என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.
    • மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில், "உதவுதல் நம் முதல் கடமை" என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 2000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக 26 கிலோ அரிசி, துணிமணிகள், பேரிச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பரிசுத் தொகுப்பினை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததுடன், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்காக தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியின்போது, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். 

    • கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரியில் தண்ணீர் வீணாவதை தடுக்க அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 797 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி அனைத்து குடிநீர் ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 627 மி.கனஅடி (8.6 டி.எம்.சி)தண்ணீர் உள்ளது.

    கடந்த ஆண்டு இதே நாளில் குடிநீர் ஏரிகளில் 9 ஆயிரத்து 717 மி.கனஅடி (9.7டி.எம்.சி) தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது ஒரு டி.எம்.சி. தண்ணீர் குறைவாகவே உள்ளது.

    எனினும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் சென்னையில் இந்த ஆண்டு தட்டுப்பாடின்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் இந்த ஆண்டு கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு பெற வேண்டிய தண்ணீர் இன்னும் பெறவில்லை. எனவே வரும் மாதங்களில் கிருஷ்ண நதிநீர் பூண்டி ஏரிக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்று குடிநீர்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே சோழவரம் ஏரியில் தண்ணீர் இருப்பு பாதியாக குறைந்து உள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 1081 மி.கனஅடியில் தற்போது 452 மி.கனஅடி தண்ணீர் மட்டுமே உள்ளது.

    வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சோழவரம் ஏரியில் தண்ணீர் வீணாவதை தடுக்க அங்கிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து சோழவரம் ஏரியில் இருந்து 546 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் தற்போது 2505 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 720 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குடிநீர் தேவைக்கு 189 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 2166 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 303 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    செம்பரம்பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 3048 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. குடிநீர் தேவைக்கு 137 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில் 456 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • பயணிகள் வரும் நாட்களில் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு சிரமமின்றி எளிதாக வந்து செல்ல முடியும்.
    • கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் அழகிய நீரூற்றுகளுடன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

    வண்டலூர்:

    சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் நவீன வசதியுடன் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்ட வரப்பட்டு உள்ளது. பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    பயணிகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்திற்கு மின்சார ரெயில்களில் எளிதில் வந்து செல்லும் வகையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் எதிரே புதிய ரெயில் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே பஸ் நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் ரூ.74.5 கோடி மதிப்பில் புதிய நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த நடைபாதை சுமார் 140 மீட்டர் நீளத்தில் ஜி.எஸ்.டி. சாலையின் குறுக்கே வருகிறது. 8 மீட்டர் அகலத்தில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து செல்லும் வகையில் அமைக்கப்பட உள்ளது. மேலும் லிப்ட், நகரும் படிக்கட்டு வசதிகளும் வருகின்றன.

    இந்த நிலையில் கிளாம்பாக்கம் பஸ் நிலையம்-ரெயில் நிலையம் இடையே ரூ.74.50 கோடி மதிப்பில் புதிய நடை மேம்பாலம் அமைக்கும் பணிக்கான தொடக்க விழா இன்று காலை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு நடைமேம்பால பணிக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த பணியை அடுத்த 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. புதிய ரெயில்நிலையம் அமையும்போது நடை மேம்பாலம் பணியும் முடிந்து பயன்பாட்டுக்கு தயாராகி விடும். எனவே பயணிகள் வரும் நாட்களில் கிளாம்பாக்கம் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு சிரமமின்றி எளிதாக வந்து செல்ல முடியும்.

    இதேபோல் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 6 ஏக்கர் பரப்பளவில் ரூ.12 கோடி மதிப்பில் அழகிய நீரூற்றுகளுடன் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட பணி முழுவதும் முடிந்ததை தொடர்ந்து இந்த புதிய பூங்காவையும் அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.

    இந்த பூங்காவில் பொதுமக்கள் பயன்படுத்தும் நடைபாதைகள், அலங்கார பூச்செடிகள், அமரும் பலகைகள், நீரூற்று, சதுரங்க சிற்பங்கள், பாறை பூங்கா, சிறிய குளம், கால்வாய்கள், இரவு நேரங்களில் வண்ண மயமான விளக்குகள் கண்ணை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளன.

