என் மலர்
நீங்கள் தேடியது "அனுமதி மறுப்பு"
- தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்து ரையாடுகிறார்.
- பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கல்வி, சமூக நீதி உள்ளிட்ட 10 உரிமைகளை வலியுறுத்தி 'உரிமை மீட்க, தலைமை காக்க' என்ற தலைப்பில் நடைபயணத்தை கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி தொடங்கினார். தொடர்ந்து அவர் பல்வேறு மாவட்டங்களில் தனது பிரசார நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) நெல்லை மாவட்டத்தில் அவர் நடைபயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை காலையில் நெல்லைக்கு வரும் அன்பு மணி ராமதாஸ் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கழிவு நீர் நேரடியாக கலக்கும் இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் வண்ணார்பேட்டையில் உள்ள ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அன்புமணி ராமதாஸ் மாலையில் பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை அருகே நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக இந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க அன்புமணி ராமதாஸ் வரும்போது அவரை வரவேற்கும் விதமாக அரசு அருங்காட்சியகம் அருகே உள்ள சவேரியர் ஆலயத்தில் இருந்து தெற்கு பஜாரில் லூர்து நாதன் சிலை வரையிலும் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு நெல்லை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளர் சீயோன் தங்கராஜ் தலைமை யில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கரூர் சம்பவத்தின் எதிரொலியாக அன்புமணி ராமதாஸ் 'ரோடு-ஷோ' நடத்துவதற்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். அதே நேரம் பொதுக்கூட்டத்தை பொதுமக்களுக்கோ, பக்தர்களுக்கோ இடையூறு ஏற்படாமல் நடத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர்.
- ஒரு நிகழ்வைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
- நிகழ்ச்சிகளுக்கான தடையை நீக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுப்பது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதாகும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை பிறப்பித்த சில உத்தரவுகளைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
புதிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியம் எனும் நிலையில், ஒரு நிகழ்வைக் காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை தடை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
கரூரில் கடந்த செப்டம்பர் 27&ஆம் நாள் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40&க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து கரூர் நெரிசல் உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும்; இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துகள் நடக்காமல் தடுக்க விதிகளை வகுக்க அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த இடைக்காலத் தீர்ப்பில்,''தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக்கூட்டங்களை நடத்த எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக்கூடாது என்று இடைக்கால ஆணை பிறப்பிக்கிறோம். பொதுக்கூட்டங்களை நடத்துவதற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு இந்தத் தடை பொருந்தாது.
ஏதேனும் பகுதிகளில் பொதுக்கூட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடம் இல்லாத பட்சத்தில், அதற்கான இடத்தை சம்பந்தப்பட்ட தேர்வு செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளை அதிகாரிகள் கேட்டுக்கொள்ள வேண்டும்; அவ்வாறு அவை தேர்வு செய்து தரும் இடம் பாதுகாப்பானதாகவும், அவசர ஊர்தி உள்ளிட்ட வாகனங்கள் வந்து செல்லும் வசதி கொண்டதாகவும் இருக்கும்பட்சத்தில் அங்கு கூட்டங்களை நடத்த நிபந்தனைகளுடன் அனுமதிக்கலாம்'' என்று கூறியுள்ளது. இதை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதன்மை அமர்வும் உறுதி செய்திருக்கிறது.
மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் இந்த இடைக்கால ஆணையைத் தொடர்ந்து மதுரை, திருநெல்வேலி ஆகிய நகரங்களில் நான் மேற்கொள்ளவிருந்த தமிழக மக்களின் உரிமை மீட்பு பயணத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது;
பொதுக்கூட்டங்களை மட்டும் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்க காவல்துறை மறுக்கிறது.
பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கான விதிகள் வகுக்கப்படும் வரை தங்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று காவல்துறை தட்டிக் கழிக்கிறது. இது ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற விடாமல் அரசியல் கட்சிகளின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும்.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடைபெறும் போது அவற்றுக்கு வருபவர்களின் பாதுகாப்பை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தான் உறுதி செய்ய வேண்டும்; பங்கேற்கும் மக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், தேவை ஏற்பட்டால் அழைப்பதற்கு தயாராக அவசர ஊர்தி உள்ளிட்ட மருத்துவ வசதிகளை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் தான் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்றக் கிளையின் கருத்தை பாட்டாளி மக்கள் கட்சி ஏற்றுக்கொள்கிறது.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பல லட்சம் மக்கள் பங்கேற்ற ஏராளமான மாநாடுகளும், பொதுக்கூட்டங்களும், போராட்டங்களும் இத்தகைய நிபந்தனைகளை தாமாக கடைபிடித்து நடத்தப்பட்டுள்ளன. அவற்றில் எந்தவொரு விரும்பத்தகாத நிகழ்வுகளும் நடக்க வில்லை.
அதேநேரத்தில் கூட்ட ஏற்பாட்டாளர்களால் முறையாக விதிமுறைகள் கடைபிடிக்கப்படாத, காவல்துறையால் முறையாக ஒழுங்குபடுத்தப்படாத ஒரு துயர நிகழ்வை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அது பாசிசம் தலைதூக்க வழிவகுத்துவிடும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(ஏ), 19(1)(பி) ஆகிய பிரிவுகளின்படி வழங்கப்பட்டுள்ள பேச்சு உரிமை, கருத்துரிமை, அமைதியாக ஓரிடத்தில் ஒன்று கூடும் உரிமை ஆகியவற்றை பறிக்கும் செயலாகும்.
ஆட்சியாளர்களின் தவறுகளை எடுத்துக் கூறுவதும், நாட்டு நிலைமை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதும் அரசியல் கட்சிகளின் கடமை ஆகும். போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், பேரணிகள், நடைபயணங்கள், துண்டுபிரசுரங்களை வழங்குதல் ஆகிய நிகழ்வுகளின் மூலம் தான் இவற்றை செய்ய முடியும்.
மக்கள் கூடும் இடங்களில் தான் இந்த நிகழ்ச்சிகளை நடத்த முடியும். ஆனால், உயர்நீதிமன்றக் கிளையின் இடைக்காலத் தீர்ப்பைத் தொடர்ந்து தனியார் இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும்படி காவல்துறையும், மாவட்ட நிர்வாகங்களும் கட்டாயப்படுத்துகின்றனர். இதை ஏற்க முடியாது.
அரசியல் கட்சிகள் மக்களைத் தேடிச் செல்ல வேண்டுமே தவிர, மக்களை தங்களை நோக்கி வரும்படி கட்டாயப் படுத்தக் கூடாது. ஆளில்லாத இடங்களில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்துவதும் சாத்தியமற்றது. தனியார் இடங்களை தேர்வு செய்து நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளும்படி, உயர்நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி காவல்துறையினர் கூறுவது கட்சிகளின் செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இதற்கு நீதிமன்றங்கள் துணைபோகக் கூடாது.
ஏற்கனவே, பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகளின் நோக்கம் மக்களுக்கு நன்மையும், சேவையும் செய்வது தான். மக்கள் பணியாற்றும் கட்சிகள், இயக்கங்களின் கொடிக்கம்பங்களை பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு இல்லாத வகையில் பொதுஇடங்களில் தான் அமைக்க முடியும்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அப்படித் தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தனியார் இடத்தை வாங்கி அதில் தான் கொடிக்கம்பங்களை அமைக்க வேண்டும் என்றால், மக்கள் நல நோக்கம் கொண்ட எந்தக் கட்சியும் கொடிக்கம்பங்களை அமைக்கமுடியாது.
ஊழல் செய்து சொத்து சேர்த்தக் கட்சிகள் மட்டும் தான் அதை செய்ய முடியும். அதையெல்லாம் உணர்ந்து தான் கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கான விதிமுறைகள் வகுக்கப்படும் வரை நெடுஞ்சாலைகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும் அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்ற உயர்நீதிமன்றக் கிளையின் தீர்ப்பை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அது அரசியல் கட்சிகளை முடக்கி வைக்கும் செயலாகும்.
அரசியக் கட்சிகளின் நிகழ்ச்சிகள் பாதுகாப்பாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் விதிகள் வகுக்கப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி ஆதரிக்கிறது. அதற்காக விதிகள் வகுக்கப்படும் வரை அரசியல் கட்சிகள் அவற்றின் ஜனநாயகக் கடமையை செய்யாமல் முடங்கிக் கிடக்க முடியாது.
