என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

எனது கருத்தை தொண்டர்களின் கருத்தாக பிரதிபலிக்க போகிறேன்- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்
- தொண்டர்களின் கல்யாண நிகழ்ச்சிக்கு செல்கிறேன்.
- நேற்று கூட நான் யாரையும் அழைக்கவில்லை.
கோபி:
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு தற்போது மீண்டும் வெடிக்கத் தொடங்கியுள்ளது.
கட்சியில் முக்கியத்துவம் கொடுக்காததால் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் வரும் 5-ந் தேதி மனம் திறந்து பேசுகிறேன். முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் என செங்கோட்டையன் கூறினார்.
இதனால் அ.தி.மு.க வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. 5-ந் தேதி செங்கோட்டையன் எந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடுவார் என அ.தி.மு.க.வினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்நிலையில் நேற்று கட்சி அலுவலகத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதில் பவானிசாகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பண்ணாரி, 16 ஒன்றிய செயலாளர்கள், 13 பேரூர் கழகச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் நிருபர்களை சந்தித்த செங்கோட்டையன், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை கட்சி அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் மனம் திறந்து பேசுகிறேன். அதுவரை பொறுமையாக இருங்கள் என்று கூறி சென்றார்.
இந்நிலையில் இன்று காலை செங்கோட்டையன் தோட்ட வீட்டிற்கு முன்னாள் எம்.பி. சத்திய பாமா வந்து செங்கோட்டையனை சந்தித்து பேசினார். நாளை மறுநாள் செங்கோட்டையன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து செங்கோட்டையன் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தோட்டத்து வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது செங்கோட்டையனிடம் நிருபர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். அப்போது செங்கோட்டையன் கூறும் போது,
செப்டம்பர் 5-ந்தேதி கட்சி அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் என அனைவரையும் சந்திக்க உள்ளேன். அன்றைய தினம் மனம் திறந்து விளக்கமாக பேசுகிறேன்.
என்னுடைய கருத்தை தொண்டர்களின் கருத்தாக பிரதிபலிக்க போகிறேன். இன்றைய தினம் எந்த நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை. தொண்டர்களின் கல்யாண நிகழ்ச்சிக்கு செல்கிறேன் என்றார்.
அப்போது நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்திற்கு 10 ஆயிரம் பேர் கூடுவதாக தகவல் வந்துள்ளதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய செங்கோட்டையன், 5-ந் தேதி அது உங்களுக்கே தெரியும்.
நேற்று கூட நான் யாரையும் அழைக்கவில்லை. அவர்களாகவே வந்தனர் என்று கூறி காரில் கிளம்பி சென்றார். இதனால் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.






