என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்படுவாரா?- நாளை முக்கிய முடிவை அறிவிக்கிறார் ராமதாஸ்
- பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் நேற்று முன்தினம் கூடியது
- மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.
திண்டிவனம்:
பா.ம.க.வில் அதன் நிறுவன தலைவரான டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இருவரும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ராமதாசுக்கு எதிராக அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது தொடர்பாக விவாதிக்க பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. இதில் 16 குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது சுமத்தப்பட்டது.
இதற்கு கடந்த 31-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அன்புமணி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதனை தொடர்ந்து பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் நேற்று முன்தினம் கூடியது. அதில்அன்புமணி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை சீலிட்ட கவரில் டாக்டர் ராமதாசிடம் வழங்கினார்கள்.
இந்த குழுவின் பரிந்துரைகளை கட்சியினருடன் ஆலோசனை நடத்தி தனது முடிவை அறிவிக்க ராமதாஸ் திட்டமிட்டார்.
அன்புமணி மீதான நடவடிக்கை குறித்தான விவரங்களை நாளை (வியாழக்கிழமை) அறிவிப்பதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே நாளை நடைபெறும் நிருபர்கள் சந்திப்பில் டாக்டர் ராமதாஸ் அதிரடி முடிவுகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அன்புமணி மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதில் பா.ம.க. நிர்வாக குழு உறுப்பினரும், ராமதாசின் மூத்த மகளுமான ஸ்ரீகாந்தியும் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் தீரன், பொது செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ஆசிரியர் சங்க நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் மட்ட அமைப்பான மாநில நிர்வாக குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள்ஸ்ரீகாந்தி உள்பட 22 மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தின் பரிந்துரை மற்றும் மாவட்ட செயலாளர்கள் அன்புமணி விவகாகரம், கட்சி வளர்ச்சிக்காக தெரிவித்த பல்வேறு ஆலோசனைகள் சம்பந்தமாக ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார்.
இந்த கூட்டத்தில் அன்புமணியை சஸ்பெண்டு செய்வதா? அல்லது மேலும் அவகாசம் வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து நாளை டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்திக்கிறார். அப்போது அவர் அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து கூறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






