என் மலர்
இந்தியா
- பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர்.
- பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து, புதிய ரெயில் இயக்கத்தை தொடங்கி வைத்ததோடு, பாரதிய ஜனதா கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதையொட்டி அவரை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு இடங்களில் கொடி மற்றும் பதாகைகளை அமைத்திருந்தனர். இது தற்போது பிரச்சினைக்குரியதாக மாறி உள்ளது.
கொடி மற்றும் பதாகைகள் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாக புகார்கள் கூறப்பட்டன. இந்த நிலையில் தம்பானூர், கண்டோன்மென்ட் மற்றும் அருங்காட்சியக போலீசில் மாநகராட்சி இது தொடர்பாக புகாரும் அளித்துள்ளது. அதன்பேரில் கண்டடோன்மென்ட் போலீசார் வழக்கும் பதிவு செய்துள்ளனர்.
கேரளாவில் முதல்முறையாக உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கைப்பற்றியுள்ள நிலையில், அங்கு அந்தக் கட்சியை சேர்ந்தவர் மேயராக உள்ள சூழலில், இந்த புகார் கொடுக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அனுமதியின்றி பொது இடங்களில் நெகிழ்வு பலகைகள், கொடிகள் மற்றும் பதாகைகளை வைத்ததற்காக, பா.ஜ.க. நகர மாவட்டக் குழுவிற்கு திருவனந்தபுரம் மாநகராட்சி ரூ.19.7 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
இது பற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், அனுமதியின்றி வைக்கப்பட்ட பதாகைகளை 2 மணி நேரத்திற்குள் அகற்றுமாறு பாரதிய ஜனதா நிர்வாகிகளுக்கு மாநகராட்சி உத்தரவிட்டது. இருப்பினும், நடைபாதைகளின் குறுக்கே அமைக்கப்பட்ட பலகைகளை அகற்றுவதைத் தவிர, கட்சியிடமிருந்து குறிப்பிடத்தக்க நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் தான் தற்போது அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. பதாகைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை பின்பற்றத் தவறியதால், பா.ஜ.க. நகர, மாவட்ட தலைவர்களுக்கு அபராத அறிவிப்பும் அனுப்பப்பட்டது என்றார்.
இதற்கிடையில் பதாகைகள் வைக்கப்பட்டது தொடர்பாக கேரள ஐகோர்ட்டும் அதிருப்தி தெரிவித்து இருந்தது. தெளிவான நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும், மாநிலம் முழுவதும் பொது இடங்களில் அங்கீகரிக்கப்படாத பலகைகள் மற்றும் கொடிகள் தொடர்ந்து நிறுவப்படுவது குறித்து வேதனை தெரிவித்ததது.
இது தொடர்பாக மாநகராட்சி வக்கீல் கூறுகையில், புகார்கள் வந்தவுடன், பொறுப்பான நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது உட்பட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இருப்பினும், வெறும் வார்த்தைகள் மட்டும் போதாது. தனி நபர்கள் அல்லது நிறுவனங்கள் பொது இடங்களை அபகரிக்கும் வளர்ந்து வரும் கலாச்சாரம் மாற வேண்டும் என்றும் ஐகோர்ட்டு குறிப்பிட்டது.
- இலவசமாகத் தண்ணீர் வழங்க மறுத்து விலை கொடுத்துத் தண்ணீர் பாட்டிலை வாங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
- இலவசக் குடிநீர் வழங்குவது விதிமுறை என்று சுட்டிக்காட்டியும் ஹோட்டல் நிர்வாகம் அதனை ஏற்கவில்லை.
அண்மைக் காலமாக உயர்தர உணவகங்களில் தண்ணீரும் விலை கொடுத்து வாங்கும் சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் வாடிக்கையாளருக்கு இலவசக் குடிநீர் வழங்க மறுத்து, விலை கொடுத்து பாட்டில் தண்ணீரை வாங்க வற்புறுத்திய ஓட்டல் ஒன்றுக்கு நுகர்வோர் நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள கார்டன் கிரில்ஸ் 2.0 என்ற ரெஸ்டாரண்டிற்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம், ஆகாஷ் சர்மா என்பவர் சென்றுள்ளார்.
