என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பா.ம.க. கேட்ட தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. ஒத்துக்கொண்டது. ஆனால் மேல்சபை பதவியை வழங்க மறுத்து விட்டது.
- தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வும் முயற்சி செய்தது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் எந்த கூட்டணியில் இடம்பெறப் போகிறது என்ற கேள்விக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
அ.தி.மு.க.வும், பா.ஜனதாவும் இரு கட்சிகளையும் தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகளை திரை மறைவில் மேற்கொண்டன. அ.தி.மு.க. எம்.பி. சி.வி.சண்முகம் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினார். அப்போது பா.ம.க. தரப்பின் எதிர்பார்ப்புகளை கேட்டறிந்து எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார்.
அதில் பா.ம.க. கேட்ட தொகுதிகளை ஒதுக்க அ.தி.மு.க. ஒத்துக்கொண்டது. ஆனால் மேல்சபை பதவியை வழங்க மறுத்து விட்டது. மேலும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் தொடர்பாகவும் பா.ம.க. தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை அ.தி.மு.க. ஏற்கவில்லை.
இந்த தகவல்களை சி.வி.சண்முகம் 2-வது முறையாக டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியபோது எடுத்து கூறினார். இதனால் இரு கட்சிகளிடையேயும் கூட்டணி அமைவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இதையடுத்து பா.ம.க. வுடன் பா.ஜனதா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது தேவையான தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்திய பா.ம.க. அவர்களுக்கு சாதகமான வடமாவட்டங்களில் உள்ள அனைத்து தொகுதிகளையும் கேட்டது. மேலும் டெல்லி மேல்சபை பதவி உள்பட சில நிபந்தனைகளையும் விதித்தது.
இது தொடர்பாக டெல்லி தலைவர்கள் ஆலோசித்து வந்தனர். மேலும் டெல்லி மேலிடத்தின் முடிவுகளை தெரிவிக்கவும், பா.ம.க.வை தங்கள் பக்கம் இழுக்கவும் மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கிஷன்ரெட்டி ஆகியோரை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்கள் இருவரும் சென்னை தி.நகரில் டாக்டர் ராமதாசை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்கள். அப்போது பா.ஜனதா தரப்பில் ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி கூறினார்கள். மற்ற நிபந்தனைகளை ஏற்காததால் பா.ஜனதாவின் முயற்சி தோல்வி அடைந்தது.
இதேபோல் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க.வும் முயற்சி செய்தது.

அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகளான எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அனுப்பி வைத்தது. அதை தொடர்ந்து தே.மு.தி.க.வினர் மீண்டும் பேசினர். இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது என்று கூறப்படுகிறது.
அப்போது தே.மு.தி.க. விதித்த நிபந்தனைகளையும் அ.தி.மு.க. தரப்பில் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே அடுத்தகட்ட நடவடிக்கையில் பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் ஈடுபட்டு உள்ளன.
அ.தி.மு.க. தரப்பில் இருந்து 3-வது கட்ட பேச்சுவார்த்தைக்கு அழைப்பு வரும் என்ற நம்பிக்கையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா காத்திருக்கிறார். இந்த இரு கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்க பா.ஜனதா எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்து விட்டது.
எனவே பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் என்ன முடிவு எடுக்கப்போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
- பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது.
மேட்டுப்பாளையம்:
சிறுமுகை அருகே உள்ள மொக்கைமேடு பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன்(45) என்பவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். இன்று காலை அவர் வழக்கம் போல தனது விவசாய நிலத்தை பார்வையிடுவதற்காக சென்றார்.
