என் மலர்tooltip icon

    இந்தியா

    • தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார்.
    • விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது

    கர்நாடக காங்கிரசில் நடந்து வரும் அதிகாரப் போராட்டம் குறித்து கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மௌனம் கலைத்துள்ளார்.

    கடந்த 2023 இல் நடந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அம்மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரும் பதவி ஏற்றனர்.

    தேர்தல் வெற்றியில் டி.கே. சிவகுமாருக்கு அதிக பங்கு இருப்பதால் 5 ஆண்டுகால ஆட்சியில் முதல் இரண்டை ஆண்டு காலம் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டு காலம் சிவகுமாரும் முதல்வராக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    இருப்பினும் தானே முழு ஆட்சிக் காலத்துக்கும் முதல்வர் என சித்தராமையா அண்மையில் உறுதிப்படுத்தினார். இதை டி.கே. சிவகுமார் பொதுவெளியில் ஆமோதித்தபோதும் டிகே சிவகுமார் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். அண்மையில் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் டெல்லியில் முகாமிட்டனர்.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, இந்த விவகாரம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் விரைவில் ஒரு கூட்டம் நடத்தப்படும். அனைவருடனும் விவாதிக்காமல் ஒருதலைப்பட்சமாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவித்தார்.

    ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். அனைவரையும் கலந்துரையாடலுக்கு அழைக்கிறேன். அனைவரிடமும் பேசிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மேலும் கட்சியில் உயர்மட்டக் குழுவின் பங்கு குறித்துப் பேசிய கார்கே, உயர்மட்டக் குழு என்பது ஒரு தனிநபர் அல்ல, அது ஒரு குழு. உயர்மட்டக் குழு ஒன்றாக அமர்ந்து இறுதி முடிவை எடுக்கும் என்று கூறினார்.  முன்னதாக ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விவாதித்து இந்த விவாகரத்துக்கு தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.  

    • உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.
    • உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

    போரூர் அருகே கடந்த 2017-ம் ஆண்டு 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தததுடன் உடலை எரித்த வழக்கில் தஷ்வந்தை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

    இதனை தொடர்ந்து ஜாமினில் வெளியே வந்த தஷ்வந்த் தன் தாயை அதே ஆண்டு கொலை செய்து தப்பித்ததாக குற்றம்சாட்டிய போலீசார் மும்பையில் வைத்து தஷ்வந்த்தை கைது செய்தனர்.

    இதையடுத்து சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 2018-ம் ஆண்டு தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த்தின் தந்தை பிறழ்சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கில் இருந்து தஷ்வந்த்தை விடுதலை செய்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதனிடையே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்தது.

    தொடர்ந்து கடந்த மாதம், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தஷ்வந்த் குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென கூறிய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையை ரத்து செய்தும் தஷ்வந்த்தை விடுவித்தும் உத்தரவிட்டது.

    வீடியோ, சிசிடிவி காட்சிகள் போதுமானதல்ல, டிஎன்ஏ சோதனை ஒத்துப்போகவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். இந்நிலையில் சிறுமி வன்கொடுமை வழக்கில் இருந்து தஷ்வந்த் விடுதலை செய்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது.

    நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ரத்து செய்து, விடுவித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரிய மனுவை, தீர்ப்பு வழங்கிய நீதிபதி விக்ரம்நாத் இன்று விசாரித்தார்.

    அப்போது, தஷ்வந்த் விடுதலைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவை நம்பின.
    • இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதி குறித்த விரிவான தகவல்களையும் சேகரித்தன.

    2014 மக்களவை தேர்தலில் காங்கிரசின் தோல்விக்குப் பின்னால் அமெரிக்க உளவு நிறுவனமான CIA வுக்கும் இஸ்ரேலின் மொசாத்-திற்கும் பங்கு உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் குமார் கேத்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

    மகாராஷ்டிராவை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மாநிலங்களவை எம்பியான குமார் கேத்கர் பிரபல பத்திரிகையாளரும் ஆவார்.

