search icon
என் மலர்tooltip icon

    ஈரான்

    • 2016ல் ஈரான் நீதிமன்றம், நர்கெசுக்கு 16 வருட சிறை தண்டனை வழங்கியது
    • தண்டனை முடிந்தாலும், மொபைல் போன் வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ளது

    மேற்கு ஆசியாவில் உள்ள அரபு நாடுகளில் ஒன்று, ஈரான்.

    ஈரானை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர், 51 வயதாகும் நர்கெஸ் மொகமதி (Narges Mohammadi).

    பல வருடங்களாக ஈரான் நாட்டில், பெண் உரிமைகளுக்காக போராடி வந்த பவுதிக பட்டதாரியான நர்கெஸ், ஆடை கட்டுப்பாடு, மரண தண்டனை உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பல கடுமையான சட்டதிட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    2016 மே மாதம், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம், தேச விரோத குற்றத்திற்காக 16 வருட சிறை தண்டனை வழங்கியது.

    இடையே 2020ல் சில மாதங்கள் விடுதலை செய்து அனுப்பிய அந்நாட்டு அரசாங்கம், 2021ல் அவரை மீண்டும் சிறையில் அடைத்தது.

    கடந்த 2023 அக்டோபர் மாதம், சிறையிலிருந்த நர்கெசுக்கு பெண்களுக்கான அடக்குமுறையை எதிர்த்து போராடி வருவதற்கும், மனித உரிமை மற்றும் அனைவருக்குமான சுதந்திரம் குறித்து பிரசாரம் செய்து வருவதற்கும் புகழ் பெற்ற அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

    நார்வே தலைநகர் ஓஸ்லோ நகரில், நர்கெசின் மகன் மற்றும் மகள் தாயாரின் சார்பில் பரிசினை பெற்றனர்.

    ஆனால், ஈரான் வெளியுறவு துறை, இந்த முடிவை கண்டனம் செய்திருந்தது.

    இந்நிலையில், சுமார் 12 வருடங்களை சிறையிலேயே கழித்த நர்கெஸ் மொகமதிக்கு, ஈரான், மேலும் 15 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட நிலையிலும், மத கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டதற்காக அவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த சிறை தண்டனை காலம் முடிந்தாலும், அவர் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு வெளியே 2 வருடங்கள் தங்கி இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    அந்த தண்டனை காலம் முடிவடைந்ததும், மேலும் 2 வருடங்களுக்கு நர்கெஸ் அயல் நாடுகளுக்கு பயணம் செய்வதும், மொபைல் போன் வைத்திருப்பதும் கூட தடை செய்யப்பட்டுள்ளது.

    விசாரணையின் போது அவர் நேரில் வரவழைக்கப்படாமல், அவர் இல்லாமலேயே அவருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை 13 முறை ஈரான் அரசால் கைது செய்யப்பட்டவர், நர்கெஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

    உலகெங்கும் மனித உரிமை மற்றும் பெண் உரிமை ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் இத்தீர்ப்பிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    • வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் ஈரான் சென்றுள்ளார்.
    • ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    டெஹ்ரான்:

    மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.ஜெய்சங்கர் 2 நாள் பயணமாக ஈரான் சென்றுள்ளார். நேற்று ஈரான் வெளியுறவு மந்திரி ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியனுடன் மந்திரி ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    செங்கடலின் நிலைமை உள்ளிட்ட இருதரப்பு மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    இந்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஈரான் அதிபர் சையத் எப்ராகிம் ரைசியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு இடையே ஹவுதி போராளிகள் செங்கடலில் வணிகக் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஜெய்சங்கரின் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவின் உத்தரவுப்படி ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது.
    • ஈரானிய எண்ணெய் பின்னர் அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஈரான்-அமெரிக்கா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் ஓமன் நாட்டின் கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த அமெரிக்காவுக்கு சொந்தமான 'செயின்ட் நிக்கோலஸ்' என்ற கப்பலை ஈரான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    இதுகுறித்து ஈரான் ராணுவம் கூறும் போது, சூயஸ் ராஜன் என்று பெயரிடப்பட்ட சரக்கு கப்பல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் உத்தரவின்படி ஈரான் சரக்கு கப்பலில் இருந்து எண்ணெயை திருடியது.