எந்த ஒரு சூழலையும் சமாளிக்க இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இன்றைய சூழலை சமாளிக்கவும் இடைக்கால ஏற்பாடு தேவை.
எனவே, பொதுக்கூட்டங்களுக்கான பாதுகாப்பு விதிகள் வகுக்கப்படும் வரை மக்கள் கூடும் இடங்களில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், நடைபயணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ள இடைக்கால அனுமதியை அரசு அளிக்க வேண்டும். அதற்காக அரசின் சார்பில் விதிக்கப்படும் நியாயமான நிபந்தனைகளை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டும் பொறுப்புடன் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை-மூணாறு சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளப்பாளையம் பகுதியில் கருவண்ணராயர்-வீரசுந்தரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளாக அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தி வந்த நிலையில் தற்போது ஒரு சிலர் தூண்டுதலின் பேரில் கிராம மக்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பள்ளப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உடுமலை-மூணாறு சாலையில் இன்று காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பள்ளப்பாளையம் கோவிலில் பல ஆண்டுகளாக சாமி தரிசனம் செய்து வந்தோம். தற்போது வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்றனர்.
சம்பவ இடத்திற்கு உடுமலை டி.எஸ்.பி., நமச்சிவாயம் மற்றும் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
- சட்டம் ஒழுங்கு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.
- சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தமிழக சட்டசபையின் இன்றைய அலுவல்கள் தொடங்கின. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து, சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, நீட் தேர்வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய வரும் 9-ந்தேதி சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.
இந்நிலையில், சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்
சட்டம ஒழுங்கு குறித்து பேச அதிமுக எம்எல்ஏக்கள் அனுமதி கேட்டனர். ஆனால், சட்டம் ஒழுங்கு குறித்து பேச சபாநாயகர் அனுமதி மறுக்கப்பட்டதாக அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர்.
அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து கோஷங்களை எழுப்பு தங்களை எதிர்ப்பை தெரிவித்தனர். பின்னர், அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
- மதுரையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
- தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அக்டோபர் 2-ந் தேதி பேரணி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மதுரை
தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். சார்பில் அக்டோபர் 2-ந் தேதி பேரணி அணிவகுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழகத்தில் ஆளும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். பேரணி வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி அணிவகுப்பு நடத்துவதற்காக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட்டு தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நாளை (6-ந் தேதி) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வண்டியூர் சீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் வரை ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதற்கான ஏற்பாடுகளில் நிர்வாகிகள் செயல்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் சீனிவாசன், மங்கள முருகன், மகேஷ், மாநிலச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தலைவர் அழகர்சாமி மற்றும் மதுரை மாநகர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சுசீந்திரன் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரை மாவட்ட இந்து முன்னணி தலைவர் அழகர்சாமி கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு மீண்டும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
- அ.தி.மு.க சார்பில் பல்வேறு கட்சியினர் இணையும் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
- அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அரசியல் கட்சி கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் அ.தி.மு.க கூட்டத்திற்கு அனுமதி தர முடியாது என அறிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த அமரகுந்தி மாரியம்மன் கோவில் திடலில், நாளை அ.தி.மு.க சார்பில் பல்வேறு கட்சியினர் இணையும் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேச இருந்தார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தாரமங்கலம் அ.தி.மு.க நிர்வாகிகள் செய்து வந்த நிலையில், கூட்டம் நடத்த இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளிடம் அனுமதி கேட்டிருந்தனர்.
வழிபாட்டு தலங்களில் அரசியல் கட்சி கூட்டங்கள் நடத்த தடை இருக்கிறது. அதனால் கூட்டத்திற்கான அனுமதி தொடர்பாக, அமரகுந்தி மாரியம்மன் கோவில் தக்காரும், செயல் அலுவலருமான சசிகலா ஆய்வு நடத்தினர்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் அரசியல் கட்சி கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்பதால் அ.தி.மு.க கூட்டத்திற்கு அனுமதி தர முடியாது என அறிவித்தனர்.
இதையடுத்து மாவட்ட காவல்துறை சார்பில் தாரமங்கலம் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியனும் கூட்டம் நடக்கும் இடம், இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமானது என்றும் அதற்குரிய அனுமதி பெறவில்லை என்பதால் காவல்துறை தரப்பிலும் அனுமதி இல்லை என அறிவித்தார்.