    நிகழ்ச்சியில் பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் அன்சுல் மிஸ்ரா, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, கிளாம்பாக்கம் பஸ் நிலைய தலைமை செயல் அதிகாரி பார்த்திபன், சி.எம்.டி.ஏ. செயற்பொறியாளர் ராஜன் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே குமரலிங்கம் பகுதியில் உள்ள பழைய ராஜவாய்க்கால் கரையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளி ஒருவர் இறந்து கிடந்தார்.

    உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த நபர் சாளரப்பட்டியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரது மகன் சாமிதுரை (வயது 42) என்பது தெரியவந்தது.

    பிரேத பரிசோதனை அறிக்கையில் சாமிதுரையின் தோள்பட்டையில் எலும்பு முறிவு இருப்பது தெரியவந்தது. அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்ததால் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் அதே ஊரைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன் பாட்டான் என்கிற ராமகிருஷ்ணன் (34), பாலபூபதி என்பவரது மகன் விக்னேஷ் (26) ஆகியோர் சாமிதுரையை அடித்துக்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. கட்டிடத் தொழிலாளர்களான இவர்கள் 3 பேரும் நண்பர்களாக இருந்துள்ளனர். சம்பவத்தன்று ராஜவாய்க்கால் கரையில் அமர்ந்து மூவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது ஏற்பட்ட தகராறில் ராமகிருஷ்ணன், விக்னேஷ் இருவரும் சேர்ந்து மது பாட்டிலால் சாமிதுரையை தாக்கியுள்ளனர். மயங்கி விழுந்த சாமிதுரையை அங்கேயே விட்டு விட்டு சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த சாமிதுரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த குமரலிங்கம் போலீசார் ராமகிருஷ்ணன், விக்னேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் எங்களது வீட்டிற்கு வந்திருந்தார்.
    • அக்காள் கணவரை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளை பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகன் விஜூ (வயது 24). இவர் அதே பகுதியை சேர்ந்த சவுமியா என்பவரை கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஆட்ஷிக் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. விஜூ தினமும் குடித்துவிட்டு வந்து சவுமியாவிடம் தகராறு செய்து வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சவுமியா கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாயார் வீட்டிற்கு சென்று விட்டார்.

    அங்கு அவரது குழந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதனை அறிந்த விஜூ, குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதற்காக மனைவி சவுமியா வீட்டுக்கு சென்றார். அப்போது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முயன்றபோது சவுமியாவும் வருவதாக கூறினார்.

    அப்போதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விஜூ குழந்தையை தனது சகோதரர் சிஜினுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவமனைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தபோது சவுமியா மீண்டும் கணவனிடம் தகராறில் ஈடுபட்டார். அப்போது வீட்டில் இருந்த சவுமியாவின் 15 வயது சகோதரர் திடீரென வெட்டுக் கத்தியால் விஜூவை சரமாரியாக வெட்டினார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் இருந்த விஜூவை மீட்டு சிஜின் 108 ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு விஜூ நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சிஜின் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அவரது புகாரின் பேரில் சவுமியாவின் 15 வயது சகோதரர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடத்தியபோது, தனது சகோதரி சவுமியாவை விஜூ காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இது குறித்து எனது சகோதரி எனது குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட பிரச்சினையில் எங்களது வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று எங்கள் வீட்டில் வைத்து தகராறு செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வீட்டில் இருந்து வெட்டுக்கத்தியை எடுத்து விஜூவை வெட்டினேன் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அக்காள் கணவரை 15 வயது சிறுவன் கொலை செய்த சம்பவம் மார்த்தாண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • “தி பிளாக் ஹில்” நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறுகிறார் கண்ணையன் தட்சிணாமூர்த்தி.
    • சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு எனது பாராட்டுகள்.