அங்கு அவர் குடிநீர் கேட்டபோது, ஓட்டல் ஊழியர்கள் இலவசமாகத் தண்ணீர் வழங்க மறுத்துள்ளனர்.
அதற்குப் பதிலாக, விலை கொடுத்துத் தண்ணீர் பாட்டிலை வாங்குமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இலவசக் குடிநீர் வழங்குவது விதிமுறை என்று சுட்டிக்காட்டியும் ஹோட்டல் நிர்வாகம் அதனை ஏற்கவில்லை. இறுதியில் அவர் 40 ரூபாய் கொடுத்து இரண்டு பாட்டில் தண்ணீரை வாங்கியுள்ளார்.
இது தொடர்பாக ஆகாஷ் சர்மா நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 3,000 ரூபாய் இழப்பீடும், அவர் தண்ணீர் பாட்டிலுக்காகச் செலவழித்த 40 ரூபாயைத் திரும்ப வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
- பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வாக்குறுதி அளித்தனர்.
- கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்குபதியப்பட்டது.
தெலுங்கானாவில் உள்ள கிராமங்களில் சுமார் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஹனுமகொண்டா மாவட்டத்தில் உள்ள ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, பஞ்சாயத்து தலைவர்கள் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது.
பஞ்சாயத்து தலைவர்கள் இருவரை வாடகைக்கு அமர்த்தி, தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி அவற்றைக் கொன்றுள்ளனர். பின்னர் அந்த உடல்களை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் குழிதோண்டிப் புதைத்துள்ளனர்.
விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், இதில் ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களின் கணவர்கள், பஞ்சாயத்துச் செயலாளர்கள் மற்றும் நாய்களைக் கொன்ற கூலி ஆட்கள் ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் தெலுங்கானா முழுவதிலும் உள்ள பல்வேறு கிராமங்களில் இதேபோல 900 நாய்கள் கொல்லப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
- கணவரை கொலை செய்தால் ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்து ரூ.1 லட்சத்தை முன்பணமாக கொடுத்தார்.
- காரை பின் தொடர்ந்து வந்த கூலிப்படையினர் லாலு ஸ்ரீனுவை குண்டு கட்டாக தூக்கி காரில் போட்டனர்
தெலுங்கானா மாநிலம் பெத்தரவிடு அடுத்த டோர்னாலினாவை சேர்ந்தவர் லாலு ஸ்ரீனு (வயது 38). லாரி டிரைவர். இவரது மனைவி ஜான்சி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
லாலு ஸ்ரீனு லாரி ஓட்டும்போது கஞ்சா, மது உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்களுக்கு அடிமையானார். கஞ்சா விற்பனை செய்ததாக போலீசார் லாலு ஸ்ரீனுவை கைது செய்து ஓங்கோல் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஜான்சிக்கு தனது தம்பியின் நண்பரான ஜிம்மிடோர்னாவை சேர்ந்த கார் டிரைவர் சூர்ய நாராயணா என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரிய வந்தது. ஜெயிலில் உள்ள கணவரை பார்ப்பதற்காக தனது தம்பியுடன் ஜான்சி ஜெயிலுக்கு சென்றார்.
அப்போது லாலு ஸ்ரீனு மனைவியையும், அவரது தம்பியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். கணவர் ஜெயிலிலிருந்து வெளியே வந்தவுடன் தங்களை கொலை செய்து விடுவார் என அச்சம் அடைந்தனர். இதனால் ஜெயிலில் இருந்து கணவர் வெளியே வரும்போது முந்திக்கொண்டு கொலை செய்து விட வேண்டும் என ஜான்சி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டம் தீட்டினார்.
