என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல்: சேலத்திற்கு வந்த 12ம் வகுப்பு மாணவி - பின்னர் நடந்த சம்பவம்
- கழிவறை செல்லும் போது நகைகள் அணிந்து செல்லக்கூடாது, அங்கு பாதுகாப்பு இருக்காது என ராகுல் கூறினார்.
- வேறு ஒருவரது செல்போன் மூலம் ராகுலை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
சேலம்:
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி, இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இந்த நிலையில் செல்போனில் மூழ்கி கிடந்த அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஈரோட்டை சேர்ந்த ராகுல் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. ராகுல் கல்லூரியில் படிப்பதாக கூறி உள்ளார். இதனை தொடர்ந்து 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், இன்ஸ்டாகிராம் மூலம் தகவல்களை பரிமாறியும் வந்துள்ளனர்.
இந்த நிலையில் 2 பேரும் நேரில் சந்திக்க முடிவு செய்தனர். அதனை தொடர்ந்து தனக்கு ஈரோடு என்று கூறிய ராகுல் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு வந்தால் நேரில் சந்திக்கலாம் என்று அந்த மாணவியிடம் கூறினார்.
இதனை நம்பிய மாணவி நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சேலத்திற்கு வந்தார். தொடர்ந்து இரவு 9.45 மணியளவில் சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இறங்கிய அவர் ராகுலை சந்தித்தார். ரெயில் நிலையம் முன்புள்ள பஸ் நிறுத்த பகுதிக்கு வந்ததும் தான் கழிவறைக்கு சென்று வருவதாக மாணவி, ராகுலிடம் கூறினார். அப்போது தனது கைப்பையை ராகுலிடம் அந்த மாணவி கொடுத்தார்.
அப்போது கழிவறை செல்லும் போது நகைகள் அணிந்து செல்லக்கூடாது, அங்கு பாதுகாப்பு இருக்காது என ராகுல் கூறினார். இதனை நம்பிய அந்த மாணவி தான் அணிந்திருந்த 3 பவுன் எடை கொண்ட 3 வளையல்கள், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை கழற்றி அந்த கைப்பையில் வைத்தார்.
மேலும் தனது செல்போன், லேப்டாப்பையும் அந்த கைப்பையில் வைத்து ராகுலிடம் கொடுத்து விட்டு கழிவறைக்கு சென்றார். பின்னர் சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்த போது ராகுல் அந்த கைப்பையுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி கதறினார்.
மேலும் வேறு ஒருவரது செல்போன் மூலம் ராகுலை தொடர்பு கொண்டார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. பின்னர் சம்பவம் குறித்து சென்னையில் உள்ள தனது தந்தைக்கு மாணவி தகவல் தெரிவித்தார். இதனால் கதறிய படி சேலம் வந்த அவர் சூரமங்கலம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியுடன் பழகி சேலத்திற்கு வரவழைத்து நூதன முறையில் நகைகளை திருடி சென்ற ராகுலை அவரது போட்டோவை வைத்து தேடி வருகிறார்கள். மேலும் அவரது உண்மையான பெயர் ராகுலா அல்லது வேறு பெயர் கொண்டவர் இந்த பெயரை சொல்லி ஏமாற்றினாரா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை தேடி வருகிறார்கள்.