மேலும் மாற்று இடத்தை தேர்வு செய்து அங்கு உரிய அனுமதியை பெற்று கூட்டத்தை நடத்திக் கொள்ள காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் வாகனத்துடன் திருப்பி அனுப்பினர்.
- சோதனை சாவடியில் மெத்தனை போக்குடன் நடந்து கொண்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் மது, மாமிசம், பீடி, சிகரெட், கஞ்சா வெளியிட்ட பொருட்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீட்டு வளர்ப்பு பிராணிகளை வாகனங்களில் அழைத்து வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று கர்நாடகாவை சேர்ந்த பக்தர்கள் ஒரு வேனில் திருப்பதிக்கு வந்தனர். அவர்கள் வந்த வேனில் வீட்டு வளர்ப்பு நாயை அழைத்து வந்தனர்.
அலிப்பிரி சோதனை சாவடியில் சரிவர வாகனத்தை சோதனை செய்யாததால் பக்தர்கள் நாயை மலைக்கு கொண்டு சென்றனர்.
திருப்பதி மலைக்கு நாயுடன் வந்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த தேவஸ்தான அதிகாரிகள் வளர்ப்பு நாயை எடுத்து வந்த பக்தர்களை மடக்கினர். நாயுடன் திருப்பதி மலைக்கு வரக் கூடாது என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் அந்த பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்காமல் வாகனத்துடன் திருப்பி அனுப்பினர்.
சோதனை சாவடியில் மெத்தனை போக்குடன் நடந்து கொண்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
- அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த போலீசார் அனுமதி மறுக்கப்பட்டது.
- திருச்சுழி அருகே பதட்டம்-போலீசார் குவிக்கப்பட்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த இறங்கி முத்தம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் நடக்கும் திருவிழாவில் பச்சை இலந்தை முள் மீது நடந்து பக்தர்கள் அருள் வாக்கு கூறுவது சிறப்பு.
கடந்த சில ஆண்டுகளாக கோவிலில் சாமி கும்பி டுவது தொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. கோவில் வழிபாடு விவகாரம் தொடர்பாக இருதரப்பி னரும் அடிக்கடி மோதி கொண்டனர். இந்த நிலையில் ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒரு சமூகத்தினருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனை யடுத்து ஒரு தரப்பினர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். இதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவர்க ளுக்கு சொந்தமான இடத்தில் முகூர்த்தகால் நடப்பட்டு காப்பு கட்டி ஏராளமானோர் விரதம் தொடங்கினர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து கோவிலலை சுற்றி போலீசார் பாது காப்பு பணியில் நிறுத்தப் பட்டனர். நேற்று (7-ந்தேதி) கும்பாபி ஷேகம் நடத்த முடிவு செய்யப் பட்டிருந்தது. ஆனால் கடைசி ே நரத்தில் சட்டம்-ஒழுங்கு பாது காப்பை காரணம் காட்டி போலீசார் கும்பாபிஷேகம் நடத்த அனுமதி மறுத்ததாக தெரிகிறது. இதனால் குறிப்பிட்ட சமூகத்தினர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
போலீசார் நடவ டிக்கைக்கு எதிர்ப்பு தெரி வித்த அவர்கள் அருகில் உள்ள விநாயகர் கோவி லுக்கு சென்று தாங்கள் கட்டியிருந்த விரத கயிறை கழட்டினர். கும்பாபி ஷேகம் நடத்த முடியாத தால் ஒரு தரப்பினர் கவலையுடன் வீட்டிற்கு சென்றனர். கடைசி நேரத்தில் போலீசார் அனுமதி மறுத்த தால் தொப்பா லக்கரை கிராமத்தில் பதட்டமான சூழல் நிலவி யது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தர வின்பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
- மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கம்புணரி
சிங்கம்புணரியை சேர்ந்த ராஜசேகர் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
சிவகங்கை தேவஸ்தா னத்துக்கு பாத்தியப்பட்ட சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் கோவில் விவசாய நிலத்தில் 2 சமூக மக்கள் பல தலைமுறைகளாக விவசாயம் செய்து வருகின்ற னர். இந்த ஆண்டு கோவி லுக்கு சொந்தமான 70 ஏக்கர் நிலத்தில் விவசாயிகள் சோளம், நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அந்த நிலத்தில் அனுமதி பெறாமல் இளவட்ட மஞ்சு விரட்டு நடத்த ஏற்பாடு செய்துள் ளனர். எனவே அரசு அனுமதி பெறாமல் மஞ்சு விரட்டு நடத்த தடை விதித்து உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சுந்தர், பரதசக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு அரசாணை யில் இப்பகுதி இடம் பெறவில்லை. மஞ்சுவிரட்டு நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்றார்.