குண்டூரை சேர்ந்த 4 பேர் கொண்ட கூலிபடையினரிடம் கணவரை கொலை செய்தால் ரூ.2 லட்சம் தருவதாக தெரிவித்து ரூ.1 லட்சத்தை முன்பணமாக கொடுத்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் லாலு ஸ்ரீனு ஜெயிலிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். அவரை அழைத்து வர தனது தம்பியுடன், ஜான்சி ஜெயில் வாசலில் காரில் காத்திருந்தார். ஜெயிலில் இருந்து வெளியே வந்த கணவரை காரில் அழைத்து சென்றனர்.
அவர்களது காரை பின் தொடர்ந்து சூரிய நாராயணா மற்றும் கூலிப்படையினர் வந்தனர். சிமகுத்தி பொடிலியா ஆகிய 2 இடங்களில் கொலை செய்ய முயன்றனர். இவர்களது திட்டம் கைகூடவில்லை.
இதையடுத்து சிறுநீர் கழிக்க வேண்டுமென லாலு ஸ்ரீனு காரில் இருந்து இறங்கினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஜான்சியும் அவரது தம்பியும் பின்புறமாக சென்று கணவரின் கண்ணில் மிளகாய்ப்பொடியை தூவினர்.
காரை பின் தொடர்ந்து வந்த கூலிப்படையினர் லாலு ஸ்ரீனுவை குண்டு கட்டாக தூக்கி காரில் போட்டனர். அப்போது ஜான்சி தனது தம்பியுடன் சேர்ந்து கத்தியை எடுத்து கணவரின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் துடித்துடித்து லாலு ஸ்ரீனு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
கள்ளக்காதலன் சூரிய நாராயணா மற்றும் கூலிப்படையினர் நீங்கள் இருவரும் போலீசில் சரணடைந்து விடுங்கள் நாங்கள் உங்களை ஜாமீனில் எடுக்கிறோம் என்று தெரிவித்தனர்.
அதன்படி ஜான்சியும், அவரது தம்பியும் போலீசில் சரணடைந்தனர். போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கள்ளக்காதலன் சத்திய நாராயணா மற்றும் கூலிப்படையினருடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்.
- இது ஒரு வளர்ந்த இந்தியாவை நோக்கிய திசையை வழங்குவதற்கான ஒரு உறுதிமொழிப் பத்திரம் ஆகும்.
- உலகில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா.
புதுடெல்லி:
மத்திய அரசின் 18-வது ரோஜ்கர் மேளா திட்டத்தில் 61 ஆயிரம் இளைஞர்களுக்கு பிரதமர் மோடி இன்று பணி நியமன கடிதங்களை மின்னணு முறையில் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
புத்தாண்டு உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியின் புதியஅத்தியாயத்தைத் தொடங்குகிறது. இந்த நேரம் அரசியலமைப்பு சட்டத்தின் மீதான உங்கள் பொறுப்புகளுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு வருகிறது.
ஜனவரி 24-ந்தேதி அன்று நமது அரசியலமைப்புச் சட்டம் 'ஜன கன மன' தேசிய கீதமாகவும், 'வந்தே மாதரம்' தேசியப் பாடலாகவும் ஏற்றுக்கொண்டது. இந்த நியமனக் கடிதம், ஒரு வகையில் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு அழைப்பு கடிதமாகும். இது ஒரு வளர்ந்த இந்தியாவை நோக்கிய திசையை வழங்குவதற்கான ஒரு உறுதிமொழிப் பத்திரம் ஆகும்.
கடந்த 5 முதல் 7 ஆண்டுகளில், நீங்கள் ஒரு அரசு அலுவலகம் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ அரசுடன் தொடர்பு கொண்டபோது, உங்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் அல்லது நீங்கள் கவனித்த குறைகள் அனைத்தையும் பற்றி யோசித்துப் பாருங்கள். இப்போது அரசாங்கத்தில் உங்கள் பதவிக் காலத்தில் உங்களுக்குத் தொந்தரவு அளித்த அந்த விஷயங்கள் வேறு யாரையும் தொந்தரவு செய்யாமல் இருப்பதை உறுதி செய்வது உங்கள் பொறுப்பு. அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், உங்கள் மட்டத்தில் சிறிய சீர்திருத்தங்களை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.
