என் மலர்
இந்தியா
- கூகுள் மீட் சேவை முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- சமூக வலைத்தளங்களில் பயனர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
கூகுள் நிறுவனம் கூகுள் மீட் என்ற வீடியோ கான்பரன்சிங் சேவையை வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் திடீரென கூகுள் மீட் சேவை முடங்கியதால் பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
எவ்வளவு முயற்சித்தும் உள்ளே நுழைய முடியாத விரக்தியில் சமூக வலைத்தளங்களில் பயனர்கள் தங்களது ஆதங்கத்தை கொட்டி தீர்த்து வருகின்றனர்.
- உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது.
- இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
இந்திய பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டும் என்று மத்திய நிதித்துறையின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்திய தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. அனந்த நாகேஸ்வரன், "தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.9 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஆகும். இந்த நிதியாண்டில் (2025-26) நம் நாட்டின் பொருளாதார மதிப்பு 4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை (ரூ.357 லட்சம் கோடி) கடக்கும்" என்று தெரிவித்தார்.
- ஹர்த்திக் ரதி, விளையாட்டு மைதானத்தில் தனியாக பயிற்சி செய்து கொண்டிருந்தார்.
- ஹர்த்திக் ரதி மீது கம்பம் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.
அரியானா மாநிலம் ரோக்தக் பகுதியை சேர்ந்தவர் ஹர்த்திக் ரதி (வயது 16). இவர் தேசிய அளவிலான கூடைப்பந்து வீரர்.
இந்த நிலையில் ஹர்த்திக் ரதி, விளையாட்டு மைதானத்தில் தனியாக பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் கூடைப்பந்து வளையத்தில் தொங்க முயற்சித்தார்.
இதில் அந்த கம்பம் திடீரென்று வளைந்து சரிந்து ஹர்த்திக் மீது விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஹர்த்திக் ரதி மீது கம்பம் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. மேலும், தடகள வீரருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரியானா ஒலிம்பிக் சங்கம் அடுத்த மூன்று நாட்களுக்கு விளையாட்டு நிகழ்வுகளை நிறுத்தி வைத்துள்ளது.
- தாய், தந்தை, குரு, தெய்வமாக அரசியலமைப்பு உள்ளது.
- ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை உலகிற்கு மீண்டும் புரிய வைத்தது.
அரசியலமைப்பு சட்ட தினம் பழைய பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தலைமையில் நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முதலாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிலையில் தனது உரையை தமிழ் மொழியில் தொடங்கினார். அவர் பேசியதாவது:-
தாய், தந்தை, குரு, தெய்வமாக அரசியலமைப்பு உள்ளது. நமது அரசியலமைப்பு அரசியலமைப்பு சபையில் நமது அன்னை பாரதத்தின் சிறந்த தலைவர்களால் வரைவு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது சுதந்திரத்திற்காகப் போராடிய மில்லியன் கணக்கான நமது நாட்டு மக்களின் கூட்டு ஞானம், தியாகம் மற்றும் கனவுகளை உள்ளடக்கியது.
சிறந்த அறிஞர்கள், வரைவுக் குழு மற்றும் அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள் கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை நிறைவேற்ற நுண்ணறிவு மிக்க சிந்தனைகளை வழங்கினர். அவர்களின் தன்னலமற்ற பங்களிப்பு பாரதத்தை இன்று உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாற்றியது. நமது அரசியலமைப்பு அறிவு மற்றும் வாழ்ந்த அனுபவம், தியாகங்கள், நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளிலிருந்து பிறந்தது. நமது அரசியலமைப்பின் ஆன்மா பாரதம் ஒன்று, அது என்றென்றும் ஒன்றாக இருக்கும் என்பதை நிரூபித்துள்ளது.
370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, 2024 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தல்களின் போது, அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் வாக்களித்தது ஜனநாயகத்தின் மீதான நமது நம்பிக்கையை உலகிற்கு மீண்டும் புரிய வைத்தது.
சமீபத்தில் நடைபெற்ற பீகார் தேர்தல்களில், குறிப்பாக அதிக எண்ணிக்கையிலான பெண்களின் வாக்களிப்பு, நமது தாய் பாரத ஜனநாயகத்தின் கிரீடத்தில் மற்றொரு விலைமதிப்பற்ற வைரத்தைச் சேர்த்துள்ளது. அரசியலமைப்பு சபையின் பெண் உறுப்பினர்களின் பங்களிப்புகள் ஒப்பிடமுடியாதவை என்றார்.