அப்போது வாழைமரங்களுக்கு இடையே மரம் போன்ற ஒன்று மாறுபட்ட கலரில் தென்பட்டுள்ளது. உற்றுப் பார்த்தபோது அது சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத முதலை என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சிறுமுகை வனச்சரக அலுவலர் மனோஜ்குமாருக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற வனச்சரகர் மனோஜ்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று முதலையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். விவசாய நிலத்தில் கிடப்பதால் முதலையை எளிதில் பிடித்து விடலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் தற்போது நீர்மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. வற்றாத ஜீவநதியான பவானி ஆறு வற்றி ஓடை போல் காட்சியளிக்கிறது. ஆறு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் இல்லாததால் அங்கு இருந்து முதலை வெளியேறி வாழைத்தோட்டத்தில் புகுந்து இருக்கலாம் என வனத்துறையினர் கூறினர்.
- ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.
- கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பழனி:
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் சார்பில் பஞ்சாமிர்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் நவீன எந்திரங்கள் மூலம் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு மலை மீது குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தாலும் கோவில் நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் அவர்கள் வீடுகளுக்கே அனுப்பி வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கோயிலுக்கு சொந்தமான லாரியில் 30 க்கும் மேற்பட்ட கேன்களில் அடைத்து பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இதை அறிந்ததும் அடிவாரம் பகுதி மக்கள் லாரியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். பஞ்சாமிர்தம் கெட்டுப்போன நிலையில் எடுத்துச் செல்லப்படுகிறதா? அல்லது முறைகேடாக வேறு இடத்திற்கு பஞ்சாமிர்தம் எடுத்துச் செல்லப்பட்டதா என கேள்வி எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு அடிவாரம் போலீசார் விரைந்து வந்தனர்.
மேலும் பஞ்சாமிர்தம் கொண்டு செல்லப்பட்ட லாரியை போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். ஏற்கனவே தைப்பூச காலத்தில் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தங்கள் தேக்கம் அடைந்து கோயிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் மீண்டும் பஞ்சாமிர்தம் விற்பனையாகாமல் தேக்கமடைந்து அதனை அழிப்பதற்காக கோவில் ஊழியர்கள் எடுத்துச் சென்றபோது பொதுமக்கள் சிறை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது பழனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் கெட்டுப்போன பஞ்சாமிர்தங்கள் கள்ளிமந்தயத்தில் உள்ள கோசாலையில் கொட்டி அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகவே பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாது என்ற எண்ணம் பக்தர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில் கெட்டுப்போன பஞ்சாமிர்தம் கொட்டி அழிக்கப்படுவதாக வரும் தகவல்களால் பக்தர்களும் அதிர்ச்சியடைந்து வருகின்றனர்.
- இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதி வேண்டும் என்று கேட்க தொடங்கி இருக்கிறார்கள்.
- பேச்சுவார்த்தை இழுபறியாகி செல்வதற்கு என்ன காரணம் என்று கட்சியினர் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பான அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவுடன் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகியோர் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதி வேண்டும் என்று கேட்க தொடங்கி இருக்கிறார்கள். 6 முதல் 7 தொகுதிகள் வரை கொடுப்பதற்கு இரண்டு கட்சிகளும் சம்மதித்ததாக கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தையில் இதுவரை உடன்பாடு ஏற்படாததால் நாம் எந்த அணியில் இடம் பெற போகிறோம்? பேச்சுவார்த்தை இழுபறியாகி செல்வதற்கு என்ன காரணம்? என்று கட்சியினர் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
கட்சியினரின் ஆர்வம் புரிந்தாலும் கட்சி தலைமைக்கு தானே நிலைமை தெரியும். தங்கள் ஆதங்கத்தை நிர்வாகிகள் சிலர் டாக்டர் ராமதாசிடம் நேரிலேயே கேட்டு உள்ளார்கள்.
அதை கேட்டதும் சிரித்து கொண்டே நான் தொகுதிகளை கேட்டு வாங்கி தர ரெடியாக இருக்கிறேன்.