பல நாடுகளுடன் இந்தியா வர்த்தகம் மற்றும் இடம்பெயர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது. இந்த வர்த்தக ஒப்பந்தங்கள் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வருகின்றன.
உலகில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்களை கொண்ட நாடு இந்தியா. எனது அரசாங்கம் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வாழ்க்கையையும், வணிகத்தையும் எளிதாக்கும் நோக்கில் இந்தியா சீர்திருத்த எக்ஸ்பிரசில் ஏறியுள்ளது என்றார்.
- ஜம்மு காஷ்மீர் போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.
- அமெரிக்கத் தயாரிப்பான M4 கார்பைன் ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற என்கவுண்டரில் பாகிஸ்தான் பயங்கரவாதி கொல்லப்பட்டார்.
கதுவா மாவட்டத்தின் பர்ஹேதர் பகுதியில் பயங்கவாதிகள் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஜம்மு காஷ்மீர் போலீஸ், ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தின.
இதன்போது என்கவுண்டர் நடந்துள்ளது. கொல்லப்பட்டவர் பாகிஸ்தானைச் சேர்ந்த உஸ்மான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரிடமிருந்து அமெரிக்கத் தயாரிப்பான M4 கார்பைன் ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் இன்னும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
- கடைகளை அடித்து நொறுக்கியும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர்.
- அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள தரானா நகரில், இந்துத்துவா அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் அணித் தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.
இந்தத் தகவல் பரவியதும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின் போது நேற்று வன்முறை வெடித்தது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் கற்களை வீசியும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகளை அடித்து நொறுக்கியும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர்.
வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.வன்முறையில் ஈடுபட்டதாகப் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
- காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை நிபா வைரஸ் ஆரமபகட்ட அறிகுறிகளாகும்.
- இறப்பு ஏற்பட வாய்ப்பு 40% முதல் 75% வரை மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நிபா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 5 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மருத்துவப் பணியாளர்களும் அடங்குவர்.
பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த சுமார் 100 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பழம் தின்னும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது.
காய்ச்சல், தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவை நிபா வைரஸ் ஆரமபகட்ட அறிகுறிகளாகும்.
நோய்த்தொற்று மோசமானால் மூளை அழற்சி ஏற்பட்டு உயிரிழப்பிற்கு வழிவகுக்கும்.
நிபா வைரஸிற்கு இதுவரை தடுப்பூசியோ அல்லது குறிப்பிட்ட சிகிச்சையோ இல்லை.
இறப்பு ஏற்பட வாய்ப்பு 40% முதல் 75% வரை மிக அதிகமாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
- 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதி.
- ஜெய் மராட்டியத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பாஜக அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக-89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன. உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 65 இடங்களும், அதன் கூட்டணியில் உள்ள ராஜ் தாக்கரே வுக்கு 3 இடங்களும் கிடைத்தன.
இந்த நிலையில் சிவ சேனாவை பாஜகவால் அழிக்க முடியாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
பால் தாக்கரே நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-
சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி மட்டுமல்ல. அது ஒரு சித்தாந்தம் நிறைந்தது. அதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று பாஜக. நினைத்தால் அது தவறு. எங்களை பாஜகவால் அழிக்க முடியாது. சிவசேனா இல்லை என்றால் பாஜக ஒருபோதும் மும்பை மாநகராட்சிையயோ அல்லது மாநிலத்தையோ கைப்பற்றி இருக்க முடியாது.
உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக பணபலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் குறைபாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் சந்தித்தன. மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நாங்கள் விரும்பியபடி இல்லாவிட்டாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம்.
சிவசேனா அதிகாரம் பெறுவதற்காக தொடங்கப் படவில்லை. மராட்டிய மக்களின் உரிமைக்காக போராடுவதற்காகவே தொடங்கப்பட்டது.