    ஈரானிய எண்ணெய் பின்னர் அமெரிக்க துறைமுகங்களுக்கு மாற்றப்பட்டு அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதற்கு பதிலடியாக ஓமன் கடலில் எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்காவின் 'செயின்ட் நிக்கோலஸ்' கப்பலை ஈரான் கடற்படை கைப்பற்றியுள்ளது. கோர்ட்டு உத்தரவின்படி அமெரிக்க கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

    • ஈரான் முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.
    • குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்.

    ஈரானில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    கெர்மான் பகுதியில் உள்ள ஈரான் முன்னாள் தளபதி சுலைமானின் கல்லறை அருகே அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தது.

    சுலைமானின் நினைவு நாளை அனுசரிக்க ஏராளமானோர் கூடிய நிலையில் குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது.

    குண்டு வெடிப்பு சம்பவத்தில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    • 2022 ஜனவரி முதல் 4 பேரும் கண்காணிக்கப்பட்டு வந்தனர்
    • பெரிய திட்டத்திற்கு அவர்கள் தயார்படுத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது

    இஸ்ரேல் நாட்டின் மொசாட் (Mossad) உளவு துறையுடன் தொடர்பு கொண்டு உளவு வேலை பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண் உட்பட 4 பேருக்கு ஈரானில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    ஆள் கடத்தல், அச்சுறுத்துதல், வாகனங்கள் மற்றும் வீடுகளை எரித்தல், மொபைல் போன்களை திருடுதல் உட்பட பல குற்றங்களில் இவர்கள் இஸ்ரேலுக்காக ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு ஈரான் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

    "ஈரானுக்கு எதிராக சதி வேலையில் ஈடுபட்ட 4 பேர்களுக்கு சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. 2022 ஜனவரி மாதம் முதல் நால்வரும் ஈரான் உளவு துறையால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். மே மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மிக பெரிய திட்டத்திற்காக இஸ்ரேலால் தயார் செய்யப்பட்டனர்" என ஈரான் நீதிமன்ற செய்திகளை வெளியிடும் மிசான் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை பெற்ற நால்வர் - வஃபா ஹனாரெ, அரம் ஒமாரி, ரஹ்மான் பர்ஹாசோ மற்றும் நசிம் நமாசி (பெண்) ஆவர்.

    கடந்த பல மாதங்களாக, தங்கள் நாட்டிற்குள் சதி வேலைகளில் இஸ்ரேல் ஈடுபடுவதாக ஈரான் குற்றம் சாட்டி வந்ததும், அந்த குற்றச்சாட்டுக்களை இஸ்ரேல் ஒப்பு கொள்ளவோ, மறுக்கவோ இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • 33 நாடுகளின் சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை.
    • இதில் இந்தியாவும் அடங்கும் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

    டெஹ்ரான்:

    ஈரான் நாட்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் அந்நாட்டு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை மந்திரி எஸதுல்லாஹ் சர்காமி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளின் வருகையை ஊக்கப்படுத்தவும் இந்தியா உள்ளிட்ட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

    ஏற்கனவே மலேசியா, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து, கென்யா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இந்திய பயணிகளுக்கு விசா தேவையில்லை என அறிவித்துள்ளது.

    • ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் பல வருடங்களாக ஆதரவு அளித்து வருகிறது
    • அக்டோபர் 7 தாக்குதல் குறித்து ஈரானுக்கு ஹமாஸ் முன்னரே தெரிவிக்கவில்லை

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    ஈரான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

    போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக நேரடியாக போர்க்களத்தில் இறங்கினால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக களம் இறங்கும் என்றும் அதன் மூலம் போர் பிற நாடுகளுக்கு பரவலாம் என உலக நாடுகள் கவலை தெரிவித்து வந்தன.

    சில தினங்களுக்கு முன்பு ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனிக்கும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிற்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

    "ஹமாஸ் அமைப்பிற்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவை ஈரான், தொடர்ந்து வழங்குமே தவிர நேரடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஈரான் ஈடுபடாது என்றும் ஈரானின் ஆதரவை கோரி வெளிப்படையாக பாலஸ்தீனத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு ஹமாஸ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றும் அச்சந்திப்பின் போது ஈரான் அதிபர் அலி கமேனி திட்டவட்டமாக ஹமாஸ் தலைவரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து முன்கூட்டியே ஈரானுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் ஈரானின் இந்த நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரான் இந்த முக்கிய முடிவில் உறுதியாக இருந்தால், போர் பரவல் குறித்த அச்சம் குறைந்து விடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • 10 ஆயிரத்திற்கும் மேல் உயிரிழப்பு ஏற்பட்டதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது
    • போரை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை என இஸ்ரேல் அறிவித்தது

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக அறிவித்துள்ள இஸ்ரேல், கடந்த அக்டோபர் 7 முதல் அவர்கள் மறைந்திருக்கும் காசா பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. போர் 32-வது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    இஸ்ரேலுக்கும் ஹமாஸிற்கும் இடையேயான இந்த போரில் பாலஸ்தீன காசா பகுதியில் இருக்கும் அப்பாவி பாலஸ்தீனியர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன தரப்பு அறிவித்துள்ளது.