    இந்நிலையில் காங்கிரஸ் ஏற்பாடு செய்த அரசியலமைப்பு தின நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

    அப்போது பேசிய அவர், "2004 மக்களவை தேர்தலில் கட்சி 145 இடங்களையும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பொதுத் தேர்தலில் 206 இடங்களையும் கைப்பற்றியது. இந்த வளர்ச்சிப் போக்கு தொடர்ந்திருந்தால், காங்கிரசால் 250 இடங்களைப் பெற்று அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்க முடியும். ஆனால், 2014-ல் கட்சியின் இடங்களின் எண்ணிக்கை 44 ஆகக் குறைந்தது.

    காங்கிரசைப் பலவீனப்படுத்த 2014 தேர்தலுக்கு முன்பே சதி வேலைகள் தொடங்கப்பட்டுவிட்டன. 2009-ல் கிடைத்த இடங்களைவிடக் காங்கிரஸ் கட்சியின் இடங்கள் குறைய சில அமைப்புகள் தலையிட்டன.

    காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தங்களது நலன்கள் பாதுகாக்கப்படும் என்று இந்த நிறுவனங்கள் நம்பின. இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்பாகக் கண்காணிக்க சி.ஐ.ஏ-வும் மொசாத்தும் முடிவு செய்தன.

    இந்த அமைப்புகள் இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் தொகுதி குறித்த விரிவான தகவல்களையும் சேகரித்தன.

    மத்தியில் ஒரு பெரும்பான்மை அரசாங்கம் அமைய வேண்டும் என்றும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த முடியாது என்று அவை நம்பின" என்று தெரிவித்தார்.  

    • ரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடந்து வருகிறது.
    • வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அந்த வகையில் ஆளும் பாஜக தலைமையிலான அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை வேண்டுமென்றே நீக்குவதாக கூறி SIRக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் காங்கிரஸ் இளைஞரணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் தடுப்புகளில் ஏறியதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இதேபோன்ற ஒரு போராட்டம் உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கேயும் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதால் குழப்பமான சூழல் நிலவியது.

    SIR-க்கு எதிராக காங்கிரஸ் வாக்கு திருடனே, நாற்காலியை விட்டு வெளியேறு என்ற தலைப்பில் நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

    வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களாக ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக SIR நடைபெற்ற பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • ஜனநாயகத்தை வலுப்படுத்த 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது IIDEA
    • இது இந்தியா உட்பட 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு மன்றமாகும்.

    இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் உதவி நிறுவனம் (IIDEA) 2026 இன் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஜனநாயகத்தை வலுப்படுத்த 1995 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட IIDEA, இந்தியா உட்பட 35 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஒரு மன்றமாகும்.

    அமெரிக்காவும் ஜப்பானும் பார்வையாளர் நாடுகளாக இந்த அமைப்பில் பங்கேற்கின்றன. தற்போது தலைமைப் பொறுப்பை வகிக்கும் சுவிட்சர்லாந்து, 2026க்கான பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்க உள்ளது.

    டிசம்பர் 3 ஆம் தேதி அமெரிக்காவின் ஸ்டாக்ஹோமில் நடைபெறும் உறுப்பு நாடுகளின் கூட்டத்தில் ஞானேஷ் குமார் இந்த பொறுப்பை ஏற்கிறார்.

    இதன் தலைவராக, ஞானேஷ் குமார் 2026 வரை அனைத்து கவுன்சில் கூட்டங்களுக்கும் தலைமை தாங்குவார். 

    • 50 வயதான முரளி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
    • மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சென்ற தமிழக பக்தர் உயிரிழந்ததால் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது.

    கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 50 வயதான முரளி என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

    இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில் முரளி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    சபரிமலையில் இதுவரை மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பக்தர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

    • முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
    • பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?

    முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என கேரள மாநில பாஜக தலைவர் ராஜிவ் சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

    கோழிக்கோடு பத்திரிகையாளர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வில் ராஜீவ் சந்திரசேகர் கலந்துகொண்டார்.