- சாஹிப் என்பவனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
- தற்கொலை படை தாக்குதலை உமர் நபி மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு வரை கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி அன்று நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) விசாரணை மேற்கொண்டு வருகிறது. கார் குண்டு வெடிப்பு தொடர்பாக இதுவரை 6 பேரை கைது செய்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று மேலும் ஒருவனை கைது செய்தனர்.
தற்கொலைப்படை தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபிக்கு தங்குவதற்கு இடம் கொடுத்ததாக அரியானா மாநிலம் ஃபரிதாபத்தை சேர்ந்த சாஹிப் என்பவனை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தற்கொலை படை தாக்குதலை உமர் நபி மேற்கொள்வதற்கு ஒரு நாள் முன்பு வரை கைது செய்யப்பட்ட நபரின் வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்ததை தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.
- பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்.
- நமது அரசியலமைப்பு மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.
ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி நாடு விடுதலை பெற்ற பிறகு இந்தியாவுக்கு என தனி அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. இதனை டாக்டர் அம்பேத்கர் உருவாக்கினார்.
அவர் வரைந்த அரசியலமைப்பு சட்டங்கள், பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியலமைப்பு நிர்ணய சபையால் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த தினத்தை அரசியலமைப்பு தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். கடந்த 2015-ம் ஆண்டு இதுகுறித்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார்.
இந்நிலையில் இந்திய அரசியலமைப்பு தினக் கொண்டாட்டத்தை ஒட்டி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களும் அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு கடமைகள் வலுவான ஜனநாயகத்திற்கான அடித்தளங்கள்.
வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டியதன் பொறுப்பை பிரதமர் வலியுறுத்தினார்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியலமைப்பு தினத்தை கொண்டாட வேண்டும்.
கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்தே உரிமைகள் பிறக்கின்றன என்ற மகாத்மா காந்தியின் நம்பிக்கையை நினைவு கூர்ந்த அவர், கடமைகளை நிறைவேற்றுவது சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான அடித்தளம் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அரசியலமைப்பு தினத்தன்று, நமது அரசியலமைப்பை வடிவமைத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் தொலைநோக்குப் பார்வை ஒரு வளர்ந்த பாரதத்தை கட்டியெழுப்புவதில் நம்மைத் தொடர்ந்து ஊக்குவிக்கின்றன.
நமது அரசியலமைப்பு மனித கண்ணியம், சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இது நமக்கு உரிமைகளை வழங்கும் அதே வேளையில், குடிமக்களாகிய நமது கடமைகளையும் நினைவூட்டுகிறது. அவற்றை நாம் எப்போதும் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும். இந்தக் கடமைகள் ஒரு வலுவான ஜனநாயகத்தின் அடித்தளமாகும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

- இரவு 12 மணிக்கு மனைவியை எழுப்பி பிறந்தநாள் கேக்கை வெட்ட வைக்கலாம் என்று நினைத்தார்.
- இரவு 11 மணிக்கு அலாரம் அடித்ததும், சத்தம்கேட்டு எழுந்த மனைவி அதனை ஆப் செய்துவிட்டு தூங்கினார்.
பொதுவாக நமக்கு நெருங்கியவர்களின் பிறந்தநாளில் அவர்களுக்கு தெரியாமல் இன்ப அதிர்ச்சியூட்டும் விதமாக திடீரென வாழ்த்து தெரிவிப்போம். அந்த வகையில் கணவர் ஒருவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு அவருக்கு தெரியாமல் முன்கூட்டியே பிரிட்ஜில் கேக் வாங்கி வைத்தார்.
இரவு 12 மணிக்கு மனைவியை எழுப்பி பிறந்தநாள் கேக்கை வெட்ட வைக்கலாம் என்று நினைத்தார். இவரது மனைவியோ இரவு 9½ மணிக்கே தூங்கிவிட்டார். பின்னர் இவரும் செல்போனில் படம் பார்த்துக்கொண்டே ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டார்.
இதையடுத்து இரவு 11 மணிக்கு அலாரம் அடித்ததும், சத்தம்கேட்டு எழுந்த மனைவி அதனை ஆப் செய்துவிட்டு தூங்கினார். இந்நிலையில் காலையில் எழுந்து பிரிட்ஜை திறந்த மனைவிக்கு கேக்கை பார்த்ததும் அதிர்ச்சி. அப்போது அவர் கோபப்படாமல் சிரித்தபடி கணவர் தனக்காக செய்ததை நினைத்து சந்தோஷப்பட்டார். இதையடுத்து கேக் வெட்டுவதுபோன்ற வீடியோ எடுத்து தனது கணவருக்கு காண்பித்தார்.
இந்த வீடியோவை அவர் சமூக வலைதளங்களில் பதிவிட லட்சக்கணக்கானோரின் விருப்பங்களை பெற்று வைரலாகி வருகிறது.
- அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
- வி.ஐ.பி. தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன.
திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை 10 நாட்கள் வைகுண்ட துவார தரிசனத்திற்கான விரிவான ஏற்பாடுகள் மற்றும் விரிவான வழிகாட்டுதல்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவஸ்தானம் பெரும்பாலான சிறப்பு சலுகைகளை ரத்து செய்துள்ளது. வைகுண்ட ஏகாதசி முதல் 3 நாட்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள 7 நாட்கள் நேரடி தரிசனம் வழங்கப்படுகிறது.
முதல் 3 நாட்களுக்கு 1+3 குடும்ப ஒதுக்கீட்டின் கீழ் டோக்கன்கள் ஒதுக்கப்படும், இதில் நான்கு உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்படுவார்கள்.
பக்தர்கள் நவம்பர் 27-ந் தேதி காலை 10 மணி முதல் டிசம்பர் 1-ந் தேதி மாலை 5 மணி வரை தேவஸ்தான வலைத்தளம், தேவஸ்தான மொபைல் செயலி அல்லது அரசு வாட்ஸ்அப் பாட் (9552300009) வழியாக பதிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் டிக்கெட் தேர்வு முடிவுகள் டிசம்பர் 2-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்கப்படும்.
மீதமுள்ள நாட்களுக்கான தரிசன அட்டவணை மற்றும் டிக்கெட் விற்பனையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சர்வ தரிசனத்திற்கு, சாதாரண பக்தர்கள் வைகுந்தம் வரிசை வளாகம்2 மூலம் டோக்கன்கள் இல்லாமல் நேரடியாக சர்வ தரிசனத்தைப் பெறலாம்.
ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளுக்கு (ஜனவரி 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை), ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
ரூ.300 கட்டண தரிசனத்திற்கு ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.
சுய நெறிமுறை பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். வி.ஐ.பி. தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் நேற்று 72,677 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 24,732 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.26 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 12 மணி காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- வரும் நாட்களில் ஆன்லைன் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப உடனடி தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும்.
- சபரிமலையில் 2-ம் கட்டமாக 1,500 போலீசார் பணி பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. தினமும் ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு அடிப்படையில் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில டி.ஜி.பி. ரவடா சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். அவர் நேற்று காலையில் சாமி தரிசனத்திற்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
சபரிமலையில் கடந்த சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாட்கள் தினசரி 90 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து உள்ளனர். 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு சராசரியாக 85 பக்தர்கள் வீதம் ஏற்றி விடப்படுகிறார்கள்.
தற்போது உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு 5 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதால் கூட்ட நெரிசல் குறைந்துள்ளது. பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஆன்லைன் முன்பதிவு செய்து சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வருகைக்கு ஏற்ப உடனடி தரிசனத்திற்கான அனுமதி வழங்கப்படும்.
சீசனையொட்டி 18 ஆயிரம் போலீசார் சபரிமலை, பம்பை, நிலக்கல், எருமேலி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு குழுக்களாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இன்று (அதாவது நேற்று) சபரிமலையில் 2-ம் கட்டமாக 1,500 போலீசார் பணி பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தேவையான நேரங்களில் தமிழ்நாடு உட்பட அண்டை மாநில போலீசாரும் சபரிமலை பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்படுவார்கள் என்றார்.
இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானம் தலைமை அலுவலகத்தில் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு ஜெயகுமார் நிருபர்களிடம் கூறும்போது, 'சபரிமலையில் தற்போது பக்தர்களுக்கு கஞ்சி மற்றும் சாதாரண சாப்பாடு வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல் பொதுமக்களின் பங்களிப்புடன் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி சன்னிதானத்தில் நாளை (வியாழக்கிழமை) முதல் பக்தர்களுக்கு பாயசம், அப்பளத்துடன் மதிய உணவு (சத்யா) வழங்கப்படும்' என்றார்.
- எங்கள் முதல் கடமை, விலைவாசியை நிலைப்படுத்துவதுதான்.
- அக்டோபர் மாதத்தில், இந்திய பொருளாதாரம் வேகம் எடுத்துள்ளது.
மும்பை:
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ ரேட் என்று அழைக்கப்படுகிறது.
2 மாதங்களுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூடி, ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்கிறது. இக்குழுவின் அடுத்த கூட்டம் டிசம்பர் மாதம் நடக்கிறது.
இதற்கிடையே, ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ஒரு டெலிவிஷன் சேனலுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த மாதம் நடந்த ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில், ரெப்போ வட்டி குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போதிருந்து நமக்கு கிடைத்த மேக்ரோ பொருளாதார தரவுகள், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிவிக்கின்றன. எனவே, நிச்சயமாக வட்டி குறைக்கப்பட வாய்ப்புள்ளது.