உங்களில் எத்தனை பேர் போட்டியிட ரெடியாக இருக்கிறார்கள் என்று கேட்டுள்ளார்கள். அவர் இவ்வாறு கேட்டதற்கு காரணம் வேட்பாளர்கள் தேர்தலில் பணத்தை வாரி இறைப்பார்கள். எனவே பண பலம் முக்கியம். அதை மனதில் வைத்தே இவ்வாறு கேட்டுள்ளார்.
அதை கேட்டதம் நிர்வாகிகள் தெறித்து ஓடாத குறைதான்.
- புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.
- பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.
சென்னை:
மெரினா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்தியன் பீச் வாலிபால் (கடற்கரை கைப்பந்து) புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.
ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கோவா அணி (ராம்-நிதின்) 21-18, 17-21, 15-9 என்ற செட் கணக்கில் மெரினா பீச் கிளப் அணியை (ராபின்-பரத்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.
முன்னாள் டி.ஜி.பி. எம்.ரவி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன், தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்கள். தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், அரேபியன் கார்டன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் கே.அப்துல் நபீல், மாநகராட்சி மண்டல சேர்மன் மதியழகன், செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம். அழகேசன் செயலாளர் மகேந்திரன், சேலம் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சண்முகவேல் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
- தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார்.
- பிரதமர் மோடி பங்கேற்று பேசும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தை போலீஸ் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
நாகர்கோவில்:
பாராளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பிரதான கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
பிரதமர் நரேந்திரமோடி, பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டி பல்வேறு மாநிலங்களிலும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். இந்த தேர்தலில் தென்மாவட்டங்களில் கணிசமான இடத்தை பிடிக்க வேண்டும் என பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.
அதனை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி சமீபகாலமாக தமிழகம் மற்றும் கேரளாவில் அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தது மட்டுமின்றி, பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
அவர் தமிழகத்தில் ஏற்கனவே திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசினார். இந்நிலையில் அவர் மீண்டும் தமிழகம் வர உள்ளார்.
அவர் தென் மாவட்டங்களில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் செய்வார் என்றும், கன்னியாகுமரியில் வருகிற 16-ந்தேதி நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசுவார் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்தநிலையில் அவரது பயணத்தில் 'திடீர்' மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ஒரு நாள் முன்னதாக வருகிற 15-ந் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. அன்றைய தினம் கன்னியாகுமரி விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் பகல் 11 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மோடி பங்கேற்று பேச உள்ளார்.
அப்போது அவர் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார். பிரதமர் மோடி பங்கேற்று பேசும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள மைதானத்தை போலீஸ் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர். குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பொதுக்கூட்ட திடலுக்கு பாரதிய ஜனதா கட்சியினர் இன்று காலை சென்றனர். பந்தல் அமைப்பது, பொதுக்கூட்ட மேடை அமைப்பு பணி குறித்து அவர்கள் திட்டமிட்டனர். அந்த பணிகளை இன்று மாலை தொடங்கவும் அவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.
பிரதமர் வருவதற்கு இன்னும் 2 நாட்களே இருப்பதால் பொதுக்கூட்டம் நடக்கும் மைதானத்தில் போலீசார் கண்காணிப்பு பணியை தொடங்கி உள்ளனர்.
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராம நாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது.
- கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரசுக்கு 10, இந்திய கம்யூனிஸ்டுக்கு 2, மதிமுகவுக்கு 1, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 1 என தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 21 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.
இதில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளும் ஒதுக்கி உடன்பாடு கையெழுத்தாகி விட்டது. இதையடுத்து மற்ற கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்து என்பது குறித்தான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அக்கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் கோவை, மதுரையில் போட்டியிட்ட நிலையில் தற்போது கோவைக்கு பதில் திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.
அதேப்போல், தி.மு.க. கூட்டணியில் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை, திருப்பூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதனை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் உறுதிப்படுத்தியுள்ளார்.