மராட்டிய மாநிலத்தில் மராத்தி அல்லாத கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதி.
சிவசேனா தொண்டர்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் ஜெய் மராட்டியம் என்ற முழக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அனைவரும் அதை ஒரு வாழ்த்தாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.
- முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார்.
- 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் மும்பை, வடாலா பகுதியைச் சேர்ந்த ஷெஹ்னாஸ் சையத் (46) என்ற பெண் மசாஜ் சேவையை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை வீட்டிற்கு மசாஜ் செய்ய வந்த பெண் ஊழியரின் நடத்தை மற்றும் அவர் கொண்டு வந்த மசாஜ் பெட் அறையில் வைப்பதற்கு வசதியாக இல்லாதது போன்ற காரணங்களால், ஷெஹ்னாஸ் அந்த முன்பதிவை ரத்து செய்துள்ளார்.
முன்பதிவை ரத்து செய்ததால் ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர், ஷெஹ்னாஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் ஆத்திரம் தலைக்கேறி, ஷெஹ்னாஸின் முடியைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்தியும், நகங்களால் பிறாண்டியும் தாக்கியுள்ளார். இருவரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுள்ளனர்.
தடுக்க வந்த ஷெஹ்னாஸின் 18 வயது மகனையும் அந்த ஊழியர் கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ஷெஹ்னாஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அந்த ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்புடைய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, அந்த ஊழியரை நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
- பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கின்றன.
- தை அமாவாசைக்குப்பிறகு வரும் ‘வசந்த பஞ்சமி’ நாளில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா மேளா நடைபெற்று வருகிறது. நேற்று 'வசந்த பஞ்சமி' தினத்தையொட்டி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடினர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கின்றன. இந்த சங்கமம் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இடம் கும்பமேளா போன்ற புனித யாத்திரைகளின் மையமாகும் திகழ்கிறது.
இங்கு ஆண்டுக்கொருமுறை நிகழும் 'மகாமேளா' கடந்த 3-ந் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. அங்கு இதுவரை லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று 'வசந்த பஞ்சமி'யையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பிரயாக்ராஜுக்கு பக்தர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
தை அமாவாசைக்குப்பிறகு வரும் 'வசந்த பஞ்சமி' நாளில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. அதன்படி நேற்று லட்சக்கணக்காணோர் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். காலை 8 மணி வரையில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரயாக்ராஜ் மேளா ஆணையத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, ''கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 8 மணி வரை சுமார் 1.04 கோடி பேர் புனித நீராடினர்'' என்றார்.
பிரயாக்ராஜில் மட்டுமல்லாது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில், ராமர் ஜென்ம பூமியான அயோத்தியிலும் திரளான பக்தர்கள் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ரத சப்தமி விழா நடக்கிறது.
- 14 வகையான அன்னப்பிரசாதம் காலை முதல் இரவு வரை 85 உணவு கவுண்ட்டர்களில் வினியோகம் செய்யப்படும்.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ரத சப்தமி விழா நடக்கிறது. அன்று ஒரே நாளில் சூரியப்பிரபை வாகனம், சின்ன சேஷ வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், கல்ப விட்ச வாகனம், சர்வபூபால வாகனம், சந்திரபிரபை வாகனம் ஆகிய 7 வாகனங்களில் மலையப்ப சாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
இதுதொடர்பாக தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு கூறுகையில், ரத சப்தமி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. 14 வகையான அன்னப்பிரசாதம் காலை முதல் இரவு வரை 85 உணவு கவுண்ட்டர்களில் வினியோகம் செய்யப்படும் என்றார்.
ரத சப்தமியையொட்டி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட சேவைகள், குழந்தைகள் பெற்றோர், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இன்று முதல் 26-ந் தேதி வரை சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படமாட்டாது.
வி.ஐ.பி. தரிசனத்தை தவிர, அனைத்து பரிந்துரை கடிதங்களும் நாளை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.