    அதில், மத்திய அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததற்கு முக்கிய காரணம் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிக்காததுதான் என்று அவர் கூறியுள்ளார்.

    அவர் பேசியதாவது, "பாஜகவுக்கு வாக்களித்தால்தான் முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்க முடியும். முஸ்லிம் எம்.பி.க்கள் இல்லாதபோது முஸ்லிம் அமைச்சர்கள் எப்படி இருக்க முடியும்?

    காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம் சமூகம் என்ன நன்மைகளைப் பெற்றுள்ளது?

    காங்கிரசுக்கு வாக்களிப்பதன் மூலம் முஸ்லிம்கள் என்ன சாதித்துள்ளனர்.

    பாஜகவுக்கு வாக்களிக்க விரும்பாதபோது, பிரதிநிதித்துவத்தை எதிர்பார்க்க முடியுமா?" என்று தெரிவித்தார். 

    • மடத்தின் வளாகத்தில் ஒரு சிறப்பு ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
    • இது உலகின் மிக உயரமான ஸ்ரீ ராமரின் சிலையாக இருக்கும்.

    கோவாவின் கனகோனாவில் (தெற்கு கோவா) உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பரதகலி ஜீவோட்டம் மடத்தில் இந்தியாவின் மிக உயரமான ராமரின் 77 அடி வெண்கல சிலை நாளை புனிதமாக பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான பிராண பிரதிஷ்டை பூஜைகள் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    நாளை பிற்பகல் பிரதமர் மோடி, சிலையை திறந்து வைக்கிறார். இதற்காக மடத்தின் வளாகத்தில் ஒரு சிறப்பு ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் ஒற்றுமை சிலையை வடிவமைத்த சிற்பி ராம் சுதார், ராமரின் சிலையை உருவாக்கியுள்ளார் என்று கோவா பொதுப்பணித்துறை மந்திரி திகம்பர் காமத் தெரிவித்தார். இது உலகின் மிக உயரமான ஸ்ரீ ராமரின் சிலையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

    கோவா கவர்னர் அசோக் கஜபதி ராஜு, முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் , மத்திய மந்திரி ஸ்ரீபத் நாயக், மாநில மந்திரிகள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    • வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
    • ஏழுமலையானை குலதெய்வமாக கருதுகிறேன்.

    ஆந்திரா டி.வி சேனலில் பிரபல தொகுப்பாளினியாக விளங்கி வருபவர் சிவஜோதி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரர் சோனுவுடன் திருப்பதியில் ஏழுமலையான தரிசிக்க வந்தார்.

    அப்போது ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் வாங்கினார். தரிசனத்திற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவஜோதி மற்றும் அவரது சகோதரர் சோனு ஆகியோர் ரூ.10 ஆயிரம் தரிசன டிக்கெட் வாங்கி தரிசனத்திற்காக மணிக்கணக்கில் காத்திருந்தோம். பிரசாதம் வாங்க நீண்ட நேரம் பிச்சைக்காரர்களைப் போல் காத்திருந்தோம் என வீடியோ எடுத்து வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர்.

    இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைக் கண்ட தேவஸ்தான அதிகாரிகள் சிவஜோதியின் ஆதார் கார்டை முடக்கினர். வருங்காலங்களில் சிவஜோதி ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் சிவஜோதி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிந்தோ தெரியாமலோ என்னுடைய வாயிலிருந்து வார்த்தைகள் தவறாக வந்துவிட்டது. என்னுடைய வீட்டில் ஏழுமலையான் படம் உள்ளது. ஏழுமலையானை குலதெய்வமாக கருதுகிறேன். என் வயிற்றில் வளரும் குழந்தையை கூட ஏழுமலையானாக கருதுகிறேன். எங்கள் குடும்பத்தில் அனைவரும் அனைத்து தெய்வங்களையும் வணங்கி வருகிறோம். என் மீதான தவறுக்கு மன்னித்து விடுங்கள் என பதிவு செய்துள்ளார்.