    சென்னை:

    "தி பிளாக் ஹில்" நாவலைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு வாழ்த்து தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    ஒரு வரலாற்று நிகழ்வை எடுத்துக் கொண்டு, அதனை மையமாக வைத்து, வடகிழக்குப் பகுதிகளின் பின்னணியில் புனையப்பட்ட "தி பிளாக் ஹில்" நாவலைத் தமிழில் மொழி பெயர்த்ததற்காகச் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது பெறும் கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு எனது பாராட்டுகள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜாபர்சாதிக் ஓட்டல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் பெயரில் வங்கி கணக்குகளையும் தொடங்கி இருப்பதாக தெரிகிறது.
    • ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    சென்னை:

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் டெல்லி போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் 7 நாள் காவலில் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழ் சினிமா தயாரிப்பாளரான ஜாபர்சாதிக் தி.மு.க. அயலக அணியில் பணியாற்றி வந்துள்ளார். டெல்லியில் இருந்து நியூலாந்து, ஆஸ்திரேலியா, மலேசியா ஆகிய நாடுகளுக்கு உணவு பொருட்களை அனுப்புவதாக கூறி போதைப்பொருட்களை ஜாபர் சாதிக் கடத்தி வந்துள்ளார். இதன் மூலமாக ரூ.2 ஆயிரம் கோடிக்கும் மேல் அவர் பணம் சம்பாதித்து இருப்பதாகவும் வெளியான தகவலையடுத்து அது தொடர்பாக ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    போதைப் பொருட்களை கடத்தி சம்பாதித்த பணத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த சொத்துக்களை முடக்குவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். சென்னையில் ஜாபர் சாதிக் எங்கெல்லாம் சொத்துக்களை வாங்கி போட்டுள்ளார் என்பதை பற்றிய விவரங்களை சேகரித்துள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சொத்துக்களின் பின்னணி பற்றிய முழுமையான விசாரணையில் இறங்கியுள்ளனர். இதன் முடிவில் ஜாபர்சாதிக்கின் சொத்துக்கள் அனைத்தும் விரைவில் முடக்கப்படுகிறது.

    ஜாபர்சாதிக் ஓட்டல் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் முதலீடு செய்து அதன் பெயரில் வங்கி கணக்குகளையும் தொடங்கி இருப்பதாக தெரிகிறது. அது தொடர்பான விவரங்களையும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் திரட்டியுள்ளனர்.

    இதனை வைத்து ஜாபர் சாதிக்கின் சட்டவிரோத பண பரிமாற்றங்கள் பற்றிய பட்டியலும் தயாராகி வருகிறது. சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களுக்கு ஜாபர் சாதிக் பணத்தை வாரி இறைத்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மூலமாக கிடைத்த பணத்தையே அவர் அரசியல்வாதிகளுக்கும், சினிமா பிரபலங்களுக்கும் வாரி வழங்கியுள்ளார். இதையடுத்து ஜாபர் சாதிக்கிடம் பணம் வாங்கிய பிரபலங்களின் பட்டியலும் தயாராகி வருகிறது.

    இதையடுத்து ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்த அனைவருக்கும் சம்மன் அனுப்ப அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். ஜாபர் சாதிக்கின் சென்னை வீடு மற்றும் அலுவலகங்களில் விரைவில் சோதனை நடத்தப்பட உள்ளது.

    • சாலையை சரி செய்ய ரூபாய் 35 கோடி நிதி தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.
    • மாவட்ட நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கொல்லங்கோடு வள்ளவிளை கிராமத்தில் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டு பல வருடங்களாக போக்குவரத்து தடைப்பட்டிருந்த வள்ளவிளை இடப்பாடு கடலோர சாலையை சரி செய்ய தமிழக அரசிடம் பரிந்துரை செய்து இதற்காக கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் அவர்களுடன் சேர்ந்து தொடர் முயற்சிகள் எடுத்த பலனாக சாலையை சரி செய்ய ரூபாய் 35 கோடி நிதி தமிழ் நாடு அரசு ஒதுக்கீடு செய்தது.

    இந்த சாலை பணிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.


