என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு இது.
- மக்கள் பணிக்கான தொடக்கமாகவும் இது அமைந்துள்ளது.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பா.ஜனதாவுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது குறித்து முடிவு செய்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார்.
அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் பாரதிய ஜனதாவுடன் இணைக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான நிர்வாகிகளின் முடிவை ஏற்று கட்சியை பா.ஜனதாவுடன் இணைப்பதற்கு சரத்குமார் முடிவு செய்தார்.
இதுபற்றி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன், சரத்குமார் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு இணைப்பு விழா நடந்தது.
பா.ஜ.க. நிர்வாகிகள் முன்னிலையில் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜனதாவில் இணைப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
பா.ஜனதாவுடன் கட்சியை இணைத்த சரத்குமாருக்கு நிர்வாகிகள் ஒவ்வொருவரும் சால்வை அணிவித்தனர்.
பா.ஜ.க.வுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தது குறித்து சரத்குமார் கூறியதாவது-
பெருந்தலைவர் காமராஜரை போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களின் நலன் கருதியும் சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இன்று இணைத்துள்ளேன். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகும்.
பாரதிய ஜனதாவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது தொடர்பாக உங்களது கருத்துக்களையும் பெற்றுள்ளேன். உங்களது விருப்பம் மற்றும் மக்கள் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியை இணைத்துள்ளோம்.
இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவாகும். மக்கள் பணிக்கான தொடக்கமாகவும் இது அமைந்துள்ளது.
இவ்வாறு சரத்குமார் பேசினார்.
சரத்குமார் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். கடந்த 17 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த அவர் பாரதிய ஜனதாவுடன் கட்சியை இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
- பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தஞ்சாவூா்:
பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே பஸ்சில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு சுற்றுலா பஸ் இயக்கம் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க குளிர்சாதன வசதியுடன் (ஏ.சி.வசதி) கூடிய மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பஸ் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த பஸ்சில் நபர் ஒருவருக்கு ரூ.1350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு நவகிரக தலங்களுக்கு சென்று இரவு 8 மணியளவில் மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையம் வந்தடையும்.
எனவே, இந்த பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக பஸ்சில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள முடியாது. மேற்கண்ட தகவல் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.
- ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
- ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரல்வாய்மொழி:
நாகர்கோவில் இடலாக்குடி புத்தன் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஜெய்குமார் (வயது 26). திருமணமான இவர் டெம்போ டிரைவராக உள்ளார்.
இவருக்கும் ஆரல்வாய்மொழியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது ஜெய்குமாரின் மனைவிக்கு தெரிய வந்தது. அவர் கணவரை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று ஜெய்குமார் வீட்டில் இருந்து புறப்பட்டு வெளியே வந்துள்ளார்.
அவர் கள்ளக்காதலி வீட்டுக்குத் தான் செல்வார் என கருதிய அவரது மனைவி, உறவினர் ஒருவர் துணையுடன் ஜெய்குமாரை பின் தொடர்ந்து வந்தார். கள்ளக்காதலி வீட்டுக்கு ஜெய்குமார் வந்த போது, திடீரென அவர் முன்பு மனைவி வந்துள்ளார். இதனால் ஜெய்குமார் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஜெய்குமாரை, மனைவியும் உறவினரும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். அவர்கள் ஜெய்குமார் மற்றும் அவரது மனைவியை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். அங்கு வரவேற்பாளராக இருந்த அஜய் (21) விசாரணை மேற்கொண்டார். அப்போது திடீரென ஜெய்குமார், போலீஸ் நிலையத்தில் உள்ள ஜன்னல் கண்ணாடியை கையால் குத்தி உடைத்தார்.
இதனை தடுக்க முயன்ற அஜய் மீதும் கண்ணாடியால் குத்தி உள்ளார். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் ஜெய்குமார், தனது உடலிலும் கண்ணாடியால் கீறி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவம் ஆரல்வாய்மொழியில் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக ஆரல்வாய்மொழி போலீசார் ஜெய்குமாரை மீட்டு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
சம்பவம் குறித்து போலீஸ் நிலைய வரவேற்பாளர் அஜய் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஜெய்குமார் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜெய்குமார் மீது, கோட்டார் போலீஸ் நிலையத்திலும் 2 வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது.
- கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம்.
நெல்லை:
தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு இன்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:-
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி ஒரு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக நீடிக்க முடியாது என உத்தரவிடப்பட்டது.
அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததால் அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இப்போது அவருடைய தண்டனைக்கு தடை விதித்துள்ளது. எனவே அவருக்கு மீண்டும் எம்.எல்.ஏ. வாய்ப்பு வழங்குவது தொடர்பாக வயநாடு எம்.பி. ராகுல் காந்தி, லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசல், காசிப்பூர் மக்களவை உறுப்பினர் அன்சாரி ஆகியோரின் விவகாரத்தில் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதோ, அதே நடவடிக்கை பொன்முடி விவகாரத்திலும் பரிசீலிக்கப்படும்.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு எங்களுடைய சட்டப்பேரவை முதன்மைச் செயலாளருடன் கலந்து ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். அதை நீங்கள் விரைவில் பார்க்கலாம்.
கால்டுவெல், ஜி. யு.போப் பற்றி கூறியபோது, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் வெள்ளைக்காரர்கள் தான் இந்திய கலாசாரத்தை அழித்தார்கள் என்று பேசினார். அதேபோல் பலரும் பேசி வருகிறார்கள்.
பிரிட்டிஷ்காரர்களின் வருகைக்கு முன்பு இந்திய கலாசாரம் எப்படி இருந்தது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். அப்போது உயர் ஜாதியினர் மட்டுமே படிக்கலாம். ஆட்சி அதிகாரத்தில் இருக்கலாம். இந்து ஆலயங்களுக்கு சென்று வழிபடலாம். அவர்கள் தான் சொத்து வாங்க முடியும் என்ற நிலை இருந்தது.
ஆனால் வெள்ளைக்காரர்களான கால்டுவெல், ஜி. யு.போப் போன்றவர்கள் வந்த பிறகுதான் எல்லோரும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டது. அவர்கள் மத போதகர்களாக வந்தாலும், அதைத்தாண்டி இந்திய, தமிழக கலாசாரத்துக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள்.
தமிழர்கள், இந்தியர்களுக்கு இலவச கல்வி கொடுத்தார்கள். நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் கல்வியில் வளர்ச்சி அடைந்ததற்கு வெள்ளைக்காரர்களே காரணம். உயர் ஜாதியினர் மட்டுமே கல்வி கற்கும் முறையை மாற்றியவர்கள் வெள்ளைக்காரர்கள் தான். கால்டுவெல்லை அங்குள்ள 90 சதவீத மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
- தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13-ந்தேதி) கோவை மாவட்டம் பொள்ளாச்சி வருகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று 20 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழாவில் முடிவு பெற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
இதுதொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (13-ந் தேதி) பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெறும் அரசு விழாவில் ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களுக்கான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார்.
வனத்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, எரிசக்தி துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, காவல்துறை, தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, ஆவின் உள்ளிட்ட துறைகளின் சார்பில் புதிய வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) கோட்டம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, அயலக தமிழர் நலன் மற்றும் மறு வாழ்வு துறை, கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் முடிவுற்ற வளர்ச்சித் திட்டப்பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தோட்டக்கலைத் துறை, மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், நகராட்சி நிர்வாகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
இவ்விழாவில், அமைச்சர்கள், கலெக்டர்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), பொள்ளாச்சி சார் ஆட்சியர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இவ்விழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- லாரியில் இருந்த கிளீனர் திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த அஜய் (வயது 24) என்பவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலை மூட்டைகள் கடத்தப்பட இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து 'கியூ' பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி தர்மராஜ், வேல்ராஜ் , செல்வகுமார், ராமச்சந்திரன், தலைமை காவலர் இருதயராஜ், ராமர், காவலர் பழனி பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, வடபாகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திரேஸ்புரம் கடற்கரையில் அதிகாலை 3.30 மணிக்கு மினிலாரியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பைபர் படகில் சுமார் 35 கிலோ எடை கொண்ட 40 பண்டல்களில் பீடி இலைகள் கடத்தி செல்ல இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகு, மினி லாரி ஆகியவற்றை கைப்பற்றினர். லாரியில் இருந்த கிளீனர் திரேஸ்புரம் மாதவ நாயர் காலனியை சேர்ந்த அஜய் (வயது 24) என்பவரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட பீடி இலை பண்டல்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் கியூ பிரிவு அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பீடி இலைகளின் எடை சுமார் 1400 கிலோ. இதன் மதிப்பு 20 லட்சம் ஆகும்.
- பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. மூத்த வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
சென்னை:
அ.தி.மு.க. யாருக்கு சொந்தம்? என்கிற சட்டப் போராட்டங்கள் முடிவுக்கு வந்து எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளரானார். இரட்டை இலை சின்னமும் அ.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்திலேயே அ.தி.மு.க. போட்டியிட்டது. பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து வெளியேறி பாராளுமன்றத் தேர்தலில் புதிய கூட்டணியை அமைத்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலை பாராளுமன்றத் தேர்தலின் போது முடக்கப்பட்டு விடுமோ? என்கிற அச்சம் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது, பின்னர் ஒருங்கிணைப்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தேர்வானது. இதன் பின்னர் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது. ஆகியவற்றை எதிர்த்து சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இப்படி வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் பாராளுமன்றத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமிக்கு ஒதுக்கக்கூடாது என்று கடந்த மாதம் 12-ந் தேதி மனு அளித்திருந்தார்.
அந்த மனு மீது தேர்தல் ஆணையம் பதில் அளிக்காததால் அதுபற்றி உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் சூரியமூர்த்தி வழக்குப் போட்டுள்ளார். இது வருகிற 25-ந் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே சூரியமூர்த்தி அளித்துள்ள மனு குறித்து பதில் அளிக்க தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதன் காரணமாகவே இரட்டை இலை சின்னத்துக்கு மீண்டும் சிக்கல் ஏற்படுமோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. மூத்த வக்கீல்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற வக்கீல்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கருத்துக்களை கேட்டறிந்தார். இது தொடர் பாக அ.தி.மு.க. மூத்த வக்கீல் ஒருவர் கூறியதாவது:-
தேர்தல் ஆணையத்தில் சின்னம் தொடர்பாக யாராவது ஆட்சேபனை தெரிவித்தால் சம்பந்தப்பட்ட கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் தான் அ.தி.மு.க.வுக்கு தொடர்பில்லாத சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். அவருக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்தில் ஆன்லைன் மூலமாக உடனடியாக மனு அனுப்ப உள்ளோம். இது ஒரு பெரிய விஷயமே இல்லை.
இரட்டை இலை சின்னத்துக்கு எந்த ஆபத்தும் இல்லை. பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், யாருடன் கூட்டணி என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
- 3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்னும் 2 நாட்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:
பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த 1-ந் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு சென்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதாவுக்கு பொன்னாடை அணிவித்து கூட்டணியை உறுதி செய்தனர்.
இதன் பின்னர் தே.மு.தி.க. நிர்வாகிகள் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்துக்கு சென்று அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச்சு நடத்தினர். இதன் பின்னர் பேட்டி அளித்த அவர்கள் வெற்றிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளோம் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஆனால் பிரேமலதா அளித்த பேட்டியில் அ.தி.மு.க.வுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்றும், யாருடன் கூட்டணி என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனால் குழப்பமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் தே.மு.தி.க. கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் இதனை தே.மு.தி.க. பொதுச் செயலாளரான பிரேமலதா மறுத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் அது தொடர்பான தவறான தகவல்களை, வதந்தியை பரப்புகிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து அ.தி.மு.க.வுடன் 3-வது கட்ட பேச்சு வார்த்தையை நடத்த தே.மு.தி.க. தயாராகி வருகிறது. இது தொடர்பாக தே.மு.தி.க.வினர் கூறும் போது, அ.தி.மு.க.வின் அழைப்புக்காக காத்திருக்கிறோம். அவர்கள் கூப்பிட்டதும் 3-வது கட்ட பேச்சு வார்த்தை நடைபெறும். தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் பாராளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடவே விரும்புவதாகவும் தெரிவித்தனர்.
3-வது கட்ட பேச்சுவார்த்தை இன்னும் 2 நாட்களில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பேச்சு வார்த்தையின் போது அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையேயான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
- சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது.
- சென்னை புறநகர் ரெயில் சேவையில் குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன.
சென்னை:
தெற்கு ரெயில்வேயில் பல்வேறு திட்டப் பணிகளை பிரதமர் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
திண்டுக்கல், ஈரோடு, திருச்சி, பாலக்காடு ரெயில் நிலையங்களில் அமைக்கப் பட்டுள்ள மலிவு விலை மருந்தகங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.