போலீசார் தரப்பிலும் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த மனு மீது வேறு உத்தரவு பிறப்பிக்க வேண்டியதில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
இதையடுத்து சிங்கம்பு ணரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் இள வட்ட மஞ்சுவிரட்டு நடை பெறாது என போலீசார் அறிவிப்பு செய்தனர். இந்த நிலையில் சிங்கம்புணரி கிழவன் கண்மாய் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் இளவட்ட மஞ்சு விரட்டு நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் சிலர் விளம்பரம் செய்து வருவதாகவும், அதை நம்ப வேண்டாம் எனவும் ேபாலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
இதனை மீறி மஞ்சுவிரட்டு நடத்த முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள் ளன. தற்போது அந்த பகுதியில் திருப்பத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர்.
- திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ம.க.வின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த இன்று திட்டமிடப்பட்டது. இதற்கு விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க.வினர் 100-க்கும் மேற்பட்டோர் திண்டிவனம் - மரக்காணம் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் ஒன்று திரண்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன் மற்றும் போலீசார், மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அனுமதி கிடையாது. அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராமன் தலைமையிலான நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்ததில் ஈடுபட்டனர். இருந்தபோதும் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர்.
இதேபோல வானூர் மேற்கு ஒன்றிய பா.ம.க. சார்பில் மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் நடத்த அக்கட்சியினர் கரசானூரில் ஒன்று திரண்டனர். அங்கு வந்த வானூர் போலீசார் அனுமதி மறுத்து அனைவரையும் கலைந்து செல்ல வலியுறுத்தினர். பா.ம.க. வானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கோபால் தலைமையிலான நிர்வாகிகள், எங்கள் கட்சியின் சாதனைகளை விளக்கி மோட்டார் சைக்கிள் பிரச்சாரம் செய்ய உள்ளோம். இதற்கு திடீரென அனுமதி மறுப்பது சரியான நடைமுறையல்ல என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பா.ம.க.வினரின் மோட்டார் சைக்கிள் பிரச்சாரத்திற்கு திண்டிவனம் மற்றும் வானூரில் போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், 2 இடங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்க கோரி போலீசாரிடம் பா.ம.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் திண்டிவனம், வானூர் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
- நாளை பிற்பகல் 1.30 மணிக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவு.
- சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு, அரசு எதற்கு
அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து அவசர வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுக்கப்பட்டது.
குறிப்பிட்ட உள்ளரங்கில் கடந்த முறை நிகழ்ச்சி நடைபெற்றபோது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதால் அனுமதி மறுக்கப்பட்டது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வௌியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், நாளை பிற்பகல் 1.30 மணிக்குள் புதிய உத்தரவை பிறப்பிக்க கோவை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்ளரங்கில் நடக்கும் நிகழ்ச்சிக்கு சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி அனுமதி மறுத்தால் காவல் துறை எதற்கு, அரசு எதற்கு ? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
- கருடன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
- கோட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக நரிக்குறவர்கள் தெரிவித்துள்ளனர்.
இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் நடிகர் சூரி, சசிக்குமார் இணைந்து நடித்துள்ள `கருடன்' திரைப்படம் மே 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்தநிலையில் கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் பார்க்க வந்த 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களுக்கு திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தட மறுத்ததாகவும், திரையரங்கத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.
திரையரங்க நிர்வாகம் டிக்கெட் தர மறுத்ததால் இதுகுறித்து காவலர்களின் அறிவுறுத்தலின் பேரில் கோட்டாட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாக நரிக்குறவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அந்த பகுதியில் 20-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