    அதனை தொடர்ந்து நீரோடி கிராமத்தில் இருந்து மார்த்தாண்டம் வரை புதிய பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட நிர்வாகிகள், இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், பங்கு தந்தையர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.
    • இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    "ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT (CAA) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது"

    பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது மட்டுமல்ல; பலவகையான மொழி, இன, மதம் மற்றும் வாழ்விட சூழல் ஆகியவற்றால் வேறுபட்டிருந்தாலும், ஒன்றுபட்ட உணர்வுடன் வாழ்ந்துவரும் இந்திய மக்களின் நலனுக்கும், இந்திய தாய்த் திருநாட்டின் பன்முகத் தன்மைக்கும், மதச்சார்பற்ற தன்மைக்கும் முற்றிலும் எதிரானதாகும். அதுமட்டுமல்ல; சிறுபான்மை சமூகத்தினர் மற்றும் முகாம்வாழ் தமிழர்களின் நலனுக்கும் எதிரானதுதான் இந்தச் சட்டம்.

    இதன் காரணமாகத்தான், கழக அரசு அமைந்தவுடனேயே, அதாவது, கடந்த 8-9-2021 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக, அரசின் சார்பாக நான் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து, அதனை நிறைவேற்றி, இச்சட்டத்தினைத் திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அதனை அனுப்பி வைத்தோம். தமிழ்நாட்டைப் போலவே, பல்வேறு மாநிலங்களும் இதனை எதிர்த்து குரல் கொடுத்து வந்துள்ளன.

    இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிப்பதற்காக மக்களை திசைதிருப்பும் நோக்கத்துடன், தேர்தல் அரசியலுக்காக இந்தச் சட்டத்தை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளதோ என கருத வேண்டியிருக்கிறது.

    இந்திய மக்களிடையே பேதங்களைத் தோற்றுவிக்க வழிவகை செய்யும் இந்தச் சட்டத்தால் எந்தவிதமான நன்மையோ, பயனோ இருக்கப் போவதில்லை. இந்தச் சட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று என்பதுடன், இரத்து செய்யப்பட வேண்டியது என்பதுதான் இந்த அரசின் கருத்தாகும். எனவே, ஒன்றிய அரசு நிறைவேற்றியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் நிறைவேற்றிட தமிழ்நாடு அரசு எவ்வகையிலும் இடமளிக்காது; இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்தவொரு சட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு இடம் கொடுக்காது என்பதனை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் இந்த நேரத்தில் உறுதியாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை.

    சூலூர்:

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையை சேர்ந்தவர் நித்தியா நந்தினி. இவர் அந்த பகுதியில் உள்ள தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார்.

    கடந்த மாதம் 13-ந் தேதி, இவரது வீட்டிற்குள் 4 பேர் கொண்ட மர்ம கும்பல் நுழைந்தது. அவர்கள் வீட்டில் இருந்த நித்யா நந்தினியை கட்டிப்போட்டு, 25 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படையினர், பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வந்தனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையர்கள் பண்ணை வீட்டில் இருந்து செஞ்செரிமலை வழியாக நெகமம் நோக்கி வாகனத்தில் தப்பி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து அவர்கள் யார் என்பதை அறியும் பணியில் போலீசார் இறங்கினர்.


    போலீஸ் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது, வேலூர் மாவட்டம் குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த அய்யனார் என்ற குருமூர்த்தி சுந்தரேசன்(72), ஆந்திர மாநிலம் தாவணிக்கரையை சேர்ந்த முருகன்(55), குடியாத்தம் பாண்டியன் நகரை சேர்ந்த ஏழுமலை என்ற ராஜா(50), உளுந்தூர்பேட்டையை சேர்ந்த ராமலிங்கம் என்ற ராஜேஷ்(42) என்பதும், இந்த கும்பலுக்கு தலைவனாக அய்யனார் என்ற குருமூர்த்தி சுந்தரேசன் செயல்பட்டு வந்ததையும் கண்டுபிடித்தனர்.

    பின்னர் அவர்களை தேடி தனிப்படையினர் குடியாத்தம் விரைந்தனர். அங்கு அவர்கள் இருப்பதை உறுதி செய்த போலீசார் அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

    சம்பவத்தன்று அவர்கள் மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக புறப்பட்டு கொண்டிருந்தனர். அந்த சமயம் தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை கோவை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், இந்த கும்பல் மோகனூரில் உள்ள ஆந்திர வங்கி, பண்ரூட்டி, காஞ்சிபுரம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் உள்ள நகைக்கடைகளிலும் ஏராளமான பணம் மற்றும் பல சவரன் நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

    இவர்கள் பொள்ளாச்சியில் கொள்ளையடிப்பதற்காக வந்துள்ளனர். ஆனால் இரவு நேரமாகி விட்டதால் இங்கேயே எங்காவது கொள்ளையடிக்கலாம் என முடிவு செய்து, தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டுள்ளனர்.

