என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
- பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
- மருந்து கலக்கும் பணியில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், தாயில் பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து ஆலைகளிலும் பட்டாசு தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டி கிரா மத்தில் சிவகாசியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குயில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அறைகளில், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலக்கும் பணியில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு அறையில் மேற்கூரை மட்டும் இடிந்து தரைமட்டமாகி சேதம் அடைந்துள்ளது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வெடிவிபத்து பற்றி குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் யாரேனும் காயம் அடைந்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.