    • இறந்துபோன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செயலிழக்கச் செய்துள்ளது.
    • செயலிழந்த எந்தவொரு ஆதார் எண்ணும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்பட மாட்டாது.

    புதுடெல்லி:

    ஆதார் தரவுத்தளத்தின் தொடர்ச்சியான துல்லியத்தன்மையைப் பராமரிக்க நாடு தழுவிய தூய்மைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, இறந்துபோன 2 கோடிக்கும் அதிகமானோரின் ஆதார் எண்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் செயலிழக்கச் செய்துள்ளது.

    செயலிழந்த எந்தவொரு ஆதார் எண்ணும் மற்றொரு நபருக்கு மீண்டும் ஒதுக்கப்பட மாட்டாது. இருப்பினும், ஒரு நபர் இறந்தால், அடையாள மோசடி செய்ய அல்லது நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக இத்தகைய ஆதார் எண்ணை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க ஆதார் எண் செயலிழக்கச் செய்யப்படுவது அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    • பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன.
    • பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு அரியானா போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.

    சண்டிகர்:

    எளிய முறையில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் பேன்சி நம்பர் கொண்ட நம்பர் பிளேட்களை வாங்குகின்றனர்.

    இந்த வகையிலான பேன்சி நம்பர் அவற்றின் இலக்கங்கள், எழுத்துக்களின் வரிசைகளுக்காக தேர்வு செய்யப்படுகின்றன. இவை தனிப்பட்ட விருப்பத் தேர்வுகள், அதிர்ஷ்ட எண்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றன.

    இதற்கிடையே, வாகனங்களுக்கான பேன்சி நம்பர்களைப் பெறுவதற்கு அரியானா போக்குவரத்து துறை ஆன்லைன் வாயிலாக ஏலம் நடத்துகிறது.

    இந்நிலையில், அரியானாவில் ஒவ்வொரு வாரமும் விஐபி மற்றும் பேன்சி எண்கள் ஏலம் நடத்தப்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் திங்கள் காலை 9 மணி வரை, ஏலதாரர்கள் தங்களுக்கு விருப்பமான எண்ணுக்கு விண்ணப்பிக்கலாம். பின்னர் புதன்கிழமை மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் வரை ஏலம் நடைபெறும்.

    இந்த ஏலம் அதிகாரப்பூர்வ fancy.parivahan.gov.in போர்ட்டலில் முழுவதுமாக ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த வாரம், ஏலத்திற்கு வந்த அனைத்து எண்களிலும், HR88B8888 என்ற பதிவு எண்ணின் அடிப்படை ஏல விலை ரூ. 50,000 என நிர்ணயிக்கப்பட்டது. இது ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக்கொண்டே இருந்தது, பின்னர் மாலை 5 மணிக்கு ரூ. 1.17 கோடிக்கு முடிவு செய்யப்பட்டது.

    இதன் மூலம் HR88B8888 என்ற எண் இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த கார் பதிவு எண்ணாக ரூ.1.17 கோடிக்கு மாறியுள்ளது.

    இதுபோன்ற எண்களை பெரும்பாலும் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் ஏலத்தில் எடுப்பதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும்
    • இதற்கு மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும்

    புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்தத் திட்டம் 5 ஆண்டுகளுக்குள் ரூ.9,857.85 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்படும், இதற்கு மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் பன்முக நிதி நிறுவனங்கள் இணைந்து நிதியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

    புனே மெட்ரோ ரெயில் 2-ஆம் கட்ட திட்ட விரிவாக்கம் மொத்தம் 31.636 கிலோமீட்டர் நீளத்திற்கு 28 உயர்த்தப்பட்ட நிலையங்களுடன் அமைக்கப்படவுள்ளது.

    சில தினங்களுக்கு முன்பு மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்து ஆவணங்களை தமிழக அரசுக்கு, மத்திய அரசு திருப்பி அனுப்பி இருந்தது பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது புனே மெட்ரோ ரெயில் விரிவாக்கத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    ×