    அப்போது பண்ணை வீடு இருப்பதை பார்த்ததும் அங்கு சென்று, அங்கு இருந்தவரை கட்டிப்போட்டு நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் தாங்கள் கொள்ளையடித்த பணம் மற்றும் நகையை வைத்து பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் கூறும்போது, கொள்ளையர்களை பிடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்போன் பயன்படுத்தவில்லை. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் இருந்தது.

    இருந்தபோதிலும் கிடைத்த தகவல்களை வைத்து, கொள்ளையர்களை கண்டறிந்து, அவர்களை பிடித்து விட்டோம் என்றனர்.

    இதையடுத்து போலீசார் கைதான 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

    • தொகுதிகளில் தி.மு.க. நடத்திய சர்வேயில் தற்போதைய எம்.பி.க்கள் செயல்பாட்டால் மக்களிடம் திருப்தி இல்லை.
    • தற்போதைய எம்.பி.க்களின் நெருக்கடிகளால் எந்த தொகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் தவிக்கிறார்கள்.

    சென்னை:

    ஏதோ ஒரு வழியாக எண்ணிக்கை குறையாமல் தொகுதிகளை பெற்று விட்டோம் என்று நிம்மதி பெருமூச்சு விட்ட காங்கிரசுக்கு அடுத்த பிரச்சினை கழுத்தை நெரிக்கிறது.

    தமிழகத்தில் 9 புதுவை-1 என 10 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இனி எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில்தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் கன்னியாகுமரி, விருதுநகர், திருச்சி, ஆரணி, திருவள்ளூர், சிவகங்கை, தேனி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன.

    இதில் திருச்சி, ஆரணி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி ஆகிய 4 தொகுதிகளையும் மீண்டும் ஒதுக்க தி.மு.க. தயங்குகிறது. அதற்கு காரணம் இந்த தொகுதிகளில் தி.மு.க. நடத்திய சர்வேயில் தற்போதைய எம்.பி.க்கள் செயல்பாட்ல் மக்களிடம் திருப்தி இல்லை. அவர்களுக்கே மீண்டும் வாய்ப்பளித்தால் வெற்றி பெறுவது கடினம் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த சர்வே அறிக்கையை காங்கிரஸ் தலைவர்களிடம் கொடுத்து மாற்று வழியை ஆராயும்படி தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தற்போதைய எம்.பி.க்களின் நெருக்கடிகளால் எந்த தொகுதியையும் விட்டுக் கொடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைவர்கள் தவிக்கிறார்கள்.

    கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக ம.தி.மு.க.வுடன் பேசவேண்டும். ம.தி.மு.க. தரப்பில் விருதுநகர் அல்லது திருச்சி தொகுதியை கேட்கிறார்கள். அந்த இரண்டு தொகுதியும் காங்கிரஸ் தொகுதி.

    கரூர் தொகுதிக்கு பதிலாக ஈரோடு தொகுதியை கொடுக்க தி.மு.க. சம்மதித்துள்ளது. ஆனால் ஜோதிமணி எம்.பி. ஈரோட்டில் போட்டியிட மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    பழைய தொகுதியை தர நாங்கள் தயார். ஆனால் வேட்பாளர்கள் புதிதாக இருக்கவேண்டும். என்று நிபந்தனை விதித்துள்ளது. இதனால் என்ன பேசுவது என்று தெரியாமல் காங்கிர சார் தவிக்கிறார்கள்.

    • சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார்.
    • மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்து உள்ளதா என்பது குறித்து கவர்னர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

    திருப்பூர்:

    பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு மத்திய அரசின் சார்பாக சூரஜ் திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) 600 மாவட்டங்களில் மத்திய அரசு திட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை மாலை 3.45 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. மேலும் மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்து உள்ளதா என்பது குறித்தும் கவர்னர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

    ×