    உலக நாடுகள் விடுத்த போர் நிறுத்த கோரிக்கையை இஸ்ரேல் புறக்கணித்து விட்டது.

    இதற்கிடையே, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தொலைபேசியில் பேசினார்.

    இரு நாட்டு தலைவர்களும் இந்தியா-ஈரான் உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்தும் உரையாடியுள்ளனர்.

    இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு ரீதியான இந்த உரையாடலில் இப்ராஹிம் தெரிவித்திருப்பதாவது:

    மேற்கத்திய நாடுகளின் காலனி ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியா நடத்திய போராட்டங்களும், அணி சேரா நாடுகளை ஒருங்கிணைப்பதில் எடுத்த முயற்சிகளையும் ஈரான் இத்தருணத்தில் நினைவு கூர்கிறது. தன்னிடம் உள்ள அனைத்து திறனையும் முழுவதுமாக உபயோகித்து பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தும் போரை இந்தியா முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இது நடக்கும் என நாங்கள் நம்புகிறோம். காசாவில் நடப்பது அங்குள்ள மக்களுக்கு எதிரான குற்றம். போர் நீண்டு கொண்டே சென்றால் பிற நாடுகளுக்கும் பரவலாம் எனும் அச்சம் மேற்கு ஆசிய நாடுகளிடையே அதிகரித்து வருகிறது. அது நிலைமையை இன்னும் சிக்கலாக்கும். பாலஸ்தீன மக்களின் துன்பங்களை முடிவுக்கு கொண்டு வர எடுக்கப்படும் எந்த உலகளாவிய நடவடிக்கைக்கும் ஈரான் ஆதரவளிக்கும். பாலஸ்தீன சுதந்திரத்திற்காக பாடுபடும் அமைப்புகளுக்கு தங்கள் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக போராட முழு உரிமை உண்டு.

    இவ்வாறு ஈரான் அதிபர் கூறியுள்ளார்.

    முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி, "பாலஸ்தீன பிரச்சனையை தீர்ப்பதற்கும், மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து அங்கு கிடைப்பதை உறுதி செய்யவும், விரைவில் அமைதி திரும்பவதையும் இந்தியா விரும்புகிறது" என தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில் தெரிவித்திருந்தார்.

    • இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் வானம் புகை மண்டலமாக காட்சி அளித்தது
    • காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்

    ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் காயம் அடைந்தனர்.

    ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து வடமேற்கே 200 கி.மீ. தொலைவில் உள்ள லாங்ரூட் நகரில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில், காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலை அந்த மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வானம் புகை மண்டலமாக காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் கடும் போராட்டத்திற்குப்பின் தீயை அணைத்தனர். தீ விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு சொந்தமான கார் பேட்டரி தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

    • பஹ்லாவி வம்சத்தினரை ஆட்சியிலிருந்து அகற்றினார் கொமெய்னி
    • ஈரானின் ராணுவம், இஸ்லாமிய புரட்சி வீரர்கள் படை என அழைக்கப்படுகிறது

    மேற்காசிய நாடான ஈரானில் 1925லிருந்து பஹ்லாவி வம்சத்தினரின் (Pahlavi Dynasty) மன்னராட்சி நடைபெற்று வந்தது. இவர்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் 1979ல் புரட்சியில் ஈடுபட்டனர். அதன் முடிவில் பஹ்லாவிகள் ஆட்சி அகற்றப்பட்டு, அயதொல்லா கொமெய்னி (Ayatollah Khomeini) தலைமையில் இஸ்லாமிய கோட்பாடுகளை பின்பற்றும் ஆட்சி பதவிக்கு வந்தது.

    தொடர்ந்து, இஸ்லாமிய புரட்சி வீரர்கள் படை (Islamic Revolutionary Guards Corps) எனும் ஈரானின் ராணுவத்தை ஈரான் அமைத்தது. அதன் 5 முக்கிய அங்கங்களில் ஒன்று குட்ஸ் படை (Quds Force).