ஆனால், வரும் டிசம்பர் மாதத்திலேயே குறைக்கப்படுமா, அல்லது பின்னர் நடக்கும் நிதிக்கொள்கை குழு கூட்டத்தில் குறைக்கப்படுமா என்பது பற்றி நிதிக்கொள்கை குழு தான் முடிவு செய்யும்.
எங்கள் முதல் கடமை, விலைவாசியை நிலைப்படுத்துவதுதான். அதே சமயத்தில், வளர்ச்சியிலும் கவனம் செலுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், ரிசர்வ் வங்கி நேற்று பொருளாதார நிலவர அறிக்கை வெளியிட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அக்டோபர் மாதத்தில், இந்திய பொருளாதாரம் வேகம் எடுத்துள்ளது. உற்பத்தி, சேவை துறைகள் விரிவடைந்துள்ளன. ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்கள் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. பணவீக்கம், வரலாற்றில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு உள்ளேயே இருக்கிறது.
இந்த ஆண்டில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தனியார் முதலீட்டை அதிகரிக்கவும், உற்பத்தி, வளர்ச்சியை அதிகரிக்கவும், நீண்ட கால பொருளாதார மீட்சிக்கும் பாதை அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
- பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அங்கு அவர் பேசியதாவது,"ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்குக் கொடுக்கும் வரை அல்லது அவருடன் உறவை வளர்த்துக் கொள்ளும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதால், வர்மாவின் பேச்சை பிராமண அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. சந்தோஷ் வர்மாவின் கூற்று ஆபாசமானது, சாதிய ரீதியானது மற்றும் பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.
விரைவில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பிராமண சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என அகில இந்திய பிராமண சங்கத்தின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா எச்சரித்துள்ளார்.
- ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மௌல்வி இர்பான் அகமது மூலம் முதன்முதலில் உமர் உடன் அமீருக்கு தொடர்பு கிடைத்துள்ளது.
- அவர் தன்னைத் தானே எமிர் (மன்னர்) என்று அழைத்துக்கொண்டார்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே 15 பேர் உயிரிழந்த கார் குண்டுவெடிப்பு வழக்கில் பல்வேறு தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன.
அல் பலா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த ஜம்மு காஷ்மீரை டாக்டர் உமர்-உன்-நபி இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியதாக அறியப்படுகிறது.
உமர் உடன் தொடர்புடைய 3 மருத்துவர்கள், தாக்குதலுக்கு பயனப்டுத்தப்பட்ட காரை வாங்கி தந்த டீலர் உட்பட 6 பேரை கைது செய்து என்ஐஏ விசாரித்து வருகிறது.
கைது செய்யப்பட்ட மருத்துவர்களில் ஒருவரான முசாமில் ஷகீல் விசாரணையின்போது அமீர் பற்றிய சில தகவல்களை என்ஐஏவிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் மௌல்வி இர்பான் அகமது மூலம் முதன்முதலில் உமர் உடன் அமீருக்கு தொடர்பு கிடைத்துள்ளது.
விசாரணை வட்டாரங்களின்படி, "உமர்-உன்-நபி ஒன்பது மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். அணு விஞ்ஞானியாக எளிதில் மாறும் அளவுக்கு அவர் புத்திசாலி. அவர் தன்னைத் தானே எமிர் (மன்னர்) என்று அழைத்துக்கொண்டார். மதத்திற்காக இதையெல்லாம் செய்கிறேன் என்று இறுதிவரை என்னை நம்ப வைத்தார்" என்று முசாமில் வாக்குமூலம் அளித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் விசாரணை வட்டாரங்களின்படி, 2016 ஆம் ஆண்டு பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்ஹான் வானியின் கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் உமர் இந்தத் தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, அரியானாவில் மேவாட்-நூ பகுதியில் வகுப்புவாத மோதல்கள் மற்றும் பசு பாதுகாவலர்களால் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்கள் தன்னை மிகவும் பாதித்ததாக உமர் அடிக்கடி கூறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்கொலைத் தாக்குதலுக்கு, அசிட்டோன், சர்க்கரைப் பொடி மற்றும் யூரியாவைப் பயன்படுத்தி வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. சூடேக்சில் வைத்து அந்த வெடிகுண்டை எடுத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. மேலும்,அல் பாலா பல்கலைக்கழகத்தில் உள்ள தனது அறையில் வெடிகுண்டு தயாரிக்கும் பரிசோதனைகளை உமர் செய்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.