- கோவை மாவட்டத்துடன் இணைந்து இருந்த திருப்பூர், கடந்த 2008-ம் ஆண்டு தனியாக புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
- காங்கயம், தாராபுரம் ஈரோடு பாராளுமன்ற தொகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
பின்னலாடை தொழில் வளர்ச்சியின் மூலமாக உலக நாடுகளை தன்பக்கம் ஈர்த்த மாநகரம் திருப்பூர். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் திருப்பூர் மாநகருக்கு முக்கிய பங்கு இருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்ட தொழிலாளர்கள் மட்டுமில்லாமல் வெளிமாநில தொழிலாளர்களும் வசிக்கும் மாவட்டம் இதுவாகும்.
கோவை மாவட்டத்துடன் இணைந்து இருந்த திருப்பூர், கடந்த 2008-ம் ஆண்டு தனியாக புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து திருப்பூர் பாராளுமன்ற தொகுதி 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கோபிச்செட்டிப்பாளையம் பாராளுமன்ற தொகுதியில் இருந்து பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளையும், கோவை பாராளுமன்ற தொகுதியில் இருந்த திருப்பூரை திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு என 2 சட்டமன்ற தொகுதிகளாக பிரித்து, திருப்பூர் பாராளுமன்ற தொகுதி உருவாக்கப்பட்டது.
இதில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு தொகுதி திருப்பூர் மாவட்டத்திலும், பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை ஆகிய சட்டமன்ற தொகுதிகள் ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன.
மேலும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி சட்டமன்ற தொகுதி நீலகிரி பாராளுமன்ற தொகுதியிலும், பல்லடம் கோவை பாராளுமன்ற தொகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது. இதேப்போல் உடுமலை, மடத்துக்குளம் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியிலும், காங்கயம், தாராபுரம் ஈரோடு பாராளுமன்ற தொகுதியிலும் இணைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் இருந்தாலும் திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் மட்டுமே திருப்பூர் பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க உள்ளனர். மற்ற 6 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி, கோவை ஆகிய பாராளுமன்ற தொகுதி உறுப்பினரை தேர்ந்தெடுக்க வாக்களிக்க உள்ளனர்.
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திருப்பூர் வடக்கு தொகுதியில் 3 லட்சத்து 90 ஆயிரத்து 152 வாக்காளர்களும், திருப்பூர் தெற்கு தொகுதியில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 788 வாக்காளர்களும், பெருந்துறை தொகுதியில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 338 வாக்காளர்களும், பவானி தொகுதியில் 2 லட்சத்து 37 ஆயிரத்து 909 வாக்காளர்களும், அந்தியூர் தொகுதியில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 123 வாக்காளர்களும், கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 133 வாக்காளர்களும் உள்ளனர்.
பாராளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 86 ஆயிரத்து 475 பேரும், பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 11 ஆயிரத்து 718 பேரும், 250 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் 6 லட்சத்து 56 ஆயிரத்து 940 வாக்காளர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஈரோடு மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் 9 லட்சத்து 41 ஆயிரத்து 503 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.
எனவே திருப்பூர் தொகுதி எம்.பி. பதவிக்கு போட்டியிடுபவர்கள் தங்கள் வெற்றிக்கு ஈரோடு மாவட்ட வாக்காளர்களையே நம்பி இருக்க வேண்டியுள்ளது. திருப்பூர் பாராளுமன்ற தொகுதி என்று பெயர் இருந்தாலும் ஈரோடு மாவட்ட மக்களை பிரசாரம் செய்து கவர்ந்தால் மட்டுமே வெற்றி கை கூடும் நிலை இருக்கிறது. இதனால் பிரதான கட்சிகள் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது 2 மாவட்ட மக்களுக்கும் நன்கு அறிமுகமான நபர்களை தேர்ந்தெடுக்கும் நிலை இருக்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம்(தனி) சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,58,786 வாக்காளர்கள் உள்ளனர். காங்கயத்தில் 2,59,652, அவினாசியில் (தனி) 2,83,771, பல்லடத்தில் 3,92,836, உடுமலைபேட்டையில் 2,60,684, மடத்துக்குளத்தில் 2,32,141 வாக்காளர்கள் உள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 23, 44,810 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெவ்வேறு தொகுதிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டியது இருப்பதால் மிகவும் குழப்பத்தில் தவித்து வருகின்றனர்.
எனவே தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளும் திருப்பூர் பாராளுமன்ற தொகுதிக்குள் அமையும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- இரு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
- போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள கூத்தனப்பள்ளி பகுதியில் தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஊழியர்கள் தினந்தோறும் 3 சிப்ட்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11.35 மணி அளவில் கர்நாடக மாநிலத்திலிருந்து ஜல்லிகர்களை ஏற்றிச் செல்வதற்காக கொண்டிருந்த டிப்பர் லாரி வந்து கொண்டிருந்தது.
அப்போது இரவு வேலை முடிந்து தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக் கொண்டு பஸ்சும் வந்து கொண்டிருந்தது.
அப்போது அனுசோனை கிராமம் அருகே இரு வாகனமும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பிகார் மாநிலத்தை சேர்ந்த டிப்பர் லாரி டிரைவர் லாலுகுமார் (வயது 36) பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் படுகாயமடைந்த தனியார் நிறுவன ஊழியர்களை மீட்டு ஒசூரில் உள்ள தனியார் மருந்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த கெலமங்கலம் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது.
- மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம்.
- பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன.
பசும்பொன்:
மாசி மாதம் என்றாலே குலதெய்வ வழிபாடு என்பது பிரபலம். அதனை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் 19 கிராமங்களுக்கு சொந்தமான பகவதி பரஞ்சோதி, அக்னி வீரபத்திரன், நிறை குளத்து அய்யனார் கோவில்கள் களை கட்டின.
இந்த கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு, ஆடுகள் பலியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 19 கிராம மக்கள் சார்பில், பொங்கல் வைத்து சுமார் 1,001 ஆடுகள் பலியிடப்பட்டன. இன்று அதிகாலை 2 மணி முதல் 8 மணி வரை கிடா வெட்டு நடைபெற்றது.
ஒரே வெட்டில் தலை வேறு, உடல் வேறாக ஆடுகள் வெட்டப்பட்டன. பெரும்பாலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் இரட்டை கிடா வெட்டுவது வழக்கம். பலியிடப்பட்ட ஆடுகள் மைதானத்தில் குவித்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைக்கு பின் அவரவர் சமைக்க கொண்டு சென்றனர்.
இந்த திருவிழாவில், கமுதியை சுற்றிலும் உள்ள ஏராளமான கிராம மக்கள் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டது. விழாவை முன்னிட்டு, கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
- ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.
- நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
ஆண்டுதோறும் ரமலான் பிறைதொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாதத்தின் இறுதி நாளில் சகோதரத்துவத்தையும், ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் வகையில் ரமலான் பண்டிகை கொண்டாட ப்படுகிறது.
அதன்படி, பிறை தென்பட்டதால் வளைகுடா நாடுகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரமலான் நோன்பு தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டிலும் ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை ஹாஜி அறிவித்தார். அதனை தொடர்ந்து, ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு கடைபிடிக்க தொடங்கினர்.
நோன்பு காலம் தொடங்கியதை அடுத்து உலக புகழ்பெற்ற நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் ஆண்டவர் தர்காவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. அதிகாலை முதல் நோன்பை கடைபிடிக்க உள்ள இஸ்லாமியர்கள், இந்த நோன்பு காலங்களில் பசியுடன் இருந்து, வீண் விவாதங்களை தவிர்த்து இறை பக்தியுடன் ஜகாத் எனும் ஏழைகளுக்கும், வசதியற்றவர்களுக்கும் கருணையோடு உதவி செய்வது இப்பண்டிகையின் சிறப்பாக உள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள 40-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் நடைபெற்ற தாராவீஹ் என்ற சிறப்பு தொழுகைகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
- சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும்.
- அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.
குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) நேற்று அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:-
சிஏஏ 2019-ன் கீழ், இந்திய குடியுரிமை கோருவோா், அதற்காக விண்ணப்பிப்பதற்கு முன்பு குறைந்தபட்சம் ஓராண்டு இந்தியாவில் கட்டாயம் தங்கியிருக்க வேண்டும். அந்த ஓராண்டுக்கு முந்தைய 8 ஆண்டுகளில் 6 ஆண்டு களுக்கு குறையாமல் விண்ணப்பதாரா் இந்தியாவில் தங்கியிருந்தால், அவா் இந்திய குடியுரிமை பெற தகுதியுடையவா்.
சொந்த நாட்டு குடியுரிமையைக் கைவிடுவ தாகவும், இந்தியாவை தங்கள் நிரந்தர தாயகமாக்கிக் கொள்ள விரும்புவதாகவும் விண்ணப்பதாரா் உறுதிமொழி அளிக்க வேண்டும். இந்தியாவை பூா்வீகமாக கொண்டவா், இந்திய குடியுரிமை பெற்ற வரைத் திருமணம் செய்தவா், இந்திய குடியுரிமை பெற்ற வரின் 18 வயதுக்குட்பட்ட பிள்ளை, இந்திய பெற்றோருக்குப் பிறந்தவா், வெளிநாடு வாழ் இந்திய குடிமகன் அட்டையை வைத்திருப்பதாகப் பதிவு செய்துள்ளவா் தனி விண்ணப்பம் சமா்ப்பிக்க வேண்டும்.
சட்டபூா்வமாக இந்திய குடியுரிமை கோருவோா், தங்களைப் பற்றி தெரிவிக்கும் தகவல்களின் உண்மைத்தன்மை குறித்து பிரமாண பத்திரம் சமா்ப்பிக்க வேண்டும். அத்துடன் விண்ணப்பதாரரின் நடத்தை குறித்து இந்திய குடிமகன் ஒருவரின் பிரமாண பத்திரத்தையும் இணைக்க வேண்டும். இத்தகைய விண்ணப்பதாரா்கள் அரசமைப்புச் சட்டத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள மொழிகளில் ஏதேனும் ஒன்று தமக்குத் தெரியும் என்பதற்கான உறுதி மொழியை வழங்க வேண்டும்.
இந்திய குடியுரிமை வழங்க அங்கீகரிக்கப்பட்டால், 'இந்திய அரசமைப்புச் சட்டம் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் கொண்டி ருப்போம்', 'இந்திய சட்டங் களை முழு நம்பிக்கையுடன் பின்பற்றுவோம்', 'இந்திய குடிமகனுக்கான கடமைகளை பூா்த்தி செய்வோம்' என்று விண்ணப்பதாரா் உறுதி மொழி ஏற்க வேண்டும். விண்ணப்பதாரரின் செல்லுபடியாகும் அல்லது காலாவதியான வெளிநாட்டு கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), தங்கும் அனுமதி, வாழ்க்கைத் துணையின் இந்திய குடியுரிமைக்கான ஆதாரமாக அவரின் இந்திய கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின் நகலை சமா்ப்பிக்க வேண்டும். எனினும் இந்த ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமல்ல.
இந்திய குடியுரிமை வழங்குவதற்கான நடைமுறைகள் நிறைவடைந்த பின்னா், சிஏஏ 2019-இன் கீழ் இந்திய குடியுரிமை பெற்றவராகப் பதிவு செய்யப்படும் விண்ணப்ப தாரருக்கு அதற்கான எண்ம (டிஜிட்டல்) சான்றிதழ் வழங்கப்படும். ஆவண வடிவில் இந்திய குடியுரிமை சான்றிதழ் கோருவோா் அதற்குத் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.