    குட்ஸ் படையை கொண்டு ஈரான், பிற நாட்டினர் மீது தங்கள் ஆதிக்கத்தை வளர்க்கவும், தங்கள் கோட்பாடுகளை பரப்பவும், உளவு மற்றும் மறைமுக சதி வேலைகளின் மூலம் நீண்ட காலமாக முயன்று வருகிறது.

    தங்கள் கோட்பாடுகளுக்கு எதிரான சக்திளை எதிர்க்கவும், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகவும் செயல்படும் "எதிர்ப்பின் மையம்" (Axis of Resistance) என வர்ணிக்கப்படும் ஈரான், குட்ஸ் படையினர் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிராக ராணுவ படைகளையும், அரசியல் கட்சிகளையும் பல நாடுகளில் ஆதரித்து, வளர்த்து வருகிறது. இந்த அமைப்புகள் தங்கள் நாடுகளில் ஈரானுக்கு ஒரு மறைமுக பிரதிநிதியாக (proxy) செயல்படுகின்றன.

    ஈராக், லெபனான், எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் கிடைத்த ஆதரவு, வன்முறை சித்தாந்தங்களை ஏற்காத பிற அரபு நாடுகளில், ஈரானுக்கு கிடைக்கவில்லை.

    ஏமனின் ஹவுதி, லெபனானின் ஹிஸ்புல்லா, சிரியாவின் ஜய்னாபியோன் பிரிகேட் மற்றும் ஃபதேமியோன் பிரிவு, ஈராக்கில் கதாய்ப் ஹிஸ்புல்லா, பாலஸ்தீன காசா பகுதியின் ஹமாஸ், பக்ரைனின் அல் அஷ்டார் பிரிகேட்ஸ் ஆகிய பயங்கரவாத அமைப்புகள், ஈரானின் எதிர்ப்பு மையத்தின் மறைமுக ஆலோசனை, ராணுவ மற்றும் நிதியுதவி ஆகியவற்றால் வளர்க்கப்பட்டவை.

    எதிர்ப்பின் மையத்திற்கு நிதியுதவி கிடைப்பதை அனைத்து வழிகளிலும் அமெரிக்கா 1984லிருந்து தடுக்க முயன்று வருகிறது.

    தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், வன்முறை அமைப்புகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் ஈரானையும், அதன் புரட்சி வீரர்கள் படையின் தாக்கத்தையும் இனி வளர விட கூடாது என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன.

    • ஏற்கனவே 2018-ம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதிக்கப்பட்டது.
    • ஆங்கிலம் நடுநிலைப் பள்ளியில் இருந்து கற்பிக்கப்படுகிறது.

    ஈரானில் மழலையர் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளிகளில் ஆங்கிலம், அரபு உள்ளிட்ட அனைத்து வெளிநாட்டு மொழிகளை குழந்தைகளுக்கு கற்பிக்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

    இதுதொடர்பாக கல்வி அமைச்சக அதிகாரி மசூத் தெஹ்ரானி பர்ஜாத் கூறும்போது, "மழலையர் பள்ளிகள், நர்சரி பள்ளிகள், தொடக்கப் பள்ளிகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த வயதில் குழந்தையின் ஈரானிய அடையாளம் உருவாகிறது" என்றார்.

    ஏற்கனவே 2018-ம் ஆண்டு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் கற்பிக்க தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் ஆங்கிலம் நடுநிலைப் பள்ளியில் இருந்து கற்பிக்கப்படுகிறது. கடந்த மாதம், மாணவர்கள் சர்வதேச பள்ளிகளில் சேருவதற்கு அரசு தடை விதித்தது.

    ஈரானிய குழந்தைகள் நாட்டின் பள்ளி பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டிய கடமை இருப்பதாக அரசு தெரிவித்தது.

    • பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    டெஹ்ரான்:

    ஈரானில் பிரபல சினிமா தயாரிப்பாளராக இருந்தவர் தரியூர் மெஹர்ஜூய் (வயது 83). இவரது மனைவி வஹிதே முகமதிபர். இவர்கள் இருவரும் தெக்ரான் அருகே உள்ள கராஜில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் தரியூர் மெஹர் ஜூய் தனது மகள் மோனாவை இரவு உணவுக்காக வீட்டுக்கு வருமாறு செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பினார்.

    இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து மோனா வீட்டுக்கு வந்தார். அப்போது பெற்றோர் கழுத்தில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினார்கள். சந்தேகத்தின் பேரில் 4 பேரை போலீசார் பிடித்தனர். இதில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ×