என் மலர்
உள்ளூர் செய்திகள்
- செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து 32 பக்கங்களுக்கு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.
- தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய விளக்கம் வெறும் 12 வரிகள் மட்டும் தான்.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பது மட்டுமின்றி, சொல்லப்படாத பல திட்டங்களும் செயல்படுத்தப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார். திமுகவின் அகராதியில் பொய் என்ற சொல்லுக்கு பெருமிதம் என்று புதிதாக பொழிப்புரை எழுதியிருக்கிறார்கள் போலும். அதனால் முதலமைச்சர் மீண்டும், மீண்டும் பொய் சொல்லி விட்டு, அதை பெருமிதம் என்று நினைத்துக் கொள்கிறார்.
திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் வெறும் 66 மட்டும் தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு. அதற்கு பதிலளிப்பதாகக் கூறி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட 3 அமைச்சர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். மொத்தம் ஒரு மணி நேரத்திற்கு செய்தியாளர்கள் சந்திப்பு நீடித்தது; ஆனால், அதில் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து அமைச்சர்கள் விளக்கியது அரை நிமிடம் தான். இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து 32 பக்கங்களுக்கு செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் தேர்தல் வாக்குறுதிகள் பற்றிய விளக்கம் வெறும் 12 வரிகள் மட்டும் தான். இதைத் தான் விரிவான தரவுகளுடன் அமைச்சர் விளக்கியதாக முதலமைச்சர் கூறுகிறார்.
திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்க வேண்டும். இதைத் தான் பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு நேர்மையான அரசாக இருந்தால், வெள்ளை அறிக்கை வெளியிடாமல் அஞ்சி நடுங்கி ஓடுவது ஏன்?
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெரும் குறையே நாட்டிலும், அவரது அரசிலும் என்ன நடக்கிறது? என்பதே அவருக்கு தெரியாது என்பது தான். அவரைச் சுற்றியுள்ளவர்கள் என்ன கூறுகிறார்களோ, அவை அனைத்தையும் உண்மை என்று நம்பி அவர் பேசிக் கொண்டுருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அறிவாளிகள். அவர்கள் மு.க.ஸ்டாலின் சொல்லும் பொய்களை எல்லாம் உண்மை என்று நம்ப மாட்டார்கள். பொய்யுரைப்போருக்கு வழங்க வேண்டிய தண்டனையை வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வழங்குவார்கள் என கூறியுள்ளார்.
- பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
- மருந்து கலக்கும் பணியில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், தாயில் பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து ஆலைகளிலும் பட்டாசு தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டி கிரா மத்தில் சிவகாசியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குயில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அறைகளில், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலக்கும் பணியில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு அறையில் மேற்கூரை மட்டும் இடிந்து தரைமட்டமாகி சேதம் அடைந்துள்ளது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வெடிவிபத்து பற்றி குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் யாரேனும் காயம் அடைந்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
- மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னை சூளைமேடு பகுதியில் நேற்றைய தினம் , மூடப்படாமல் இருந்த மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து தீபா என்ற பெண் உயிரிழந்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மூடப்படாமல் இருந்த மழை நீர் பணி பள்ளத்தை பல மாதங்களாக முடூவதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தும், அக்கறையற்று நடவடிக்கை எடுக்காமல் இருந்த காரணத்தினால் இந்த உயிர் பலி நடந்திருந்திருக்கிறது.
உயிரிழந்த பெண்ணின் உடற்கூராய்வு அறிக்கையில், சுமார் அரை மணி நேரம் அவர் உயிருக்குப் போராடியதாக வரும் தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன.
மழைநீர் வடிகால் பணிகள், 95%, 97% முடிவடைந்து விட்டன என்று நான்கரை ஆண்டுகளாக சதவீதக் கணக்கு போட்ட பொம்மை முதல்வர் அரசின் அமைச்சர்களும், சென்னை மேயரும் இந்த உயிரிழப்புக்கு சொல்லப்போகும் பதில் என்ன?
ஆண்டுதோறும் நடக்கும் இது போன்ற மரணங்களை ஒருபோதும் ஏற்கமுடியாது. இதெல்லாம் எந்த பேக்கேஜில் வரும் என்று மு.க.ஸ்டாலின் சொல்வாரா?
மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த பாடில்லை;
மழைநீரும் வடிந்த பாடில்லை;
அப்பாவி உயிர்கள் பறி போவதைத் தடுக்க வக்கில்லை;
இப்படிப்பட்ட ஒரு அவல ஆட்சி இருந்து என்ன பயன்?
தீபா உயிரிழப்புக்கு ஸ்டாலின் மாடல் திமுக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் இந்த அரசு உடனடியாக வழங்கவேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளை இனியாவது பாதுகாப்பு நெறிமுறைகளையோடு மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
- கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித் தலைவரின் வழிகாட்டுதலின்படி வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வியூகங்களையும் வகுத்து, தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது.
இச்சூழலில், 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றத்திற்கான முதன்மைச் சக்தியாக, ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஏகோபித்த வரவேற்பையும் ஆதரவையும் பெற்று, மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழகம் அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களைக் கொண்டு, புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி என்று வார இதழ் ஒன்று உண்மைக்கு முற்றிலும் புறம்பான தகவல்களைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
இந்தச் செய்தி, முற்றிலும் தவறானது. ஆதாரமோ அடிப்படையோ அற்றது. இது போன்ற வதந்திகளை பரப்பும் ஊடகத்தின் பொய்ச் செய்திகளை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். கூட்டணி தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகம், புதுச்சேரி மாநிலத்தில் யாருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை.
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளர்களின் விவரங்களைக் கழகத் தலைவர் அவர்கள் விரைவில் அறிவிப்பார். தேர்தல் நிலைப்பாடு குறித்தும் கழகத் தலைவர் அவர்களின் முடிவே இறுதியானது. எனவே, மக்களைக் குழப்பும் நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்பாக யூகத்தின் அடிப்படையில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளைச் செய்திகளாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் முககவசம் அணிந்து செல்ல சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
- 38 மாவட்டங்களில் 10 முதல் 20 ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக காய்ச்சல் பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தவாறு இருக்கிறது. சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதித்து சிகிச்சைக்காக வருகிறார்கள்.
காய்ச்சலுடன் சேர்ந்து உடல் சோர்வு, வறட்டு இருமல், தொண்டை வலி, சளி ஆகிய பாதிப்புகளும் காணப்படுகிறது. காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகும் நபர்களில் இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பே அதிகம் காணப்படுவதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரின் இருமல், தும்மல் மூலம் அருகில் உள்ளவர்களுக்கு பரவுகிறது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது இடங்களுக்கு செல்லும்போது கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் இணை நோய் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்வது நல்லது என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் 38 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் ஆகியவற்றில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து சுகாதாரத்துறை ஆய்வு செய்ய உள்ளது.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளூயன்சா ஏ வகை தொற்று என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வேறு எதுவும் தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
38 மாவட்டங்களில் 10 முதல் 20 ரத்த மாதிரிகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக 450-க்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து ஆய்வு சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
- பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் நேற்று முன்தினம் கூடியது
- மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் அதன் நிறுவன தலைவரான டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இருவரும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ராமதாசுக்கு எதிராக அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது தொடர்பாக விவாதிக்க பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. இதில் 16 குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது சுமத்தப்பட்டது.
இதற்கு கடந்த 31-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அன்புமணி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் நேற்று முன்தினம் கூடியது. அதில்அன்புமணி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை சீலிட்ட கவரில் டாக்டர் ராமதாசிடம் வழங்கினார்கள்.
இந்த குழுவின் பரிந்துரைகளை கட்சியினருடன் ஆலோசனை நடத்தி தனது முடிவை அறிவிக்க ராமதாஸ் திட்டமிட்டார்.
அன்புமணி மீதான நடவடிக்கை குறித்தான விவரங்களை நாளை (வியாழக்கிழமை) அறிவிப்பதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே நாளை நடைபெறும் நிருபர்கள் சந்திப்பில் டாக்டர் ராமதாஸ் அதிரடி முடிவுகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அன்புமணி மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் பா.ம.க. நிர்வாக குழு உறுப்பினரும், ராமதாசின் மூத்த மகளுமான ஸ்ரீகாந்தியும் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் தீரன், பொது செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ஆசிரியர் சங்க நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் மட்ட அமைப்பான மாநில நிர்வாக குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள்ஸ்ரீகாந்தி உள்பட 22 மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தின் பரிந்துரை மற்றும் மாவட்ட செயலாளர்கள் அன்புமணி விவகாகரம், கட்சி வளர்ச்சிக்காக தெரிவித்த பல்வேறு ஆலோசனைகள் சம்பந்தமாக ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் அன்புமணியை சஸ்பெண்டு செய்வதா? அல்லது மேலும் அவகாசம் வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து நாளை டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்திக்கிறார். அப்போது அவர் அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து கூறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை-மூணாறு சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளப்பாளையம் பகுதியில் கருவண்ணராயர்-வீரசுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்த நிலையில் தற்போது ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் கிராம மக்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பள்ளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை-மூணாறு சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளப்பாளையம் கோவிலில் பல ஆண்டுகளாக சாமி தரிசனம் செய்து வந்தோம். தற்போது வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.