அதே போல தமிழகத்தில் 168 ரெயில் நிலையங்களில் 'ஒரு நிலையம் ஒரு பொருள்' விற்பனை அரங்குகள் திறக்கப்பட்டன. உள்ளூர் பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டங்களில் முக்கிய விளைபொருட்களை ரெயில் பயணிகளுக்கு தரமாகவும் குறைவான விலையில் கிடைக்கும் வகையிலும் இந்த கடைகள் செயல்படும்.
சென்னை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்களில் இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. ரெயில் நிலையங்களில் அந்த பகுதியில் உள்ள முக்கியமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இதற்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று மேலும் பல ரெயில் நிலையங்களில் ஒரு பொருள் அங்காடி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வேயில் அடுத்த 3 அல்லது 4 ஆண்டுகளில் சாதாரண ரெயில் பெட்டிகள் முழுமையாக நீக்கப்பட்டு அனைத்தும் நவீன பெட்டிகளாக மாற்றப்படுகிறது. சென்னை-கடற்கரை-எழும்பூர் 4-வது ரெயில் பாதை பணிகள் ஜூன் மாதத்தில் முடிவடையும். அதன் பின்னர் கடற்கரை-வேளச்சேரி வரை மின்சார ரெயில் சேவை தொடங்குகிறது.
சென்னை புறநகர் ரெயில் சேவையில் குளிர்சாதன பெட்டிகள் பொருத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக 2 புறநகர் ரெயில்கள் மே மாதம் முதல் இயக்கப்படுகிறது என்று தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
- போதைப்பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறி உள்ளது.
சென்னை:
போதைப்பொருள் புழக்கத்தை தடுக்கத் தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்தும், அவற்றை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும்அனைத்து மாவட்ட, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை ஆர்.ஏ. புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். விழுப்புரத்தில் நடைபெறும் போராட்டத்தில் சி.வி.சண்மும் பங்கேற்றார். போராட்டத்தில் கருப்பு பேட்ஜ் அணிந்து திரளானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* போதைப்பொருள் புழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது.
* போதைப்பொருள் விற்பனை மையமாக தமிழகம் மாறி உள்ளது.
* போதைப்பொருளால் தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கை சீரழிகிறது.
* ஜாபர் சாதிக்கிற்கு பல்வேறு தரப்பிலும் தொடர்பு உள்ளது தெரிய வந்துள்ளது.
* தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
- பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர்.
- ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர்.
கோவை:
கோவையில் இன்று காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் (55) உடல்நலக்குறைவால் காலமானார். மூச்சுத்திணறலால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
டெல்லியில் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் காமாட்சிபுரி ஆதீனமும் கலந்து கொண்டார். விழாவில் பிரதமரிடம் செங்கோல் வழங்கி ஆசி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
காமாட்சிபுரி ஆதீனம் மறைவுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கோவை காமாட்சிபுரி ஆதீனம், சிவலிங்கேஸ்வர சுவாமிகள் இறைவன் திருவடிகள் அடைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பொதுமக்களைப் பாதிக்கும் பிரச்சனைகளில், துணிச்சலுடன் குரல் கொடுத்தவர். ஏற்றத்தாழ்வின்றி, அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வலியுறுத்தியவர். புதிய பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவில் பங்கு கொண்டு பிரதமருக்கு செங்கோல் வழங்கி ஆசி வழங்கியவர். சிவலிங்கேஸ்வர சுவாமிகளைப் பிரிந்து வாடும் பக்தர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வழக்கம்போல் நேற்று இரவு கோவில் வளாகத்தில் செல்லையா படுத்து தூங்கி உள்ளார்.
- தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் மேலத் தெருவை சேர்ந்தவர் செல்லையா (வயது 56). கூலித் தொழிலாளி.
இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் செல்லையா மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார்.
இந்நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது வீட்டை விற்று மருத்துவ சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனால் அவர் தினமும் கூலி வேலைக்கு சென்று விட்டு இரவில் சாத்தான்குளத்தில் உள்ள கரையடி சுடலைமாடசாமி கோவில் வளாகத்தில் படுத்து தூங்கி வந்துள்ளார்.
வழக்கம்போல் நேற்று இரவு கோவில் வளாகத்தில் செல்லையா படுத்து தூங்கி உள்ளார். இந்நிலையில் இன்று காலை கழுத்தை அறுத்து அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ஜேசுராஜன் மற்றும் போலீசார் விரைந்து சென்று செல்லையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்லையாவை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.






