சுபாஷ் குமார் சர்மாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    மற்ற குற்றவாளிகள் அஸ்கர் அலி, அப்துல் பாரி, எம்.ஏ. கரீம், மாருதி ராவின் சகோதரர் ஷ்ரவன் குமார் மற்றும் மாருதி ராவின் கார் ஓட்டுநர் சிவா ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  

     

    • இன்று குறைந்தபட்சமாக 74,022.24 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 74,474.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது.
    • இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 217.41 புள்ளிகள் சரிந்து 74,115.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை 74,332.58 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 74,474.98 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது.

    அதன்பின் ஏறுவதும், இறங்குவதுமாக சென்செக்ஸ் இருந்து வந்தது. இன்று குறைந்தபட்சமாக 74,022.24 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 74,474.25 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 217.41 புள்ளிகள் சரிந்து 74,115.17 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    தொழில்துறை, ஆயில் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள் சரிவு, வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. 30 பங்குகளை அடிப்படையாக கொண்ட மும்பை பங்குச் சந்தையில் 22 நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தது. 8 நிறுவன பங்குகள் உயர்ந்து காணப்பட்டன.

    மும்பை பங்குச் சந்தை போன்று இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி வர்த்தக முடிவில் 22,552.50 ஆக இருந்தது.

    இன்று காலை 22,521.85 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்தபட்சமாக நிஃப்டி 22,429.05 புள்ளிகளிலும், அதிகபட்சமாக நிஃப்டி 22,675.75 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 92.20 புள்ளிகள் சரிந்து 22,460.30 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய பண மதிப்பு 38 பைசா குறைந்து 87.33 ரூபாயாக உள்ளது.

    • தமிழ்நாடு கோவில்களில் கூட, சமஸ்கிருதத்தில் மட்டுமே பூஜை செய்யப்படுகிறது.
    • ஆங்கிலேயர்களின் மொழியை செயல்படுத்துவதில் மட்டுமே திமுகவினர் ஆர்வம் காட்டுகிறார்கள்

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதனிடையே, தேசிய கல்விக் கொள்கை பற்றி பேசிய ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி நிஷிகாந்த் துபே, "தமிழை விட சமஸ்கிருதம்தான் பழமையான மொழி" என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "மக்களைத் தூண்டிவிட மட்டுமே திமுக விரும்புகிறது. தமிழ் மிகவும் பழமையான மொழி என்கிறார்கள், ஆனால் சமஸ்கிருதம் அதைவிட பழமையான மொழி.

    தமிழ்நாடு கோவில்களில் கூட, சமஸ்கிருதத்தில் மட்டுமே பூஜை செய்யப்படுகிறது. தெலுங்கு, தமிழ், கன்னடத்தை திமுக எதிர்க்கிறது. அவர்கள் ஆங்கிலேயர்களின் மொழியை செயல்படுத்துவதில் மட்டுமே ஆர்வம் காட்டுகிறார்கள்" என்று தெரிவித்தார். 

    • கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது.
    • தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    திருத்தணியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட தி.மு.க. அரசு முடிவு செய்திருந்தது.

    இதற்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் சூட்டும் திட்டம் கைவிடப்படுவதாகவும், ஏற்கனவே இருந்து வந்த பெருந்தலைவர் காமராசரின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி என்று அழைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது

    இது பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி என பாமக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருப்பதாவது:-

    திருத்தணி காய்கறி சந்தைக்கு மீண்டும் காமராசர் பெயர்: பாமக எதிர்ப்புக்கு கிடைத்த வெற்றி!

    திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.3.02 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ள காய்கறி சந்தைக்கு கலைஞர் நூற்றாண்டு சந்தை என்று பெயர் சூட்டும் திட்டம் கைவிடப்படுவதாகவும், ஏற்கனவே இருந்த வந்த பெருந்தலைவர் காமராசரின் பெயரால் பெருந்தலைவர் காமராசர் நாளங்காடி என்று அழைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

    திருத்தணியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் காய்கறி சந்தைக்கு பெருந்தலைவர் காமராசரின் பெயரை நீக்கி விட்டு, கலைஞர் நூற்றாண்டு காய்கறி அங்காடி என்று பெயர் சூட்ட திமுக அரசு திட்டமிட்டது.