சம்பவ இடத்திற்கு உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
- தொண்டர்களின் கல்யாண நிகழ்ச்சிக்கு செல்கிறேன்.
- நேற்று கூட நான் யாரையும் அழைக்கவில்லை.
கோபி:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
கட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் வரும் 5-ந் தேதி மனம் திறந்து பேசுகிறேன். முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என செங்கோட்டையன் கூறினார்.
இதனால் அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 5-ந் தேதி செங்கோட்டையன் எந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடுவார் என அ.தி.மு.க.வினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் நேற்று கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பண்ணாரி, 16 ஒன்றிய செயலாளர்கள், 13 பேரூர் கழகச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களை சந்தித்த செங்கோட்டையன், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறி சென்றார்.
இந்நிலையில் இன்று காலை செங்கோட்டையன் தோட்ட வீட்டிற்கு முன்னாள் எம்.பி. சத்திய பாமா வந்து செங்கோட்டையனை சந்தித்து பேசினார். நாளை மறுநாள் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தோட்டத்து வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது செங்கோட்டையனிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது செங்கோட்டையன் கூறும் போது,
செப்டம்பர் 5-ந்தேதி கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளேன். அன்றைய தினம் மனம் திறந்து விளக்கமாக பேசுகிறேன்.
என்னுடைய கருத்தை தொண்டர்களின் கருத்தாக பிரதிபலிக்க போகிறேன். இன்றைய தினம் எந்த நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை. தொண்டர்களின் கல்யாண நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்றார்.
அப்போது நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் கூடுவதாக தகவல் வந்துள்ளதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய செங்கோட்டையன், 5-ந் தேதி அது உங்களுக்கே தெரியும்.
நேற்று கூட நான் யாரையும் அழைக்கவில்லை. அவர்களாகவே வந்தனர் என்று கூறி காரில் கிளம்பி சென்றார். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
- கழிவறை செல்லும் போது நகைகள் அணிந்து செல்லக்கூடாது, அங்கு பாதுகாப்பு இருக்காது என ராகுல் கூறினார்.
- வேறு ஒருவரது செல்போன் மூலம் ராகுலை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
சேலம்:
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி, இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் செல்போனில் மூழ்கி கிடந்த அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஈரோட்டை சேர்ந்த ராகுல் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ராகுல் கல்லூரியில் படிப்பதாக கூறி உள்ளார். இதனை தொடர்ந்து 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், இன்ஸ்டாகிராம் மூலம் தகவல்களை பரிமாறியும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து தனக்கு ஈரோடு என்று கூறிய ராகுல் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தால் நேரில் சந்திக்கலாம் என்று அந்த மாணவியிடம் கூறினார்.
இதனை நம்பிய மாணவி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்தார். தொடர்ந்து இரவு 9.45 மணியளவில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர் ராகுலை சந்தித்தார். ரெயில் நிலையம் முன்புள்ள பஸ் நிறுத்த பகுதிக்கு வந்ததும் தான் கழிவறைக்கு சென்று வருவதாக மாணவி, ராகுலிடம் கூறினார். அப்போது தனது கைப்பையை ராகுலிடம் அந்த மாணவி கொடுத்தார்.
அப்போது கழிவறை செல்லும் போது நகைகள் அணிந்து செல்லக்கூடாது, அங்கு பாதுகாப்பு இருக்காது என ராகுல் கூறினார். இதனை நம்பிய அந்த மாணவி தான் அணிந்திருந்த 3 பவுன் எடை கொண்ட 3 வளையல்கள், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை கழற்றி அந்த கைப்பையில் வைத்தார்.
மேலும் தனது செல்போன், லேப்டாப்பையும் அந்த கைப்பையில் வைத்து ராகுலிடம் கொடுத்து விட்டு கழிவறைக்கு சென்றார். பின்னர் சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது ராகுல் அந்த கைப்பையுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கதறினார்.
மேலும் வேறு ஒருவரது செல்போன் மூலம் ராகுலை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் சம்பவம் குறித்து சென்னையில் உள்ள தனது தந்தைக்கு மாணவி தகவல் தெரிவித்தார். இதனால் கதறிய படி சேலம் வந்த அவர் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியுடன் பழகி சேலத்திற்கு வரவழைத்து நூதன முறையில் நகைகளை திருடி சென்ற ராகுலை அவரது போட்டோவை வைத்து தேடி வருகிறார்கள். மேலும் அவரது உண்மையான பெயர் ராகுலா அல்லது வேறு பெயர் கொண்டவர் இந்த பெயரை சொல்லி ஏமாற்றினாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.
- அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்கள் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஸ்விகி, சொமேட்டோவில் பணிபுரிபவர்கள் சாரோவில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார். இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது.
மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு கடந்த 27-ந்தேதி அமலுக்கு வந்தது. இதையடுத்து இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்ந்தது.
50 சதவீத வரிவிதிப்பு காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், தோல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், விலங்கு பொருட்கள், ரசாயனங்கள், மின்சார எந்திரங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கட சுப்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழக ஓட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
* பெப்சி, கோக், கேஎஃப்சி போன்ற அமெரிக்க பொருட்கள், அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்களை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* அமெரிக்க பொருட்களுக்கு பதிலாக இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோவையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்.
* தமிழ்நாட்டை சேர்ந்த சாரோ என்ற செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம்.
* ஸ்விகி, சொமேட்டோவில் பணிபுரிபவர்கள் சாரோவில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்ததை எதிர்த்து ஓட்டல் உரிமையாளர்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
- ஓணம் பண்டிகையையடுத்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் களை கட்டியுள்ளது.
- குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.
நாகர்கோவில்:
மலையாளம் பேசும் மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஒணம். இந்த பண்டிகை நாளை மறுநாள் (5-ந்தேதி) கொண்டாடப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களில் ஓணம் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாகர்கோவில் நகரப்பகுதிகளில் உள்ள பள்ளிகளில் இன்று காலை அத்தபூ கோலம் வரைந்து ஓணம் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்கள். கல்லூரிகளில், மாணவிகள் ஓணம் சேலைஅணிந்து வந்திருந்தனர்.
அரசு அலுவலகங்களிலும் பெண் ஊழியர்கள் ஓணம் சேலை அணிந்து இருந்தனர். கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் பூக்களால் அத்தபூ கோலம் வரையப்பட்டது. பல வண்ண கலரில் கோலம் வரைந்து உற்சாகத்தை வெளிப்படுத்தினர். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ஓணம் பண்டிகை அத்தபூ கோலம் வரைந்தும் ஓண ஊஞ்சலாடியும் கொண்டாடி வருகின்றனர்.
ஓணம் பண்டிகையையடுத்து மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள் களை கட்டியுள்ளது. நாகர்கோவிலில் இருந்து கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவற்றின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. நாகர்கோவில் அப்டாமார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வாழை வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்திருந்தன. அவற்றை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இந்த தார்கள் ரூ.1000 முதல் ரூ.1500 வரை விற்பனையானது. இதேபோல் மட்டி, கதலி வாழைத்தார்கள் மற்றும் வாழை இலை விலையும் உயர்ந்து காணப்பட்டது.
குமரி மாவட்டம் மட்டுமின்றி தூத்துக்குடியில் இருந்தும் வாழை இலைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. ஒரு கட்டு வாழை இலைகள் சாதாரணமாக ரூ.500 முதல் 800க்கு விற்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. தோவாளை பூ மார்க்கெட்டிலும் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. பிச்சி, மல்லிகை பூக்களின் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்பட்டது. அவை கிலோ ரூ. 1000-க்கு மேல் விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை உயர்ந்தது. சம்பங்கி, கேந்தி, அரளி பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது.
- அழகப்பபுரம் பேரூராட்சியில் காமராஜர் திருமண மண்டபத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடைபெற்றது.
- விஜய் வசந்த் எம்.பி. உங்களுடன் ஸ்டாலின் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மனுவை பெற்றுக் கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சியில் நேற்று காமராஜர் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். பின்னர் முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து மனுவை பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் அழகப்பபுரம் பேரூராட்சி தலைவி அனிற்றா ஆண்ட்ரூஸ், துணைத் தலைவர் ஆண்ட்ரூஸ் மணி, வட்டாரத் தலைவி தங்கம் நடேசன்,மாநில செயலாளர் வழக்கறிஞர் சினிவாசன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் அரோக்கியராஜன், கிழக்கு மாவட்ட வர்த்தக தலைவர் டாக்டர் சிவகுமார், மயிலாடி நகர காங்கிரஸ் தலைவர் நடேசன் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட உதவி இயக்குநர் பாண்டியராஜ், அழகப்பபுரம் செயல் அலுவலர் பூதப்பாண்டி, அழகப்பபுரம் இளநிலை பொறியாளர் ஹரிதாஸ் உட்பட அழகப்பபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