    இந்த முடிவை கடுமையாக எதிர்த்த நான், தமிழ்நாட்டுக்கு அடையாளம் தேடித் தந்த பெருந்தலைவரின் பெயரை நீக்கக்கூடாது என்றும், அவ்வாறு நீக்கினால் மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

    அதைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணமாக இருந்த காமராசர் போன்ற தலைவர்களின் பெயர்கள் எங்கு சூட்டப்பட்டிருந்தாலும், அதன் பெயரை நீக்கும் அல்லது மாற்றியமைக்கும் அரசியலை தமிழக அரசு செய்யக்கூடாது.

    அரசின் திட்டங்களுக்கும், கட்டிடங்களுக்கும் ஏற்கனவே சூட்டப்பட்டுள்ள தலைவர்களின் பெயர்கள் நீடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து பாராட்டுவார்.
    • ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார்.

    துபாய்:

    9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துபாயில் நேற்றிரவு அரங்கேறிய இறுதிப்போட்டியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இதனை இந்திய வீரர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

    இந்நிலையில் இந்த தொடருடன் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா ஓய்வு பெறுவதாக தகவல் வெளியானது. ஜடேஜா 10 ஓவர்கள் வீசி முடித்தவுடன் விராட் கோலி அவரை அரவணைத்து பாராட்டினார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது அஸ்வினை விராட் கோலி கட்டியணைத்து பாராட்டுவார். அதனையடுத்து அந்த போட்டியுடன் அஸ்வின் ஓய்வு அறிவித்து விடுவார். அதுபோல ஜடேஜாவையும் கட்டியணையத்தால் ஒருநாள் போட்டியில் இருந்து ஜடேஜா ஓய்வு பெறப்போகிறாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.

     

    இந்நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவீந்திர ஜடேஜா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். அதில் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நன்றி என தெரிவித்துள்ளார்.

    • அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.
    • போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசி 30 பேர் காயமடைந்தனர்,

    வட கொரியா கடலுக்குள் பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

    இன்று, தென் கொரிய மற்றும் அமெரிக்க வீரர்கள் வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சியைத் தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியின்போது, இரு நாடுகளின் படைகளும் தங்கள் அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் திறன்களை வெளிப்படுத்தும்.

    இந்த இராணுவப் பயிற்சி இந்த இரு படைகளின் வருடாந்திர பயிற்சியின் ஒரு பகுதியாகும். இருப்பினும், இது தாக்குதலுக்கு முந்தைய ராணுவப் பயிற்சி என கூறி, வட கொரியா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.

    எனவே அவர்களின் பயிற்சி தொடங்கிய சில மணி நேரங்களுக்கு பிறகு வடகொரியா தனது ஏவுகணைகளை ஏவி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது.

    இந்த ஏவுகணைகள் ஹ்வாகி மாகாணத்திலிருந்து ஏவப்பட்டன. வருடத்தில் ஐந்தாவது முறையாக வடகொரியா இதுபோன்ற ஏவுகணைகளை கடற்பகுதியில் ஏவியுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டு ராணுவத் தலைவர் தெரிவித்தார்.

    தென் கொரியா - அமெரிக்கா ராணுவ கூட்டுப்பயிற்சியை எதிர்த்து தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு வெளியே போராட்டம் நடந்து வருகிறது. இந்த பயிற்சி நாட்டில் மேலும் பதற்றத்தை அதிகரிக்கும் என்பதால் அதை நிறுத்த போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

     

    கடந்த வாரம் ஒரு பயிற்சியின் போது, வட கொரிய எல்லையில் உள்ள போச்சான் பகுதியில் இரண்டு தென் கொரிய KF-16 போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுவீசின.

     

    இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர், அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் கூட்டு ராணுவ பயிற்சியும், கடலில் வடகொரியாவின் ஏவுகணை வீச்சும் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    • தென் தமிழகத்தில் இருந்து சென்னை பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரெயில்களில் கூட்டம் மிக அதிகமாக அலைமோதுகிறது.
    • புதிய ரெயில்கள் தேவை என்று கோரிக்கையும் மத்திய அரசின் பார்வைக்கு பலமுறை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

    கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் தனது வலைத்தளப் பகுதியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் குறிப்பாக தென் தமிழகத்தின் ரெயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு போதிய நிதியை ஒதுக்கவில்லை எனவும், மின் மயமாக்கல், அகல ரயில் பாதை, தென் தமிழகத்தின் ரயில் நிலையங்களின் தரம் மேம்படுத்துதல் மற்றும் நவீனமயமாக்கல், தென் தமிழகத்தின் நகரங்களை இணைக்கும் வகையில் மெமு ரெயில் சேவைகள், மக்கள் தேவைக்கு ஏற்ப அதிக ரெயில் சேவைகள் போன்ற ரெயில் பயணிகளின் நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளேன்.

    கடந்த பல வருடங்களாக ரெயில்வே திட்டங்களுக்கான நிதிகளை ஒதுக்குவதில் தென் தமிழகம் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

    போதிய நிதி இல்லாத காரணத்தாலும், சிறப்பான செயல் திட்டம் இல்லாத காரணத்தாலும் பல ரெயில் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

    கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான வழித்தடம் மற்றும் திண்டுக்கல் முதல் மதுரை வரையான வழித்தடம் ஆகியவற்றில் ரெயில்வே பாதைகள் மின்மயம் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை நிலுவையில் உள்ளது. மேலும் அகல பாதை ரெயில் தட வேலையும் நிறைவேறாமல் உள்ளது.

    தென் தமிழகத்தின் முக்கிய ரெயில் நிலையங்களான மதுரை, கன்னியாகுமரி போன்ற நிலையங்கள் நவீனமயமாக்கல் மற்றும் தரம் உயர்த்தும் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகிறது.

    தென் தமிழகத்தில் இருந்து சென்னை பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் ரெயில்களில் கூட்டம் மிக அதிகமாக அலைமோதுகிறது.

    இதை தவிர்க்க புதிய ரெயில்கள் தேவை என்று கோரிக்கையும் மத்திய அரசின் பார்வைக்கு பலமுறை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

    ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் அமைக்க வேண்டும் என்று பல கோரிக்கைகள் இருந்த போதிலும் பல்வேறு காரணங்களை கூறி ரெயில்வே நிர்வாகம் இதை தவிர்த்து வருகிறது.

    மேலும், இதற்கான பணிகள் நடைபெறும் இடங்களில் ஆமை வேகத்தில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தென் தமிழகத்தின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் மெமு ரெயில்களை இயக்க வேண்டும் என்றும் நீண்ட நாளாக கோரி வருகிறோம்.

    இந்த நீண்ட நாள் மக்கள் தேவைகளை பாராளுமன்றத்தில் நேரம் ஒதுக்கி விவாதிக்க வேண்டும் என்று ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை கொண்டு வந்துள்ளேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • இஸ்லாமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.
    • எனக்கு நோன்பு கஞ்சியை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள் என்று சீமான் தெரிவித்தார்.

    சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், வெள்ளை லுங்கி, சட்டை, இஸ்லாமியர் அணியும் தொப்பியை அணிந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு விஜய் வந்தார்.

    பிறகு, பிரார்த்தனை செய்துவிட்டு நோன்புக் கஞ்சி, பேரீட்சை, சமோசா சாப்பிட்டு தவெக தலைவர் விஜய் நோன்பை திறந்தார்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சீமான், "எனக்கு நோன்பு கஞ்சியை வீட்டுக்கே அனுப்பி வைப்பார்கள். ஒரு நாள் தொப்பி போட்டு வேடம் போடுபவன் நான் இல்லை. நான் ஒருநாள் இஸ்லாமியன் இல்லை. நான் என் மக்களின் உணர்வுக்கானவன், உரிமைக்கானவன், உயிரானவன்.

    நெற்றியில் திருநீறு வைத்துக்கொண்டு தொப்பி அணிந்து நோன்பு கஞ்சியை குடித்தவர்கள் இருக்கிறார்கள். நான் காட்டவா? தம்பி அதை விரும்புகிறார், செய்கிறார். அதை விமர்சனம் செய்ய வேண்டியதில்லை" என்று தெரிவித்தார். 

    • ஹோலி பண்டிகையின்போது கலர் பொடி மீது பட்டால் குற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
    • அவர்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும்.

    ஹோலி பண்டிகை வருகிற வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தற்போது ரம்ஜான் மாதம் என்பதால் முஸ்லிம்கள் நோன்பு மேற்கொண்டு மாலை 6 மணிக்குப் பிறகு நோன்பு திறப்பார்கள். ரம்ஜான் மாதம் வெள்ளிக்கிழமை அவர்கள் சிறப்பு தொழுகை மேற்கொள்வார்கள்.

    ரம்ஜான் மாதம் வெள்ளிக்கிழமை அன்று ஹோலி பண்டிகை வருவதால், இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில், முஸ்லிம்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என பீகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பீகார் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஹரிபூஷன் தாகூர் பசாயுல் (Haribhushan Thakur Bachaul) இது தொடர்பாக கூறியதாவது:-

    வருடத்திற்கு 52 வெள்ளிக்கிழமை வருகிறது. அதில் ஒன்று ஹோலி பண்டிகையோடு வருகிறது. ஆகவே, இந்துக்கள் ஹோலி பண்டிகையை கொண்டாட அனுமதிக்க வேண்டும். ஹோலி பண்டிகையின்போது கலர் பொடி அவர்கள் மீது பட்டால் குற்றமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருந்தால், அவர்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கு இது அவசியம் என முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

    அவர்கள் எப்போதும் இரண்டு நிலைப்பாடு கொண்டுள்ளனர். கலர் பொடி விற்பனை செய்வதற்கான கடைகள் அமைத்து அதன் மூலம் வருவமானம் பெறுவதால் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவர்களின் ஆடைகளில் சில கறைகள் படிந்தால், அவர்கள் நரகம் (dozakh) என பயப்படத் தொடங்குவார்கள்.

    இவ்வாறு ஹரிபூஷன் தாகூர் பசாயுல் தெரிவித்தார்.

    ஹரிபூஷன் தாகூர் பசாயுல் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கடுமையாக எதிர்ப்புகள் தெரிவிக்கப்படடு வருகின்றன.

    ராஷ்டிரிய ஜனதா தளம் எம்.எல்.ஏ.வும், முன்னாள் மந்திரியுமான இஸ்ரெய்ல் மன்சூரி கூறுகையில் "பண்டிகைகள் வரும்போது இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை. எங்களுடைய இஃப்தார் நிகழ்ச்சிகளில் இந்துக்கள் கலந்து கொள்கிறார்கள். ஹோலி பண்டிகையில் முஸ்லிம் பற்றி பாஜக எம்.எல்.ஏ. கவலைப்படுவது ஏன். இந்த மக்கள் அரசியல் பிரச்சனைக்காக வகுப்புவாத பிரச்சனையை தூண்டிவிட்டு, சனாதனத்தின் கொடி ஏந்தியவர்கள் போல் நடிக்கிறார்கள்" என்றார்.

    எனினும் மாநில மைானரிட்டி விவகாரத்துறை மந்திரியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான ஜமா கான் கூறுகையில் "எந்தவொரு அசம்பாவித சம்பவமும் ஏற்படாது. பண்டிகைக் காலத்தில் நல்லிணக்கத்தை உறுதி செய்ய நிர்வாகத்திற்கு தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

    • விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
    • வல்லமை படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார்.

    தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக பிரேம்ஜி கதாநாயகனாக வல்லமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார்.

    படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் டீசர் இயக்குனர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் தளத்தில் சில மாதங்களுக்கு முன் பகிர்ந்தார். இந்நிலையில் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    படத்தின் ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ளார். ஜிகேவி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கணேஷ் குமார் படதொகுப்பை செய்துள்ளார். படத்தை பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் பலர் புகாரளித்தனர்.
    • சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளம் Downdetector

    முன்னணி சமூக ஊடகமான எக்ஸ் X தளம் உலகம் முழுவதும் முடங்கியது. இன்று (மார்ச் 10) திங்கட்கிழமை, பிற்பகல் 3:15 மணியளவில், எக்ஸ் தளத்தை அணுகுவதில் பயனர்கள் சிரமங்களைச் சந்தித்தனர்.

    X இன் வலைத்தளம் மற்றும் செயலி இரண்டிலும் உள்நுழைவதில் சிக்கல் ஏற்பட்டதாக பலர் புகாரளித்தனர். சேவை இடையூறுகளைக் கண்காணிக்கும் வலைத்தளமான Downdetector இன் கூற்றுப்படி, பிற்பகல் 3:30 மணியளவில் சுமார் 2,500 பயனர்கள் X இல் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர்.

    இருப்பினும், செயலிழப்பு குறித்து X நிறுவனத்திடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. பின்னர் பிற்பகல் 3:45 மணியளவில் எக்ஸ் சேவைகள் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

    அதன்பின் செயலி மற்றும் வலைத்தளத்தில் மீண்டும் உள்நுழைய முடிந்தது. X இதுபோன்ற செயலிழப்புகளை சந்திப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, இந்த தளம் பல முறை முடங்கி மீண்டுள்ளது. கடந்த 2022 இல் இந்த ட்விட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கி அதற்கு உலக பணக்காரர் எலான் மஸ்க் எக்ஸ் என பெயர் மாற்றியது குறிப்பிடத்தக்கது.  

    • வாக்களிக்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்து தர்மேந்திர பிரதான் பேசியுள்ளார்.
    • இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசுகின்றனர்.

    நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கிய உடனேயே, தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுப்பு விவகாரத்தை கையில் எடுத்த திமுக எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    இதற்கு பதில் அளித்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான், "பாஜக ஆளாத மாநிலங்களான கர்நாடகா, இமாச்சல பிரதேசத்திலும் தேசிய கல்விக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை மூலம் இந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது.

    தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை மாநில அரசு பாழடித்து வருகிறது. தமிழக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள், ஜனநாயக விரோதமானவர்கள்.

    பிஎம்ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு கடைசி நேரத்தில் யு-டர்ன் போட்டது. கடந்தாண்டு மார்ச் 15இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. திட்டத்தை ஏற்க ஒப்புக்கொண்டு சூப்பர் முதலமைச்சரின் ஆலோசனையில் அரசு பின்வாங்கியது. சூப்பர் முதல்வரின் பேச்சைக் கேட்டு கையெழுத்திட மறுத்தனர். யார் அந்த சூப்பர் முதலமைச்சர் என கனிமொழி பதிலளிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனையடுத்து, தமிழ்நாட்டு எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று பேசியதை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் எம்.பி. கனிமொழியிடம் தெரிவித்தார்.

    இந்நிலையில், தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "இன்று நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடளுமன்ற உறுபினர்களை அநாகரீகமாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. வாக்களிக்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்து தான் இவ்வகையில் பேசியுள்ளார்.

    நாடாளுமன்ற மாண்பை பற்றி சிறிதும் தெரியாதவர்கள் பாஜகவினர், சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினரை அவர் சார்ந்த மதம் குறித்து பாஜக உறுப்பினர் அவதூறாக பேசும்போது, பாஜகவின் மூத்த அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் அதை ரசித்து, சிரித்து கொண்டிருந்தார்கள், இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசுகின்றனர்.

    பாஜகவினர் கொண்டுவரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களை, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள், உரிய நேரத்தில் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    ×